ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 09

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 09

வித்ர் தொழுகை குறித்த சந்தேகங்களும் தெளிவுகளும்

1:குனூத்

ஸுப்ஹ் தொழுகையில் குனூத் :

ஸுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதும் நடைமுறை பல முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்பட்டு
வருகிறது. ஸுப்ஹ் தொழுகையில் குனூத்ஓத வேண்டும் என சில அறிஞர்கள் குறிப்பிட, மற்றும் சிலரோ நபியவர்கள் வழக்கமாக ஸுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதும் நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்பதால் நாமும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.
யார் எக்கருத்தை கூறினாலும் குர்ஆனோடும் ஹதீஸோடும் அதை ஒப்பிட்டு அவ்விரண்டிலும் இருந்தால் அதை நடைமுறைப்படுத்த வேண்டும், இல்லையென்றால் அதை விட்டு விட்டு
குர்ஆனையும் ஹதீஸையும்பின்பற்ற வேண்டும் என்பது வளம்மிக்க நமது இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் தோன்றிய இஸ்லாமிய அறிஞர்கள் வலியுறுத்தும் விடயமாகும்.

இவ்வடிப்படையில் ஸுப்ஹ் தொழுகையில் குனூத்ஓத வேண்டும்என்று கூறுவோர் பின்வரும் ஒரு ஹதீஸை ஆதாரமாக முன்வைப்பர் :
அனஸ் (றழியல்லாஹூ அன்ஹு) அறிவிக்கிறார்கள் : ‘நபியவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும்வரை ஸுப்ஹ்
தொழுகையில் குனூத்ஓதினார்கள்” (அஹ்மத், தாரகுத்னீ).
மேற்படி ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் என்றால் எந்த தயக்கமுமின்றி இதை நடைமுறைப்படுத்தி
விட முடியும். ஆனால் வரலாற்றில் பல பொய்யர்கள், நம்பகமற்றவர்கள், மோசடிகாரர்கள் தோன்றி நபியவர்கள் சொல்லாத, செய்யாத, அங்கீகரிக்காத எத்தனையோ விடயங்களை நபியவர்களின் பெயரால் கூறிய நிகழ்வுகள் பல நடைபெற்றிருப்பதால், ஒரு விடயம் நபியவர்களின் ஹதீஸ் என்று
கூறப்படும் போது அப்படியே அதை ஏற்றுகொண்டு விடாமல், உண்மையில் நபியவர்களிடமிருந்துதான்
அவ்விடயம் நமக்கு வந்துள்ளதா என்று ஆராய்ந்து அறிந்து பின்பற்ற வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.

ஏனெனில் நபியவர்கள் சொல்லாத, செய்யாதவற்றையெல்லாம் நபியவர்கள் பெயரில் இட்டுக்கட்டி கூறுவது பெரும்பாவம் என நபியவர்கள் எச்சரித்திருக்கிறார்கள் :
‘நான் கூறாதவற்றை நான் கூறியதாக யார் கூறுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும்”(புஹாரி, முஸ்லிம்).
எனவேதான் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய ஆயிரக்கணக்கான ஹதீஸ்துறை அறிஞர்கள் ஹதீஸ்களை நுணுகி ஆராய்ந்து நபியவர்கள் கூறியவை எவை, நபியவர்களின் பெயரால் பொய்யாக புனையப்பட்டவை எவை, சந்தேகத்திற்கிடமானவை எவை என்றெல்லாம் வடித்தெடுத்து தொகுத்து
இந்த சமூகத்துக்கு வழங்கியிருக்கிறார்கள், இன்றும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பின்னணியில் ஸுப்ஹ் குனூத் பற்றி மேற்கூறப்பட்ட ஹதீஸை நோக்கும் போது அது
நபியவர்களின் ஹதீஸ் என்பதை மறுக்கும் அளவுக்கு ஹதீஸ்கலை கோட்பாட்டு விதிகளின் அடிப்படையில் மூன்று வடுக்கள் அல்லது குறைபாடுகள் காணப்படுகின்றன என அறிஞர்கள் விளக்குகின்றனர்:

1 )இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூஜஃபர் அர் ராஸி என்பவர் நம்பகமானவர் அல்ல என ஹதீஸ்துறை வல்லுநர்களான இமாம்அஹ்மத்(ரஹ்), இமாம் நஸாஈ (ரஹ்), இமாம்
அபூஸுர்ஆ (ரஹ்), இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.
2 )அர்ரபீஃ பின் அனஸ் அல்பக்ரி என்ற மற்றொரு அறிவிப்பாளர் பலவீனமான ஹதீஸ்களை அறிவிக்கும் ஒருவர் என இமாம் (ரஹ்), இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) ஆகியோர் விமர்சிக்கின்றனர்.
3 )நபியவர்கள் தொடராக ஸுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதவில்லை என்பதை நிரூபிக்கின்ற மிகவும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கு முரணாக இந்த ஹதீஸ் அமைந்திருக்கிறது.

இம்மூன்று வகையான குறைபாடுகளும் மேற்படி ஹதீஸில் இருப்பதால் இது ஆதாரமாக ஏற்க முடியாத, ‘முன்கர்” என்ற வகையை சேர்ந்த மிகவும் பலவீனமான, நடைமுறைப்படுத்த முடியாத
ஹதீஸ் என ஹதீஸ்துறை அறிஞர்கள் முடிவுசெய்கின்றனர்.
(பார்க்க :அப்துல்லாஹ் பின் ஸாலிஹுல் பவ்ஸான், ‘மின்ஹதுல் அல்லாம்’ , 3ஃ128-130).

ஸுப்ஹ் தொழுகையில் நபியவர்கள் தொடர்ச்சியாக குனூத் ஓதவில்லை என்பதற்கு பின்வரும் இரு ஹதீஸ்கள் தெளிவான ஆதாரமாக அமைகின்றன :

1 )அபூமாலிக் அல்அஷ்ஜஈ அவர்கள் தனது தந்தையிடம் ஒரு தடவை, ‘எனது தந்தையே! நீங்கள் நபியவர்களுக்கு பின்னாலும் அபூபக்ர் (றழியல்லாஹூ அன்ஹு), உமர் (றழியல்லாஹூ அன்ஹு), உஸ்மான் (றழியல்லாஹூ அன்ஹு), அலி (றழியல்லாஹூ அன்ஹு)
ஆகியோருக்குப் பின்னாலும் தொழுதிருக்கிறீர்கள். அவர்களெல்லாம் ஸுப்ஹ் தொழுகையில் குனூத்
ஓதினார்களா? ” என்று கேட்டார்கள். அதற்கு ஸஹாபியான தந்தையவர்கள் ‘மகனே! அது
மார்க்கத்தில் இல்லாத, புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒரு செயல்” என்று கூறினார்கள் (திர்மிதி, நஸாஈ,
இப்னுமாஜஹ்). – (இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என இமாம் திர்மிதி (நூல் : ஸுனனுத்திர்மிதி),இமாம் இப்னு ஹஜர் (நூல் : நதாஇஜுல் அப்கார்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்).

2 )அபூமிஜ்லஸ் எனப்படும் தாபிஈ அவர்கள் கூறுகிறார்கள் : ‘நான் ஒருநாள் இப்னு உமர் (றழியல்லாஹூ அன்ஹு) அவர்களோடு ஸுப்ஹ் தொழுதேன். அவர்கள் குனூத் ஓதவில்லை. அப்போது நான் ‘நீங்கள் (றழியல்லாஹூ அன்ஹு) குனூத்
ஓதவில்லையே” என்றேன். அதற்கு அவர்கள் ‘நபித் தோழர்களில் யாரும் குனூத் ஓத நான்
கண்டதில்லை” (பைஹகி) – (இது ஆதாரபூர்வமான சம்பவம் என பிரபல ஹதீஸ் கலை திறனாய்வாளர் இமாம் தஹபி (ரஹ்) கூறுகிறார்கள் – நூல் : அல்முஹத்தப், 2ஃ653).

நபியவர்களின் சிறுசிறு செயல்களை கூட கூர்ந்து அவதானித்து கூறிய ஸஹாபாக்கள், நபிகளார் தொடராக ஸுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதியிருந்தால் அதை ஒருபோதும் அறிவிக்காமல் விட்டிருக்கமாட்டார்கள். ஒருவர், இருவரல்ல, பலர் அது பற்றி கூறியிருப்பார்கள். எனவே நபியவர்கள்
ஸுப்ஹில் மாத்திரம் தொடர்ச்சியாக குனூத் ஓதும் வழிமுறையை கொண்டிருக்கவில்லை என்பது தெட்டத்தெளிவாகிறது. பின்பற்ற தகுந்த ஒரே வழிமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையேயாகும். அவ்வாறெனில் நபியவர்கள் ஒருபோதும் குனூத் ஓதவில்லையா ?

நபியவர்கள் இரு வகையான குனூத் ஓதியிருக்கிறார்கள்.
1 – துயர் கால குனூத்
2 – வித்ரு தொழுகையில் குனூத்

துயர் கால குனூத் :
முஸ்லிம்களுக்கெதிராக அச்சுறுத்தல்கள், அத்துமீறல்கள் ஏற்படுத்தப்படும்போது அவற்றிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரி பிரார்த்திக்கும் ஏற்பாடாக ஐவேளை தொழுகைகளிலும் கடைசி றக்அத்தில் ஓதப்படும் குனூத்தே துயர்கால குனூத் ஆகும்.
நபியவர்கள் தமது காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இறைநிராகரிப்பாளர்களால்
மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் உக்கிரமடைந்த சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஐவேளை தொழுகைகளிலும் குனூத் ஓதி பிரார்த்தித்திருக்கிறார்கள். பின்வரும் ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாய்
அமைகின்றன :

1 ) இப்னு அப்பாஸ் (றழியல்லாஹூ அன்ஹு) அறிவிக்கிறார்கள் : ‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ளுஹ்ர், அஸ்ர்,
மஃரிப், இஷா, ஸுப்ஹ் ஆகிய ஐவேளை தொழுகைகளிலும் இறுதி ரக்அத்தில் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறிய பின் முஸ்லிம்களுக்கு துன்பமிழைத்த அரபு கோத்திரங்களுக்கெதிராக தொடராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்” (அஹ்மத், அபூதாவூத்,ஹாகிம்) – (இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என இமாம்களான நவவி, இப்னுல் கையிம், இப்னு ஹஜர், அல்பானி (ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்).
2 ) பிஃரு மஊனாவில் தம்தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபியவர்கள் ஒரு மாதம் ஸுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதினார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா, ரிஅல், தக்வான், (பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராக பிரார்த்தித்தார்கள்’ (புஹாரி, முஸ்லிம்).
இவை போன்று இன்னும் பல ஹதீஸ்கள் புஹாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் உள்ளன.
அவற்றுள் சில ஹதீஸ்கள் மஃரிப், ஸுப்ஹ் ஆகிய இரு தொழுகைகளில் குனூத்
ஓதியதாகவும்,மற்றும் சில ஹதீஸ்கள் ளுஹ்ர், இஷா, ஸுப்ஹ் ஆகிய மூன்று தொழுகைகளில்
குனூத்ஓதியதாகவும் குறிப்பிடுகின்றன.
இந்த ஹதீஸ்களையெல்லாம் தொகுத்து நோக்கும்போது,

– முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் உக்கிரமடைந்திருக்கும் போது ஐவேளை
தொழுகைகளிலும் நபி குனூத் ஓதியிருக்கிறார்கள்.
– நெருக்கடிகள் சற்று குறையும் போது மூன்று வேளை தொழுகைகளிலும்இன்னும் சற்று
குறையும் போது இரு நேர தொழுகைகளிலும் இன்னும் சற்று குறையும்போது ஸுப்ஹில்
மட்டும் குனூத்ஓதி, பிரச்சினைகள் பெருமளவு குறையும்போது குனூத்தை முழுமையாக
விட்டிருக்கிறார்கள்.
– நபியவர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதும் எல்லா காலமும் குனூத் ஓதிக்கொண்டிருக்கவில்லை. பிரச்சினைகள் உச்சகட்டத்தை எட்டும்போது
குனூத்ஓதுவார்கள் . தணியும்போது விட்டுவிடுவார்கள். இதே நடைமுறையை நாமும் கடைப்பிடிக்க முடியும்.
ஆயினும் இந்த துயர்கால குனூதில்

~~அல்லாஹும்மஹ்தினீ பீமன் ஹதைத..” என்பதை ஓதுவதில்லை. நபியவர்கள் ஓதியது போன்று நேரடியாக பிரச்சினைகளை முறையிட்டு துஆ செய்ய
வேண்டும்.

வித்ரு தொழுகையில் குனூத் :

நபியவர்கள் வித்ரு தொழுகையில் கடைசி ரக்அத்தில் சில வேளை குனூத் ஓதுவார்கள், சில வேளை ஓதாமலும் விடுவார்கள்.
இதே அடிப்படையில் நாம் வித்ரு தொழுகையை தனியாக தொழும்போதும் ஜமாஅத்தாக தொழும் போதும் நபியவர்கள் செய்தது போல் சில நேரம் குனூத் ஓதியும்சில நேரம் குனூத் ஓதாமலும் செயற்பட முடியும்.

வித்ரு தொழுகையின் குனூத்தில் என்ன ஓதுவது ?

நபிகளாரின் பேரரான ஹஸன் (றழியல்லாஹூ அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள் : ‘ நபியவர்கள் எனக்கு வித்ரு
தொழுகையின் குனூத்தில் ~~அல்லாஹும்மஹ்தினீ பீமன் ஹதைத…” என்ற துஆவை ஓதுமாறு கற்று
தந்தார்கள் (இப்னு மாஜஹ், திர்மிதி, முஸ்னத்அஹ்மத்,பைஹகி, இப்னு ஹுஸைமா).

اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ ،إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ ، وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ ، تَبَارَكْتَ رَبَّـنَا وَتَعَالَيْتَ

அல்லாஹ்ஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த வ ஆஃபினீ ஃபீமன் ஆஃபைத்த வதவல்லனீ ஃபீமன் தவல்லைத்த வபாரிக்லீ ஃபீமா அஃதைத்த வகினீ ஷர்ர மா களைத்த ஃப இன்னக தக்ளீ வலா யுக்ளா அலைக்க இன்னஹு லா யதில்லு மன் வாலைத்த வலா யிஸ்ஸு மன் ஆதைத்த தபாரக்த ரப்பனா வதஆலைத்த

இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் என இமாம்களான திர்மிதி (ரஹ்), நவவி (ரஹ்),ஆகியோர்
குறிப்பிடுகின்றனர்.

 

“வித்ர் தொழுகையில் குனூத் ஓதுவது தொடர்பான ஹதீஸ்களில் மேற்படி
ஹதீஸை விட சிறந்த ஹதீஸ் வேறு எதுவுமில்லை” என இமாம் திர்மிதி அவர்கள்
குறிப்பிடுகிறார்கள் (பார்க்க : ‘மின்ஹதுல் அல்லாம்’இ 4ஃ132)

அத்தோடு தற்கால ஹதீஸ் துறை ஆய்வாரள்களான ஷெய்க் அஹ்மத்ஷாகிர் (ரஹ்) அவர்கள் திர்மிதி, முஸ்னத்அஹ்மத் ஆகிய ஹதீஸ் நூல்களுக்கான தமது விரிவுரை நூல்களிலும் ஷெய்க் அல்பானி (ரஹ்) அவர்கள் இப்னு மாஜஹ், அபூதாவூத், திர்மிதி, இப்னு ஹுஸைமா ஆகிய
நூல்களுக்கான அடிக்குறிப்புகளிலும் ஷெய்க் ஷுஐப் அல்அர்னஊத் அவர்கள் அபூதாவூத், திர்மிதி, முஸ்னத்அஹ்மத் ஆகிய நூல்களுக்கான அடிக்குறிப்புகளிலும் மேற்படி வித்ர் குனூத்பற்றிய ஹதீஸ் ஆதாரபூர்வமானதென குறிப்பிடுகின்றனர்.
அதிகமானவர்கள் ஸுப்ஹ் குனூதில் ஓதுகின்ற துஆ உண்மையில் வித்ரு தொழுகையின்
குனூத்தில் ஓதுவதற்கு நபியினால் கற்றுகொடுக்கொடுக்கப்பட்ட துஆ என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply