ஜுமுஆ தொழுகை வீட்டில் நிறைவேற்றலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு,

ஜுமுஆ தொழுகை வீட்டில் நிறைவேற்றலாமா?

மெளலவி அன்ஸார் ஹூஸைன் ஃபிர்தவ்ஸி:

ஜுமுஆ தொழுகை நிறைவேற்றுவதிலுருந்து “அஹ்லுல் அஃதார்” (ஷரீஅத் வழங்கும் தகுந்த காரணங்கள் படி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்) விதிவிலக்கு வழங்கப்படுகிறார்கள்.

உதாரணமாக பிரயாணி 10 பேருடன் பிரயாணம் செய்கிறார் என்றால் தொழுகை நேரம் வரும்போது சுருக்கியோ, சேர்த்தோ தொழுவார் அதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பிரயாணிகள் ஜுமுஆ தொழுகை நடத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அவர்கள் செய்த பிரயாணங்களில் அவர்கள் ஜுமுஆ தொழுததாகவும் எவ்வித குறிப்புகளும் வரவில்லை. அதனால்தான் நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் வரலாற்றில் அரஃபா நாளின் பேருரைதான் இருக்கிறதே தவிர ஜுமுஆ உரை நிகழ்த்தப்படவில்லை.

மேலும், இதர தொழுகைகள், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சிலசமயங்களில் இல்லங்களில் ஜமாஅத்தாக நடைபெற்றுள்ளதை காண முடியும், ஆனால் ஜுமுஆ தொழுகையை அவர்கள் இல்லத்தில் நடத்தியதாக எந்த சம்பவத்தையும் நாம் கேள்விப்பட்டதில்லை.

மேலும்,

மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பாளரிடம், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்… அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் “ஹய்ய அலஸ் ஸலாஹ்” (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், “ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்” (உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்று கூறுவீராக!” என்றார்கள். இ(வ்வாறு அவர்கள் கூறிய)தை மக்கள் ஆட்சேபிப்பதைப் போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “இ(வ்வாறு நான் கூறிய)தைக் கேட்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? என்னை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இவ்வாறு தான் செய்தார்கள். ஜுமுஆ(த் தொழுகை) கட்டாயக் கடமையாகும் (அத்தொழுகைக்கு வாருங்கள் என்று கூறப்பட்டுவிட்டால் சிரமத்தோடு நீங்கள் வரவேண்டியதாகிவிடும்). நான் உங்களைச் சேற்றிலும் சகதியிலும் நடக்க விட்டு உங்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பவில்லை (எனவேதான், இல்லங்களிலேயே தொழச் சொன்னேன்)” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் : 1244)

மேற்கண்ட சம்பவத்தில் பள்ளியில் ஜுமுஆ தகுந்த காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டபோது வீட்டில் தொழுதுகொள்ளுங்கள் என்று வருகிற இச்சம்பவத்தின் எந்த பின்னணியிலும் மக்கள் தமது இல்லங்களில் ஜுமுஆ தொழுகையை நடத்தியதாக எவ்வித குறிப்பும் காண முடியவில்லை.

மேலதிகமாக தொடர்ந்து மூன்று ஜுமுஆக்களை விட்டுவிட்டால் அவனது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரை குத்தி விடுகிறான் என்பதும், அது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதும் தற்போதைய சூழலுக்கு நிச்சயமாக பொருத்திப்பார்க்க முடியாது. காரணம், அந்த ஹதீஸ்களில் تَهَاوُنًا அலட்சிமாக விடுதல், مِنْ غَيْرِ ضَرُورَةٍ நிர்பந்த சூழல் இன்றி விடுதல் من غير عذر ஷரீஅத் அனுமதிக்கும் காரணம் இன்றி விடுதல் போன்ற வார்த்தைகள் தெளிவாக வந்துள்ளதால் நாம் அச்சப்பட வேண்டியதில்லை. ஆக, வெள்ளிக்கிழமை அன்று பள்ளிவாசல்களில் நிர்பந்தம் காரணமாக ஜுமுஆ இரத்து செய்யப்பட்டால் நான்கு ரக்அத் ளுஹர் தொழுவதே மார்க்கத்தின் வழிமுறையாகும்.

எனவே நமது ஜமாஅத் சரியான ஃபத்வாவை காலச் சூழலுக்கேற்ப வழங்கியுள்ளது. அதனை நாம் கடைபிடிப்போம். இறையருள் பெற முயற்சிப்போம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

விளக்கம் ஏதேனும் விடுபட்டிருப்பின் அறிஞர் பெருமக்கள் அதனை வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பின்குறிப்பு : இதில் மேலதிக சர்ச்சைகள் செய்யாமல் இக்குழப்பமான கால கட்டங்களில் அமல்களிலும், கல்வி தேடும் பணிகளிலும் ஈடுபடுவோமாக! நம்மை பீடித்திருக்கும் சோதனைகளில் இருந்து சீக்கிரம் விடுபட இறைவனிடம் உருக்கமாக பிரார்த்தனை செய்வோம்.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க போதுமானவன்.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply