மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா ?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனைப் ஓதலாமா ?

இஸ்லாமிய அறிஞர்கள்(رحمهم الله) மத்தியில் கருத்துவேறுபாடு உள்ள விஷயங்களில் இதுவும் ஒன்று.

ஃபிக்ஹ் அறிஞர்கள் பெரும்பாலோர் மாதவிடாய் பெண்கள் தூய்மை அடையும் முன்னர் குர்ஆன் ஓதுவது ஹராம் என்றே கருதுகின்றனர். திக்ரிலும், துஆவிலும், குர்ஆன் ஓதும் எண்ணத்தில் அல்லாமல் குர்ஆனின் சில வசனங்களை மட்டும் ஓதுவதையும் தவிர. உதாரணமாக “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” அல்லது ‘இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன் ‘ போன்ற வார்த்தைகளை கூறுவது அனுமதிக்கப்பட்டது .

அவர்கள் இதற்க்கு பல ஆதாரங்களை அடிப்படையாக கொள்கின்றனர். அவற்றில் சில.

  1. குளிப்பு கடமையானவருக்கு (ஜுனுபானவருக்கு) உள்ள அதே சட்டம் மாதவிடாய் பெண்களுக்கும் சாரும். அலீ இபின் அபீ தாலிப் رضي الله عنه அறிவிக்கும் ஒரு ஸஹீஹான ஹதீஸில் வருகிறது “ரசூல் صلى الله عليه وسلم குர்ஆனை கற்றுத்தருவார்கள், குளிப்புக்கடமையானவர்களை தவிர வேறு எவரையும் குர்ஆனை விட்டு தடுக்க மாட்டார்கள் “

ஆதாரம் அபூ தாவூத், திர்மிதி, நஸாயீ, இபின் மாஜஹ் , அஹ்மத், இபின் குஸைமா. இமாம் திர்மிதி இதை ஸஹீஹ் ஹஸன் ஹதீஸ் என்று கூறினார்கள். இமாம் இபின் ஹஜர் இந்த ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக்கொள்ள தக்க ஹஸன் ஹதீஸ் என்று கூறினார்கள்

இரண்டாவது நபி صلى الله عليه وسلم கூறியதாக இபின் உமர் رضي الله عنهما கூறியதாக வரும் ஒரு ஹதீஸ்: “மாதவிடாய் பெண்ணும், குளிப்புக்கடமையானவரும் குர் ஆனில் இருந்து எதையும் ஓத வேண்டாம் “.

திர்மிதி, இபின் மாஜாஹ், தாரகுத்னி, பய்ஹகி. இது பலவீனமான ஹதீஸாகும், இஸ்மாயில் இபின் அய்யாஸ் ஹிஜாஸ் வாசிகளிடம் இருந்து அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதாகும். இமாம் இபின் தைமிய்யாஹ் கூறுகிறார்கள் ‘இது ஹதீஸ் அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்துப்படி பலஹீனமான ஹதீஸாகும்’

சில அறிஞர்கள் மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதுவது அனுமதிக்கப்பட்டாதாக கருதுகின்றனர். இதுவே இமாம் மாலிக்கின் கருத்து, இமாம் அஹ்மதிடமிருந்து அறிவிக்கப்படும் ஒரு கருத்து, இமாம் இபின் தைமிய்யா விரும்பிய கருத்து, இமாம் அஷ்ஷவ்காணியும் இதையே சரியாக கருதுகிறார்.

இவர்களின் ஆதாரங்கள்:

  1. அடிப்படையில் அதற்க்கெதிரான ஆதாரங்கள் இல்லாதவரை, அனைத்துமே அனுமதிக்கப்பட்டவைஒயே. மாதவிடாய் பெண்கள் குர்ஆனை ஓதுவதை தடை செய்யும் எந்த ஆதாரமும் இல்லை. இபின் தைமிய்யாஹ் கூறுகிறார்கள்: “மாதவிடாய் பெண்களை குர்ஆன் ஓதுவதை விட்டு தடுக்கும் எந்த ஸஹீஹான ஆதாரமும் இல்லை… நபியின் صلى الله عليه وسلم காலத்திலும் பெண்கள் மாதவிடாய் அடைந்தார்கள் என்பது அறிந்ததே, அவர் அவர்களை திக்ருகளும், துஆக்களும் செய்வதை விட்டு தடுக்காதது போல குர்ஆன் ஓதுவதை விட்டும் தடுக்க வில்லை”
  2. கண்ணியமும் உயர்வும் வாய்ந்த அல்லாஹ், முஸ்லிம்களை குர்ஆன் ஓதுமாறு கட்டளை இட்டுள்ளான். குர்ஆன் ஓதுபவர்களை புகழ்கிறான், அவர்களுக்கு நற்கூலியை வாக்களிக்கிறான். இதிலிருந்த யாரும் விளக்கப்படமாட்டார்கள், யார் ஓதக்கூடாது என்பதற்கு வலுவான அதாராம் இருக்கிறதோ அவர்களை தவிர. மாதவிடாய் பெண்கள் விஷயத்தில் அப்படி ஒரு ஆதாரம் எதுவும் இல்லை.
  3. மாதவிடாய் பெண்ணையும் குளிப்புக்கடமையானவரையும் சமமாக பார்ப்பது தவறு, இருவருக்கும் வித்யாசங்கள் உள்ளன. குளிப்புக்கடமையானவருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் அந்த தடையை நீக்க இயலும், மாதவிடாய் பெண்ணுக்கு இது சாத்தியம் அல்ல. ஒரு பெண்ணின் மாதவிடாய் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீடிக்கிறது, ஆனால் குளிப்பு கடமையானவரோ தொழுகையின் நேரம் வந்தவுடன் குளிக்க வேண்டும்
  4. மாதவிடாய் பெண்ணை குர்ஆன் ஓதுவதிலிருந்து தடுப்பது, அவள் நன்மைகளை பெறுவதிலிருந்து தடுக்கிறது, சில வேலை அதனால் அவள் மனனம் செய்தவற்றில் சிலதை மறக்கக்கூடும், சிலவேளை அவள் அதை கற்பதற்க்காகவோ அல்லது கற்பிப்பதற்காகவோ ஓத வேண்டிய அவசியம் இருக்கலாம்.

மேற்கூறியதிலிருந்து மாதவிடாய் பெண்களுக்கு குர்ஆன் ஓதுவது அனுமதிக்கப்பட்டதாக கருதும் உலமாக்களின் ஆதாரங்கள் வலுவானது என்பதை காணலாம். ஒரு பெண் பேணுதலாக இருக்க நாடினால் தான் மறந்துவிடுவேன் என்று அஞ்சுவதை மட்டும் ஓதிக்கொள்ளலாம்.

நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், நாம் இங்கே குறிப்பிட்டதெல்லாம் ஒரு மாதவிடாய் பெண் தன் நினைவிலிருந்து ஓதுவதைப்பற்றித் தான். குர்ஆனை (முஸ்ஹஃபை) பிடித்து ஓதுவதன் சட்டம் வேறு. உலமாக்களின் கருத்துகளில் சரியானது, ஒருவர் தூய்மையற்ற நிலையில் முஸ்ஹஃபை தொடுவது கூடாதது என்பதே. அல்லாஹ் கூறினான்.

لَّا يَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَؕ‏
பரிசுத்தமானவர்களைத் தவிர, (மற்றெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்.

அம்ர் இபின் ஹஸ்மின் ஒரு கடித்ததில் நபி صلى الله عليه وسلم யமன் வாசிகளுக்கு “தூய்மையானவர்களை தவிர யாரும் குர்ஆனை தொடக்கூடாது” என்று எழுதினார்கள்

இதை மாலிக், நஸாயீ, இபின் ஹிப்பான், பைஹகி ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

இமாம் இபின் ஹஜர் கூறுகிறார்கள், அறிஞர்களில் ஒரு குழுவினர் இந்த ஹதீஸை அதன் பிறபலியத்தின் காரணமாக ஸஹீஹ் என கருதினார்,  இமாம் ஷாபி’இ அவர்கள், அறிஞர்கள் மத்தியில் இந்த கடிதம் நபி எழுதியது தான் என்பது உறுதியானது என்று கூறினார்கள், இமாம் இபின் அப்துல் பர் அவர்கள்,  இந்த கடிதம் அறிஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்லியமானது, இதற்க்கு ஸனத் தேவையில்லை, ஏனென்றால் இது முதவாதிரான ஹதீஸ், மக்கள் இதை ஏற்றுக்கொன்டு செயலும் படுத்தினர் என்று கூறினார். இமாம் அல் அல்பானி இதை ஸஹீஹ் என்று கூறினார். [பார்க்க தல்கீஸ் அல்ஹபீர், நஸ்ப் அர்ராயஹ், இரவா அல்களீல், ஹாஷியத் இபின் ஆபிதீன், அலம்ஜமூ, கஷ்ப் அல்கினா, முஃநீ, நைல் அல்அவ்தார், மஜ்மூ அல் ஃபாதாவா , ஷரஹ் அல் மும்தி]

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

 

தமிழாக்கம் செய்தோனின் அடிக்குறிப்பு: செல் போன் போன்ற பொருட்களிலிருந்து ஓதுவதற்கு தூய்மை கட்டாயம் இல்லை, பார்க்க: https://islamqatamil.com/mobile-phone-quran-taharah/

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

1 thought on “மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா ?”

  1. மாதவிடாய் பெண்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரம் வேண்டும் சகோ…

    Reply

Leave a Reply