அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்  – தொடர் -01

பிரயாணத்தின் போதான சிரமங்களை கருத்திற்கொண்டு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட விசேட சலுகைதான் பிரயாணத் தொழுகையாகும். முஸ்லிம்களில் அதிகமானோர் பிரயாணத் தொழுகையை நிறைவேற்றும் முறை குறித்து அறியாதிருப்பதால் பலர் தமது பயணங்களில் தொழுகைகளை பாழாக்கிவிடுகின்றனர், மற்றும் பலர் தவறாக நிறைவேற்றுகின்றனர்.

 

எனவே இது குறித்த தெளிவை உதாரணங்களுடன் முன்வைப்பது பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.

 

ஆரம்பமாக பிரயாணத் தொழுகையை நிறைவேற்றும் முறை பற்றி நோக்கிவிட்டு பின்னர் இத்தலைப்புத் தொடர்பான ஏனைய விடயங்களை கலந்துரையாடலாம்.

 

பயணத் தொழுகையை நிறைவேற்றும் முறை :

———————————————-

மூன்று முறைகளில் பயணத் தொழுகையை நிறைவேற்றலாம் :

 

1: சுருக்கி மாத்திரம் தொழுதல்:

ஐவேளைத் தொழுகைகளில் நான்கு றக்அத்துகள் கொண்ட ழுஹ்ர், அஸ்ர், இஷா ஆகிய தொழுகைகளை அந்தந்த தொழுக நேரங்களில் இரண்டு றக்அத்துகளாக சுருக்கி மாத்திரம் தொழுதல்.

 

உதரணமாக, பிரயாணியாக இருக்கும் ஒருவர் ளுஹ்ர் தொழுகை நேரம் வந்தவுடன் அதன் நேரம் முடிவதற்குள் இரண்டு றக்அத்துகள் மாத்திரம் தொழுதல். இவ்வாறே அஸ்ர் தொழுகை நேரம் ஆரம்பித்து அதன் நேரம் முடிவதற்குள் இரண்டு றக்அத்துகள் தொழுதல், இஷாவுடைய நேரம் ஆரம்பமானதிலிருந்து அதன் நேரம் முடிவதற்குள் இரண்டு றக்அத்துகளாக இஷாவை தொழுதல்.

 

💥 கவனிக்க :

 

நான்கு றக்அத்துகள் கொண்ட தொழுகைகளை மாத்திரமே இரண்டு றக்அத்துகளாக சுருக்கி தொழ முடியும் என்பதனால் மஃரிப், ஸுப்ஹ், ஜும்ஆ தொழுகைகளை சுருக்கித் தொழ முடியாது.

 

நான்கு றக்அத் கொண்ட தொழுகைகளை அந்தந்த நேரங்களில் சுருக்கி மாத்திரம் தொழுவதற்கான ஆதாரம் :

 

1. அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் நபியவர்களோடு மதீனாவிலிருந்து மக்காவுக்கு பயணம் மேற்கொண்டாம். மீண்டும் நாங்கள் மதீனாவை வந்தடையும் வரை நபியவர்கள் (நான்கு றக்அத்) தொழுகைகளை இரண்டிரண்டாகவே தொழுதார்கள் (புஹாரி, முஸ்லிம்).

 

2. இப்னு உமர் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : ‘நான் நபியவர்களோடு இணைந்து பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அவர்கள் (நான்கு றக்அத் தொழுகைகளை) இரண்டு றக்அத்துகளை விட அதிகரிக்க மாட்டார்கள். அபூபக்ர், உமர், உஸ்மான் (றழியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் தமது பயணங்களில் இவ்வாறே நடந்துகொண்டார்கள் (புஹாரி, முஸ்லிம்).

 

இமாம் இப்னுல் கய்யிம் (றஹ்) கூறுகிறார்கள் : ‘நபிகளார் அவர்கள் பயணம் மேற்கொண்டு தனது ஊரான மதீனாவை வந்தடையும் வரை நான்கு றக்அத்துகள் கொண்ட தொழுகைகளை இரண்டாக சுருக்கியே தொழுதிருக்கிறார்கள். பயணங்களின் போது நான்கு றக்அத் தொழுகைகளை நான்காக முழுமைப்படுத்தி தொழுததாக ஆதாரங்கள் இல்லை’ (பார்க்க : ‘ஸாதுல் மஆத்’ , 1/464).

 

மேற்குறிப்பிட்ட தகவல்கள் நபிகளார் அவர்கள் நான்கு றக்அத் தொழுகைகளை பயணத்தில் இரண்டாக சுருக்கி மட்டும் தொழுதமைக்கு ஆதாரங்களாக அமைகின்றன.

 

2.சேர்த்து மாத்திரம் தொழுதல் :

________________________________________________

 

ஒரு பிரயாணி ஐவேளைத் தொழுகைகளை இரண்டிரண்டு தொழுகைகளாக சுருக்காமல் சேர்த்து மட்டுமே தொழவும் அனுமதி உண்டு.

 

ஆதாரம் :

 

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ‘நபியவர்கள் அச்சமோ, மழையோ, பயணமோ அல்லாத சில சூழ்நிலைகளில் மதீனாவில் ளுஹ்ரையும் அஸ்ரையும் அவ்வாறே மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்…’ (முஸ்லிம்).

 

பிரயாணம் அல்லாத சூழ்நிலைகளிலும் நபிகளார் தொழுகைகளை சேர்த்துத் தொழுதார்கள் என்று மேற்படி ஹதீஸில் குறிப்பிடப்படுவதன் மூலம் பிரயாணத்தில் நபியவர்கள் சேர்த்து தொழுதிருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

 

சேர்த்து மட்டும் தொழும் முறையை நோக்கினால், ளுஹ்ரை நான்கு றக்அத்துகளாக முழுமையாக தொழுதுமுடித்தவுடன் எழுந்து இகாமத் கூறி அஸ்ரையும் நான்கு றக்அத்துகள் தொழல். இவ்வாறே மஃரிப் மூன்று றக்அத்துகள் தொழுது முடித்தவுடன் எழுந்து இகாமத் கூறி இஷா நான்கு றக்அத்துகள் தொழல்.

 

💥 கவனிக்க :

 

சேர்த்து தொழும் போது ளுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து தொழலாம்; அவ்வாறே மஃரிபையும் இஷாவையும் சேர்த்து தொழலாம். மாறாக அஸ்ரையும் மஃரிபையும் சேர்த்து தொழ முடியாது.

 

சேர்த்து தொழுதல் இரு வகைப்படும் :

 

1) முற்படுத்திச் சேர்த்தல் (ஜம்உ தக்தீம்) :

 

ளுஹ்ரையும் அஸ்ரையும் நான்கு நான்கு றக்அத்துகளாக ளுஹ்ருடைய நேரத்திற்குள் தொழல். அவ்வாறே மஃரிபையும் இஷாவையும் மஃரிபுடைய நேரத்திற்குள் தொழல்.

 

பிந்திய தொழுகையான அஸ்ரை முந்திய தொழுகையான ளுஹ்ருடைய நேரத்துக்கு முற்படுத்தி சேர்த்து தொழுவதனாலும், அவ்வாறே இஷாவை மஃரிபுடைய நேரத்துக்கு முற்படுத்தி சேர்த்து தொழுவதனாலும் இந்நடைமுறைக்கு ‘முற்படுத்திச் சேர்த்தல்’ (ஜம்உ தக்தீம்) எனப்படுகிறது.

 

2) பிற்படுத்திச் சேர்த்தல் (ஜம்உ தஃஹீர்) :

 

ளுஹ்ரையும் அஸ்ரையும் அஸ்ருடைய நேரத்திற்குள் நான்கு நான்கு றக்அத்துகளாக தொழுதல். அவ்வாறே மஃரிபையும் இஷாவையும் இஷாவுடைய நேரத்திற்குள் தொழல்.

 

முந்திய தொழுகையான ளுஹ்ரை பிந்திய தொழுகையான அஸ்ருடைய நேரத்துக்கு பிற்படுத்தி சேர்த்து தொழுவதனாலும், அவ்வாறே மஃரிபை இஷாவுடைய நேரத்திற்கு பிற்படுத்தி சேர்த்து தொழுவதனாலும் இந்நடைமுறைக்கு ‘பிற்படுத்திச் சேர்த்தல்’ (ஜம்உ தஃஹீர்) எனப்படுகிறது.

 

குறிப்பு :

 

சேர்த்து மாத்திரம் தொழுவது பிரயாணிக்குரிய அனுமதி மாத்திரமல்ல, சொந்த ஊரில் இருப்போர் கடும் மழை, கடும் குளிர், அச்சமான சூழல், கடும் நோய் போன்ற காரணங்களுக்காகவும் மேற்குறித்தவாறு ளுஹ்ரையும் அஸ்ரையும் அவ்வாறே மஃரிபையும் இஷாவையும் முற்படுத்தியோ, பிற்படுத்தியோ சேர்த்து தொழலாம். ஆனால் பிரயாணம் அல்லாத மேற்படி காரணங்களுக்காக சுருக்கி தொழ முடியாது. அதாவது சேர்க்கலாம்; சுருக்க முடியாது.

 

‘நபியவர்கள் கடுமையாக மழை பெய்த ஓர் இரவில் மதீனாவில் வைத்து மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்’ (புஹாரி).

 

நபிகளார் தனது சொந்த ஊரில் கடும் மழைக்காக சேர்த்துத் தொழுதிருக்கிறார்கள் என்பதை மேற்படி ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

 

3.சேர்த்தும் சுருக்கியும் தொழுதல் :

____________________________________________

 

நான்கு றக்அத் தொழுகைகளை இரண்டாக சுருக்கும் அதே வேளை, இரு தொழுகைகளை சேர்த்து ஒரே தடவையில் தொழுவதை ‘சேர்த்தும் சுருக்கியும் தொழுதல்’ என்கிறோம்.

 

இதையும் இரண்டு விதமாக தொழலாம் :

 

1) முற்படுத்திச் சேர்த்து சுருக்குதல் :

 

எடுத்துக்காட்டாக, ளுஹ்ரை இரண்டு றக்அத்துகளாக சுருக்கி தொழுதுவிட்டு இகாமத் கூறி அஸ்ரையும் இரண்டு றக்அத்துகளாக சுருக்கி ளுஹ்ருடைய நேரத்தில் தொழுதல்.

 

அவ்வாறே, மஃரிபை சுருக்க முடியாது என்பதால் மூன்று றக்அத்துகள் தொழுதுவிட்டு, இகாமத் கூறி இஷாவை இரண்டு றக்அத்துகளாக சுருக்கி, மஃரிபுடைய நேரத்தில் தொழுதல்.

 

2) பிற்படுத்தி சேர்த்து சுருக்குதல் :

 

எடுத்துக்காட்டாக, ளுஹ்ரை இரண்டு றக்அத்துகளாக சுருக்கி தொழுதுவிட்டு இகாமத் கூறி அஸ்ரையும் இரண்டு றக்அத்துகளாக சுருக்கி அஸ்ருடைய நேரத்தில் தொழுதல்.

 

அவ்வாறே, மஃரிபை சுருக்க முடியாது என்பதால் மூன்று றக்அத்துகள் தொழுதுவிட்டு, இகாமத் கூறி இஷாவை இரண்டு றக்அத்துகளாக சுருக்கி, இஷாவுடைய நேரத்தில் தொழுதல்.

 

💥 கவனிக்க :

 

தொழுகைகளை சேர்த்து தொழும் போது அல்லது சுருக்கியும் சேர்த்தும் தொழும் போது முதல் தொழுகைக்கு அதானும் இகாமத்தும் கூறப்படும். ஆனால் இரண்டாவது தொழுகைக்கு அதான் கூறாமல் இகாமத் மாத்திரம் கூறுவது போதுமாகும்.

 

ஆதாரம் :

 

நபியவர்கள் அறபாவில் தரித்திருந்த போது ஒரு அதான், இரு இகாமத்துகள் கூறி இரு தொழுகைகளை சேர்த்துத் தொழுதார்கள். பின்னர் முஸ்தலிபாவுக்குச் சென்று ஒரு அதான், இரு இகாமத்துகள் கூறி மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். அவ்விரு நொழுகைகளுக்கிடையில் தஸ்பீஹ் எதுவும் ஓதவில்லை. பின்னர் அதிகாலை உதயமாகும் வரை உறங்கினார்கள் (முஸ்லிம், நஸாஈ).

 

இதுதான் பிரயாணத் தொழுகையை நிறைவேற்றும் முறை பற்றிய சுருக்கமாகும்.

 

அடுத்து இப்பிரயாணத் தொழுகை பற்றிய ஏனைய விடயங்களை நோக்கலாம்.

 

(இன் ஷா அல்லாஹ் தொடரும்…)

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply