- ஒரே துணியிலும் கபன் செய்யலாம். அல்லது அதற்கதிகமான துணியிலும் கபன் செய்யலாம். முஸ்அப் (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செய்தது. (இதே பிரிவு பாடத்தில் 34ம் பகுதி) ஆதாரமாக இருக்கின்றது.
- இஹ்ராம் கட்டியவராக மரணித்தவரை அவருடைய இரு ஆடைகளிலேயே கபனிடப்பட வேண்டும். (இதற்குரிய ஆதாரம் முன்னர் 17ம் இலக்கத்தில் கூறப்பட்டுள்ளது)
- கபன் செய்யும் போது சில விடயங்கள் விரும்பத்தக்கது
முதலாவது: கபன் துணி வெள்ளையாக இருத்தல்.
“நீங்கள் வெண்மையான ஆடைகளை அணியுங்கள். நீங்கள் அணியும் ஆடைகளிலேயே அது தான் சிறந்தது. உங்களில் மரணித்தவரை வெள்ளைத் துணியினாலே கபனிடுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, பைஹகி, அஹ்மத்) ப
இரண்டாவது: கபன் துணி மூன்றாக இருத்தல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எமன் தேசத்தில் ஸஹுலியா என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட மூன்று வெண்ணிற ஆடைகளினால் கபனிடப்பட்டார்கள். அவற்றில் சட்டையும் (கமீஸ்) இல்லை, தலைப்பாகையுமில்லை என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ)
மூன்றாவது: வெண்மை அதிகம் கலந்த துணியினால் கபனிடுவது :
உங்களில் யாராவது மரணமடைந்தால், வசதி இருந்தால் வெண்மை அதிகமுள்ள (ஹிப்ரா) துணியினால் கபனிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அபூதாவூத், பைஹகி, அஹ்மத்)
நான்காவது: கபன் துணியை அல்வது கபனிட்ட மையித்தை வாசனைப்புகை காட்ட வேண்டும். (சாம்பிராணிப் புகை இட வேண்டும்). மையித்திற்கு வாசனைப் புகை காட்டினால் மூன்று முறை செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அஹ்மத், ஹாகிம், பைஹகி)
ஆனால் இவ்வாறு வாசனைப்புகை இடுவது இஹ்ராம் கட்டி மரணித்தவருக்குக் கூடாது (இதன் விபரம் 17ம் இலக்கம் (இ) கூறப்பட்டுள்ளது.
- கபனுக்காக அதிகச் செலவு செய்வது கூடாது.
மூன்று துணியை விட அதிகப்படுத்துவதும் கூடாது. ஏனெனில் அது நபி வழிக்கு மாற்றமானதாகும். நபி (ஸல்) அவர்கள் மூன்று துணியிலேயே கபனிடப்பட்டுள்ளார்கள் என்பதை ஆதாரப் பூர்வமாக அறிந்துள்ளோம். அவருடைய சமுதாயத்தினரும் அதனையே பின்பற்ற வேண்டும்.
அன்றியும் பணச்செலவை அது அதிகப்படுத்தவும் கூடும். வீண் விரயம் செய்வதை மார்க்கம் தடுத்துள்ளது. நிச்சயமாக அல்லாஹ் மூன்று விஷயங்களை வெறுக்கின்றான்.
- சொன்னார், சொல்லப்படுகிறது (என்ற வார்த்தை – அதாவது வீண்பேச்சு, புரளி)
- பொருட்களை வீண் விரயம் செய்தல்..
- கேள்விகளை அதிகப்படுத்துதல். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
இந்த நபிமொழிக்கு பேரறிஞர் ‘அபூ தைய்யிப்’ அவர்கள் தமது “ரெளலத்துன்னதிய்யா” என்னும் நூலில் விளக்க மளித்திருப்பது என்னை வியப்பிலாழ்த்துகிறது.
அதில் (1ம் பாகம் 165ம் பக்கம்) அவர்கள் கூறுகிறார்கள்.
கபனுக்கு அதிக விலையுள்ள துணி எடுப்பதும் அதிகப் படுத்துவதும் சிறப்புக்குரியதல்ல. கபனிடப்பட வேண்டும் என்ற மார்க்கச் சட்டம் இல்லையாயின் மரணித்தவருக்கு கபனிடுவது வீண் விரயத்தைச் சேர்ந்ததேயாகும். ஏனெனில் அதனால் மையித்திற்கு எவ்விதப் பயனும் இல்லை. உயி௫டனிருப்பவனுக்கும் அதன் பயன் கிடைக்காது. அபூபக்கர் ஸித்திக் (ரழி) அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக! அன்னாரின் மரண வேளையில் புதிய கபன் துணி ஆயத்தப்படுத்தியுள்ளோம் என்று கூறப்பட்ட போது உயிருடன் இருப்பவருக்கே அது தேவை; (என்னுடைய மரணத்தின் பின்) எனக்குக் கந்தைத் துணியே போதும் எனக் கூறினார்கள் (என்ற விளக்கம் கொடுத்துள்ளார்.
- கபனிடும் விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே சட்டம்தான். ஆணுக்கு வேறாகவும் பெண்ணுக்கு வேறாகவும் கபனிடும் சட்டத்திற்கு ஆதாரம் எதுவுமில்லை.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: