ஆஷூறாஃ தினம் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்

ஆஷூறாஃ தினம் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்

 

  • ஆஷூறாஃ என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும்.
  • இந்நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாள் என்று நபி ﷺ அவர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது. _(முஸ்லிம் 1126)_
  • ஜாஹிலிய்யஹ் காலத்திலும்கூட மக்கஹ்வில் வாழ்ந்த குறைஷிகள் இந்த நாளை கண்ணியப்படுத்திருக்கிறார்கள். மேலும், இந்த நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்கள். (புகாரி 2002, முஸ்லிம் 1126)
  • இந்நாள் ஜாஹிலிய்யஹ் காலத்தில் கஃபஹ்விற்குத் திரை போடப்படுகின்ற நாளாக இருந்திருக்கிறது.(புகாரி 1592)

 

  • இந்த நாள் அல்லாஹ் நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, அவனையும் அவனது படையையும் கடலில் மூழ்கடித்த நாளாகும். (புகாரி 2004, முஸ்லிம் 1130)

 

  • மூஸா நபியவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக இந்த நாளில் நோன்பு நோற்றார்கள். (முஸ்லிம் 1130)

 

  • மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பின்பற்றி மதீனஹ்வில் வாழ்ந்த யூதர்களும் இந்த நாளில் நோன்பு நோற்று வந்தனர்.(புகாரி 2004, முஸ்லிம் 1130)

 

  • இந்த நாளை யூதர்கள் ஒரு பெருநாள் தினமாகவும் கொண்டாடினர். (புகாரி 2004, முஸ்லிம் 1131)

 

  • நபி ﷺ அவர்கள் இந்த நாளை பெருநாளாகக் கொண்டாடுவதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக நோன்பு பிடிக்குமாறு மாத்திரமே கட்டளையிட்டார்கள்.(புகாரி 2004, முஸ்லிம் 1131)

 

  • நபி ﷺ அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்குமாறு வலியுறுத்தி மதீனஹ்வைச் சுற்றியிருந்த கிராமங்களுக்கும் தகவலனுப்பி வைத்தார்கள்; எவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் நோன்பை தொடருமாறும் எவர்கள் நோன்பு வைத்திருக்கவில்லையோ அவர்கள் எஞ்சியுள்ள நேரத்தில் நோன்பு வைக்கட்டும் என்றும் கூறினார்கள்.(புகாரி 1960, முஸ்லிம் 1136)

 

  • இந்த நாளில் நபித்தோழர்களும் நோன்பு நோற்று தங்கள் குழந்தைகளையும் நோன்பு நோற்க வைத்தார்கள்.(புகாரி 1960, முஸ்லிம் 1136)

 

இஸ்லாத்தில் ஆஷூறாஃ நோன்பு நான்கு கட்டங்களைக் கண்டுள்ளது:

1️⃣ நபி ﷺ அவர்கள் மக்கஹ்வில் இருக்கும் பொழுது இந்த நாளில் நோன்பு நோற்று இருக்கிறார்கள். மக்களுக்கு நோன்பு நோற்குமாறு ஏவியிருக்கவில்லை.

_(புகாரி 2002, முஸ்லிம் 1126)_

2️⃣ மதீனஹ்விற்கு வந்த பிறகு இந்நாளில் யூதர்களும் நோன்பு நோற்று இருப்பதை பார்த்துவிட்டு, மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் விடயத்தில் நாமே மிகவும் அருகதை உடையவர்கள் என்று கூறிவிட்டு தாமும் நோன்பு நோற்று, மக்களையும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.

_(புகாரி 2004, முஸ்லிம் 1130)_

3️⃣ ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமழான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகு ஆஷூறாஃ நோன்பை விரும்பியவர்கள் நோற்குமாறு கூறி உபரியான வணக்கமாக்கினார்கள்.

_(புகாரி 2001, முஸ்லிம் 1128)_

4️⃣ நபி ﷺ அவர்களின் இறுதிக் காலத்தில் யூதர்களுக்கு மாற்றமாக தனித்துவமுள்ளதாக எமது இஸ்லாமியக் கலாச்சாரம் அமைய வேண்டும் என்பதற்காக, ‘நான் அடுத்த வருடம் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்’ என்று கூறினார்கள். அடுத்த வருடம் வருவதற்குள் நபி ﷺ அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.

_(முஸ்லிம் 1134)_

 

📌 குறிப்பு: நபி ﷺ அவர்கள் ஆரம்ப காலங்களில் வேதக்காரர்களுக்கு உடன்படும் ஒரு நிலையைக் கடைபிடித்தார்கள். அதற்குக் காரணம் முஷ்ரிக்களை விட முற்காலத்தில் வேதம் வழங்கப்பட்டவர்கள் இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். பிற்பட்ட காலத்தில் முன்பிருந்த நிலைக்கு மாற்றமாக அவர்களுக்கு  வித்தியாசப்படும் ஒரு நிலைப்பாட்டைக் கடைபிடித்து, முஸ்லிம்களுக்கு தனிக் கலாச்சாரத்தை உருவாக்கினார்கள்.

 

  • இந்நாளில் நோன்பு நோற்பதன் மூலமாக இந்நாளுக்கு முன்னுள்ள ஒரு வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும்.(முஸ்லிம் 1162)

 

  • இந்த நாளில் நோன்பு பிடிப்பதில் நபி ﷺ அவர்கள் கூடுதல் கரிசனை காட்டினார்கள். (புகாரி 2006, முஸ்லிம் 1132)

 

– ஷெய்க் ஹுஸைன் இப்னு றபீக் மதனி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply