ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 02  

ஸுன்னாவின் ஒளியில் வுழூ

தொடர் : 02

 

ஸஹாபாக்கள் விபரித்த ஒழுங்கில் நபிகளார் வுழூ செய்த முறை பற்றி நோக்குவோம் :

 

1.நிய்யத்

அனைத்து வணக்கங்களுக்கும் நிய்யத் அவசியம் என்பதனால் வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது வுழூ செய்வதாக மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். இதற்கென தனியான அரபு வாசகம் எதுவும் மொழிய வேண்டியதில்லை. நமக்கு வழிகாட்டுவதற்கென்றே அனுப்பப்பட்ட நபிகளார் நிய்யத் வைப்பதற்கென்று அரபு வாசகங்கள் எதையும் வுழூவுக்கும் கற்றுத் தரவில்லை, தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கும் கற்றுத்தரவில்லை.

 

எனவே தொழ ஆரம்பிக்கும் போது ‘உஸல்லீ பர்ழ…’ என்று கூறுவதற்கோ, நோன்பு நோற்கும் போது ‘நவைத்து ஸவ்ம கதின்…’ என்று கூறுவதற்கோ நபிகளார் நமக்கு கற்றுத் தரவில்லை.

 

‘நிய்யத்’ என்ற அரபுப் பதத்திற்கு ‘மனதில் நினைத்தல்’ என்பதே அர்த்தமாகும். அவ்வகையில் நிய்யத் என்பது உள்ளம் சார்ந்த ஒரு செயலாகும். உள்ளம் சார்ந்த ஒரு செயலை உள்ளத்தினால் தான் நிறைவேற்ற வேண்டும். எனவே ஒருவர் ஒரு வணக்கத்தை நிறைவேற்றும் போது அந்த வணக்கத்தை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுவதாக மனதில் நினைத்துக்கொண்டால் அதுவே நிய்யத் ஆகும்.

 

நபிகளார் கூறினார்கள் : ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் மனதில் நினைத்ததற்கேற்பவே (கூலி) கிடைக்கிறது…’ (ஸஹீஹுல் புஹாரி)

 

2. பிஸ்மில்லாஹ் என்று கூறி ஆரம்பித்தல்.

 

நபிகளார் கூறினார்கள் : ‘அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறாதவருக்கு வுழூ இல்லை’ (இப்னு மாஜஹ், திர்மிதி, அபூதாவூத்).

 

இந்த ஹதீஸ் பலவீனமானது என இமாம் அஹ்மத் உட்பட சில ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிட்டாலும், ஹதீஸ்கலை விதிகளின் அடிப்படையில் வேறு பல அறிவிப்பாளர்களின் வழிகளினூடாக இந்த ஹதீஸ் வந்துள்ளதால் இது ஆதாரபூர்வமானது என்ற தரத்தை அடைகிறது என பிரபல ஹதீஸ்துறை மேதைகளான இமாம் இப்னு கதீர், இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுமல்லாஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர் (பார்க்க : ‘மின்ஹதுல் அல்லாம்’, 1/221).

 

மேற்படி ஹதீஸின் வார்த்தை அமைப்பை நோக்கும் போது வுழூவின் ஆரம்பத்தில் பிஸ்மி கூறுவது கட்டாயம் என்பது போல் தோன்றுகிறது. இதனால்தான் பிஸ்மில்லாஹ் கூறுவது கட்டாயம் என இமாம் அஹ்மத் (ஓர் அறிவிப்பின் படி), இமாம் இஸ்ஹாக், இமாம் ஷவ்கானி, ஷெய்க் அல்பானி (ரஹிமஹுமுல்லாஹ்) போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் (பார்க்க : ‘தமாமுல் மின்னா’, 89).

 

ஆயினும் இமாம் அபூஹனீபா, இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் (மற்றொரு அறிவிப்பின் படி), இமாம் இப்னு ஹஸ்ம், ஷெய்க் பின் பாஸ், ஷெய்க் உஸைமீன் (ரஹிமஹுமுல்லாஹ்) உள்ளிட்ட பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி பிஸ்மில்லாஹ் கூறுவது ஸுன்னத்தாகும். இக்கருத்தே ஆதார வலுக்கூடிய கருத்தாகும்.

 

ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் வுழு பற்றி கூறும் போது பிஸ்மில்லாஹ் கூறுமாறு குறிப்பிடவில்லை. அது கட்டாயமானதென்றால் அல்லாஹ் அது பற்றியும் கூறியிருப்பான்.

 

அடுத்து, நபிகளார் வுழூ செய்த முறை பற்றி விபரித்த ஸஹாபாக்களும் பிஸ்மில்லாஹ் பற்றி கூறவில்லை (பார்க்க : ‘மின்ஹதுல் அல்லாம்’, 1/222-224).

 

எனவே பிஸ்மில்லாஹ் கூறுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே நபிகளார் மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். எனவே வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறுவது ஸுன்னத்தான காரியம் என்றாலும் அதை நாம் தொடராக பேணுவது மிக வலியுறுத்தப்பட்ட ஒன்றாகும்.

 

3. நீரை மிக சிக்கனமாக பயன்படுத்தி வுழூ செய்தல் :

 

நபியவர்கள் இரு முறைகளில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வழிகாட்டியுள்ளார்கள் :

 

அ ) மிக குறைந்தளவான நீரில் வுழூ செய்தல் :

 

நபிகளார் வுழூவின் போது நாம் ஆச்சரியப்படுமளவுக்கு மிக குறைந்தளவான நீரையே பயன்படுத்துவார்கள்.

 

‘நபியவர்கள் இரு கைகளினால் ஒரு தடவை அள்ளியெடுக்கும் அளவுள்ள நீரில் வுழூ செய்து முடிப்பார்கள்’ (புஹாரி, முஸ்லிம் ).

இந்த அளவுதான் நபியவர்கள் பெரும்பாலான நேரங்களில் வுழூ செய்யும் நீரின் அளவாக இருந்தது.

 

வுழூவுக்காக தண்ணீரை அள்ளியிறைக்கும் நமது சமூகத்திலுள்ள மிகப் பெரும்பாலானோருக்கு இது ஆச்சரியமளிக்கும் தகவலாக இருக்கலாம். ‘இது சாத்தியமே இல்லை’ எனலாம். ஆனால் நபிகளார் சாத்தியப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.

 

ஆ) மூன்று தடவைகளுக்கு மேல் உறுப்புகளை கழுவாதிருத்தல் :

 

ஒரு தடவை நபியவர்களிடம் நாட்டுப்புற ஸஹாபி ஒருவர் வுழூ செய்யும் முறை பற்றி வினவினார். நபியவர்கள் அவருக்கு மூன்று தடவைகள் உறுப்புகளை கழுவுமாறு கூறி விட்டு ‘ மூன்று தடவைகளுக்கு மேல் அதிகப்படுத்துபவர் மோசம் செய்து விட்டார், எல்லை மீறி விட்டார், அநியாயம் செய்து விட்டார்’ என்று கூறினார்கள் (அபூதாவூத், நஸாஈ, இப்னுமாஜஹ்). 

 

மூன்று தடவைகளை விட அதிகமாக செய்வோருக்கு மூன்று கண்டனங்களை நபியவர்கள் மேற்படி ஹதீஸில் தெரிவிக்கிறார்கள் எனில், வுழூவின் போது நீரை சிக்கனமாக பயன்படுத்துவது எந்தளவு முக்கியமானது என்பது தெளிவாகிறது.

 

மற்றொரு தடவை நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

‘ சுத்தம் செய்வதிலும் துஆ செய்வதிலும் எல்லை மீறுகின்ற கூட்டத்தினர் என் சமூகத்தில் தோன்றுவார்கள்’ (அஹ்மத், அபூதாவூத்).

இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என சமகால ஹதீஸ்துறை அறிஞர்களான ஷெய்க் அல்பானி, ஷெய்க் ஷுஐப் அல்அர்னஊத், ஷெய்க் அப்துல் காதிர் அல்அர்னஊத் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

 

சுத்தம் செய்வதில் எல்லை மீறுவதை மேற்படி ஹதீஸில் நபியவர்கள் கண்டிக்கிறார்கள். வுழூவின் போது அதிகளவான நீரை தேவை ஏதுமின்றி பயன்படுத்துவதை, சுத்தம் செய்வதில் எல்லைமீறும் செயலாக அறிஞர்கள் அடையாளப்படுத்துகிறார்கள் (பார்க்க : ‘ஸாதுல் மஆத்’ , 1/184).

 

சிலர் வுழூ செய்யும் போது தமக்கு திருப்தி ஏற்படும் வரை நீரை இறைத்து உறுப்புகளை கழுவிக் கொண்டே இருப்பார்கள். மூன்று தடவைகள் கழுவிய பின்னரும் திருப்தி ஏற்படவில்லையெனில், அது ஷைத்தான் உள்ளங்களில் ஏற்படுத்தும் ‘வஸ்வாஸ்’ எனப்படும் மனக்குழப்பமாகும். இது போன்ற தேவையற்ற மனக்குழப்பங்கள் உள்ளங்களில் ஏற்பட நாம் இடமளிக்க கூடாது. ஒரு விடயத்தில் நபிகளாரின் வழிகாட்டல் என்ன என்பது உறுதியாகிவிட்டால், அதில் பூரண திருப்தியடைய வேண்டும். அதுவே முஃமின்களின் பண்பாகும்.

 

எனவே வுழூ செய்யும் போது நபிகளாரை பின்பற்றி நீரை மிக சிக்கனமாக பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திகொள்ள வேண்டும்.

 

(இன் ஷா அல்லாஹ் தொடரும்…)

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A.

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d