ஜனாஸாவை தூக்கிச்‌ செல்லல்‌ – பாகம் 1

 

இமாம் அல் அல்பானி தனது ஜனாஸா சட்டங்களின் சூர்க்கம் எனும் நூலில் கூறுகிறார்:

44. மையித்தைச்‌ சுமந்து செல்வதும்‌, அதைப்பின்‌ தொடர்ந்து செல்வதும்‌ முஸ்லிம்கள்‌ மீது கடமையாகும்‌. ஒரு முஸ்லிம்‌ மையித்திற்காக மற்ற முஸ்லிம்கள்‌ மீதுள்ள கடமையாகும்‌. இது தொடர்பாக பல நபிமொழிகள்‌ வந்துள்ளன. அவற்றில்‌ இரண்டை மட்டும்‌ தருகிறேன்‌.

ஒன்று: ஒரு முஸ்லிமுக்கு, மற்ற முஸ்லிமின்‌ மீதுள்ள கடமைகள்‌ ஐந்து.

சலாம்‌ கூறப்பட்டால்‌ பதில்‌ கூறுதல்‌, நோயாளியைக்‌ கண்டு நலம்‌ விசாரித்தல்‌, (இறந்தால்‌) ஜனாஸாவில்‌ கலந்து கொள்ளுதல்‌, விருந்துக்கு அழைக்கப்பட்டால்‌ ஏற்றுக்‌ கொள்ளல்‌, தும்மியவன்‌ அல்ஹம்துலில்லாஹ்‌ என்று கூறினால்‌ பதில்‌ கூறுதல்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌.
(புகாரி, முஸ்லிம்‌, இப்னுமாஜா, அபூதாவூத்‌)

இரண்டு: நோயாளியிடம்‌ சென்று நலம்‌ விசாரியுங்கள்‌.
ஜனாஸாவை தொடர்ந்து செல்லுங்கள்‌. அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.
(அஹ்மத்‌, இப்னுஹிப்பான்‌, தயாலிஸ்‌)

45. ஜனாஸாவைத்‌ தொடர்வதில்‌ இரண்டு வகைகள்‌ உண்டு.

ஒன்று: மரணித்தவரின்‌ வீட்டிலிருந்து தொழுவிக்கும்‌ இடம்‌ வரை தொடர்தல்‌.

இரண்டு: வீட்டிலிருந்து அடக்கம்‌ செய்யும்‌ வரை தொடர்தல்‌. இவ்விரண்டு முறையாகவும்‌ நபியவர்கள்‌ செய்துள்ளார்கள்‌.
அபூஸயீ துல்‌ குத்ரீ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌: நபியவர்கள்‌ மதீனாவுக்கு வந்த புதிதில்‌ எங்களில்‌ யாருக்காவது மரணவேளை வந்தால்‌ நபியவர்களுக்கு அறிவிப்போம்‌. அவர்கள்‌ மரணிப்பவருக்காகப்‌ பிழை பொறுக்கத்‌ தேடுவார்கள்‌. அவர்‌ மரணித்து விட்டால்‌ அவரை நல்லடக்கம்‌ செய்யும்‌ வரை கூடவே இருப்பார்கள்‌.
சில வேளை மரணப்‌ போராட்டம்‌ நீடித்து விட்டால்‌ நெடு நேரமாக அங்கு நபியவர்களைக்‌ காக்க வைப்பது எங்களுக்கு வேதனையைத்‌ தந்து விடும்‌. இனிமேல்‌ ஒருவர்‌ மரணித்த பின்பு தான்‌ நபியவர்களுக்கு அறிவிக்க வேண்டும்‌ என தீர்மானித்து அப்படியே செய்தோம்‌.
ஒருவர்‌ மரணித்த பின்பே நபியவர்களிடம்‌ கூறுவோம்‌. நபியவர்கள்‌ வந்து மரணித்தவருக்கு தொழுகை நடத்தி விட்டு வீட்டுக்குச்‌ சென்று விடுவார்கள்‌. சிவவேளை அவரை அடக்கம்‌ செய்யும்‌ வரை கூடவே இருப்பார்கள்‌.
இதுவும்‌ நபியவர்களுக்குக்‌ கஷ்டம்‌ கொடுப்பதாக எண்ணிய நாங்கள்‌ ஜனாஸாவைகத் தூக்கிச்‌ சென்று நபியவர்களின்‌ வீட்டருகில்‌ வைத்து விட்டு நபியவர்களுக்குக்‌ கூறுவோம்‌. நபியவர்கள்‌ தொழுகை நடத்துவார்கள்‌. இதுவே கடைசி வரை பின்பற்றப்பட்ட முறையாகும்‌.
(ஹாகிம்‌, அஹ்மத்‌, பைஹகி)

46. இதில்‌ இரண்டாவது வகை சிறந்தது என்பதில்‌ ஐயமில்லை. ஏனெனில்‌,

எவன்‌ ஒரு ஜனாஸாவில்‌ கலந்து கொண்டு நம்பிக்கையுடனும்‌, நன்மை கிடைக்கும்‌ என்ற எண்ணத்துடனும்‌, (தொழுகை நடத்தும்‌ வரை கூடவே செல்வானாயின்‌ அவனுக்கு உஹத்‌ மலையளவு நன்மை கிடைக்கும்‌. அந்த ஜனாஸாவை நல்லடக்கம்‌ செய்யும்‌ வரைத்‌ தொடர்வானாயின்‌ இரண்டு உஹத்‌ மவையளவு நன்மை கிடைக்கும்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.
(புகாரி, முஸ்லிம்‌, அபூதாவூத்‌, திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்‌, பைஹகி)

47. ஒரு முஸ்லிம்‌ ஜனாஸாவைப்‌ பின்பற்றும்‌ இந்த நன்மை (கூலி) ஆண்களுக்கு மட்டும்தான்‌. பெண்களுக்‌கில்லை. ஏனெனில்‌ ஜனாஸாவைத்‌ தொடர வேண்டாம்‌ என நபியவர்கள்‌ பெண்களுக்குக்‌ கட்டளையிட்டுள்‌ளார்கள்‌.

உம்மு அதிய்யா (ரழி) அவர்கள்‌,
நாங்கள்‌ ஐனாஸாவைத்‌ தொடர்ந்து செல்லக்கூடாது என்று நபியவர்களால்‌ தடுக்கப்பட்டுள்ளோம்‌. எங்களைப்‌ போகவே கூடாது என நபியவர்கள்‌ வலியுறுத்தினார்கள்‌ என அறிவிக்கிறார்கள்‌.
(புகாரி, முஸ்லிம்‌, அபூதாவூத்‌, அஹ்மத்‌)

48. மார்க்கத்திற்கு விரோதமான செயல்களோடு ஜனாஸாவைத்‌ தொடர்ந்து செல்லக்கூடாது. இரண்டு விஷயங்களை மட்டும்‌ மார்க்கம்‌ தடுத்துள்ளது.

ஒப்பாரி வைத்து அழுது கொண்டும்‌, நெருப்புச்‌ சட்டி (சாம்பிராணிச்‌ சட்டி) எடுத்துக்‌ கொண்டும்‌ செல்லக்கூடாது. “சத்தம்‌, நெருப்பு ஆகியவற்றுடன்‌ ஜனாஸாவைத்‌ தொடரக்கூடாது என நபியவர்கள்‌ கூறியுள்ளார்‌கள்”
(அபூதாவூத்‌, அஹ்மத்‌)
ஜனாஸாவுடன்‌ ஊதுவத்தி கொண்டு செல்வதும்‌, நல்லடக்கம்‌ செய்த பின்‌ கப்ரின்‌ மீது ஊதுவத்தியைப்‌ பற்ற வைப்பதும்‌ இந்தச்‌ சட்டத்தையே சாரும்‌. (கூடாது!)

49. ஜனாஸாவுக்கு முன்னால்‌ சத்தமிட்டு திக்ரு செய்து கொண்டும்‌, குர்‌ஆன்‌ வசனங்களை ஓதிக்‌ கொண்டும்‌ செல்லக்‌ கூடாது. இது பித்‌அத்‌ ஆகும்‌. ஜனாஸாவுடன்‌ சத்தமிட்டு (திக்ருகள்‌ செய்து) செல்வதை நபித்தோழர்கள்‌ வெறுத்தனர்‌ என்று கைல்‌ இப்னு உப்பாதத்‌ (ரழி) தெரிவிக்கிறார்கள்‌.
(பைஹகி)
ஏனெனில்‌ இது கிறிஸ்தவர்களுக்கு ஒப்பான செயலாகும்‌. அவர்கள்‌ மரண ஊர்வலத்தில்‌ இன்ஜீல்‌ வேதத்திலிருந்து சில வசனங்களை சத்தமிட்டுச்‌ சோக கீதமாய்ப்‌ பாடிச்‌ செல்வார்கள்‌. மேலும்‌ சிலர்‌ இசைக்‌ கருவிகள்‌ மூலமும்‌, சோக இசையை மீட்டுவார்கள்‌. இவற்றை முஸ்லிம்களில்‌ சிலரும்‌ பின்பற்றி தங்கள்‌ ஜனாஸாவைக்‌ கொண்டு செல்கின்றனர்‌. இது மாபெரும்‌ தவறாகும்‌.

இமாம்‌ நவவீ (ரஹ்‌) அவர்கள்‌ தமது “அல்‌-அக்தார்‌” எனும்‌ நூலில்‌ (பக்கம்‌:203) “அறிந்துகொள்‌. ஜனாஸாவுடன்‌ செல்பவர்கள்‌ மெளனமாகச்‌ செல்வதே சரியானதாகும்‌. ஏற்புடையதுமாகும்‌. இவ்வாறுதான்‌ முன்னோர்கள்‌ செய்தனர்‌. குர்‌ஆன்‌ வசனங்களை ஓதிக்‌ கொண்டும்‌ திக்ருகள்‌ செய்து கொண்டும்‌, சத்தத்தை உயர்த்தக்‌ கூடாது. அமைதியாகச்‌ செல்வதன்‌ மூலம்‌ ஜனாஸாவைப்‌ பற்றிய சிந்தனையும்‌ மரணத்தைப்‌ பற்றிய சிந்தனையும்‌ ஏற்பட வழி பிறக்கிறது. இதுதான்‌ இந்த இடத்தில்‌ தேவையாகிறது. இதுதான்‌ உண்மை நிலை. (சிலர்‌ சத்தமிட்டு ஏதாவது கூறிக்‌ கொண்டிருந்தால்‌ அதன்‌ பக்கமே கவனம்‌ திரும்பும்‌).

“ஜனாஸாவில்‌ அமைதியாகச்‌ செல்ல வேண்டும்‌ என்ற சட்டத்திற்கு மாற்றமாக பல ஊர்களில்‌ அதிக மானோர்‌ நடப்பதைக்‌ கண்டு யாரும்‌ மயங்கி விட வேண்டாம்‌. அபூ புழைல்‌ இப்னு இயாழ்‌ (ரஹ்‌) அவர்கள்‌, நேர்வழியில்‌ வாழ்ந்தவர்கள்‌. அவர்களின்‌ வழியைப்‌ பற்றிப்‌ பிடித்துக்கொள்! அவர்கள்‌ குறைவானவர்கள்‌ என்பதை எண்ணி தடுமாறி விடாதே! வழி கெட்டவர்களை இனம்‌ கண்டு கவனமாக இரு! வழிகேட்டினால்‌ அழிபவர்கள்‌ அதிகமாக இருக்கிறார்கள்‌ என்பதைக்‌ குறித்துக்‌ கவலைப்‌ படாதே! மயக்கமடையாதே!” எனக்‌ கூறியுள்ளார்கள்‌.

இமாம்‌ பைஹகீ அவர்கள்‌ கைஸ்‌ இப்னு உப்பாத்‌ அவர்கள்‌ மூலம்‌ அறிவித்துள்ள செய்தி நான்‌ கூறியதற்கு ஆதாரமாகவே இருக்கிறது. ஜனாஸாவின்‌ போது அறிவிலிகள்‌ கிராஅத்‌ ஓதிக்‌ கொண்டும்‌, அதனை நீட்டி இழுத்துக்‌ கொண்டும்‌, திமிஷ்கில்‌ (டமஸ்கஸ்‌) செயற்படுவது ஹராமான வேலையாகும்‌. மத அறிஞர்களின்‌ ஒருமித்த தீர்ப்பின்படி ஹராமான செயலாகும்‌. இதன்‌ உண்மை நிலையையும்‌, இவ்வாறு குர்‌ஆனை ஜனாஸாவில்‌ பயன்படுத்துவதன்‌ கேட்டையும்‌, அடாத செயலையும்‌, “அதாபுல்‌ கிரா அத்‌” என்ற நூலில்‌ எழுதியுள்ளேன்‌. எந்த அறிஞரும்‌ இதனை ஆட்சேபிக்கவில்லை, மறுப்புத்‌ தரவுமில்லை எனக்‌ கூறியுள்ளார்கள்‌.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply