ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 |

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 |

 

காலத்தைக் குறை கூறுவது அல்லாஹ்வைத் திட்டுவதாக அமையும்

 

காலத்தைப் படைத்தவன் அல்லாஹ். அதில் நிகழ்வுகளை உருவாக்குகின்றவனும் அவனே. அவனின் திட்டத்தின் அடிப்படையிலேயே அதில் நலவுகளும் கெடுதிகளும் ஏற்படுகின்றன. அவன் படைத்த குறித்த ஒரு காலத்தை மோசமான காலம் என்று கூறுவது அவனையே குறை கூறுவதாக அமையும்.

 

عن أبي هريرة، عن النبي ﷺ قال: «قالَ اللهُ عز وجل: يُؤْذِينِي ابنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وأنا الدَّهْرُ، بيَدِي الأمْرُ أُقَلِّبُ اللَّيْلَ والنَّهارَ». البخاري (٧٤٩١) واللفظ له، ومسلم (٢٢٤٦)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். அவன் காலத்தைத் திட்டுகின்றான்; நானே காலமாக இருக்கின்றேன்; (ஏனெனில்) என் கையிலே அதிகாரம் இருக்கிறது; நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றி அமைக்கின்றேன். (புகாரி 7491, முஸ்லிம் 2246)

 

ஒரு நாளில் அல்லது குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஒருவருக்கு கஷ்டங்களும் துன்பங்களும் ஏற்பட்டால் அது அவருக்கு ஒரு கஷ்டமான, துயரமான நாளாக இருந்தது என்று குறிப்பிடும் பொழுது, அது ஒரு மோசமான நாளாக இருந்தது என்று வர்ணிப்பதில் தவறில்லை. அந்த நாள் தான் அவரின் துயரத்துக்குக் காரணம் என்று கருதாமல் அந்த நாளில் ஏற்பட்ட துயரத்தைக் கருத்தில் கொண்டு அது சொல்லப்பட வேண்டும். எனவே அந்த நாளைக் குறை கூறும் நோக்கம் இல்லாமல் அந்த நாளில் நடந்த துயரமான நிகழ்வைக் குறிக்கும் விதமாக ஒரு நாளை மோசமான நாள் அல்லது துயரமான நாள் என்று சொல்லுவது காலத்தைத் திட்டுவதாக அமையாது. அந்த நாள் குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது சிலருக்குக் கஷ்டமான நாளாக இருந்திருக்கிறது; அதே நேரம் ஏனையவர்களுக்கு அதில் நிறைய நலவுகள் நடந்திருக்க முடியும். அதேபோன்றுதான் ஒரு நாளைக் குறித்து இன்று கடுமையான வெக்கையான நாளாக இருக்கிறது என்று காலத்தைத் திட்டும் நோக்கம் இல்லாமல் கூறுவது தவறில்லை. லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் வந்த வானவர்களை அவர் மனிதர்கள் எனக் கருதி, தனது மோசமான சமூகம் தன்னிடம் வந்திருக்கும் இந்த விருந்தினர்களை தொல்லை கொடுப்பார்கள் என்று எண்ணி, {وقالَ هَذا يَوْمٌ عَصِيبٌ} இது ஒரு கடினமான நாள் என்று குறிப்பிட்டதை அல்லாஹ் ஹூத் அத்தியாயத்தின் 77 வது ஆயத்தில் குறிப்பிடுகின்றான்.

 

* இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் காலத்தைக் குறை கூறும் விடயத்தை மூன்று பிரிவுகளாக குறிப்பிடுகிறார்கள். அவை:

1- குறை கூறும் நோக்கம் இல்லாமல் ஒரு தகவலுக்காக ஒரு காலத்தில் நிகழ்ந்த துன்பத்தை எடுத்துரைத்தல். இது அனுமதிக்கப்பட்டது. உதாரணமாக: இன்று கடுமையான சூட்டின் காரணமாக நாம் கலைப்படைந்து விட்டோம் என்று கூறுதல்…

2- காலம்தான் நன்மையையும் தீமையையும் ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கையில் காலத்தை திட்டுதல். இது ஷிர்குன் அக்பர் எனும் பெரும் இணை வைத்தல் ஆகும். அல்லாஹ்வுடன் இன்னொரு படைப்பாளன் இருப்பதாக நம்புவதாகும்…

3- காலம் தான் நன்மையையும் தீமையையும் செய்கிறது என்று நம்பாமல், அல்லாஹ்தான் அனைத்தையும் செய்யக்கூடியவன் என்ற நம்பிக்கையோடு, ஒரு காலத்தில் நடந்த துன்பத்திற்காக அந்தக் காலத்தைத் திட்டுவது. இது இணை வைத்தல் என்ற நிலையை அடையாவிட்டாலும் ஹறாமான செயலாகும். இது அறிவீனமும் மார்க்க ரீதியான வழிகேடுமாகும். ஏனெனில், இந்தத் திட்டுதல் அல்லாஹ்வை நோக்கியே திரும்புகின்றது. காரணம், அவனே காலத்தைத் திட்டமிட்டு அமைக்கின்றான். அதிலே அவன் நாடுகின்ற நலவை அல்லது கெடுதியை உருவாக்குகின்றான்; காலம் எதையும் செய்வதில்லை. இந்தத் திட்டுதல் ஒருவனை இறை நிராகரிப்பாளனாக மாற்றி விடமாட்டாது. ஏனெனில், அவன் நேரடியாக அல்லாஹ்வைத் திட்டவில்லை. (ஆனாலும் இது பாவமானது.)

📖 பார்க்க: القول المفيد على كتاب التوحيد (2/240)

 

ஜோதிடத்தின் மூலமாக ஒரு நாளின் நிலைமையை முற்கூட்டியே சொல்வது பாவமானது:

ஒரு நாளின் நிலைமையை அது நிகழ்ந்து முடிந்ததற்குப் பிறகு தகவலாகச் சொல்ல முடியுமாக இருந்தாலும் ஜோதிடம் பார்த்து எந்த ஒரு நாளையோ வாரத்தையோ மாதத்தையோ வருடத்தையோ மோசமானது என்று அது வருவதற்கு முன்னாலே சொல்ல முடியாது. இவ்வாறு ஜோதிடத்தின் அடிப்படையில் சொல்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், மறைவான அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கிறது. மறைவான சில விடயங்களை அவன் அவனுடைய தூதர்களுக்கு வஹி மூலம் அறிவிக்கின்றான். இறை தூதர்கள் மூலமாக அறிவிப்புச் செய்யப்பட்டாலே மறைவான விடயத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும். அப்படியான நிலையில் மாத்திரமே மறைவான விடயத்தை நாம் நம்ப முடியும்; நம்பவும் வேண்டும். இந்த வகையில் தான் சில இறைத் தூதர்கள் அவர்களுடைய சமூகங்களுக்கு ஏற்படப்போகும் அழிவை முன்கூட்டியே அறிவித்தார்கள்.(உதாரணமாக பார்க்க: அல்குர்ஆன் 11:65)

((مَن أتى عَرّافًا فَسَأَلَهُ عن شيءٍ، لَمْ تُقْبَلْ له صَلاةٌ أرْبَعِينَ لَيْلَةً)) صحيح مسلم ٢٢٣٠

“எவர் ஒரு குறி சொல்பவனிடம் சென்று ஏதாவது ஒன்றைப் பற்றிக் கேட்கின்றாரோ, அவருடைய 40 நாட்களின் தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 2230)

((مَن أتى عرّافًا أو كاهنًا فصَدَّقَه بما يقولُ، فقد كَفَرَ بما أُنْزِلَ على محمَّدٍ ﷺ)) انظر: تخريج سنن أبي داود – شعيب الأناؤوط (3904)

“எவர் ஒரு குறிசொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மைப்படுத்துகின்றாரோ, அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கியருளப்பட்டதை நிராகரித்துவிட்டார்” என்று  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

عن الزُّبَيرُ بنُ عَدِيٍّ: أتَيْنا أنَسَ بنَ مالِكٍ، فَشَكَوْنا إلَيْهِ ما نَلْقى مِنَ الحَجّاجِ، فَقالَ: اصْبِرُوا، فإنّه لا يَأْتي علَيْكُم زَمانٌ إلّا الذي بَعْدَهُ شَرٌّ منه، حتّى تَلْقَوْا رَبَّكُمْ سَمِعْتُهُ مِن نَبِيِّكُمْ ﷺ (البخاري ٧٠٦٨ )

சிலர் அனஸ் றளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்கின்ற கவர்னரால் தங்களுக்கு ஏற்படும் துயரங்களை முறையிட்டனர். அதற்கு அவர்கள், “பொறுமை செய்யுங்கள்; ஏனென்றால் நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை நிச்சயமாக நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு காலத்தை விடவும் அதற்குப் பின்னால் வருகின்ற காலம் மோசமானதாக இருக்கும்” என்று கூறிவிட்டு, இதனை நான் உங்களுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து செவிமடுத்தேன் என்று கூறினார்கள். (புகாரி 7068)

 

தொடரும் இன்ஷாஅல்லாஹ் …

-ஹுஸைன் இப்னு றபீக் மதனி ( Sunnah Academy Telegram Channel )

 

முந்தைய தொடரை வாசிக்க

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply