ஜனாசா சட்டங்கள் – மையித்தைக்‌ கபனிடுதல்‌ – பாகம் 1

  1. ஒரு மையித்தைக்‌ குளிப்பாட்டி முடிந்தவுடன்‌ அதனைக்‌ கபனிடுவது கட்டாயமாகும்‌. அதற்குரிய நபி மொழி ஆதாரம்‌ மூன்றாவது பிரிவில்‌ கூறப்பட்டுள்ளது. (இஹ்ராம்‌ கட்டிய நிலையில்‌ வாகனத்திலிருந்து வீழ்ந்து  மரணித்தவர்‌ செய்தியில்‌ பார்த்துக்‌ கொள்ளலாம்‌).

 

  1. மரணமடைந்தவரின்‌ சொந்தப்‌ பணத்திலிருந்து கபனிடுதல்‌ வேண்டும்‌. வேறு யாராவது முன்‌ வந்தும்‌ செலவு செய்யலாம்‌.

கப்பாப்‌ இப்னுல்‌ அரத்‌ (ரழி) அவர்கள்‌ அறிவித்துள்ள நபிமொழி இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. 

“நாங்கள்‌ நபி (ஸல்‌) அவர்களோடு அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்‌) சென்றோம்‌. அல்லாஹ்வின்‌ திருப்‌பொருத்தத்தை வேண்டியே அவ்வாறு செய்தோம்‌. எனவே எங்களுக்கு நற்கூலி தருவது அல்லாஹ்வின்‌ மீது கடமையாகி விட்டது. அல்லாஹ்வின்‌ நற்கூலியை (இவ்வுலகில்‌) பெறாமலே எங்களில்‌ சிலர்‌ சென்று விட்டனர்‌. அவர்களிலொருவர்தான்‌ முஸ்‌அப்‌ இப்னு உமைர்‌ (ரழி) அவர்கள்‌. உஹத்‌ போரிலே அவர்‌ ஷஹீதாகி விட்டார்‌. ஒரேயொரு போர்வையைச்‌ தவிர வேறெந்தப்‌ பொருளையும்‌ அவர்‌ உடமையாக்கிக்‌ கொள்ளவில்லை.

அவரை நல்லடக்கம்‌ செய்யும்போது அப்போர்வையினால்‌ உடல்‌ முழுவதையும்‌ மூட முடியவில்லை. தலையை மூடினால்‌ கால்‌ திறந்து கொண்டது. காலை மூடினால் தலை திறந்து கொண்டது. ”துணியினால்‌ தலையை மூடிவிட்டு கால்களுக்கு இலை தழைகளை வைத்து மூடிவிடுங்கள்‌” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌.

(புகாரி, முஸ்லிம்‌, திர்மிதி, நஸயீ, பைஹகி)

இதன்‌ மூலம்‌ அவரவர்‌ உடமையிலேயேதான்‌ கபனிடுதல்‌ வேண்டும்‌ என்பது தெளிவாகிறது.

  1. கபன்‌ துணி உடல்‌ முழுவதையும்‌ மூடக்‌ கூடியவாறு நீளமானதாகவும்‌, விசாலமானதாகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. ஜாபிர்‌ இப்னு அப்துல்லாஹ்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌ :

நபி (ஸல்‌) அவர்கள்‌ ஒரு நாள்‌ உரை நிகழ்த்தினார்கள்‌. அப்பொழுது மரணித்தபின்‌ நீளமில்லாத துணியினால்‌ கபனிட்டு இரவில்‌ நல்லடக்கம்‌ செய்யப்பட்ட தங்கள்‌ தோழர்‌ ஒருவரைப்‌ பற்றிக்‌ கூறினார்கள்‌. கஷ்டமான வேளையிலன்றி தொழுகை நடத்தாது இரவில்‌ அடக்கம்‌ செய்வதைக்‌ கண்டித்தார்கள்‌. பின்னர்‌ நீங்கள்‌ கபனிடும்போது முடிந்தளவு அழகாகக்‌ கபனிடுங்கள்‌ என்று கூறினார்கள்‌. 

(முஸ்லிம்‌, அபூதாவூத்‌, திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்‌) 

அழகாகக்‌ கபனிடுங்கள்‌ என்ற இந்த நபிமொழிக்கு சுத்தமான கனத்து உடல்‌ முழுவதையும்‌ நிரப்பக்கூடிய நடுத்தர விலையுள்ள துணியையே கபனிடுதல்‌ வேண்டும்‌’ என மார்க்க அறிஞர்கள்‌ தீர்ப்பளித்துள்ளார்கள்‌. 

  1. உடல்‌ முழுவதையும்‌ மூடும்‌ அளவுக்கு கபன்‌ கிடைக்காவிட்டால்‌ இருக்கும்‌ துணியினால்‌ தலையையும்‌ முடிந்தளவு உடலையும்‌ கபனிட்டு விட்டு கால்‌ பக்கத்திற்கு இலைகளை வைத்து அடக்கப்படல்‌ வேண்டும்‌. 

இதற்குரிய ஆதாரம்‌ (இப்பிரிவில்‌ 34ஆம்‌ இலக்கத்தில்‌ முஸ்‌அப்‌ (ரழி) அவர்களின்‌ செய்தியில்‌) தெளிவாக்கப்‌பட்டுள்ளது.

  1. மரணமடைந்தவர்கள்‌ அதிகரித்து கபன்‌ துணிகள்‌ குறைவாக இருந்தால்‌ இருக்கும்‌ கபன்‌ துணிகளை எல்லோருக்கும்‌ பங்கிட்டு அடக்கம்‌ செய்வது ஆகும்‌. இச்சூழ்நிலையில்‌ குர்‌ஆனைப்‌ படித்து விளங்கியவர்களை முதலில்‌ நல்லடக்கம்‌ செய்தல்‌ வேண்டும்‌. அனஸ்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கின்ற நபிமொழி இதற்கு ஆதாரமாக இருக்கின்றது.

“உஹத்‌ போர்‌ முடிந்த போது நபி (ஸல்‌) அவர்கள்‌ மூக்கறுக்கப்பட்டு உடல்‌ சிகைக்கப்பட்டிருந்த ஹம்ஸா (ரழி) அவர்களின்‌ சடலத்தைக்‌ கண்டார்கள்‌. “இவரின்‌ சகோதரி ‘ஸபிய்யா’ ஏதாவது எண்ணிக்‌ கொள்வாரோ எனப்‌ பயப்படுகின்றேன்‌. இல்லாவிட்டால்‌ இவரை (ஹம்ஸாவை) அடக்கம்‌ செய்யாது விட்டிருப்பேன்‌. இவரின்‌ உடலை பறவைகளும்‌, விலங்குகளும்‌ தின்று மறுமையில்‌ அவற்றின்‌ வயிற்றிவிருந்தே எழுப்பப்படுவதை விரும்புகிறேன்‌” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌.

அதன்பின்‌ அவருடைய போர்வையினால்‌ கபனிட்ட போது  தலையை மூடினால்‌ கால்‌ வெளியே தெரிந்தது. காலை மூடினால்‌ தலை வெளியே தெரிந்தது. தலையை மூடிவிட்டு கால்களுக்கு இலைகளைப்‌ போட்டு நல்லடக்கம்‌ செய்யப்பட்டார்கள்‌.

போரில்‌ கொல்லப்பட்ட வீரத்தியாகிகளில்‌ இருவருக்கு மட்டுமே தனித்து நபி (ஸல்‌) அவர்கள்‌ தொழுகை நடத்தினார்கள்‌ “இன்றுள்ள நிலைக்கு நான்‌ சாட்சியாக இருப்பேன்‌” எனவும்‌ நபியவர்கள்‌ கூறினார்கள்‌. 

கொல்லப்பட்ட முஸ்லிம்கள்‌ அதிகமாக இருந்ததாலும்‌ அன்று துணியும்‌ குறைவாக இருந்ததாலும்‌ இருந்த துணியைப்‌ பங்கிட்டு கபனிட்டு ஒவ்வொரு மண்ணறையிலும்‌ இரண்டு பேர்‌ மூன்று பேர்‌ என்று நல்லடக்கம்‌ செய்யப்பட்டார்கள்‌. அப்போது குர்‌ஆனைக்‌ கற்றவர்களுக்கு முதலிடம்‌ அளிக்கப்பட்டு முதலாவதாக நல்லடக்கம்‌ செய்யப்பட்டார்கள்‌.

(அபூதாவூத்‌, திர்மிதி, அஹ்மத்‌, பைஹகி)

38. போரில்‌ ஷஹீதானவர்கள்‌ அணிந்திருந்த ஆடைகளைக்‌ களையக்கூடாது. அவ்வாடையுடனேதான்‌ நல்லடக்கம்‌ செய்தல்‌ வேண்டும்‌.

“அவர்களின்‌ ஆடையிலேயே மூடிவிடுங்கள்‌” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌.

 (அஹ்மத்‌, நஸயீ)

  1. ஒரே துணியிலும்‌ கபன்‌ செய்யலாம்‌. அல்லது அதற்கதிகமான துணியிலும்‌ கபன்‌ செய்யலாம்‌. முஸ்‌அப்‌ (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்‌) அவர்கள்‌ செய்தது. (இதே பிரிவு பாடத்தில்‌ 34ம்‌ பகுதி) ஆதாரமாக இருக்கின்றது.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply