ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – இறுதி தொடர்

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – இறுதி தொடர்

திருத்தப்பட வேண்டிய சில தவறுகள்:

தொழுகையாளிகள் பலரிடம் தொழுகையை பாழாக்ககூடிய அல்லது தொழுகையின் நன்மையை வெகுவாக குறைத்துவிடக்கூடிய தவறுகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை இங்கே நோக்கலாம் :

1 )தொழுகைக்கு விரைந்து அல்லது ஓடிச்செல்லுதல்:

தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளிவாசலுக்குள் நுழையும் பலர் ஜமாஅத் தொழுகையை அடைந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஸப்புக்கு ஓடி செல்வதை அதிகமாக காணமுடியும். இது பெரும் தவறாகும். றக்அத் ஒன்று தவறிப் போனால் கூட பரவாயில்லை , ஓடாமல் அமைதியாக செல்லுமாறு இஸ்லாம் கூறுகிறது.

நபிகளார் கூறினார்கள் : “தொழுகை ஆரம்பிக்கப்பட்டுவிட்டால் விரைந்து செல்லாதீர்கள். அமைதியாகவும் நிதானமாகவும் நடந்துவந்து தொழுகையில் இணையுங்கள். நீங்கள் அடைந்து கொண்டதை தொழுங்கள். தவறிப்போன றக்அத்துகளை (இமாம் ஸலாம் கூறிய பின்) பூர்த்தி செய்யுங்கள்” (புஹாரி முஸ்லிம்).

2 ) துர்வாடை வீசும் பொருட்களை பாவித்து விட்டு தொழச் செல்லுதல்:

நபியவர்கள் கூறினார்கள் : “வெங்காயம் , வெள்ளைப் பூடு என்பவற்றை சாப்பிட்டுவிட்டு எமது மஸ்ஜிதை நெருங்கிவிட வேண்டாம்” (புஹாரி , முஸ்லிம்).

மலக்குகள் , ஏனைய தொழுகையாளிகள் துன்புறுவார்கள் என்பதே நபிகளார் துர்வாடை வீசும் பொருட்களை தவிர்க்க சொன்ன காரணம். ஹலாலான வெங்காயம் , பூண்டு போன்றவற்றையே நபி தவிர்க்க கூறியிருக்கும் போது ஹராமான சிகரட் , பீடி , வெற்றிலை போன்றவற்றை பாவித்துவிட்டு மஸ்ஜிதுக்கு வருவது பாவமாகும்.

3 ) ஸப்பில் இணையாமல் தனியாக தொழுதல்:

ஒரு ஸப்பை பூர்த்திசெய்யாமல் அடுத்த ஸப்பில் நிற்பது தொழுகையில் குறைபாட்டை ஏற்படுத்தும்.அவ்வாறிருக்க சிலரோ முன் ஸப்புகளில் நீண்ட இடைவெளி இருக்கும் போதே அதை சற்றும் கவனிக்காமல் பின்னால் தனியே நின்று தொழுவார்கள். இது பெரும் தவறாகும்.

அலி பின் ஷைபான் (றழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள் : ஒரு மனிதர் ஸப்புக்கு பின்னால் தனியே தொழுவதை அவதானித்த நபியவர்கள் அவர் தொழுது முடித்ததும் “ஸப்புக்கு பின்னால் தனியே தொழுபவருக்கு தொழுகை நிறைவேறாது. உனது தொழுகையை திரும்ப தொழு” என்று கூறினார்கள் (அஹ்மத்).

4 ) இமாமை முந்துதல்;

ஜமாஅத்தாக தொழும் போது குனிதல் , நிமிர்தல் , றுகூஉக்கு செல்லுதல் , ஸுஜூதுக்கு செல்லுதல் போன்ற அனைத்து செயல்களிலும் இமாமை முந்தாமல் அவரை பின்தொடர்ந்தே செயற்பட வேண்டும்.

நபிகளார் கூறினார்கள் : “உங்களில் ஒருவர் இமாமுக்கு முன்பாக (றுகூஉவின் போது , ஸுஜூதின் போது) தனது தலையை உயர்த்தினால் அவரது தலையை அல்லது அவரது தோற்றத்தை அல்லாஹ் கழுதையின் தலையாக அல்லது கழுதையின் தோற்றமாக மாற்றிவிடுவான் என்பதை அஞ்சமாட்டாரா? “ (புஹாரி , முஸ்லிம்).

அல்பராஃ (றழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள் : “நபியவர்கள் ஸமிஅல்லா ஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினால் அவர்கள் ஸுஜூதுக்கு குனியும் வரை நாங்கள் எங்களது முதுகை குனியச் செய்ய மாட்டோம்.அவர்களை பின்தொடர்ந்தே நாம் ஸுஜூத் செய்வோம்” (புஹாரி).

5 ) தொழுகைக்கு தகுதியற்ற செயல்களில் ஈடுபடல்:

திரும்பிப் பார்த்தல் , அவசரமாக தொழுதல் , சோம்பேறித்தனமாக தொழுதல் , அங்கங்களை அதிகமாக அசைத்தல் போன்றவை தொழுகையில் உயிரோட்டத்தையும் நன்மைகளையும் குறைத்து விடுபவையாகும்.

அபூ ஹுரைரா (றழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள் : “தொழுகையில் கோழி கொத்துவது போன்று கொத்துவதையும்,நரி திரும்பி பார்ப்பது போன்று திரும்பி பார்ப்பதையும் குரங்கு அமர்வது போல் அமர்வதையும் நபியவர்கள் தடுத்தார்கள்” (அஹ்மத் , தயாலிஸி)

இவை போன்று ,இறுக்கமான ஆடைகளை அணிதல் , பிறரது கவனத்தை திசைதிருப்பும் வகையிலான படங்கள் ,எழுத்துகள் கொண்ட ஆடைகளை அணிதல் , ஆடைகளை கரண்டைகாலுக்கு கீழே இழுபடக்கூடியதாக உடுத்தல் போன்றவையும் அவசியம் தவிர்க்க வேண்டியவையாகும்.

சில பயனுள்ள குறிப்புகள்:

1 ) அதான் , இகாமத் குறித்து…

தனியாக தொழும் போதும் ஜமாஅத்தாக தொழும் போதும் அதான் , இகாமத் கூறுவது மிகவும் வலியுறுத்தப்பட்ட ஸுன்னத்தாகும் :

மாலிக் இப்னுல் ஹுவைரிஸ் (றழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள் : நபியவர்கள் கூறினார்கள் : ‘தொழுகை நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் அதான் கூறவும்” (புஹாரி , முஸ்லிம்).

பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமை இல்லை. ஆனால் அதற்கு மார்க்கத்தில் தடையும் இல்லை. நபிகளார் காலத்தில் ஆண்களை போன்றே பெண்களும் அனைத்து ஜமாஅத் தொழுகை ,ஜும்ஆ போன்றவற்றில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிற்காலத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால் பெண்கள் ஐவேளையும் மஸ்ஜிதுக்கு செல்வது நின்றுபோனது. ஆயினும் பெண்கள் மஸ்ஜிதுக்கு செல்ல அனுமதிகோரினால் அனுமதி கொடுங்கள் என்ற நபிகளாரின் கட்டளையின் அடிப்படையில் இன்றைய காலத்தில் பெண்கள் மஸ்ஜிதுக்கு செல்ல அனுமதிகோரும் பட்சத்தில் அனுமதிக்க வேண்டியது ஆண்கள் மீதுள்ள பொறுப்பாகும்.

பெண்கள் கூட்டமொன்று ஒன்று கூடியிருக்கும் இடங்களில் அவர்களில் ஒருவர் முதல் ஸப்பில் நடுவில் நின்று (ஆண்கள் போன்று முன்னே சென்று நிற்காமல்) ஜமாஅத்தாக தொழுகை நடத்த முடியும்.அவ்வேளை அவர்களில் ஒருவர் அதான் , இகாமத் கூற முடியும்.

ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பெண்கள் கூட்டமொன்றுடன் இருக்கும் போது அதான் , இகாமத் கூறியதோடு , அவர்களுக்கு நடுவில் நின்று இமாமாக நின்று தொழுகை நடத்தியிருக்கிறார்கள்(பைஹகி).

இது ஆதார பூர்வமான தகவல் என ஷெய்க் அல்பானி (ரஹ்) கூறுகிறார்கள் (பார்க்க :தமாமுல் மின்னா” , பக் 153).

2 )தொழுகையின் போது தும்மல் ஏற்பட்டால்…

தொழுதுகொண்டிருக்கும் போது தும்மல் ஏற்பட்டால் அவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூற முடியும். ஆனால் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் மற்றவர்கள் “யர்ஹமுகல்லாஹ்” என்று கூறகூடாது. ஏனெனில் அல்ஹம்து லில்லாஹ் என்பது அல்லாஹ்வை புகழ்வது. யர்ஹமுகல்லாஹ் என்பது குறித்த நபருக்காக பிரார்த்திப்பது. அல்லாஹ்வுடன் உரையாடுகின்ற தொழுகையில் மனிதர்கள் சம்மந்தப்பட்ட வார்த்தைகள் இடம்பெற கூடாது.

நபியவர்கள் ஒரு தடவை தொழுகை நடத்திகொண்டிருந்த போது மஃமூமாக தொழுத ஒருவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் கூறியதும் அருகில் தொழுத ஒருவர் யர்ஹமுகல்லாஹ் என்று கூறினார். தொழுகை முடிந்ததும் அவரை அழைத்து “அவ்வாறு கூறகூடாது” என்று நபி உபதேசித்தார்கள். ஆயினும் அல்ஹம்துலில்லாஹ் கூறியவரை நபிகளார் குற்றம்காணவில்லை. (முஸ்லிம் – நீண்டஹதீஸின் சுருக்கம்).

3 )செருப்பு அணிந்து தொழுதல்

செருப்பு அல்லது பாதரட்சை அணிந்து தொழுவதை நபியவர்கள் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் அதில் நஜிஸ் ஏதும் இல்லாமலிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். செருப்பணிந்திருக்கும் வேளையில் அந்த செருப்போடு தொழுது யூதர்களுக்கு மாறுசெய்யுமாறும் நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

நபிகளார் கூறினார்கள் : “ யூதர்கள் செருப்புகள் அணிந்து தொழமாட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் மாறுசெய்யுங்கள்” (அ பூதா வூத் , ஹாகிம்).

மேலும் கூறினார்கள் : “உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்கு வந்தால் தனது பாதணிகளை அவதானிக்கவும். அவற்றில் நஜிஸ் பட்டிருந்தால் தரையில் துடைத்துவிட்டு அவற்றுடன் தொழவும்”(அபூதாவூத் , இப்னு ஹுஸைமா)

4 )தொழுகையை அதன் நேரம் கடந்த பின் நிறைவேற்றுதல்

ஒரு தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டு பிற்படுத்துவதற்கு மார்க்கம் இரு காரணிகளை மாத்திரமே அனுமதித்துள்ளது :

1. தூக்கம்

2. மறதி

ஒருவர் அயர்ந்து தூங்கி தொழுகை நேரத்தை தவறவிட்டுவிட்டால் அல்லது குறித்த ஒரு தொழுகையை தொழ மறந்து போய்விட்டால் , அவ்விருவரும் – தூங்கியவரும் மறந்தவரும் -எழுந்தவுடன் அல்லது நினைவு வந்தவுடன் தாமதிக்காது தொழுகையை நிறைவேற்றிட வேண்டும்.

(அதற்காக நன்றாக தூங்கி எழுந்து பிந்தி தொழலாம் என்பது இதன் அர்த்தமல்ல. எப்போதேனும் அப்படி நடந்தால் …)

நபிகளார் கூறினார்கள் : “யாரேனும் தொழுகையை விட்டுவிட்டு தூங்கிவிட்டால் அல்லது மறந்துவிட்டால் நினைவு வந்தவுடன் தொழுதுவிடவும்” (முஸ்லிம்)

மார்க்கம் அனுமதித்த இவ்விரு காரணங்கள் தவிர வியாபாரம் , பிரயாணம் , நோய் , கூட்டம் , மாநாடு , வகுப்பு என்பன போன்ற காரணங்களுக்காக ஒருபோதும் தொழுகைகளை கழா செய்ய முடியாது.

ஏனெனில் மேற்குறித்த காரணங்களுக்காக தொழுகைகளை கழா செய்ய அவசியமில்லாதவாறு சட்டங்களையும் சலுகைகளையும் மார்க்கம் வழங்கியுள்ளது.

பிரயாணிகள் சேர்த்து , சுருக்கி தொழ வேண்டும்.

நோய் காரணமாக நின்று தொழ முடியாவிட்டால் உட்கார்ந்தும் அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்தும் தொழவேண்டும்.

தண்ணீர் இல்லாவிட்டால் அல்லது தண்ணீரை பயன்படுத்த முடியாவிட்டால் தயம்மும் செய்ய வேண்டும்.

யுத்த களத்தில் கூட தொழுகை நேரம் வந்துவிட்டால் போராளிகள் இரு குழுக்களாக பிரிந்து ,ஒரு குழு போராட மற்ற குழு தொழ வேண்டும் , பின்னர் போராடிய குழு தொழ , தொழுத குழு போராட வேண்டும்.

இந்த சட்டங்களெல்லாம் எதை உணர்த்துகின்றன என்றால் தூக்கம் , மறதி ஆகிய இரண்டையும்

தவிர வேறு எதற்காகவும் தொழுகையை கழா செய்ய முடியாது என்பதையாகும்.

 

முற்றும்…

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply