உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – தொடர் – 02

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.)

 

– Bro. Abu Julybeeb Saajid As-sailanee

 

11) உழ்ஹிய்யாவும், அகீகாவும் ஒரே நேரத்தில் அமைந்தால், இவ்விரு நோக்கங்களுக்கும் ஒரு விலங்கை அறுக்கலாமா.?

கூடாது; ஏனென்றால், இரண்டும் வெவ்வேறு காரணங்களுக்காக அறுக்கப்படக் கூடியது.

 

12) அறுப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட பிராணிகளில் எந்தெந்த குறைகள் இருந்தால், அவைகளை அறுக்க முடியாது.?

 

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்கள் கூறியதாவது : நான்கு குறைகள் காணப்படும் விலங்களை குர்பானி கொடுக்கக் கூடாது.

 

i) வெளிப்படையாக தெரியும் வகையில் ஒரு கண் குருட்டுத்தன்மை (கண்பார்வையை இழந்த பிராணி)

ii) தெளிவாக, வெளிப்படையாக தெரியக்கூடிய நோய்

iii) தெளிவாக, வெளிப்படையாக தெரியக்கூடிய அளவிலான நொண்டி

iv) எலும்பில் சதையற்ற மெலிவான பிராணி

நூல்கள் : அஹ்மத்: 4/289, அபூதாவூத்: 2802, நஸாஈ: 4/214-215, திர்மிதீ: 1497, இப்னுமாஜா: 3144, இப்னு ஹிப்பான்: 5919-5922

 

இந்த ஹதீஸை இமாம்களான புஹாரீ, அஹ்மத் ஆகியோர்கள் ஸஹீஹ் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள் & இச்செய்தியை ஸஹீஹ் என இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் தனது ‘இர்வாவுல் ஃஙலீல்’ எனும் நூலில் கூறியுள்ளார்கள்.

 

சுறுசுறுப்பற்ற, விலங்கின் தோல்பரப்பில் சொறி சிரங்கு காணப்படும் விலங்குகளை குர்பானி கொடுக்காமல் இருப்பது மிகவும் சிறந்தது; அதே சமயம் இதனைக் குர்பானி கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும்.

 

13) இந்திரியத்துளி சேர்ந்து இனப்பெருக்கம் செய்யாத அமைப்பில் கறுவறுக்கப்பட்ட பிராணியை குர்பானி கொடுக்கலாமா.?

கொடுக்கலாம். நபியவர்கள் கொடுத்துள்ளதாக ஹதீஸ் வந்துள்ளது. அதில் சில ஹதீஸ்கள் ஸஹீஹானவை; இன்னும் சில ஹதீஸ்களை இமாம் அபூ ஹாதிம், இமாம் அபூ ஸுர்ஆ போன்றோர் ‘ளயீஃப்’ என்று கூறுகிறார்கள்.

 

14) குர்பானிக்காக நாம் தேர்ந்தெடுத்த பிராணிகள் எதிர்பாராத குறை ஏற்பட்டால்/ காயம் ஏற்பட்டால்/ திருடப்பட்டால் என்ன செய்வது.?

 

குறித்த பிராணி அதுவாகவே காயத்தை ஏற்படுத்திக் கொண்டால் பிரச்சினையில்லை; ஆனாலும் நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்

குறித்த வருடத்தில் ஒரு விலங்கை அறுத்து பலியிடுவதாக ஒருவர் நேர்ச்சை செய்து வாங்கிய விலங்கானது திருடப்பட்டால் அந்நபர் வேறொரு விலங்கை திரும்ப வாங்கி அதனை குர்பானி கொடுப்பது அவர்மீது வாஜிப் (கடமை) ஆகும்.

 

15) குர்பானி விலங்கானது குட்டியிட்டுவிட்டால் அதனுடைய சட்டம் என்ன.?

அவ்வாறான சந்தர்ப்பத்தில் குர்பானி விலங்குடன் சேர்த்து அதன் குட்டியும் குர்பானி கொடுக்கப்பட வேண்டும் என்பதே அதிகமான அறிஞர்களின் கருத்தாகும்.

 

16) குர்பானிக்கான விலங்கின் வயிற்றில் ஒரு சிசு காணப்பட்டால் அதனுடைய சட்டம் என்ன.?

 

நபியவர்களின் தோழர்கள் “குர்பானி பிராணியின் (தாய்) அறுக்கப்பட்டால் அதனுள் காணப்படும் சிசுவும் அறுத்ததாகவே கருதப்படும்” என்று கூறக்கூடியவர்களாக இருந்ததாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலியல்லாஹு ‘அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : அபூதாவூத்

 

சிசு இறந்துவிட்டாலும் அதனை சாப்பிட முடியும்.

 

17) உழ்ஹிய்யா பிராணியின் வயது வரம்பு என்ன.?

 

ஒட்டகம் – 5 வயதுகள் முழுமையடைதல்

மாடு – 2 வயதுகள் முழுமையடைதல்

வெள்ளாடு – 1 வயது முழுமையடைதல்

செம்மறி – 6 மாதங்கள் முழுமையடைதல்

 

ஸனீ – பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முழுத்திருப்பதை இவ்வாறு கூறுவர்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓராண்டு பூர்த்தியான ஆட்டையே அறுத்துக் குர்பானி கொடுங்கள். அது கிடைக்காவிட்டால் செம்மறியாட்டில் (ஆறு மாதத்திற்கு மேல்) ஒரு வயதுக்குட்பட்டதை அறுத்துக் குர்பானி கொடுங்கள்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3971

 

18) வயது பூர்த்தியானதை எப்படி அறியலாம் (பற்கள் சம்பந்தமாக) ..?

விற்பனையாளர் நம்பகமானவராக இருந்தால் அவரது கூற்றை நம்பி வாங்கலாம்; விற்பனையாளர் பொய் கூறினால் அதை நம்பி, அவரிடமிருந்து பிராணியை வாங்கக்கூடாது. விற்பனையாளர் பேசுவது உண்மையா? பொய்யா.? என சந்தேகம் இருந்தாலும் அவரிடமிருந்து வாங்கக் கூடாது.

அதேபோல பிராணியை பார்த்து அதன் வயதினை கண்டறியும் திறன் நம்மிடம் இருந்தால் அதன் அடிப்படையில் நாம் குர்பானி பிராணியை வாங்கலாம்.

 

19) உழ்ஹிய்யா பிராணியை எப்போது அறுக்க ஆரம்பிக்கலாம்.?

 

பெருநாள் தொழுகையின் நேரம் ஆரம்பித்ததிலிருந்து நாம் அறுக்கலாம்; (குத்பாவுக்கு முன்னால்/பின்னால் அறுத்தாலும் சரியே)

 

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، سَمِعْتُ جُنْدَبَ بْنَ سُفْيَانَ الْبَجَلِيَّ، قَالَ شَهِدْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ فَقَالَ “” مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيُعِدْ مَكَانَهَا أُخْرَى، وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ “”.

ஜுன்தப் இப்னு சுஃப்யான் அல்பஜலீ(ரலி) கூறினார்

நான் நபி(ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் 10 வது) நாளில் இருந்தேன். அப்போது அவர்கள், ‘(பெருநாள்) தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் அதனிடத்தில் (அதற்கு பதிலாக) வேறொன்றை (தொழுகைக்கப் பின்) அறுக்கட்டும். அறுக்காமல் இருப்பவர் (தொழுகை முடிந்தவுடன்) அறுக்கட்டும்’ என்று கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 5562.

 

20) உழ்ஹிய்யாவை அறுப்பதற்கான கடைசி நேரம் எது. ?

துல்ஹஜ் 10, மற்றும் தஷ்ரீகுடைய நாட்கள் (11, 12, 13) வரையிலும் அறுக்கலாம்; கடைசி நாளின் (13 வது பிறை) சூரியன் மறைவதற்கு முன்பு வரை அறுக்க முடியும்.

 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல’ என்று நபி(ஸல்) கூறினார்கள். ‘ஜிஹாதை விடவுமா?’ என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தன்உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 969.

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

 

முந்தைய தொடரை வாசிக்க

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply