கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன?

கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன?

 

நல்லடியார்களின் கப்றுகளில் சமாதி கட்டுவது ஹறாமாகும்:

 

عن عائشة – رضي الله عنها – عن النبي أنه قال في مرضه الذي مات فيه : لعن الله اليهود والنصارى : اتخذوا قبور أنبيائهم مساجد ، رواه البخاري ( ۱۳۳۰) ومسلم (١١٨٤) وفي رواية جندب عند مسلم (۱۱۸۸) : قبل أن يموت بخمس….. قبور أنبيائهم وصالحيهم .

 

யூதர்கள் கிறிஸ்தவர்கள் தங்கள் நபிமார்கள், நல்லடியார்களின் கப்றுகளை வணக்கஸ்தலங்களாக மாற்றிக் கொண்டார்கள். அவர்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் தாங்கள் மரணிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு கூறினார்கள்.

– பார்க்க :ஸஹிஹுல் புஹாரி 1130, ஸஹீஹ் முஸ்லீம் 1184, 1188.

 

நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது நான்கு கலீபாக்களான அபூ பக்ர், உமர், உத்மான், அலி (றழி) ஆகியோர்களின் ஆட்சிக் காலங்களிலோ அல்லது உமய்யாக்களின் ஆட்சிக் காலங்களிலோ நல்லடியார்களின் கப்றுகளில் சமாதி, தர்கா கட்டும் பழக்கம் காணப்படவில்லை.

அப்பாஸியாக்களின் காலத்தில்தான், ஹி 132 (கிபி 250) இவ்வழிகெட்ட பழக்கம் ஆரம்பித்தது. அப்பாஸிய்யாக்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும் உமையாக்களால் கொல்லப்பட்ட நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் (அஹ்லுல் பைத் கப்றுகளைத் தேடி அவற்றின் மீது ஞாபகார்த்த மண்டபங்களை நிறுவினர்.

இந்த ஷிர்க்கை ஷீயாக்கள் (சஹாபாக்களை விமர்சிப்பவர்கள்) பரப்பிவிட்டார்கள். இதை ஷியாக்களிடமிருந்து கிரேக்க இந்து பாரசீக தத்துவங்களினால் கவரபப்ட்ட ஸூபிகள் பெற்று இஸ்லாமிய உலகில் பரப்பினர்.

இமாம் ஷாபிஈ (றஹ்) அவர்கள் கப்றில் தர்காக்கள் கட்டப்படுவதை வெறுத்துள்ளார்கள். (அல்உம்:1ஃ278)

ஆனால், இப்பாவச் செயலை கூடும் என்று ஷாபிஈ மத்ஹபில் புகுத்தியவர் பைழாவி என்பவர் ஆவார்.

கப்றுகளில் கொடியேற்றல், அவற்றை முத்தமிடல், தொட்டுக் கொஞ்சுதல், ஸுஜுது செய்யதல் என்பன பாவமான காரியங்களாகும். அத்வைதிகள் மோகம் கொண்டிருக்கும் அறிஞர் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்கள் கூட கப்றை முத்தமிடுவது கிறிஸ்தவர்களின் பழக்கம் என்றும் அது கூடாது என்றும் தனது இஹ்யாவுல் உலுமித்தீன் என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இதை ஏற்று அவர்கள் அமுல்படுத்த அவர்கள் தயாரா?

روى مسلم ٢٢٤٠ عن أبي الهياج الأسدي قال : قال لي علي بن أبي طالب – رضي الله عنه – : ألا أبعثك على ما بعثني عليه رسول الله – – – أن لا تدع تمثالا إلا طمسته ، ولا قبرا مشرفا إلا سويته .

உருவச் சித்திரங்களை அழித்துவிடுமாறும், (தரை மட்டத்தை விட) உயர்ந்துள்ள கப்றுகளை சமப்படுத்திவிடுமாறும் நபி (ஸல்) அவர்கள் என்னை அனுப்பினார்கள் என அலி (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்:2240)

கப்று வணங்கிகள் மதிக்கும் இப்னு ஹஜர் அல்ஹைத்தமி அவர்கள் அஸ்ஸவாஜிர் 1:149 என்ற நூலில் “கப்றுகளில் கட்டப்பட்டிருக்கும் தர்காகள், பள்ளிவாயல்கள் என்பன கட்டாயம் இடித்துத் தகர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் இடைத் தரகர்கள் இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் இடைத் தரகர்கள் இல்லை என்பதே இஸ்லாம் கூறும் அடிப்படையாகும்.

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ سورة المؤمن : ( ٦٠

என்னை அழையுங்கள் உங்களுக்கு பதிலளிக்கின்றேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” (அல்முஃமின்:60)

مَنۡ عَمِلَ سَيِّئَةً فَلَا يُجۡزَىٰٓ إِلَّا مِثۡلَهَا وَمَنۡ عَمِلَ صَٰلِحًا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٌ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ يُرۡزَقُونَ فِيهَا بِغَيۡرِ حِسَابٍ

“எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார் எவர் ஓருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார் அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள். (அல் முஃமீன்:40)

மரணித்த நல்லடியார்களை அழைப்பதும், அவர்களால் தேவைகளை நிறைவேற்ற முடியும் என நம்புவதும், அவர்களிடம் தேவைகளை நிறைவேற்றும் படி பிரார்த்திப்பதும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலகளாகும். ஏனெனில், அவர்களால் நமது அழைப்பை செவிமடுக்கவும், தேவைகளை நிறைவேற்றவும் யாதொரு சக்தியும் அவர்களுக்குக் கிடையாது.

إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ فَادْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا لَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ (سورة الأعراف (١٩٤) ‘

அல்லாஹ்வை அன்றி நீங்கள் யாரை அழைக்கின்றீர்களோ, அவாகள் உங்களைப் போன்ற அடியார்களே! நீங்கள் (உங்கள் வாதத்தில்) உண்மையாளர்களாக இருந்தால் அழைத்துப் பாருங்கள், அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்” (அல் அஃராப் 194)

 

وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ إِن تَدْعُوهُمْ لا يَسْمَعُوا دُعَاءَكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبير سورة فاطر (١٣-١٤)

அவனன்றி யாரை அழைக்கின்றீர்களோ அவர்கள் அணுவளவையும் சொந்தமாக வைத்திருப்பவர்கள் அல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்கு பதிலளித்து (தேவையை நிறைவேற்றமாட்டார்கள்). (அல் பாதிர்:13-14)

நபி நூஹ் (அலை) அவர்களின் கூட்டத்தினர் வணங்கிக் கொண்டிருந்த வத் ஸுவாஹ், நஸ்ர் ஆகிய விக்கிரகங்கள் நல்லடியார்களின் பெயர்களாகும். ஆரம்பகாலத்தில் ஞாபகார்த்த சின்னங்களாக இருந்த இவற்றை பின்னர் காலவோட்டத்தில் வணங்க ஆரம்பித்தனர். (புஹாரி: 4920)

உமர் (றழி) அவர்கள் மதீனாவில் மிம்பரிலிருந்து ‘நஹவாந்த’ என்ற நகரிலுள்ள தளபதி ஸாரியா என்பவரை நோக்கி “ஸாரியாவே! மலைக்குப் பின்னால் எதிரி இருக்கிறான், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்” என்ற ஹதீஸை மரணித்த அவ்லியாக்கள் தங்களை அழைப்பதை கேட்பார்கள் என்பதற்கு கப்று வணங்கிகள் ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

இந்தஹதீஸின் அறிவிப்பாளர் வரிசைகளில் பொய்யர்களும் பலவீனமானவர்களும் காணப்படுகின்றனர். எனவே அதனை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

நல்லடியார்கள் மரணித்த பின் பூமிக்குத் திரும்புவதில்லை:

நல்லடியார்கள் மரணித்த பின் பூமிக்குத் திரும்பி வருகிறார்கள் என்றும் தமது தேவைகளை நிறைவேற்றித்த தருகிறார்கள் என்றும் நம்புவது ஷிர்க்காகும். மரணித்த நபர் ஆவியாக வருவார் என நம்புவது மூட நம்பிக்கையாகும்.

اللَّهُ يَتَوَلَّى الْأَنفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمتْ فِي مَنَامِهَا فَيُمْسِكُ الَّتِي قَضَى عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الأُخْرَى إِلَى أَجَلٍ مُسَمًّى (الزمر : الآية : ٤٣)

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்தில் அல்லாஹ் கைப்பற்றுகிறான். மரணிக்காத ஆத்மாக்களை அவை உறக்கத்தில் இருக்கும் போது கைப்பற்றுகிறான். மரணத்தைத் தழுவிவிட்ட (ஆத்மாக்களை) குறிப்பிட்ட காலம் (இறுதி நாள்) வரை தம் வசத்தில் வைத்துக் கொள்கிறான். ஏனையவற்றை (உறக்கத்தில் இருக்கும் ஆதமாக்களை விட்டுவிடுகிறான்’ (ஸுமர்:42)

இறுதி நாள் வரை கைப்பற்றப்பட்ட ஆத்மாக்கள் அல்லாஹ்வின் பிடியில் இருப்பதாக இத்திருவசனம் கூறுகிறது.

அத்வைதிகளின் அவ்லியாக்கள் மட்டும் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பி ஓடிவந்துவிட்டார்களோ?!

கப்றுகளுக்கு பலியிடுவதும், அதனை உண்ணுவதும் ஹறாமாகும்:

நல்லடியார்களின் பெயரால் பிராணிகளை அறுத்துப் பலியிடுவதும், அவற்றின் இறைச்சிகளை உண்ணுவதும் ஹறாமாகும்.

حُرَمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللهِ بِهِ (سورة المائدة : الآية : (٣)

தானாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்கு அறுக்கப்பட்டவை உங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன’ (அல்மாயிதா 3)

ولعن الله من ذبح لغير الله ، رواه مسلم (٥٠٩٦) عن علي – رضي الله عنه – عن النبي صلى عليه وسلم أنه قال:

‘அல்லாஹ் அல்லாதவைகளுக்கு (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிப்பானாக என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்:5096)

எனவே சிலைகள், கப்றுகள், கந்தூரிகள், மௌலீதுகள் போன்ற பித்அத் வைபவங்கள் ஆகியவைகளுக்கு அறுத்துப் பலியிடுவதும் அவற்றை உண்பதும் ஹறாமாகும். இதன்படி ஹாஜாவின் பெயரால் அறுக்கப்படும் மாடுகள், ஆடுகள், கோழிகள் ஆகியவைகளை உண்பது பன்றி இறைச்சியை உண்பதற்குச் சமமாகும்.

கப்றுகளுக்கு நேர்ச்சை வைத்தல் ஹறாமாகும்:

நல்லடியார்களின் பெயரால் அவர்களின் கப்றுகளுக்கு நேர்ச்சை வைத்தல் ஹறாமாகும். அவ்வாறு நேர்ச்சை வைத்தவர் அதை நிறைவேற்றவும் கூடாது, அதற்குப் பரிகாரமும் கொடுக்கத் தேவையில்லை.

وَمَا أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصار (سورة البقرة (۲۷۰)

நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ அல்லது நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளரும் இல்லை. (அல்பகரா: 270)

عن عائشة – رضي الله عنها – عن النبي – – قال : من نذر أن يطيع الله فليطعه ، ومن نذر أن يعصيه فلا يعصه ، رواه البخاري (٦٦٩٦)

யாராவது அல்லாஹ்வுக்கு வழிப்படும் விடயத்தில் நேர்ச்சை செய்தவன் (அதை நிறைவேற்றுவதன் மூலம்) அவனுக்கு வழிப்படட்டும் . அல்லாஹ்வுக்கு (மாறு செய்து) பாவம் செய்யும் விதத்தில் நேர்ச்சை செய்தவன் (அதை நிறைவேற்றாமல்) அவனுக்கு மாறு செய்வதை விட்டுவிடவும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (றழி) அவர்கள் கூறுகிறார்கள்.(ஸஹிஹுல் புகாரி :6696)

நல்லடியார்களின் கப்றுகளை நோக்கி புனித யாத்திரை செய்வது கூடாது:

நல்லடியார்கள் அடக்கப்பட்டிருக்கும் கப்றுகளை நோக்கியோ, அவர்கள் தங்கி இருந்த இடங்களை (மகாம்) நோக்கியோ புனித யாத்திரை செய்வது ஹறாமான செயலாகும். (உ-ம்: கல்முனைக் குடி, ஜெய்லானி, கதிர்காமம், நாகூர், தெமடகஹா மரத்தடி, கெச்சிமலை)

روى البخاري ۱۱۸۹ ومسلم ۳۳۷۰ – واللفظ له – عن أبي هريرة – رضي الله عنه – أن النبي – – – قال : لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد : مسجدي هذا ، ومسجد الحرام ، ومسجد الأقصى .

எனது (மதீனா) பள்ளி, மஸ்ஜிதுல் ஹறாம், அக்ஸா பள்ளி ஆகிய இவைகளைத் தவிர (வேறு எவ்விடத்துக்கும்) புனித யாத்திரை செய்ய வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுறைறா (றழி) அறிவிக்கிறார்கள். (புகாரி :1189, முஸ்லீம் :3370)

மேற்குறித்த ஷிர்க்குகளிலிருந்து எல்லாம் வல்ல அள்ளாஹ் முஸ்லிம்களைப் பாதுகாப்பதோடு அதில் வழிகெட்டவர்களுக்கும் ஹிதாயத்தைக் கொடுத்து அருள்புரிவானாக!

– பேராசிரியர் அஹ்மத் அஷ்ரப் (Ph.D. Al-Azhar)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply