ஸகாதுல் பித்ருடைய முழுமையான சட்டம் என்ன?

கேள்வி:

ஸகாதுல் பித்ருடைய முழுமையான சட்டம் என்ன?

பதில்:

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…

ரமழான் மாதத்தின் இறுதிப் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையே ஸகாதுல் பித்ர் ஆகும். இதற்கு ஸதகதுல் பித்ர் என்றும் கூறப்படும். இதனுடைய சில சட்டதிட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.

ஸகாதுல் பித்ருடைய சட்டம் என்ன?

ஸகாதுல் பித்ர் கடமையான ஓர் இபாதத் ஆகும். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு சாஉ அளவாக அல்லது வாற்கோதுமையிலிருந்து ஒரு சாஉ அளவாக ஸகாதுல் பித்ரை முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் அனைவர் மீதும் கடமையாக்கினார்கள். மனிதர்கள் தொழுகைக்கு வெளியேறுவதற்கு முன்பாக அதனை நிறைவேற்றுமாறு ஏவினார்கள். (புஹாரீ, முஸ்லிம்)

ஆகவே, இந்த ஹதீஸ் ஸகாதுல் பித்ர் என்பது கடமையான ஓர் அம்சமாகும் என்பதை அறிவிக்கின்றது. இமாம் இப்னுல் முன்திர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: ‘நாங்கள் அறிஞர்கள் என்று ஞாபகம் வைத்திருந்த அனைவரும் ஸதகதுல் பித்ர் பர்ளானது என்பதில் ஒன்றுபட்டிருந்தார்கள்.” மேலும், இது ஏகோபித்த ஒரு கருத்தாகும் என்பதை இஸ்ஹாக் என்ற அறிஞரும் குறிப்பிட்டிருக்கின்றார்.

பார்க்க: அல்மஜ்மூஉ (6/104, 6/140) , அல்முஹல்லா (704)

ஸகாதுல் பித்ர் யாருக்குக் கடமையாகும்?

இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘அனைத்து அறிஞர்களினதும் கருத்தின்படி ஸகாதுல் பித்ர் என்பது சிறுவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். அநாதைக்கும் அது கடமையான ஒன்றாகும். அவருக்கு அவருடைய பொறுப்புதாரி அவருடைய பணத்திலிருந்து அக்கடமையை நிறைவேற்ற வேண்டும். இது விடயத்தில் முஹம்மத் இப்னுல் ஹஸன் என்பவரைத்தவிர வேறு யாரும் கருத்து வேறுபாடு கொண்டதாக எமக்குத் தெரியவில்லை.” (அல்முங்னீ: 4/283)

இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இக்கூற்றுக்கு ஆதாரமாக முன்பு குறிப்பிடப்பட்ட இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸை முன்வைக்கின்றார்கள்.

தாயின் வயிற்றில் இருக்கின்ற சிசுவுக்கு ஸகாதுல் பித்ர் கடமையாகுமா?

இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘சிசுவுக்கு ஸகாதுல் பித்ர் கடமையான ஒன்றல்ல என்பதே இது விடயத்தின் நிலைப்பாடாகும். இதுவே அதிகமான அறிஞர்களின் கருத்துமாகும்.” (அல்முங்னீ: 4/316)

இப்னுல் முன்திர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நாம் ஞாபகம் வைத்திருக்கின்ற ஆலிம்களில் யாரும் தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு ஸகாதுல் பித்ர் வழங்குவதை மனிதர்களுக்கு கட்டாயமாக்கவில்லை.”

சிசுவுக்கும் ஸகாதுல் பித்ர் வாஜிப் என்ற கருத்து இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு ஹஸ்ம் என்ற அறிஞரும் வாஜிப் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்.

பெரும்பாலான அறிஞர்களின் கருத்தே இது விடயத்தில் சரியான ஒரு முடிவாகும். ஏனென்றால், சிசுவின் பெயரால் ஸகாதுல் பித்ர் வழங்கப்பட்ட பின் அந்த சிசு உயிருடன் தாயின் வயிற்றில் இருந்து வெளியாகுமா? அல்லது மரணிக்குமா என்பது அறியப்படமாட்டாது. அந்த சிசுவுக்கு வேறு எந்த மார்க்கச் சட்டமும் அது தாயின் வயிற்றில் இருக்கும்போது கடமையாக்கப்படவில்லை. வஸிய்யத், அனந்தரச் சொத்து ஆகிய சட்டங்களுக்கு சிசுக்கள் உரித்தாகும். ஆனால், அவர்கள் உயிருடன் தாயின் வயிற்றிலிருந்து வெளியேற வேண்டும்.

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சிசுக்கு ஸகாதுல் பித்ர் கடமையான ஒன்றல்ல. மாறாக, அது விரும்பத்தக்கதாகும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள்.

பார்க்க: அல்முஹல்லா (704), பிக்ஹுல் இபாதாத் (298)

ஸகாதுல் பித்ர் வழங்கப்படுவதற்குத் தகுதியான உணவு வகைகள் எவை?

ஒரு சில அறிஞர்கள் ஹதீஸில் எவ்வகையான உணவு குறிப்பிடப்பட்டுள்ளதோ அவ்வகையான உணவுகளிலிருந்தே ஸகாதுல் பித்ர் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள். இன்னும் சில அறிஞர்கள் மிகச்சிறந்தது ஹதீஸில் குறிப்பிடப்பட்ட உணவு வகைகளை வழங்குவதாகும். தாம் வசிக்கும் பிரதேசத்தில் பெரும்பாலாக உட்கொள்ளப்படுகின்ற உணவை வழங்குவதிலும் தவறில்லை என்று கூறியிருக்கின்றார்கள்.

இது விடயத்தில் எந்த உணவு ஒரு பிரதேசத்தில் பெரும்பாலாக உட்கொள்ளப்படுகின்றதோ அவ்வுணவையே வழங்க வேண்டும் என்பதுதான் சரியான கருத்தாகும். இக்கருத்தை இப்னு தைமியா, அஷ்ஷெய்ஹ் பின் பாஸ், அஷ்ஷெய்ஹ் அல்பானீ, அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் சரிகண்டுள்ளார்கள்.

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘இது தான் கூறப்பட்ட கருத்துக்களில் சரியான கருத்தாகும். ஏனென்றால், ஸதகாவுடைய விடயத்தில் அடிப்படை அம்சம் அது ஏழைகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு வழங்கும் உணவில் நடுத்தரமானதை பத்து ஏழைகளுக்கு வழங்குவதாகும்.” (அல்மாஇதா: 89)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாதுல் பித்ரை பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு சாஉ அளவை, அல்லது வாற்கோதுமையிலிருந்து ஒரு சாஉ அளவையே கடமையாக்கினார்கள். ஏனென்றால், இதுதான் மதீனாவாசிகளின் உணவாக இருந்தது. இது அவர்களது உணவாக இருக்காவிட்டால் வேறு வகையான உணவை அவர்கள் உட்கொள்பவர்களாக இருந்திருந்தால் அவர்கள் உட்கொள்ளாத எந்த உணவையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாதுல் பித்ராக வெளியேற்றுமாறு மதீனாவாசிகளை பணித்திருக்கமாட்டார்கள்.” (பத்ஹுல் அல்லாம்: 2/497)

அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: பேரீச்சம்பழமாக அல்லது வாற்கோதுமையாக அல்லது கோதுமையாக அல்லது சோளமாக இருந்தாலும் சரியே! அறிஞர்களின் இரு கருத்துக்களில் சரியான கருத்தின்படி நாட்டு உணவிலிருந்து ஸகாதுல் பித்ரை வெளியேற்றுவது கடமையாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட ஓர் உணவு வகையை நிபந்தனையிடவில்லை. இன்னும் ஸகாதுல் பித்ர் என்பது (ஏழைகளுக்கான) ஓர் ஆறுதலாகும். ஒரு முஸ்லிமுக்கு அவனது உணவல்லாத வேறோர் உணவைக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் வழங்கப்படுவது கடமையானதல்ல.” (மஜ்மூஉல்பதாவா, பாகம்: 14)

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘ஸகாதுல் பித்ர் கடமையாக்கப்பட்டதன் நோக்கம் அது ஏழைகளுக்குரிய உணவாக அமைய வேண்டும் என்பதேயாகும். ஆகவே, இவ்வுணவு மனிதர்களுக்குரிய பெரும்பாலான உணவாக இருந்தாலே இந்நோக்கம் நிறைவேறும். அப்துல்லலாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ள பேரீச்சம்பழத்தையும் வாற்கோதுமையையும் குறிப்பாக்குவது அவ்விரண்டிலும் உள்ள ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்து அல்ல. மாறாக, அக்காலத்தில் அவ்விரண்டும் மனிதர்களின் பெரும்பாலான உணவாக இருந்தது என்ற காரணமேயாகும்.” (மஜ்மூஉல் பதாவா, பாகம்: 18)

ஸகாதுல் பித்ரை அதனுடைய பெறுமதியை வைத்து பணமாக வழங்கலாமா?

பெரும்பாலான அறிஞர்களின் கருத்து ஸகாதுல் பித்ரை பணமாக வழங்க முடியாது என்பதேயாகும். இக்கருத்தை அஹ்மத், மாலிக், ஷாபிஈ ஆகியவர்களின் மத்ஹபுகளைச் சார்ந்த கருத்துமாகும்.

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘உணவைத்தவிர வேறொன்றிலும் ஸகாதுல் பித்ர் கடமையாகாது. அதனைப் பெறுமதியாக வழங்குவதும் கூடாது. ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம்பழத்திலிருந்து ஒரு சாஉ அல்லது வாற்கோதுமையிலிருந்து ஒரு சாஉ அளவை கடமையாக்கினார்கள். அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: ‘நாங்கள் ஸகாதுல் பித்ரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் உணவிலிருந்து ஒரு சாஉ அளவாக வழங்கினோம்.

எனவே, எவருக்கும் ஸகாதுல் பித்ரை திர்ஹமாகவோ ஆடையாகவோ விரிப்புக்களாகவோ வழங்க முடியாது. மாறாக, அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நாவினூடாக எதனைக் கடமையாக்கினானோ அதனை வழங்குவதே கடமையாகும். பணமாக வழங்கலாம் என்ற கருத்தை நல்ல ஒரு விடயமாகக் கருதியவர்களின் நலவை நாம் கருத்தில் கொள்ளக்கூடாது. ஏனென்றால், மார்க்கம் அபிப்பிராயங்களைத் துயர்ந்து வரக்கூடியதல்ல. மாறாக, அது ஞானமிக்க யாவற்றையும் அறிந்தவனிடமிருந்து வந்தாகும். அல்லாஹ் மிக்க அறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான். ஸகாதுல் பித்ர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நாவினூடாக உணவிலிருந்து சாஉ அளவு கடமையாக்கப்பட்டிருப்பதனால் எங்களுடைய புத்திகள் பணமாக வழங்குவதை சரியாகக் கருதினாலும் அதைவிட்டு வேறொன்றின்பால் செல்ல முடியாது. மாறாக, தனது புத்தி மார்க்கத்திற்கு முரணான விடயங்களை சரியாகக் கருதினால் அப்புத்தியை சந்தேகம் கொள்வதுதான் ஒரு மனிதனுக்கு கடமையாகும்.” (மஜ்மூஉல் பதாவா)

ஆகவே, இது விடயத்தில் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தின்படி ஸகாதுல் பித்ரை பெறுமதியாக வழங்க முடியாது. மேலும், அவ்வாறு வழங்குவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவுக்கு முரணான அம்சமுமாகும்.

ஸகாதுல் பித்ராக வழங்கப்படும் உணவின் அளவு யாது?

ஸகாதுல் பித்ராக வழங்கப்படும் உணவு ஒரு சாஉ அளவாகும். இதையே மேற்குறிப்பிடப்பட்ட இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஒரு சாஉ என்பது நான்கு முத்துகளாகும். ஒரு முத்து என்பது நடுத்தரமான ஒரு மனிதனின் இரு கைகளால் அள்ளினால் எவ்வளவு இருக்குமோ அதுவேயாகும். அதனடிப்படையில் ஒரு சாஉ என்பது நடுத்தரமான மனிதனின் கைகளால் அள்ளப்படும் பொருளின் நான்கு மடங்கேயாகும். இந்த அளவு சுமார் மூன்று கிலோவாகும் என்று சஊதி பத்வாக்குழு தீர்ப்பு வழங்கியிருக்கின்றது. இன்னும் சிலர் அது 2176 கிராம் என்றும் கூறியிருக்கின்றனர். இன்னும் சிலர் அது 2751 கிராம் என்றும் கூறியிருக்கின்றனர்.

நடுத்தரமான மனிதரின் கையளவு ஒருவருக்கொருவர் வேறுபடுகின்ற காரணத்தினாலேயே அறிஞர்கள் இவ்வாறு கிராமுடைய அளவில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவின்படி கைகளினால் அளந்து கொடுப்பதே மிகச் சிறந்ததாகும். என்றாலும், ஒவ்வொருவருடையதும் கையளவு வித்தியாசப்படுகின்ற காரணத்தினால் இன்னும் அதன் சரியான அளவை கணக்கிட முடியாததன் காரணமாகவும் அதனை சுமார் இரண்டரைக் கிலோவாக அளந்து கொடுப்பதில் குற்றமில்லை என்று கூறலாம்.

ஸகாதுல் பித்ர் கடமையாகும் ஆரம்ப நேரம் எது?

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘எங்களிடத்தில் சரியான கருத்தின்படி பெருநாள் இரவன்று சூரியன் மறைவதுடன் ஸகாதுல் பித்ர் கட்டாயமாகிறது. இக்கருத்தையே அஸ்ஸவ்ரீ, அஹ்மத், இஸ்ஹாக் ஆகிய அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். அபூஹனீபா அவர்கள் பெருநாள் தினத்தில் பஜ்ர் உதயமானதுடன் அது கடமையாகும் என்று கூறியிருக்கின்றார்கள். (ஷர்ஹுல் முஹத்தப்: 6/141-142)

பெருநாள் இரவன்று சூரியன் மறைவதுடன் ஸகாதுல் பித்ர் கடமையாகும் என்பதே சரியான கருத்தாகும். ஏனென்றால், ஸகாதுல் பித்ர் என்பது நோன்பை நிறைவு செய்தவற்காக வழங்கப்படும் தர்மமேயாகும். அதனடிப்படையில் நோன்பு பெருநாள் இரவு சூரியன் மறைவதுடன் ஆரம்பமாகிறது. எனவே, அந்த நேரத்திலிருந்தே ஸகாதுல் பித்ர் கடமையாகும்.

பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகைக்குப் பின் ஸகாதுல் பித்ரை வழங்குவதின் சட்டம் என்ன?

அதிகமான அறிஞர்கள் அதனைப் பெருநாள் தொழுகைக்கு முன் முற்படுத்தி வழங்குவதுதான் மிகச்சிறந்தது என்றும் யாராவது அதே தினத்தில் பெருநாள் தொழுகைக்கப் பின் வழங்கினாலும் அதில் குற்றம் இல்லை என்றும் கூறியிருக்கின்றார்கள்.

தாவூத் அள்ளாஹிரீ, இப்னு ஹஸ்ம் போன்ற அறிஞர்கள் தொழுகைக்கு முன்பு ஸகாதுல் பித்ர் வழங்கப்பட வேண்டும் என்றும் யாராவது தொழுகைக்குப் பின் அதனை வழங்கினால் ஸகாதுல் பித்ரை உரிய நேரத்தில் வழங்காத பாவத்தை அவர் சுமந்து கொள்வார் என்றும் கூறியிருக்கின்றார்கள். இக்கருத்தை அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் சரிகண்டிருக்கின்றார்கள். இதுவே சரியான கருத்தாகும். ஏனென்றால், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்கள் தொழுகைக்குப் புறப்பட முன் அதனை நிறைவேற்றுமாறு ஏவினார்கள்.”

இன்னும், பெருநாள் தினம் கழிந்து அடுத்து வரக்கூடிய நாட்களில் இதனை நிறைவேற்றினாலும் அது அனுமதிக்கப்படாத பாவத்திற்குரிய ஒரு செயலாகும் என்பதையும் அதிகமான அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள்.

பார்க்க: அல்முங்னீ (4/298), அல்மஜ்மூஃ (6/142), அஷ்ஷர்ஹுல் மும்திஃ (6/171)

ஸகாதுல் பித்ரை அது கடமையாகும் நேரத்திற்கு முன் வழங்குவதின் சட்டம் என்ன?

இதுவிடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. மிகவும் சரியான கருத்து தேவைப்படும்போது உரிய நேரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்பு அதனை வழங்கலாம். ஏனென்றால், சிலவேளை ஏழைகள் தூர இடங்களில் வசிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இவ்வாறான அவசியமான நிலை இல்லாதபோது உரிய நேரத்திலேயே அது வழங்கப்பட வேண்டும்.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஸகாதுல் பித்ரை அதனை சேமிப்பவரிடம் பெருநாளுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே வழங்கியதாக புஹாரீ மற்றும் முவத்தா போன்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸஹாபாக்கள் இரண்டு நாட்களுக்கு முற்படுத்தி வழங்கியது ஸகாதுல் பித்ரை ஒன்று சேர்த்துக்கொள்வதற்கேயாகும், மாறாக இரண்டு நாட்களுக்கு முன்பு ஏழைகளுக்கு அவர்கள் வழங்கிவிட்டதாக எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை. இக்கருத்தை இமாம் புஹாரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். எனவே, ஸகாதுல் பித்ரை ஒன்று சேர்த்துக்கொள்வதற்காக பெருநாளுக்கு முன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் வழங்குவதில் தவறில்லை என்பதற்கே இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸ் ஆதாரமாக அமைகின்றது.

தொகுப்பு: அஸ்கி அல்கமி (பலகத்துறை-இலங்கை)

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply