ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03   

 

ஸுன்னாவின் ஒளியில் வுழூ

தொடர் -03

 

 

4) பற் துலக்குதல் :

 

பற் சுத்தம் பேணுவது மார்க்கத்தில் மிக வலியுறுத்தப்பட்ட விடயம். நபியவர்கள் அதிகமாக பற் துலக்கும் பழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் இரு விடயங்கள் சான்று :

 

1. ‘நபியவர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் முதலாவது செய்யும் காரியம் என்ன?’ என்று அன்னை ஆயிஷா (றழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘பற் துலக்குவது’ என பதிலளித்தார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்).

 

2. நபிகளார் மரணத் தருவாயில் ஆயிஷா (றழி) அவர்களின் நெஞ்சில் சாய்ந்துகொண்டிருந்த வேளை அங்கு வந்த அன்னை ஆயிஷாவின் சகோதரர் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களின் கையில் பற் துலக்கும் குச்சி இருப்பதை நீண்ட நேரம் அவதானித்துகொண்டே இருந்ததை கண்ட ஆயிஷா (றழி) அவர்கள் நபியவர்கள் பற் துலக்க விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து, அந்த குச்சியை தம் சகோதரரிடமிருந்து பெற்று மென்று நபியவர்களுக்கு பற் துலக்கி விட்டார்கள் (ஸஹீஹுல் புஹாரி). மரணம் நெருங்கிய வேளையிலும் பற் துலக்குவதை நபிகளார் விரும்பியிருக்கிறார்கள்.

 

அதிலும் விசேடமாக, வுழூவின் போது பற் துலக்குவதை அல்லாஹ்வின் தூதர் அதிகமாக வலியுறுத்தியிருக்கிறார்கள்.

 

நபிகளார் அவர்கள் கூறினார்கள்: ‘என் சமூகத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்’ (புஹாரி, முஸ்லிம்).

 

மற்றோர் அறிவிப்பில் ‘… ஒவ்வொரு முறை வுழூ செய்யும் போதும் பல் துலக்குமாறு ஏவியிருப்பேன்’ என்று கூறியுள்ளார்கள் (திர்மிதி, அபூதாவூத்).

 

வுழூவின் போது பற் துலக்குதல் கட்டாயக்கடமை இல்லை என்ற போதிலும், தொழும் போது நம்மைப் படைத்த அல்லாஹ்வுடன் நாம் உரையாடுகிறோம், மலக்குகள் நம்மோடு தொழுகையில் ஒன்றாக சங்கமிக்கிறார்கள், பல முஸ்லிம்களுடன் நாம் அணிவகுத்து நிற்கிறோம் என்ற உணர்வு எமக்கு ஏற்பட்டால் வுழூ செய்யும் போதெல்லாம் பற் துலக்குவதை தவறவிட மாட்டோம்.

 

நபிகளார் கூறினார்கள் : ‘பற் துலக்குவது வாயை சுத்தப்படுத்துவதோடு, அல்லாஹ்வின் திருப்தியையும் பெற்றுத்தரும்’ (புஹாரி, நஸாஈ).

 

ஆண்கள் மட்டுமன்றி வீடுகளில் தொழும் பெண்களும் வுழூவின் போது பற் துலக்குவதை வழக்கப்படுத்திகொள்வது மிகச் சிறந்தது.

 

எந்த சந்தர்ப்பபத்தில் பற் துலக்குவது என்பதில் அறிஞர்களிடையே இரு கருத்துகள் காணப்படுகின்றன :

 

சில அறிஞர்கள் வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது பற் துலக்குவதே நல்லது எனக்கூற,  பெரும்பாலானோர் வாய்க்கு நீர் செலுத்தும் போது பற்துலக்க வேண்டும் எனக் கூறுகின்றனர் (பார்க்க : ‘பத்ஹு தில் ஜலாலி வல் இக்ராம்’, 1/172, ‘மின்ஹதுல் அல்லாம்’ , 1/141).

 

நபிகளாரின் ஸுன்னாவில் இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு வருகிறது :

 

‘நபியவர்கள் தமது மனைவி மைமூனா (றழி) அவர்களின் வீட்டில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இரவில் கியாமுல் லைல் தொழுவதற்காக எழுந்து பற் துலக்கிவிட்டு வுழூ செய்தார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்).

 

மேற்படி ஹதீஸின் வெளிப்படையான வாசக அமைப்பை நோக்கும் போது, நபிகளார் பற்துலக்கி விட்டு வுழூ செய்தார்கள் என்று அமைந்திருப்பதால், பற் துலக்கிவிட்டு வுழூ செய்ய ஆரம்பிப்பதே சிறந்ததாக தோன்றுகிறது என சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அல்பவ்ஸான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆயினும் வாய்க்கு நீர் செலுத்தும் வேளையில் பற்துலக்கினாலும் குற்றமில்லை (பார்க்க : ‘மின்ஹதுல் அல்லாம்’ , 1/142).

 

வழக்கமாக பல முஸ்லிம்கள் பற் துலக்க பயன்படுத்துகின்ற குச்சியை பயன்படுத்துவது போன்றே, குச்சி இல்லாதவர்கள் பற் தூரிகையை (ப்ரஷ்) பயன்படுத்துவதனாலும் இந்த ஸுன்னாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்கும்.

5) இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுதல் :

 

உஸ்மான் (றழி), அலி (றழி), அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி), அபூஹுரைரா (றழி) ஆகிய ஸஹாபாக்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நபிகளார் வுழூ செய்த முறையை செயல்முறை ரீதியாக விபரித்த போது, ஆரம்பமாக இரு கைகளிலும் நீரை ஊற்றி மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவினார்கள் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்).

 

இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவது கட்டாயம் அல்ல, அது ஸுன்னத் ஆகும் என்பதே மிக பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். ஏனெனில் அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூ பற்றி கூறும் போது கைகளை கழுவுதல் பற்றி கூறவில்லை. கட்டாயம் என்றிருந்தால் அது பற்றி கூறியிருப்பான்.

 

ஆயினும் தூங்கி எழுந்த பின் பாத்திரம் அல்லது தொட்டி போன்றவற்றினுள் வுழூ செய்வதாயின் இரு கைகளையும் அதனுள் இடுவதற்கு முன் கைகளை கழுவிக்கொள்வது கட்டாயமானது என சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். பின்வரும் ஹதீஸை அதற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள் :

 

‘உங்களில் ஒருவர் தூங்கி எழுந்ததும் தனது கையை கழுவாமல் பாத்திரத்தினுள் இட வேண்டாம். ஏனெனில் தூக்கத்தில் அவரது கை எதை தொட்டது என்பதை அவர் அறியமாட்டார்’ (புஹாரி, முஸ்லிம்).

 

அதே வேளை கைகளை கழுவும் போது இரு கைவிரல்களையும் ஒன்றாக கோர்த்து கழுவ வேண்டும்.

 

நபியவர்கள் லகீத் (றழி) அவர்களுக்கு பின்வருமாறு கூறினார்கள் :

‘வுழூவை பூரணமாக செய்துகொள். விரல்களுக்கிடையே கோதி கழுவிக்கொள்…'(அபூதாவூத், திர்மிதி).

 

வுழூ செய்யும் போது தலை மற்றும் இரு காதுகளை தவிர ஏனைய உறுப்புகளை அதிக பட்சம் மூன்று தடவைகளோ, அல்லது இரு தடவைகளோ, அல்லது ஒரு தடவையோ கழுவ முடியும். இதற்கான ஆதாரங்களாவன :

 

1. நபியவர்கள் வுழூவின் போது தலையையும் காதுகளையும் தவிரவுள்ள ஏனைய உறுப்புகளை மூன்று தடவைகள் கழுவினார்கள் என்பதை உஸ்மான் (றழி), அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி) ஆகியோர் அறிவிக்கும் ஹதீஸ்களில் காணமுடிகிறது (புஹாரி, முஸ்லிம்). 

 

2. நபியவர்கள் (சில வேளை) உறுப்புகளை இரு தடவைகள் கழுவினார்கள் (புஹாரி).

 

3. நபியவர்கள் (சில வேளை) உறுப்புகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தடவை கழுவினார்கள் (புஹாரி).

 

இவ்வாறே ஒரு வுழூவின் போது சில உறுப்புகளை ஒரு தடவையும் சில உறுப்புகளை இரு தடவைகளும் சில உறுப்புகளை மூன்று தடவைகளும் கழுவ முடியும். பின்வரும் ஹதீஸ் இதை உறுதிப்படுத்துகிறது :

 

‘நபியவர்கள் ஒரு தடவை வுழூ செய்த போது முகத்தை மூன்று தடவைகள் கழுவினார்கள். கைகளை இரு தடவைகள் கழுவினார்கள். தலையை ஒரு தடவை தடவினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (புஹாரி, முஸ்லிம்).

 

(தொடரும் இன் ஷா அல்லாஹ்…)

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A.

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply