ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 03 

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 03

04) தொழுவதாக மனதில் நினைத்தல் (நிய்யத்):

எந்தவொரு வணக்கமாயினும் ‘நிய்யத்” அவசியமாகும்.
நபிகளார் கூறினார்கள் : “நிச்சயமாக அமல்கள் யாவும் நிய்யத்தைக் கொண்டே நிறைவேறும்”
(புஹாரி , முஸ்லிம்).
உதாரணமாக , ஒருவர் ஸுப்ஹ் தொழப் போகிறார் எனில் , “ஸுப்ஹ் தொழுகிறேன்” என்பதாக , வுழூ
செய்யப் போகிறார் எனில் , “வுழூ செய்கிறேன்” என்பதாக மனதில் நினைத்தல். இதைத்தான்
இஸ்லாம் நிய்யத் என்று சொல்கிறது.
இதை விடுத்து அரபு மொழியில் சில வாசகங்களை மனனமிட்டு மொழிவது நிய்யத் அல்ல.
இருப்பினும் பெரும்பாலானோர் தொழுமிடத்தில் நின்று கொண்டு அதற்கென நேரமெடுத்து , “உஸல்லீ
பர்ழ…” என்றெல்லாம் மனனமிடப்பட்ட சில வாசகங்களை கூறும் வழக்கத்தை சர்வசாதாரணமாக எங்கும் அவதானிக்க முடியும்.

ஆயினும் அரபு மொழி நன்கு தெரிந்த நபியவர்களோ , ஸஹாபாக்களோ தொழுகைக்கு நிற்கும்போதோ , நோன்பு நோற்கும் போதோ நிய்யத்தை வாயினால் மொழிந்ததாக எந்தவொரு ஆதாரமும்
இல்லை.

ஏனெனில் “நிய்யத்” என்ற அரபுப் பதத்திற்கு “மனதில் நினைத்தல்” என்பதே அர்த்தமாகும். எனவே ,“நிய்யத்” இடம்பெற வேண்டிய இடம் உள்ளமே அன்றி உதடுகள் அல்ல. மனதில் நினைக்க வேண்டியதை வாயினால் மொழிந்தால் அதற்கு நிய்யத் என்று சொல்லப்படவும் மாட்டாது.மனதினால் நினைக்குமாறு நபியவர்கள் கட்டளையிட்டிருக்கும் போது “இல்லை , இல்லை நாங்கள்
வாயினாலும் மொழிவோம்” என்று கூறுவது நபியைப் புறக்கணிப்பதாகும்.
முற்கால இமாம்கள் மனதில் நினைப்பதையே நிய்யத் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஹனபி மத்ஹப் அறிஞரான இமாம் இப்னு அபில் இஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “நிய்யத்தை
வாயினால் மொழிய வேண்டுமென்று இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களோ , ஏனைய மூன்று
மத்ஹபுகளின் இமாம்களோ ஒருபோதும் கூறவில்லை. அவர்கள் அனைவரினதும் ஏகோபித்த கருத்து ,நிய்யத் என்பது மனதில் நினைத்தல் என்பதேயாகும். பிற்காலத்தில் தோன்றிய சில அறிஞர்களே நிய்யத்தை வாயினால் மொழிய வேண்டும் என்பதை உருவாக்கினார்கள்” (நூல் : “அல் இத்திபாஃ” ,பக் : 62).

இதே வேளை , இன்னுமொரு விடயத்தையும் சிந்திக்க வேண்டும். அனைத்து வணக்கங்களுக்கும் நிய்யத் அவசியம் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்ற போது தொழுகைக்கும் நோன்புக்கும் மாத்திரம்
நிய்யத்தை வாயினால் மொழிவது எந்த வகையில் நியாயமானது?
அல்குர்ஆன் ஓதுதல் , திக்ர் , துஆ , ஸலவாத் , ஸகாத் மற்றும் இன்னோரன்ன வணக்கங்கள்
இருக்கின்றன. இவற்றுக்கும் நிய்யத் அவசியமாகும். நிய்யத்தை வாயினால் மொழிய வேண்டும் என்று கூறுவோர் ஏன் இந்த வணக்கங்களைச் செய்யும் போது வாயினால் நிய்யத்தை மொழிவதில்லை?

05) ஆரம்ப தக்பீர் கூறி கைகளை உயர்த்துதல் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று விதமாக “அல்லாஹு அக்பர்” என்று ஆரம்ப தக்பீர் கூறி கைகளை உயர்த்துவார்கள் :

1) (சில வேளைகளில்) அல்லாஹு அக்பர் என்று சொல்லிக் கொண்டே கைகளை உயர்த்துவார்கள்
(அபுதாவூத் , இப்னு ஹுஸைமா)
2) (சில வேளைகளில்) அல்லாஹு அக்பர் என்று கூறி முடித்த பின்னர் கைகளை உயர்த்துவார்கள்
(புஹாரி , நஸாஈ).
3) (மற்றும் சில நேரங்களில்) கைகளை உயர்த்திய பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்
(புஹாரி , அபுதாவூத்).

இம்மூன்று முறைகளில் எதையும் ஒருவர் பின்பற்றலாம். அல்லது ஒவ்வொரு தொழுகையிலும் ஒவ்வொரு முறையை கடைப்பிடிக்கும் போது நபிகளாரின் அனைத்து முறைகளையும் பின்பற்றும் வாய்ப்பு ஏற்படும்.

அவ்வாறே நபியவர்கள் மூன்று முறைகளில் கைகளை உயர்த்துவார்கள் :

1) (சில நேரங்களில்) இரு கைகளின் பெரு விரல்களும் காதுச் சோணைக்கு நெருக்கமாக இருக்கும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள் (நஸாஈ).
2) (சில வேளைகளில்) இரு கைகளும் இரு காதுகளின் நுனிகளுக்கு நேராக இருக்கும் அளவுக்கு
கைகளை உயர்த்துவார்கள் (புஹாரி , அபுதாவூத்).
3) (மற்றும் சில நேரங்களில்) இரு கைகளும் இரு தோள் புயங்களுக்கு நேராக இருக்கத்தக்கவாறு கைகளை உயர் த்துவார்கள் ( புஹாரி , நஸாஈ).

கைகளை உயர்த்தும் போது விரல்களை பொத்தாமலும் மடக்காமலும் நீட்டி வைத்திருக்க வேண்டும்.

நபியவர்கள் இரு கை விரல்களும் நீட்டப்பட்ட நிலையில் கைகளை உயர்த்துவார்கள் (அபுதாவூத் ,இப்னு ஹுஸைமா).

மேற்கூறப்பட்ட முறைகள் ஆரம்ப தக்பீரின் போது நபியவர்கள் கடைப்பிடித்த ஒழுங்குகளாகும்.இவற்றை நாம் நடைமுறைப்படுத்தும் போதே நபியை பின்பற்றியவர்களாக மாறமுடியும்.

மேற்கூறப்பட்ட நபியின் வழிமுறைகளுக்கு மாறாக ,

  • கைகளை அறவே உயர்த்தாமல் வந்த அதே வேகத்தில் கைகளை கட்டிக்கொள்ளுதல்
  • தக்பீர் சொல்லும் போது இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்துதல்
  • கைகளை அரைகுறையாக உயர்த்துதல்

என்பவை நபிவழிக்கு முரணானவையாகும். இவற்றை நாம் முற்றாக தவிர்த்து விட வேண்டும்.

06) இடது கைக்கு மேலே வலது கை இருக்கும் நிலையில் இரு கைகளையும் நெஞ்சில் வைத்தல்:

இரு விடயங்களை இங்கே கவனிக்க வேண்டும் :
1 )இடது கைக்கு மேலே வலது கையை வைத்தல்
2 )இரு கைகளையும் நெஞ்சின்மீது வைத்தல்.

இவற்றில் முதலாவதற்கான ஆதாரங்களை நோக்குவோம்:

இடது கையை கீழே வைத்து அதற்கு மேலே வலது கையை வைப்பது நபியவர்களின் நடைமுறை என்பதை பின்வரும் இரு ஹதீஸ்கள் உணர்த்துகின்றன:

1 )நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இடது கைக்கு மேலே வலது கையை வைப்பார்கள் (முஸ்லிம் , அபுதாவூத்).

2 )ஒரு தடவை நபியவர்கள் தொழுது கொண்டிருந்த ஒரு மனிதருக்கு அருகே சென்ற போது அவர் வலது கைக்கு மேலே இடது கையை வைத்து தொழுவதை கண்டு அவர் தொழுகையில் இருக்கும் போதே இரு கைகளையும் பிரித்து இடது கைக்கு மேலே வலது கையை வைத்தார்கள்
(அஹ்மத் , தாரகுத்னீ).

இரண்டாவதாக , இரு கைகளையும் நெஞ்சின்மீது வைப்பதற்கான ஆதாரங்களை நோக்கினால்

நபியவர்கள் தமது இரு கைகளையும் நெஞ்சின்மீது வைப்பார்கள்” (அபுதாவூத் , அஹ்மத் , இப்னுஹுஸைமா).

இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என்பது பல ஹதீஸ் துறை மேதைகளின் முடிவு.
மேற்படி ஹதீஸில் நெஞ்சின்மீது கைகளை வைத்தார்கள் என்பதைக் குறிக்கும் ‘அலஸ் ஸத்ர்”என்ற அரபு வாசகம் இடம்பெற்றுள்ளது. இதன் நேரடி அர்த்தம் ‘நெஞ்சின்மீது” என்பதாகும்.

ஆயினும் ஷாபிஈ மத்ஹபின் சில அறிஞர்கள் இதற்கு ‘நெஞ்சுக்கு கீழே” என்று வலிந்து அர்த்தம் கொடுத்திருக்கிறார்கள். இதை ஆதாரமாகக் கொண்டே பலர் நெஞ்சுக்கு கீழே வயிற்றின்மீது கைகளை கட்டுகிறார்கள். இது மேற்படி ஹதீஸ் கூறும் கருத்துக்கு முரணானதாகும்.

இமாம் ஷவ்கானி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : ‘கைகளை நெஞ்சுக்கு கீழே வைக்க வேண்டும் என ஷாபிஈ மத்ஹபினர் கூறுகின்றனர். ஆனால் கைகளை நெஞ்சின் மீது வைப்பதைத்தான் ஹதீஸ் தெளிவுபடக் கூறுகிறது” (நூல் : ‘நைலுல் அவ்தார்” , பக்: 357).

இது இவ்வாறிருக்க , சிலர் கைகளை மிக கடுமையாக உயர்த்தி கழுத்தை தொடும் அளவுக்கு வைத்துக் கொள்கிறார்கள். இதுவும் பிழையானதாகும். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

இதே வேளை ஹனபி மத்ஹபினர் தொப்புளுக்கு கீழே கைகளை வைக்க வேண்டும் என குறிப்பிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை சுட்டிக்காட்டுகிறார்கள் :

அலி(ரழி) அவர்கள் இரு கைகளையும் தொப்புளுக்கு கீழே வைத்து தொழுதுவிட்டு ‘இதுவே நபியவர்களின் நடைமுறை’ என்று கூறினார்கள் (அபுதாவூத் , அஹ்மத் , பைஹகி).

இது ஆதாரபுர்வமான ஹதீஸ் என்றால் இதை நடைமுறைப்படுத்துவதில் எந்த தடையும் இல்லை.

ஆனால் இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் இப்னு இஸ்ஹாக் என்பவர் பலவீனமானவர் என இமாம் புஹாரி , இமாம் அஹ்மத் , ஹாபிழ் இப்னு ஹஜர் ,
ஹாபிழ் தஹபி போன்ற பல ஹதீஸ் துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இமாம் நவவி (றஹ்) அவர்கள் கூட இந்த ஹதீஸ் பலவீனமானது என குறிப்பிடுகிறார்கள் (பார்க்க : ‘அல்மஜ்மூஃ”).

எனவே தொப்புளுக்கு கீழே கைகளை கட்டி தொழுவது ஆதாரமற்றது என்பது தெளிவாகிறது.எனவே தக்பீரின் போது ஆண்களாயினும் பெண்களாயினும் இரு கைகளையும் நெஞ்சின்மீது
வைப்பதே நபிகளாரின் வழிமுறையாகும்.

07) ஸுஜூத் செய்யும் இடத்தை நோக்கி பார்வையை தாழ்த்துதல்:

தக்பீர் கூறி கைகளை நெஞ்சின்மீது வைத்ததும் பார்வையை தாழ்த்தி ஸுஜூத் செய்யும் இடத்தை நோக்குவது மிகவும் விரும்பத்தக்கதும் ஏற்றமானதுமாகும்.

தொழுகின்ற போது ஸுஜூத் செய்யும் இடத்தை பார்க்க வேண்டுமா , இல்லையா என்பதில்
அறிஞர்கள் மத்தியில் இரு வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன.

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் போன்றோர் ஸுஜூத் செய்யும் இடத்தை பார்க்க வேண்டும் என்று கூறும் அதே வேளை , இமாம் மாலிக் (ரஹ்) போன்றோர் ஸுஜூத் செய்யும் இடத்தை பார்க்கத் தேவையில்லை , கிப்லா திசையையே நோக்க வேண்டும் என குறிப்பிடுகின்றனர். (நூல் : ‘ஸிபது ஸலாதிந் நபி”“ , 1ஃ233).

இக் கருத்துகளை ஹதீஸ்களின் அடிப்படையில் ஆய்வு செய்த இமாம் அல்பானி (ரஹ்) பின்வரும் தகவல்களை முன்வைக்கிறார்கள் :

” ஸஹாபாக்கள் நபியவர்களுக்கு பின்னால் நின்று தொழும் போது ஸுஜூத் செய்யும் இடத்தை பார்க்காமல் இமாமாக நின்று தொழுகை நடத்திய நபியவர்களை அவதானித்தமைக்கு ஆதாரமாக
பல ஹதீஸ்கள் வந்துள்ளன. இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் கூட தனது ஸஹீஹுல் புஹாரி ,பாகம் 02ல் “தொழுகையில் மஃமூம்கள் இமாமை நோக்குதல்” என்று தலைப்பிட்டு , ஸஹாபாக்கள்
தொழுகையில் இருக்கும்போதே நபியவர்களை பார்த்தமைக்கு ஆதாரமாக பல ஹதீஸ்களை
எடுத்தெழுதுகிறார்கள். நபிகளார் ஸஹாபாக்களின் இச்செயலை கண்டிக்கவுமில்லை.
அதே வேளை நபியவர்கள் தொழுகையில் தமது தலையை தாழ்த்தி ஸுஜூத் செய்யும் இடத்தை பார்ப்பார்கள் என்று சில ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் சில பலவீனமாவை என்றாலும்
பின்வரும் ஒரு ஹதீஸ் ஆதாரபுர்வமானதாகும் :
‘நபிகளார் தொழ நின்றால் தலையை தாழ்த்தி தமது பார்வையை நிலத்தை நோக்கி
செலுத்துவார்கள்”“.
மற்றுமொரு அறிவிப்பின் படி , ‘நபியவர்கள் ஸுஜூத் செய்யும் இடத்தை நோக்குவார்கள்” (ஹாகிம் , பைஹகி).

எனவே , நபியவர்கள் ஸுஜூத் செய்யும் இடத்தை பார்த்தார்கள் என்ற ஹதீஸையும் ஸஹாபாக்கள் ஸுஜூத் செய்யும் இடத்தை பார்க்காமல் நபியவர்களை பார்த்தார்கள் என்ற ஹதீஸ்களையும் இணைத்து நோக்கி ஒரு பொது முடிவுக்கு வர வேண்டும்.
அந்தப் பொது முடிவு என்னவென்றால் , ஸஹாபாக்கள் நபிகளாரின் தொழுகை அசைவுகளை அறிந்து கொள்வதற்காகவே தொழுகையில் வைத்து நபியை நோக்கினார்கள். இவ்வகையில்
மஃமூம்கள் இமாமின் அசைவுகளை அறிய வேண்டிய தேவை இருப்பின் இமாமை நோக்குவதில் தவறில்லை. அத்தகைய தேவை இல்லையெனில் நபியவர்கள் செய்தது போன்று ஸுஜூத் செய்யும் இடத்தை நோக்க வேண்டும் என்பதே மிகச் சரியான கருத்தாகும் (நூல் : “ஸிபது ஸலாதிந் நபி” ,
1ஃ232-233).

கவனிக்க:
தொழுகையின் போது வானத்தை நோக்கி பார்வையை உயர்த்துவது தடைசெய்யப்பட்ட ஒரு செயலாகும்.

தொழுகையில் வானத்தை நோக்கி தமது பார்வைகளை செலுத்துவோரின் பார்வைகளை அல்லாஹ் பறித்து விடட்டும்” என நபியவர்கள் எச்சரித்தார்கள் (புஹாரி , முஸ்லிம்).

மற்றுமொரு விடயம் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.பேணுதல் என்ற பெயரில் கண்களை மூடிக்கொண்டு தொழுவது நபியவர்கள் வழிகாட்டாத
ஒன்றாகும். வழிகாட்டல்களில் மிகச் சிறந்தது நபியின் வழிகாட்டலாகும். நபியவர்கள் காட்டாத வழிமுறையில் பேணுதல் வர முடியாது என்பது நமது ஆழமான நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply