உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – தொடர் – 01

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

 

உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.)

 

– Bro. Abu Julybeeb Saajid As-sailanee

 

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‏

ஆகவே, நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக.

(அல்குர்ஆன் : 108:2)

 

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு (குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்” என்று (நபியே) நீர் கூறுவீராக!

(அல்குர்ஆன் : 6:162)

 

மேற்கண்ட வசனங்கள் அடிப்படையில் உழ்ஹிய்யா கொடுப்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட இபாதத் ஆகும்.

 

நபி (ஸல்லல்லாஹு ‘அலைஹிவ ஸல்லம்) அவர்கள் ஆட்டை உழ்ஹிய்யா கொடுத்துள்ளார்கள் :

 

அனஸ் (ரலியல்லாஹு ‘அன்ஹு) அறிவித்தார்.

நபி (ஸல்லல்லாஹு ‘அலைஹிவ ஸல்லம்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்துத் தம் கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளையுடைய, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள்.

நூல் : ஸஹீஹ் புகாரி : 1712

 

குர்பானி கொடுப்பது ஓர் இபாதத் என்பது முஸ்லிம்களின் ஏகோபித்த நிலைபாடாக உள்ளது என்று இமாம் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் தமது நூலான ‘அல்-முஃக்னி’ யில் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

1) உழ்ஹிய்யா என்றால் என்ன.? (வரைவிலக்கணம்)

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளிலிருந்து யவ்முந் நஹ்ர் நாளிலும், அதற்கு பின்னால் வரும் தஷ்ரீக் நாட்களிலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அறுத்துப்பலியிடுதல் ஆகும்.

 

மற்ற பெயர்கள் : உழ்ஹிய்யா, இழ்ஹிய்யா

 

2) உழ்ஹிய்யா கொடுப்பதன் சட்டம்.?

இது முஹ்தஹப் (விரும்பத்தக்க) காரியம் ஆகும்; இது வாஜிப் (கட்டாயம்) இல்லை.

 

ஆதாரம் :

நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக உம்மு ஸலமா (ரலியல்லாஹு ‘அன்ஹா) அறிவிப்பதாவது :

‘துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் வந்துவிட்டால், உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால் அவரது முடிகளை, நகங்களை களைய வேண்டாம்.

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 3998

 

இமாம் ஷாஃபியீ (ரஹ்) கூறுவதாவது : இந்த ஹதீஸில் வரும் ‘உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால்’ என்ற வார்த்தையிலிருந்து இது முஸ்தஹப் என்பதை உணரலாம்.

 

3) உழ்ஹிய்யா கொடுப்பதன் சிறப்பு பற்றிய ஸஹீஹான ஹதீஸ் வந்துள்ளதா.?

இது தொடர்பாக எந்தவொரு ஸஹீஹான ஹதீஸும் வரவில்லை.

 

இமாம் இப்னுல் அரபி அல்-மாலிகி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது :

“உழ்ஹிய்யா கொடுப்பது சம்பந்தமாக எந்தவொரு சிறப்பும் ஸஹீஹான ஹதீஸ்களில் வரவில்லை; இது குறித்து வரப்பட்டுள்ள சில ஹதீஸ்களை பொறுத்தமட்டில் அவை ஸஹீஹான செய்திகள் அல்ல.”

 

4) ஒருவர் கடன் வாங்கி உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாமா.?

கடனை திரும்ப தருவதற்கு சக்தி பெற்றவர் அவ்வாறு செய்யலாம்.

 

5) எவற்றிலிருந்து குர்பானி கொடுக்க வேண்டும்.?

கால்நடைகளிலிருந்து மாத்திரமே குர்பானி கொடுக்க முடியும்.

 

ஆதாரம் :

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌ وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏

(ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைப் பிராணிகளிலிருந்து அவன் அவர்களுக்கு கொடுத்திருக்கின்றவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை அவர்கள் கூறுவதற்காக ஒவ்வொரு சமூகத்தாருக்கும் குர்பானி செய்வதை நாம் ஏற்படுத்தியிருந்தோம், ஆகவே உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் (ஒரே) ஒரு நாயன்தான், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்து நடங்கள், மேலும், உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக!

(அல்குர்ஆன் : 22:34)

 

இவ்வசனத்தில் வரும் بَهِيْمَةِ الْاَنْعَامِ என்ற வார்தையானது மாடு வகைகள், ஒட்டக வகைகள், செம்மறி ஆடு மற்றும் கருப்பு கலந்த வெள்ளை ஆடுகளை குறிக்கிறது.

 

6) உழ்ஹிய்யாவுக்கு அறுக்கப்படும் கால்நடைகளில் மிகவும் சிறந்தது எது.?

ஒரு ஒட்டகத்தை முழுமையாக கொடுப்பது மிகச் சிறந்த பிராணியாகும். பிறகு ஒரு முழு மாட்டை கொடுப்பது சிறந்தது; அதன் பிறகு முழு ஆட்டை கொடுப்பது சிறந்ததாகும்.

 

ஆதாரம் :

இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு ‘அன்ஹு) அறிவிப்பதாவது :

நாங்கள் நபி (ஸல்லல்லாஹு ‘அலைஹிவ ஸல்லம்) அவர்களுடன் பயணத்தில் இருந்தோம்; அப்போது பெருநாள் தினம் வந்தது, ஒரு ஒட்டகத்தில் 10 பேர்களும், ஒரு மாட்டில் 7 பேர்களும் கூட்டு சேர்ந்தோம் என்கிறார்கள்.

நூல் : திர்மிதீ, நஸாயீ | இமாம் அல்பானி, இமாம் முக்பில் (ரஹிமஹூல்லாஹ்) அவர்கள் இந்த ஹதீஸை ‘ஸஹீஹ்’ என்கிறார்கள். [இமாம் முக்பில் அவர்கள் ‘ஸஹுஹ் முஸ்னத் மிமா லய்ஸ ஃபீ ஸஹுஹைன்’ எனும் நூலில் இச்செய்தியை ஸஹீஹ் என்கிறார்கள்.]

 

இதன் சட்டம் :

1 ஒட்டகம் = 10 ஆடுகள்

1 மாடு = 7 ஆடுகள்

 

அபூதர் அல்-கிபாரி (ரலியல்லாஹு ‘அன்ஹு) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்வதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். நான், “எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தன் எசமானர்களிடம் பெறுமதி மிக்க, அதிக விலை கொண்ட அடிமைதான் (சிறந்தவன்)” என்று பதிலளித்தார்கள்.”அ(த்தகைய அடிமையை விடுதலை செய்வ)து என்னால் இயலவில்லை யென்றால்…?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழில் செய்பவருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக” என்று சொன்னார்கள்……….”

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 136.

 

இறைத்தூதர் (ஸல்லல்லாஹு ‘அலைஹிவ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

‘ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.’

என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்.

நூல் : ஸஹீஹ் புகாரி : 881.

 

7) எப்படியான தன்மைகளை குர்பானி பிராணி கொண்டிருப்பது விரும்பத்தக்கது..??

i) அதிகம் கொழுத்த/ பரிபூரண உடம்பை பெற்றிருத்தல்

 

ஆதாரம் :

 

ii) வெள்ளை நிறமாக இருப்பது (குறிப்பாக ஆடு)

 

ஆதாரம் :

அனஸ் (ரலியல்லாஹு ‘அன்ஹு) அறிவித்தார்.

நபி (ஸல்லல்லாஹு ‘அலைஹிவ ஸல்லம்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்துத் தம் கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளையுடைய, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள்.

நூல் : ஸஹீஹ் புகாரி : 1712

 

iii) உட்காரும்போது கால்மடித்து உட்காரும்போது அதன் முழங்கால், வயிற்றுப்பகுதி, இரு கண்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களும் கருப்பாக இருத்தல்.

 

iv) ஆண் பிராணியாக இருப்பது.

 

8) குர்பானி கொடுப்பதில் ஆக குறைந்த பிராணி எது.?

ஆட்டை முழுமையாக குர்பானி கொடுப்பதாகும்.

 

ஆதாரம் :

நபி (ﷺ) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப் (رضي الله عنه) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அஃதா பின் யஸார் (رحمه الله) | நூல் : திர்மிதி

 

9) ஒரு ஒட்டகத்தில், ஒரு மாட்டில், ஒரு ஆட்டில் எத்தனை பேர் கூட்டு சேர்ந்து கொடுக்க முடியும்..?

1 ஒட்டகத்தில் 10 பேரும், மாட்டில் 7 பேரும் கூட்டு சேரலாம்; ஆட்டில் கூட்டு சேர முடியாது.

 

ஒரு ஒட்டகத்தில் 10 பேர் கூட்டு சேரலாமா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுள்ளது.

 

முதல் சாரார் (அதிகமான உலமாக்கள்) : ஒட்டகத்தில் 7 பேர் மாத்திரமே சேர முடியும்.

 

இமாம் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் ‘அல்-முஃங்னி’ என்ற நூலில் கூறும்போது :

“ஒட்டகத்தில் 7 பேர் சேர்ந்தும், மாட்டில் 7 பேர் சேர்ந்தும் குர்பானி கொடுக்க முடியும்.”

 

இதே கருத்தில்தான் நபித்தோழர்களான அலி, இப்னு உமர், இப்னு அப்பாஸ், ஆயிஷா (ரலியல்லாஹு ‘அன்ஹும்) ஆகியோரும்,

இமாம்களாக அல்-அதஃ, அத்-தாவூஸ், அல்-ஹஸன், அல்-அவ்ஸாயி, ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரீ (ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோரும் இருக்கிறார்கள்.

 

இவர்கள் காட்டும் ஆதாரம் :

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலியல்லாஹு ‘அன்ஹு) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம்.

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2537.

 

இரண்டாம் சாரார் (குறைவான உலமாக்கள்) : ஒட்டகத்தில் 10 பேர் கூட்டு சேர முடியும்.

 

இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி, இமாம் இப்னு குஸைமா, இமாம் ஷவ்கானீ போன்றோர் இக்கருத்தில் இருக்கிறார்கள்.

இவர்கள் ஆதாரமாக காட்டுவது இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு ‘அன்ஹு) அவர்களது ஹதீஸ்.

 

மேற்கண்ட கருத்து வேறுபாட்டை பொறுத்த மட்டில் முதல் சாரார் காட்டும் ஆதாரம் (ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரலியல்லாஹு ‘அன்ஹு அவர்களது ஹதீஸ்) மிகவும் உறுதியானது. (இது பற்றி இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் பேசியுள்ளார்கள்)

 

10) ஒரு வீட்டில் இரு சகோதரர்கள் இருக்கும்போது யார் குர்பானி கொடுப்பது.?

இரு உடன்பிறந்த சகோதரர்கள் ஒரு வீட்டில்/வேறு வீட்டில் தனித்தனியாக இருந்தால் அவர்கள் தனியே குர்பானி கொடுப்பதுதான் சிறந்தது.

 

இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து, அதில் ஒருவர் பொறுப்புதாரியாக இருந்தால் அந்த பொறுப்புதாரி அவருக்கு கீழுள்ளவர்கள் சார்பாக குர்பானி கொடுக்க முடியும்.

 

நபி (ﷺ) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப் (رضي الله عنه) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அஃதா பின் யஸார் (رحمه الله) | நூல் : திர்மிதி

 

இமாம் ஷாஃபியீ அவர்கள் ‘அல்-உம்’ என்ற நூலில் கூறுவதாவது :

“ஒட்டகம்/ மாட்டில் கூட்டுச் சேரும்போது அதில் 7 பேருக்கு குறைவான நபர்கள் இருந்தால் அது செல்லுபடியாகும்.

 

ஒட்டகத்தின் பிற பெயர்கள் : அல்-ஜஸுர், அல்-இபில், அந்-நாகா, அல்-பதன்

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply