ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 05

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 05

இந்த தொடரில்

12) ‘ஆமீன்” கூறுதலும் வேறு ஸூறா ஓதுதலும்:

13) றுகூஉ செய்தலும் அதில் தாமதித்தலும் :

14) றுகூஉவிலிருந்து நிலைக்கு வருதல்:

15) ஸுஜூதுக்கு செல்லுதல் :

போன்றவற்றின் சட்டங்களை பார்க்கலாம்…

 

12) ‘ஆமீன்” கூறுதலும் வேறு ஸூறா ஓதுதலும் :

சத்தமிட்டு ஓதி தொழும் தொழுகைகளில் ஸூறதுல் பாதிஹாவை இமாம் ஓதி முடித்ததும் இமாம் “ஆமீன்| என்று நீட்டி கூறுவதோடு , மஃமூம்களும் ஆமீன் என்று நீட்டி கூற வேண்டும்.
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸூறா பாதிஹா ஓதி முடித்ததும் சத்தத்தை உயர்த்தி , ‘ஆமீன்” என்று நீட்டி கூறுவார்கள்” (புஹாரி , அபூதாவூத்).

மஃமூம்கள் மட்டுமன்றி இமாமும் ஆமீன் கூற வேண்டும் என்பதற்கு மேற்படி ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது.
ஆமீன் கூறுவதன் சிறப்பு குறித்து நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் :
1 ) ‘நாங்கள் ஆமீன் கூறும் போது வானிலுள்ள மலக்குகளும் ஆமீன் கூறுகிறார்கள். யாருடைய ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் இணைகிறதோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்”
(புஹாரி , முஸ்லிம்).

2 )’நாங்கள் ஸலாம் சொல்வதையும் ஆமீன் கூறுவதையும் பார்த்து யூதர்கள் பொறாமைப்படுவது போல் வேறு எதற்கும் பொறாமைப்படுவதில்லை”(அஹ்மத் , இப்னு மாஜஹ்).

குறிப்பு :
சிலர் இந்த ஹதீஸை கூறி தொழுகைக்கு பின்னர் ஓதப்படுகின்ற கூட்டு துஆவை நியாயப்படுத்துகின்றனர். ஆனால் மேலுள்ள ஹதீஸ் தொழுகையில் ஸூறதுல் பாதிஹாவுக்கு பின்ஆமீன் கூறுவதைப் பற்றி பேசும் ஹதீஸாகும். பெரும்பாலான பள்ளிவாசல்களில் தொழுகை முடிந்தவுடன் ஓதப்படும் கூட்டு துஆ என்ற நடைமுறை நபியவர்களோ , ஸஹாபாக்களோ
கடைப்பிடிக்காத , மார்க்கத்தில் கூறப்படாத ஒன்றாகும் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.
சிலர் தொழுகை நடத்தும் போது ஸூறா பாதிஹா ஓதி முடித்ததும் “றப்பிஹ்பிர் லீ என்று கூறி ஆமீன் என்று கூறுவர். பின்வரும் ஹதீஸை அதற்கு ஆதாரமாக கூறுவர் :
நபியவர்கள் வலழ்ழால்லீன் என்று கூறியதும் “ரப்பிஹ்பிர் லீ ஆமீன்’ என்று கூறுவார்கள்’ என “ஸுனனுல் பைஹகி’ எனும் ஹதீஸ் நூலில் ஒரு ஹதீஸ் இடம்பெறுகிறது.
ஆனால் இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான அபூபக்ர் அந்நஹ்ஷலி என்பவர் பலவீனமானவர் என முற்கால ஹதீஸ்துறை மேதைகளில் முக்கியமானவரான இமாம் அபூஸுர்ஆ(ரஹிமஹுமல்லாஹ்) உட்பட பலர் கூறுகின்றனர். எனவே இந்த ஹதீஸ ஆதாரமற்றதாகும். (பார்க்க : “ஷர்ஹுத்
தக்ரீப்| , (2ஃ269) “அஸ்லு ஸிபதி ஸலாதிந் நபி, (1ஃ382).

வேறு ஸூறா ஓதுதல் :

பர்ழ் தொழுகையிலும் ஸுன்னத்தான தொழுகையிலும் ஸூறதுல் பாதிஹா ஓதிய பின் வேறு ஸூறாக்களை அல்லது வசனங்களை ஓதுவது ஸுன்னத்தாகும்.

1 ) நபியவர்கள் ஸூறா பாதிஹா ஓதி முடித்த பின் சில வேளைகளில் நீண்ட ஸூறாக்களை
ஓதுவார்கள். மஃமூம்கள் மத்தியில் நோயாளிகள் , பிரயாணிகள் இருந்தால் சிறிய ஸூறாக்களை ஓதி சுருக்கி கொள்வார்கள். நபிகளாரின் காலத்தில் பெண்களும் பள்ளிவாசலுக்கு வந்து ஐவேளை
தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளில் கலந்துகொள்வார்கள். அவர்கள் தம்முடன் சுமந்து வந்த குழந்தைகளின் அழுகுரலை நபியவர்கள் கேட்டால் சிறிய ஸூராக்களை ஓதி
சுருக்கிகொள்வார்கள். (ஹதீஸின் கருத்து – புஹாரி , முஸ்லிம் , அஹ்மத்).
2 ) சில வேளைகளில் ஏதாவது ஒரு ஸூறாவை இரண்டாக பிரித்து இரு றக்அத்துகளில்
ஓதுவார்கள் (அஹ்மத்).
3 ) சில நேரங்களில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஸூராக்களைக் கூட ஒரே றக்அத்தில் ஓதுவார்கள் (முஸ்லிம்).

முந்திய இரண்டு றக்அத்துகளில் மட்டும் தான் பாதிஹாவுக்குப் பின் வேறு ஸூறாக்களை ஓதுவதா?அல்லது மூன்றாவது , நான்காவது றக்அத்துகளிலும் வேறு ஸூரா ஓத முடியுமா?

முந்திய இரண்டு றக்அத்துகளிலும் பாதிஹாவுக்கு பின் வேறு ஸூராக்கள் ஓதுவதே நபிகளாரின் பெரும்பாலான நடைமுறை. சில வேளைகளில் பிந்திய இரு ரக்அத்துகளிலும் வேறு ஸூராக்கள்
ஓதியிருக்கிறார்கள். அதனால் மூன்றாவது , நான்காவது ரக்அத்துகளில் வேறு ஸூரா ஓத முடியும்.பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரம் :

அபூ ஸஈதினில் குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் ளுஹர் தொழுகையின் முந்திய
இரண்டு ரக்அத்துகளிலும் 30 வசனங்கள் அளவுக்கு ஓதினார்கள். பிந்திய இரு ரக்அத்துகளிலும் 15
வசனங்கள் அளவுக்கு ஓதினார்கள். அஸர் தொழுகையில் முந்திய இரு றக்அத்துகளிலும் 15 வசனங்கள் அளவுக்கு ஓதினார்கள். பிந்திய இரு ரக்அத்துகளிலும் அதன் அரைவாசி அளவுக்கு வசனங்களை ஓதினார்கள் (முஸ்லிம்).

13) றுகூஉ செய்தலும் அதில் தாமதித்தலும் :

ஸூறா பாதிஹாவும் வேறு ஸூறாவும் ஓதி முடித்த பின் சிறிது தாமதித்து இரு கைகளையும்
உயர்த்தி அல்லாஹு அக்பர் என்று கூறி றுகூஉ செய்ய வேண்டும். இவ்வாறே நபியவர்கள்செய்வார்கள் (பார்க்க : புஹாரி , முஸ்லிம் , அபூதாவூத் , ஹாகிம்).

தொழுகையில் நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை தோள்புயங்களுக்கு நேராக அல்லது
காதுகளுக்கு நேராக உயர்த்த வேண்டும் என்பது நபிவழியாகும் :
இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள் :
1 )நபியவர்கள் ஆரம்ப தக்பீரின் போதும்

2 )றுகூஉக்கு செல்லும் போதும் (எல்லா றக்அத்துகளிலும்)
3 )றுகூஉவிலிருந்து நிலைக்கு வரும் போதும் (எல்லா றக்அத்துகளிலும்)
4 )முதல் அத்தஹிய்யாத்திலிருந்து மூன்றாவது றக்அத்துக்கு வரும் போதும் ஆகிய இந்த நான்கு சந்தர்ப்பங்களில் மட்டுமே கைகளை தோள்புயம் வரை (அல்லது காதுகள்
வரை) உயர்த்துவார்கள் (புஹாரி , முஸ்லிம் , அபூதாவூத்).

இந்த நான்கு சந்தர்ப்பங்கள் தவிர வேறு எந்த நிலையிலும் கைகளை உயர்த்த கூடாது.
றுகூஉவில் பின்வரும் ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டும் :

1 )கைவிரல்களை பொத்தாமல் சற்று பிரித்து இரு உள்ளங்கைகளையும் இரு முழங்கால்களில் வைத்தல்:
நபியவர்கள் கூறினார்கள் : “நீ றுகூஉ செய்தால் உமது இரு உள்ளங்கைகளையும் இரு
முழங்கால்களில் வைத்துக்கொள். உமது கைவிரல்களை சற்று பிரித்து வை. பின்னர் ஒவ்வொரு உறுப்பும் அமைதியடையும் வரை றுகூவில் தாமதித்து நில்’ (இப்னு ஹுஸைமா , இப்னு ஹிப்பான்).

2 )இரு முழங்கைகளையும் விலாவோடு சேர்க்காமல் விலக்கி வைத்தல் :

நபியவர்கள் றுகூஉவில் இரு முழங்கைகளையும் விலாவோடு சேர்க்காமல் விலக்கி வைப்பார்கள்.(திர்மிதி , இப்னு ஹுஸைமா).

3 )முதுகை நீட்டி நேராக நிற்றல் :

நபியவர்கள் றுகூஉ செய்தால் தமது முதுகை (வளைக்காமல்) நீட்டி , அம் முதுகில் நீரை
ஊற்றினால் நிற்குமளவுக்கு மிக நேர்த்தியாக குனிந்து நிற்பார்கள் (புஹாரி , பைஹகி , தபரானி).

நபிகளார் தமது தலையை கீழே தாழ்த்தாமலும் மேலே உயர்த்தாமலும் (முதுகும் தலையும் சமமாக இருக்கத்தக்கதாக) நேராக வைப்பார்கள் (முஸ்லிம் , அபூதாவூத்).

மேற்கூறப்பட்ட ஒழுங்குகள் அனைத்தும் ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் உரியவையாகும்.

மேற்கூறப்பட்ட ஒழுங்குகளுக்கு மாறாக;

– இரு கைகளையும் தோள் புயங்களுக்கு அல்லது காதுகளுக்கு நேராக உயர்த்தாமலே
றுகூஉக்கு செல்லுதல் ,
– றுகூஉவில் தாமதிக்காமல் விடுதல் ,
– இரு கைகளையும் முழங்காலில் வைக்காமல் முழங்காலுக்கு மேலே அல்லது முழங்காலுக்கு
கீழே வைத்தல் ,
– இரு முழங்கைகளையும் விலாவோடு சேர்த்து வைத்தல் ,
– முதுகையும் தலையையும் சமமாக வைக்காமல் வளைந்து அல்லது கடுமையாக குனிந்து நிற்றல்
– ஆகிய அனைத்து முறைகளும் பிழையானவையும் நபிகளாரின் வழிமுறைக்கு முரணானவையும் தொழுகையில் குறைபாட்டை ஏற்படுத்துபவையுமாகும்.
மேலும் றுகூஉ , ஸுஜூத் ஆகிய நிலைகளில் (பர்ழ் மற்றும் ஸுன்னத் ஆகிய இரு
தொழுகைகளிலும்) அல்குர்ஆன் வசனங்களை ஓதுவது தடை செய்யப்பட்டதாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : “றுகூஉவிலும் ஸுஜூதிலும் அல்குர்ஆனை ஓதுவது எனக்கு தடை செய்யப்பட்டுள்ளது’ (முஸ்லிம்)

றுகூஉவில் நபியவர்கள் பல திக்ருகளை ஓதியுள்ளார்கள். அவற்றுள் சில :

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ

 

“ஸுப்ஹான றப்பியல் அழீம்’ (03 அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள்) – (அஹ்மத் , அபூதாவூத்).

سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوْحِ

“ஸுப்பூஹுன் குத்தூஸுன் றப்புல் மலாஇகதி வர் ரூஹ்’ (முஸ்லிம்)

سُبْحَانَكَ اللّٰهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ

“ஸுப்ஹான கல்லாஹும்ம றப்பானா வபிஹம்திக அல்லாஹும்மஹ்பிர்லீ’ (நபியவர்கள் இதை
ருகூஉவிலும் ஸுஜூதிலும் அதிகமாக ஓதுவார்கள்) (புஹாரி , முஸ்லிம்).

14) றுகூஉவிலிருந்து நிலைக்கு வருதல்:

றுகூஉ செய்து முடித்த பின் இரு கைகளையும் உயர்த்தி ‘இஃதிதால்’ எனப்படும் நிலைக்கு வர
வேண்டும். இந்த நிலைக்கு வரும் போது இமாமும் தனித்து தொழுபவரும் ‘ஸமிஅல்லாஹு
லிமன் ஹமிதஹ்’ என்று கூற வேண்டும். இமாமைப் பின்பற்றி தொழும் மஃமூம்கள் ‘ ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறாமல் கீழ்வரும் துஆக்களுள் ஒன்றை ஓத வேண்டும்

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ

“றப்பனா லகல்ஹம்து’

“அல்லாஹும்ம றப்பனா லகல்ஹம்து’

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ
“றப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கதீரன் தையிபன் முபாரகன் பிஹி’

(இதை ஒரு ஸஹாபி ஓதிய போது முப்பதுக்கு மேற்பட்ட மலக்குகள் இதன் நன்மையை
பதிவதற்காக போட்டியிட்டதை கண்டேன்” என நபியவர்கள் கூறினார்கள் (புஹாரி , அபூதாவூத்).

அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் கூறினார்கள் : ‘இமாம் ஸமிஅல்லாஹு லிமன்
ஹமிதஹ்” என்று கூறினால் (மஃமூம்களாகிய) நீங்கள் ‘அல்லாஹும்ம றப்பனா வலகல் ஹம்து” எனக் கூறுங்கள். இவ்வாறு ஒருவர் கூறுவது மலக்குகள் கூறுவதோடு இணைந்துவிட்டால் அவருடைய
முன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்|| (புஹாரி , முஸ்லிம்).

மேற்படி ஹதீஸ் ம்ஃமூம்கள் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறாமல் மேற்குறிப்பிட்ட துஆக்களில் ஒன்றை ஓத வேண்டும் என்பதற்கு ஆதாரமாய் அமைகிறது.

15) ஸுஜூதுக்கு செல்லுதல் :

ஸுஜூத் செய்வதற்காக குனியும் போது நிலத்தில் முதலாவதாக இரு கைகளை வைப்பதா ,முழங்கால்களை வைப்பதா என்பதில் அன்றிலிருந்து இன்று வரை அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

1 )நிலத்தில் முதலாவதாக இரு கைகளையே வைக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்நிலைப்பாட்டை இமாம் மாலிக் (ரஹிமஹுமல்லாஹ்) , இமாம் அவ்ஸாஈ (ரஹிமஹுமல்லாஹ்) போன்ற முற்கால அறிஞர்களும் ஷெய்க் அல்பானி (ரஹிமஹுமல்லாஹ்) போன்ற இந்நூற்றாண்டு அறிஞர்களும் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர் :

“உங்களில் ஒருவர் ஸுஜூதுக்கு செல்லும் போது ஒட்டகம் நிலத்தில் சாய்வது போன்று செல்ல வேண்டாம். (மாறாக) தனது இரு முழங்கால்களை வைப்பதற்கு முன் இரு கைகளையும் (நிலத்தில்) வைக்கவும்.(அஹ்மத் , அபூதாவூத் , நஸாஈ).

2 )இரண்டாவது தரப்பினர் : முதலாவதாக இரு முழங்கால்களையே வைக்க வேண்டும் என
கூறுகின்றனர்.

இக்கருத்தை முற்கால அறிஞர்களான இமாம் அபூஹனீபா (ரஹிமஹுமல்லாஹ்) , இமாம் ஷாபிஈ
(ரஹிமஹுமல்லாஹ்) , இமாம் அஹ்மத் (ரஹிமஹுமல்லாஹ்) , இமாம் ஸுப்யான் அத்தவ்ரீ (ரஹிமஹுமல்லாஹ்) , ஷெய்குல் இஸ்லாம் இப்னுதைமியா (ரஹிமஹுமல்லாஹ்) , இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுமல்லாஹ்) போன்ற பலரும் இந்த நூற்றாண்டு அறிஞர்களான
ஷெய்க் பின் பாஸ் (ரஹிமஹுமல்லாஹ்) , ஷெய்க் உதைமீன் (ரஹிமஹுமல்லாஹ்) போன்றோரும் கொண்டிருக்கின்றனர்.

இமாம் திர்மிதி (ரஹிமஹுமல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : ‘ஸுஜூதுக்கு செல்லும் போது முதலில் முழங்கால்களை வைக்க வேண்டும் என்ற கருத்தையே மிக அதிகமான அறிஞர்கள்
கொண்டிருக்கின்றனர்” (பார்க்க : ‘ஸுனனுத் திர்மிதி” , 2ஃ57).

இத்தரப்பினர் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர் :
‘நபியவர்கள் ஸுஜூதுக்கு செல்லும் போது தமது கைகளை வைப்பதற்கு முன் முழங்கால்களை (நிலத்தில்) வைப்பதை நான் கண்டேன்” என வாஇல் இப்னு ஹுஜ்ர் (றழி) கூறுகிறார்கள் (திர்மிதி ,அபூதாவூத் , நஸாஈ).

இமாம் திர்மிதி அவர்கள் உட்பட மற்றும் பலர் இதை ஆதாரபூர்வமான ஹதீஸ் என கூறுகின்றனர்.இது தொடர்பாக நீண்டதொரு ஆய்வை மேற்கொண்ட ஹி. 8ம் நூற்றாண்டின் தலைசிறந்த பேரறிஞர்களில் ஒருவரான இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுமல்லாஹ்) அவர்கள் முதல் தரப்பினர் முன் வைக்கின்ற ஹதீஸுக்கான விளக்கத்தை வழங்கும் போது ,
‘நபிகளார் ஒட்டகம் செல்வது போன்று ஸுஜூதுக்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார்கள்.ஒட்டகமானது நிலத்தில் சாயும் போது முதலாவதாக தனது முன் கைகளையே நிலத்தில் வைக்கிறது. எனவே ஒட்டகத்துக்கு மாறாக செய்ய வேண்டுமாயின் ஒருவர் தனது முழங்கால்களையே முதலாவது நிலத்தில் வைக்க வேண்டும். ஆயினும் (முதல் தரப்பினர் முன்வைக்கும்) ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் ‘இரு கைகளை வைப்பதற்கு முன் முழங்கால்களை வைக்கவும்” என்று நபியவர்கள் கூறியதை மாற்றி ‘இரு முழங்கால்களை வைப்பதற்கு முன் கைகளை வைக்கவும்” என்று கூறிவிட்டார்” என்று கூறுகிறார். (நூல் : ‘தஹ்தீபு
ஸுனனி அபீதாவூத் வஈழாஹு முஷ்கிலாதிஹீ ” ).

இக்கருத்தை மறுக்கும் முதல் தரப்பினர் , தாம் முன்வைக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர் நபியின் வார்த்தையை மாற்றிக் கூறியுள்ளார் என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறுகின்றனர்.

இவ்விரு கருத்துகளிலும் இரண்டாம் கருத்துக்கான ஆதாரங்கள் சற்று வலுவானவையாக காணப்படுகின்றன. ஆயினும் முதல் தரப்பினரின் ஆதாரங்களும் நிராகரிக்கப்படும் நிலையில் இல்லை.
இரு தரப்பினரும் மிகப் பெரும் அறிஞர்கள் என்பதோடு , இரு வகையான கருத்துகளும் ஹதீஸ்களை ஆய்வு செய்து பெறப்பட்ட முடிவுகள் என்பதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். பிக்ஹ் சட்ட திட்டங்கள் சார்ந்த சில கிளை விடயங்களில் இத்தகைய கருத்து வேற்றுமைகள் இயல்பானவை.
நபியவர்கள் கூறினார்கள் : ‘ஓர் அறிஞர் (அல்குர்ஆனையும் ஹதீஸையும்) ஆய்வு செய்து சரியான முடிவை பெற்றால் அவருக்கு இரு கூலிகள் உண்டு. மற்றொருவர் ஆய்வு செய்து பிழையான முடிவை பெற்றால் (ஆய்வுசெய்தமைக்காக) அவருக்கு ஒரு கூலி உண்டு|| (புஹாரி , முஸ்லிம்).

எந்த ஆதாரமுமின்றி , அல்லது தெட்ட தெளிவான பலவீனமான ஆதாரங்களை வைத்து ஏற்படும் கருத்து வேற்றமைகளுக்கு மார்க்கத்தில் எந்தப் பெறுமானமும் இல்லை. அவை நிராகரிக்கப்பட வேண்டியவையுமாகும்.
இந்த தலைப்பு தொடர்பாக ஆய்வு செய்த தற்கால ஹதீஸ் மற்றும் பிக்ஹ் துறை ஆய்வாளரான ஷெய்க் ஸாலிஹ் அல்முனஜ்ஜித் அவர்கள் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹிமஹுமல்லாஹ்)
அவர்களின் கூற்றோடு தனது ஆக்கத்தை நிறைவுசெய்கிறார் :

“ஸுஜூத் செய்யும் போது முதலில் முழங்கால்களை வைத்தாலும் அல்லது கைகளை வைத்தாலும் தொழுகை நிறைவேறும் என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும். இரண்டில் எது சிறந்தது என்பதிலேயே அறிஞர்களிடையே கருத்து வேற்றுமைகள் உள்ளன. ஒரு தொழுகையாளி இரண்டில் எதை கடைப்பிடித்தாலும் அவரது தொழுகை நிறைவேறும்.(பார்க்க : “மஜ்மூஉல் பதாவா| , 22ஃ449).

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d