ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 04

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 04

08) உள்ளச்சத்தை வரவழைத்து உற்சாகமாக தொழுதல் :

தொழுகையை ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வோடும் உள்ளச்சத்தோடும் தொழுவது அவசியமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: ‘தொழுகையில் உள்ளச்சத்தோடு நிற்கும் விசுவாசிகள் வெற்றிபெற்று விட்டார்கள்” (23 :1&2).

தொழுகை என்பது அல்லாஹ்வுடன் நாம் நடத்தும் ஓர் உரையாடல்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ‘ஓர் அடியான் தொழுகைக்காக நின்றுவிட்டால் அவன் அல்லாஹ்வுடன் உரையாடுகிறான்” (ஸஹீஹுல் புஹாரி).

உலகில் ஓர் அதிகாரிக்கு முன் நின்று உரையாடும் போது நாம் மிகுந்த உற்சாகத்தோடும் அடக்கத்தோடும் ஒருமுகப்படுத்தப்பட்ட மனதோடும் உரையாடுகிறோம் எனில் நம்மைப் படைத்து

படைத்து பாதுகாக்கும் சர்வ சக்தியும் தனிப் பெரும் அதிகாரமும் படைத்த அல்லாஹ்வுடன் உரையாடும் போது நாம் எத்தனை பணிவோடும் உற்சாகத்தோடும் மன ஒருமைப்பாட்டோடும் நிற்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

நபிகளார் கூறினார்கள் : ‘அல்லாஹ்வைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்று தொழுவீராக! நீ அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு தொழு” (அஹ்மத்& இப்னு மாஜஹ்).

நம்மில் அதிகமானோர் தொழுகையை உற்சாகமின்றி சோம்பேறித்தனமாகவும் ‘ஏதோ கடமை முடிந்தால் சரி” என்ற அலட்சிய மனோபாவத்துடனுமே நிறைவேற்றுகிறோம். தொழுகையை சோம்பேறித்தனமாக நிறைவேற்றுவது நயவஞ்சகர்களின் பண்பு என்ற அல்லாஹ்வின் வார்த்தை நமக்கு அச்சத்தை தர வேண்டும்.

அல்லாஹ் மிக இழிவாகப் பேசுகின்ற நரகத்தின் அடித்தட்டில் குடியிருக்கப் போகின்ற நயவஞ்சகர்களின் பண்பு என்னிடத்தில் இருக்கிறதா என்று சுய விசாரணை செய்துகொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் : ‘நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர்.ஆனால் அவன் அவர்களை ஏமாற்றிவிடுவான்.தொழுகைக்கு அவர்கள் நிற்கும் பொழுது சோம்பேறிகளாகவே நிற்கிறார்கள். மனிதர்களுக்கு (தொழுகையாளிகளாக தங்களை) காண்பிப்பதற்காக (தொழுகிறார்கள்)” (4 :142).

உள்ளச்சமும் உற்சாகமும் நிறைந்ததாக நமது தொழுகையை எப்படி மாற்றுவது?

1.என்னைப் படைத்து வாழ வைத்துக் கொண்டிருக்கும் அருளாளன் அல்லாஹ்வுடன் உரையாடப் போகிறேன் என்ற உணர்வை வரவழைப்பது

2.நபிகளார் தொழுத முறைகள் அனைத்தையும் அறிந்து அவற்றை அப்படியே நமது தொழுகையில் செயற்படுத்துவது

3.ஓத வேண்டிய ஓதல்களை ஆறுதலாகவும் அமைதியாகவும் ஓதுவது

4.ஒவ்வொரு நிலையிலும் தாமதிப்பது

5.நமக்கு தெரிந்த ஸ_ராக்கள்& திக்ருகள் போன்றவற்றை பொருள் விளங்கி ஓதுவது…

என்பன தொழுகையில் உற்சாகத்தையும் உள்ளச்சத்தையும் ஏற்படுத்தும்.

09) ஆரம்ப துஆ (துஆஉல் இஸ்திப்தாஹ்) ஓதுதல் :

ஆரம்ப தக்பீர் கூறி கைகளை கட்டியதும் – பர்ழ் தொழுகையாயினும் ஸுன்னத்தான தொழுகையாயினும் -ஓதுவதற்கென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல துஆக்களை கற்று தந்திருக்கிறார்கள்.

அவற்றுள் ஒன்றுதான் பெரும்பாலானோர் ஓதுகின்ற ~வஜ்ஜஹ்து…| என்று ஆரம்பிக்கின்ற துஆ.

ஸஹீஹ் முஸ்லிம் மற்றும் பல ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ள இந்த துஆ நீண்டதொரு துஆவின் ஒரு பகுதியாகும். இது தவிர வேறு பல ஆதாரபூர்வமான சிறிய துஆக்களும் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுள் சில :

اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ ”

‘அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன ஹதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மக்ரிப் அல்லாஹும்ம நக்கினீ மினல் ஹதாயா கமா யுனக்கத் தவ்புல் அப்யழு மினத் தனஸ். ஆல்லாஹும்மஹ்ஸில் ஹதாயாய பில் மாஇ வத்தல்ஜி வல்பரத்’(புஹாரி& முஸ்லிம்).

اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ ‏ ‏بُكْرَةً ‏ ‏وَأَصِيلًا ‏

அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்து லில்லாஹி கதீரா வஸுப்ஹானல்லாஹி புக்ரதன் வஅஸீலா’.

இந்த துஆவை ஸஹாபி ஒருவர் தொழுகையில் ஆரம்ப தக்பீரின் பின் ஓதியதைக் கேட்ட நபியவர்கள் அதன் சிறப்பு குறித்து கூறும் போது ‘இந்த துஆவுக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன’ என்று கூறினார்கள். (முஸ்லிம்& திர்மிதி).

الحمد اللَّه حمدا كثيرا طيبا مباركا فيه

‘அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரகன் பிஹி’.

இந்த துஆவை மற்றுமொரு ஸஹாபி ஆரம்ப தக்பீருக்கு பின் ஓதியதை கேட்ட நபியவர்கள் ‘இந்த துஆவின் நன்மையை கொண்டு செல்வதற்கு பன்னிரண்டு வானவர்கள் போட்டியிட்டனர்’ என்று கூறினார்கள். (முஸ்லிம்& அபூதாவூத்& நஸாஈ).

இவை போன்று இன்னும் சில துஆக்களும் ஆரம்பத் தக்பீர் கட்டிய பின் ஓதுவதற்கு என நபியவர்களால் கற்றுத்தரப்பட்டிருக்கின்றன. அவற்றை நாம் தேடியறிந்து அவற்றின் சரியான அரபு மொழி உச்சரிப்போடு மனனமிட்டு ஒவ்வொரு தொழுகையிலும் ஒவ்வொரு துஆவை ஓதி வர முயற்சிக்க வேண்டும். மேற்படி துஆக்களில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தொழுகையிலும் மாறி மாறி ஓதும் போது நபியவர்களின் அனைத்து ஸுன்னாக்களையும் உயிர்ப்பித்த நன்மையை பெறமுடியும்.

குறிப்பு :

– அஊது பிஸ்மி கூறாமல் இந்த துஆக்களை ஓத வேண்டும்.

– இந்த ஆரம்ப துஆக்கள் ஒவ்வொரு தொழுகையின் முதலாவது றக்அத்தின் ஆரம்ப தக்பீர் கட்டிய பின் ஓதப்படுவதேயன்றி ஒவ்வொரு றக்அத்திலும் ஓதப்படுவதல்ல.

– ஆயினும் இந்த ஆரம்ப துஆக்களில் ஒன்றை ஓதுவது கட்டாயமல்ல.ஸுன்னத்தானதே.

ஓதாவிட்டாலும் தொழுகை நிறைவேறும்.

10) அஊது& பிஸ்மி ஓதுதல் :

முதல் தக்பீருக்குப் பின் ஆரம்ப துஆவை ஓதியதை தொடர்ந்து ஸூறா பாதிஹாவை ஓத முன்னர் அஊது& பிஸ்மி கூற வேண்டும்.

அஊது-வை இரகசியமாக ஓதுதல் :

அல்குர்ஆன் ஓத ஆரம்பிக்கும் போது அஊது ஓதுவது மிகவும் வலியுறுத்தப்பட்ட ஸுன்னத்தாகும்.

தொழுகையில் அஊது ஓதும் போது சத்தமில்லாமல் இரகசியமாக ஓதுவதே நபிவழியாகும்.

தொழுகையில் அஊது ஓதுவதைப் பொறுத்தவரை அறிஞர்களிடையே இரு வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன :

முதல் கருத்து :

முதல் றக்அத்தில் மட்டும் அஊது ஓத வேண்டும். ஏனைய றக்அத்துகளில் அஊது ஓதாமலே ஸூரா பாதிஹா ஓத வேண்டும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். ஹனபி மற்றும் ஹம்பலி மத்ஹப் அறிஞர்களில் பலர் கூறும் இக்கருத்தை இமாம் இப்னுல் கையிம் (ரஹ்)& இமாம் ஷவ்கானி (ரஹ்) ஆகியோர் சரிகாணுகின்றனர்.

(பார்க்க : ‘ஸாதுல் மஆத்”(1ஃ242)& ‘நைலுல் அவ்தார்” (2ஃ231).

இக்கருத்துக்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை குறிப்பிடுகின்றனர் :

அபூஹுரைரா (ரழி) கூறுகிறார்கள் : ‘நபியவர்கள் இரண்டாவது றக்அத்துக்கு எழுந்தால் மௌனமாக நிற்காமல் (நேரடியாக) ‘அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்” என்று ஓத ஆரம்பித்துவிடுவார்கள்

(முஸ்லிம்& இப்னு ஹுஸைமா).

‘மௌனமாக நிற்காமலே அல்ஹம்து… என்று ஓத ஆரம்பிப்பார்கள் ” என்று இந்த ஹதீஸ்

குறிப்பிடுவதன் மூலம் நபியவர்கள் முதல் றக்அத்தை தவிரவுள்ள ஏனைய றக்அத்துகளில் அஊது ஓதவில்லை என்பது தெளிவாகிறது என்பதாக இவ்வறிஞர்கள் விளக்குகின்றனர்.

இரண்டாவது கருத்து:

எல்லா றக்அத்துகளிலும் அஊது ஓத வேண்டும் என மறுசாரார் கூறுகின்றனர். இதற்கு பின்வரும்

அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாக காட்டுகின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான் : ‘(நபியே!) அல்குர்ஆ னை ஓத நாடினால் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவீராக|| (16:98).

இக்கருத்தை இமாம் ஷாபிஈ (ரஹ்)& இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) உள்ளிட்ட பல அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேற்படி வசனம் குர்ஆன் ஓதும் எல்லா சந்தர்ப்பங்களிலும்அஊது ஓத வேண்டும் என்பதை பொதுவாகவே கூறுவதால் எல்லா றக்அத்துகளிலும் அஊது ஓத வேண்டும் என்று கூறுகின்றனர்.

அவ்வாறெனில் முதல் சாரார் ஆதாரமாக காட்டும் ஹதீஸுக்கு என்ன விளக்கம்?

ஆம். அந்த ஹதீஸில் வரும் ~மௌனமாக நிற்காமல் அல்ஹம்து என்று ஓதினார்கள்| என்பது ஆரம்ப துஆவை ஓதாமல் விட்டதை கூறுவதற்காக சொல்லப்பட்டதாகும். அஊது ஓதவில்லை என்பதை அது குறிக்காது என்று இரண்டாம் சாரார் கூறுகின்றனர்.

இவற்றை வைத்து நோக்கும் போது இந்த இரண்டாவது கருத்தே (அதாவது ஒவ்வொரு றக்அத்திலும் அஊது ஓத வேண்டும் என்பது) ஆதார வலுக்கூடியதாக தெரிகிறது. அல்லாஹு அஃலம்.

பிஸ்மியை இரகசியமாக ஓதுதல் :

அஊது ஓதிய பின் -ஸுறா ஒன்றின் ஆரம்பமாக இருந்தால் – பிஸ்மி ஓதுவது வலியுறுத்தப்பட்ட ஸுன்னத்தாகும்.

சத்தமிட்டு ஓதி தொழப்படும் தொழுகைகளிலும் (உ-ம் : மஃரிப்& இஷா& ஸுப்ஹ்& ஜும்ஆ) அஊதுவை போன்றே பிஸ்மியையும் சத்தமின்றி இரகசியமாக ஓதுவதே நபியவர்களின் நடைமுறையாகும்.

அனஸ் (றழி) அறிவிக்கிறார்கள் : நான் நபியவர்களுக்கு பின்னாலும் அபூபக்ர் (ரழி), உமர் (ரழி),உஸ்மான் (ரழி) ஆகியோருக்கு பின்னாலும் தொழுதுள்ளேன். அவர்கள் அனைவரும் ‘அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்” என்றே ஆரம்பிப்பார்கள். ஆரம்பத்திலோ, இறுதியிலோ பிஸ்மியை ஓத மாட்டார்கள் (புஹாரி& முஸ்லிம்).

மற்றொரு ஹதீஸ் அறிவிப்பின் படி ‘நபியவர்கள் பிஸ்மியை சத்தமிட்டு ஓதமாட்டார்கள்.இரகசியமாக ஓதுவார்கள்” (இப்னு ஹுஸைமா).

அப்துல்லாஹ் இப்னு முஹப்பல் (ரழி) அவர்களின் மகன் ஒரு தடவை தொழுகையில் பிஸ்மியை சத்தமிட்டு கூறினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு முஹப்பல் (ரழி) அவர்கள் மகனை நோக்கி

‘மகனே! உன்னை நான் எச்சரிக்கிறேன். நபித் தோழர்களில் யாரும் இவ்வாறு பிஸ்மியை சத்தமிட்டு ஓதியதை நான் பார்த்ததில்லை. இஸ்லாத்தில் ஒரு விடயம் புதிதாக உருவாக்கப்பட்டால் நபியவர்களுக்கு அது அதிக கோபத்தை ஏற்படுத்தும். நான் நபியுடனும் அபூபக்ர், உமர்,உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோருடனும் தொழுதிருக்கிறேன். அவர்களில் எவரும் பிஸ்மியை (சத்தமிட்டு) கூறியதை நான் கண்டதில்லை. நீயும் கூற வேண்டாம். நீ ஓத ஆரம்பித்தால் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றே தொடங்கு” என்று கூறினார்கள் (திர்மிதி,நஸாஈ, அஹ்மத்).

மேற்படி சம்பவம் ஆதாரபூர்வமானது என ஹதீஸ் துறை ஆய்வாளர்களான இமாம் திர்மிதி (ரஹ்),ஹாபிழ் ஸைலஈ (ரஹ்), ஷெய்க் அஹ்மத் ஷாகிர் (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

11) ஸுரதுல் பாதிஹா ஓதுதல் :

அஊது& பிஸ்மி இரண்டையும் இரகசியமாக ஓதிய பின் தொழுகையின் அனைத்து றக்அத்துகளிலும் ஸுறா பாதிஹாவை முழுமையாக ஓதுவது கட்டாயமாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ‘தொழுகையில் ஸூறதுல் பாதிஹா ஓதாதவருக்கு தொழுகையே இல்லை” (புஹாரி& முஸ்லிம்).

இதே வேளை இமாமைப் பின்பற்றி தொழும் மஃமூம்கள் சத்தமிட்டு ஓதி தொழும் தொழுகைகளில் (உ-ம் : மஃரிப்,இஷா,ஸுப்ஹ்…) ஸுறா பாதிஹாவை ஓத வேண்டுமா,ஓத கூடாதா என்பது தொடர்பில் அறிஞர்களிடையே இரு கருத்துகள் காணப்படுகின்றன :

முதல் கருத்து:

மஃமூம்கள் ஸூறா பாதிஹா ஓதக்கூடாது, இமாம் ஓதுவதை கேட்டுகொண்டிருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு இரு ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

‘அல்குர்ஆன் ஓதப்பட்டால் செவிதாழ்த்தி கேளுங்கள், வாய்மூடி இருங்கள்…||(7:204).

நபிகளார் கூறினார்கள் : ‘இமாம் என்பவர் பின்பற்றப்பட வேண்டியவராவார். அவரோடு முரண்படாதீர்கள். அவர் அல்லாஹு அக்பர் என கூறினால் நீங்களும் அல்லாஹு அக்பர் என்று கூறுங்கள். அவர் ஓதினால் நீங்கள் மௌனமாக நில்லுங்கள்|| (முஸ்லிம்).

இரண்டாவது கருத்து :

மற்றும் சில அறிஞர்கள் அனைத்து தொழுகைகளிலும் மஃமூம்கள் ஸுறா பாதிஹா ஓத வேண்டும் என கூறுகின்றனர்.

இதற்கு ஆதாரமாகவும் முதல் சாராருக்கு பதிலாகவும் பின்வரும் ஹதீஸை முன்வைக்கின்றனர் :

ஒருநாள் நபியவர்கள் ஸுப்ஹ் தொழுகை நடாத்தினார்கள். நபியவர்கள் ஸூறா பாதிஹா ஓதிவிட்டு வேறு ஒரு ஸூறாவை ஓதிக்கொண்டிருந்த போது ஸஹாபாக்கள் ஸூறா பாதிஹா ஓதி கொண்டிருந்தார்கள். தொழுகை முடிந்த பின் நபியவர்கள் ‘இமாமுக்கு பின்னால் நீங்கள் ஏதும் ஓதினீர்களா? ” என்ற போது ஸஹாபாக்கள் ‘ஆம்” என்றார்கள். அப்போது நபியவர்கள் ‘இமாமுக்கு பின்னால் ஸூறா பாதிஹா மட்டும் ஓதுங்கள். வேறு எதுவும் ஓதாதீர்கள். ஏனெனில் ஸூறா பாதிஹா ஓதாதவருக்கு தொழுகை கூடாது” என்று கூறினார்கள் (திர்மிதி& அபூதாவூத்).

இமாம் திர்மிதி, இமாம் ஹத்தாபி, இமாம் பைஹகி ஆகியோர் இது ஆதாபூர்வமான ஹதீஸ் என குறிப்பிடுகின்றனர்.

இந்த ஹதீஸ் உண்மையில் மஃமூம்கள் அனைத்து தொழுகைகளிலும் பாதிஹா ஓத வேண்டும் என்பதற்கு பலமான ஆதாரமாக அமைகிறது.

அத்தோடு முதல் சாரார் முன்வைக்கும் இரு ஆதாரங்களும் ஸூறா பாதிஹாவை தவிரவுள்ள ஏனைய ஸூறாக்களை மஃமூம்கள் ஓதாமல் இமாம் ஓதுவதை கேட்டுகொண்டிருக்க வேண்டும் என்பதற்கே ஆதாரமாக அமைகின்றன.

இமாம் திர்மிதி (ரஹ்) கூறுகிறார்கள் : ‘இமாமை பின்பற்றி தொழும் மஃமூம்கள் அனைத்து தொழுகைகளிலும் ஸூறா பாதிஹா ஓத வேண்டும் என்ற கருத்தையே பெரும்பாலான ஸஹாபாக்கள்,தாபிஈன்கள்,இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ,இமாம் அஹ்மத்,இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக், இமாம் இஸ்ஹாக் உள்ளிட்ட பலர் கொண்டுள்ளார்கள்” (பார்க்க : ஸுனனுத் திர்மிதி& 2ஃ118& தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸு ஸுன்னா& 1ஃ231).

சுருங்கக் கூறின்;

சத்தமிட்டு ஓதி தொழப்படும் தொழுகைகளில் இமாம் ஸூறா பாதிஹா ஓதிக் கொண்டிருக்கும் போது மஃமூம்கள் மௌனமாக கேட்டுகொண்டிருக்க வேண்டும். வஜ்ஜஹ்து போன்ற ஆரம்ப துஆவை ஓதி கொண்டிருக்க கூடாது.

இமாம் ஸூறா பாதிஹாவுக்கு பின் வேறு ஸுறா ஓதும் போது ஸூறா பாதிஹா மாத்திரம் ஓதுவதற்கு அனுமதி இருப்பதால் அதை மாத்திரம் ஓத வேண்டும். வேறு எந்த ஸூறாவும் ஓத கூடாது.

இது இவ்வாறிருக்க ஒருவருக்கு ஸூறா பாதிஹா மனனமில்லையென்றால் என்ன செய்வது?

1 )ஒரு தடவை நபியவர்கள் ஒருவருக்கு தொழுகை முறையை கற்றுகொடுத்தார்கள். அப்போது அவர்கள் ~உனக்கு குர்ஆன் மனனமிருந்தால் அதை ஓது. இல்லையெனில் அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ் என்பவற்றை கூறு’ என்று கூறினார்கள். (திர்மிதி& அபூதாவூத்).

2 )மற்றொரு தடவை நபியவர்களிடம் ஒருவர் வந்து ‘அல்குர்ஆனில் எனக்கு எதுவும் மனனமில்லை. அதற்கு நிகராக தொழுகையில் ஓத ஏதாவது கற்று தாருங்கள்’ என்று கேட்ட போது நபியவர்கள்

~ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம்’ என்று கூறு என கூறினார்கள்

(அபூதாவூத்& நஸாஈ)

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி)

 

முந்தைய தொடரை வாசிக்க 

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d