மையித்தைக்‌ குளிப்பாட்டுதல்‌ – பாகம் 1

இமாம் அல் அல்பானி கூறுகிறார்

  1. ஒருவர்‌ இறந்து விட்டால்‌ ஏனைய மக்கள்‌ சிலரின்‌ மீது மரணித்தவரைக்‌ குளிப்பாட்ட அவசரப்படுவது கடமையாகும்‌. இவ்வாறு அவசரப்படுத்துவதற்குரிய ஆதாரங்களை மூன்றாம்‌ பிரிவில்‌ கூறிவிட்டோம்‌. குளிப்‌பாட்டுவதற்குரிய ஆதாரத்தையும்‌ முன்னரே கூறிவிட்டோம்‌. ஹஜ்ஜுக்‌ கடமையின்‌ போது வாகனத்திலிருந்து விழுந்து கழுத்து முறிந்து இறந்த தோழரை தண்ணீரினாலும்‌, இலந்தையிலையினாலும்‌ குளிப்பாட்டுங்கள்‌…. என்ற நபிமொழி முதலாவதாகவும்‌, இரண்டாவதாக நபி (ஸல்‌) அவர்களின்‌ மகள்‌ ஜைனப்‌ (ரழி) அவர்கள்‌ மரணமடைந்த வேளை அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை குளிப்பாட்டுங்கள்‌…. என்ற நபிமொழியும்‌ ஆதாரங்களாகின்றன. இதன்‌ விபரங்களைக்‌ கவனிப்போம்‌.

 

  1. குளிப்பாட்டுவதற்குப்‌ பின்வரும்‌ ஒழுங்குகளைக்‌ கவனிக்க வேண்டும்‌:

 

முதலாவது: மூன்று முறை குளிப்பாட்டுதல்‌ வேண்டும்‌. அதனைச்‌ செய்பவர்கள்‌ தேவைக்கேற்ப அதிகரித்துக்‌ கொள்ளலாம்‌. 

 

இரண்டாவது: ஒற்றைப்படையாகவே குளிப்‌ பாட்டுதல்‌ அமைய வேண்டும்‌.

 

மூன்றாவது: குளிப்பாட்டும்‌ பொழுது இலந்தை இலை அல்லது உடலைச்‌ சுத்தப்படுத்தக்கூடிய சோப்பு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்‌.

 

நான்காவது: கடைசித்‌ தண்ணீரில்‌ ஏதாவது வாசனைப்‌ பொருட்களைச்‌ சேர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. கற்பூரத்தைக்‌ கலப்பது சிறந்ததாகும்‌.

 

ஐந்தாவது: கொண்டைகளை அவிழ்த்து விட்டு நன்றாகக்‌ கழுவ வேண்டும்‌.

 

ஆறாவது: தலைமுடியைத்‌ தொங்கவிட வேண்டும்‌. 

 

ஏழாவது: பெண்களுக்கு மூன்று பின்னல்‌ போட்டுப்‌ பின்னால்‌ தொங்க விட வேண்டும்‌. 

 

எட்டாவது: வலது பக்கத்திலிருந்து குளிப்‌ பாட்டுதலை ஆரம்பிக்க வேண்டும்‌.

 

ஒன்பதாவது: ஏதாவது நிர்ப்பந்தம்‌ ஏற்பட்டாலே தவிர ஆணை ஆண்களும்‌ பெண்ணைப்‌ பெண்களுமே குளிப்பாட்டுதல்‌ வேண்டும்‌.

 

இவற்றுக்கு உம்மு அதிய்யா (ரழி) அவர்கள்‌ மூலம்‌ வந்துள்ள நபிமொழி ஆதாரமாகவுள்ளது.

 

நாங்கள்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ மகள்‌ ஜைனபைக்‌ குளிப்பாட்டிக்‌ கொண்டிருக்கும்போது நபியவர்கள்‌ வந்து மூன்று முறை குளிப்பாட்டுங்கள்‌. அல்லது ஐந்து முறை அல்லது ஏழு முறை குளிப்பாட்டுங்கள்‌. தேவையானால்‌ அதிகப்படுத்திக்‌ கொள்ளுங்கள்‌ என்று கூறினார்கள்‌. ஒற்றைப்படையாகத்தான்‌ இருக்க வேண்டுமா? என்று கேட்டேன்‌. ஆம்‌! அப்படியே தானிருக்க வேண்டும்‌ என்று கூறிவிட்டு கடைசியாகக்‌ கற்பூரத்தைக்‌ கலந்து கொள்ளுங்கள்‌. குளிப்பாட்டி முடிந்தவுடன்‌ என்னை அழையுங்கள்‌ என்று நபியவர்கள்‌ கூறினார்கள்‌. குளிப்பாட்டி முடித்தவுடன்‌ நாங்கள்‌ நபி(ஸல்‌) அவர்களை அழைத்தோம்‌.

 

எங்களை நோக்கி வந்த நபியவர்கள்‌ தங்கள்‌ கைகளிலிருந்த சாரத்தை (துணியை) எங்களிடம்‌ வீசி இதனை உள்ளாடையாக உடுத்தி விடுங்கள்‌ என்றார்கள்‌. நாங்கள்‌ அதனை உடுத்திவிட்டு அவளின்‌ தலைமுடியை மூன்றாகப்‌பிரித்துப்‌ பின்னி முதுகுப்‌ பக்கம்‌ போட்டு விட்டோம்‌. எல்லா வேலைகளிலும்‌ வலதையே முற்படுத்துங்கள்‌! ஒளூவின்‌ உறுப்புக்களையும்‌ அவ்வாறே செய்யுங்கள்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌

(புகாரி, முஸ்லிம்‌, அபூதாவூத்‌, திர்மிதி, நஸயீ, இபுனுமாஜா, அஹ்மத்‌)

 

பத்தாவது: மரணித்தவரின்‌ எல்லா ஆடைகளையும்‌ களைந்து விட்டு ஒரு துணி துண்டினால்‌ அவர்‌ உடம்பைத்‌ தேய்த்துக்‌ கழுவ வேண்டும்‌. இவ்வாறு செய்வதுதான்‌ நபியவர்கள்‌ காலத்தில்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருந்தது.  இதற்குப்‌ பின்வரும்‌ நபிமொழி ஆதாரமாகயிருக்கின்றது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌:

 

நபி (ஸல்‌) அவர்களைக்‌ குளிப்பாட்டத்‌ தொடங்கியபோதே “நாம்‌ வழமையாக மரணித்தவரின்‌ ஆடைகளைக்‌ களைந்து விட்டுக்‌ குளிப்பாட்டுவதுபோல் இறைத்தூதரின்‌ ஆடைகளையும்‌ களைந்து குளிப்பாட்டுவதா? அல்லது ஆடையுடனேயே நபியவர்களைக்‌ குளிப்பாட்டுவதா?”என்று தோழர்கள்‌ தர்க்கித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. 

இவர்கள்‌ இவ்வாறு தர்க்கித்துக்‌ கொண்டிருந்தபோது அவர்களுக்கு அல்லாஹ்‌ தாக்கத்தை உண்டாக்கினான்‌. தோழர்கள்‌ எல்லோரும்‌ அந்த இடத்தியலேயே உட்கார்ந்து உறங்கி விட்டார்கள்‌. எல்லோருடைய தாடியும்‌ நெஞ்சின்‌ மீது படிந்தது. பின்பு அடையாளம்‌ காண முடியாத ஒருவர்‌ வீட்டுக்குப்‌ பக்கத்தில்‌ நின்‌று கொண்டு “நபியவர்கள்‌ உடுத்தியிருக்கும்‌ ஆடையுடனேயே குளிப்பாட்டுங்கள்‌’’ என்று கூறினார்‌.

திடுக்கிட்டு எழுந்த தோழர்கள்‌ நபியவர்களின்‌ ஆடைகளைக்‌ களையாது ஆடைக்கு மேலாக தண்ணீர்‌ ஊற்றி நபியவர்கள்‌ அணிந்திருந்த ஆடையினாலேயே உடலைத்‌ தேய்த்துக்‌ குளிப்பாட்டினார்கள்‌. நபியவர்களைக்‌ குளிப்பாட்டும்‌ வேலைக்கு நான்‌ முந்தியிருந்தால்‌ நபியவர்களின்‌ மனைவியரைச்‌ தவிர வேறு யாரும்‌ நபியவர்களைக்‌ குளிப்பாட்ட விட்டிருக்கமாட்டேன்‌ என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌. 

(அபூதாவூத்‌, இப்னுமாஜா,பைஹகி, அஹ்மத்‌,இப்னுஹிப்பான்‌)

 

பதினொன்றாவது: ஆண்‌ ஆண்களுடன்‌ இருக்கும்‌ போது மறைத்திருக்க வேண்டிய மர்மஸ்தானங்களையும்‌ பெண்‌ பெண்களுடனிருக்கும்போது மறைத்திருக்க வேண்டிய மர்மஸ்தானங்களையும்‌ துணித்துண்டினால்‌ மறைத்து அவற்றில்‌ கைபடாது, கண்படாது பாதுகாத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

 

பன்னிரெண்டாவது: இந்தப்‌ பிரிவில்‌ நாலாவதாகக்‌ கூறப்பட்ட விஷயங்கள்‌ ஹஜ்ஜுக்காக இஹ்ராம்‌ கட்டியபின்‌ மரணிப்பவருக்குச்‌ செய்யக்கூடாது. இதற்குரிய ஆதாரம்‌ முன்னர்‌ கூறப்பட்டு விட்டது. 

 

பதிமூன்றாவது: இந்தப்‌ பிரிவில்‌ ஓன்பதாவதாதக்‌ கூறப்பட்டிருப்பது கணவன்‌, மனைவிக்கு நீத்கப்பட்‌டூள்ளது. கணவனை மனைவியும்‌, மனைவியை கணவனும் குளிப்பாட்டலாம்‌. இதனைத்‌ தடுக்கும்‌ எந்த ஆதாரமும்‌ காட்டப்படவில்லை. இப்படிச்‌ செய்வது ஆகும்‌ என்பதற்கு பத்தாவதாகக்‌ குறிக்கப்பட்டுள்ள அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்‌ கூறிய நபிமொழி முதலாவதாகவும்‌, இரண்டாவதாக அன்னையவர்கள்‌ கூறிய சம்பவமும்‌ ஆதாரங்களாகின்றன.

 

பகிஃ மண்ணறைக்‌ தோட்டத்தில்‌ ஒரு மையித்தை அடக்கம்‌ செய்து விட்டு நபியவர்கள்‌ திரும்பியபோது, நான்‌ கடுமையான தலைவலியினால்‌ தலையில்‌ கையை வைத்துக்‌ கொண்டு “என்‌ தலையே” என்று கூறிக்‌ கொண்டிருந்தேன்‌. இதனைக்‌ கேட்ட நபியவர்கள்‌ “நானும்‌ அவ்வாறுதான்‌ கத்த வேண்டும்‌ போலிருக்கிறது. (எனக்கும்‌ தலைவலி வந்துவிட்டது) உனக்கு ஒரு கெடுதலும்‌ இல்லை. எனக்கு முன்‌ நீ இறந்து விட்டால்‌ நானே உன்னைக்‌ குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுவித்து நல்லடக்கம்‌ செய்து விடுவேன்‌” எனக்‌ கூறினார்கள்‌.

(அஹ்மத்‌. தாரமீ. இப்னுமாஜா. பைஹகி. தாரகுத்னி)

 

பதினான்காவது: குளிப்பாட்டும்‌ முறைகளை நன்கு அறிந்திருப்பவர்களே குளிப்பாட்டுதல்‌ வேண்டும்‌. குறிப்‌பாக சொந்தக்காரர்களே குளிப்பாட்டுதல்‌ வேண்டும்‌. ஏனெனில்‌ நபி (ஸல்‌) அவர்களைக்‌ குளிப்பாட்டும்‌ பணியில்‌ நபியவர்களின்‌ குடும்பத்தினரே ஈடுபட்டிருந்தனர்‌. அவர்களிலொருவர்தான்‌ அலீ (ரழி) அவர்கள்‌. அவர்கள்‌ கூறுகிறார்கள்‌:

“நான்‌ நபி (ஸல்‌) அவர்களைக்‌ குளிப்பாட்டினேன்‌. ஏனைய மையித்துக்களுக்கு ஏற்படும்‌ எந்த அசுத்தமும்‌, அசிங்கமும்‌ ஏற்பட்டதை நான்‌ காணவேயில்லை. உயிருடன்‌ இருக்கும்‌ போதும்‌, இறந்த பின்பும்‌ தூய்மையானவர்களாகவே இருந்தார்கள்‌”. 

(இப்னுமாஜா, ஹாகிம்‌, பைஹகி)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply