மையித்தைக்‌ குளிப்பாட்டுதல்‌ – பாகம் 2

இமாம் அல் அல்பானி கூறுகிறார்:

  1. இரண்டு நிபந்தனைகளுடன் குளிப்பாட்டுபவர்களுக்கு நிறைந்த நற்கூலி அல்லாஹ்வினால்‌ வழங்கப்‌படுகின்றது.

முதலாவது: குளிப்பாட்டுபவர்‌ மையித்தின்‌ உடம்பில்‌ எதாவது குறைபாடுகளைக்‌ கண்டால்‌ அதை வேறு யாருக்கும்‌ கூறாமல்‌ மறைத்து விட வேண்டும்‌.

“ஒரு முஸ்லிமைக்‌ குளிப்பாட்டி அவரிலுள்ள குறைபாடுகளை வெளியிடாது மறைத்துக்‌ கொண்டால்‌ நாற்பது முறை அல்லாஹ்‌ குளிப்பாட்டியவனை மன்னிக்கிறான்‌. கப்ரு தோண்டியவனுக்கு நல்லிருப்பிடத்தை மறுமை வரை அளிக்கின்றான்‌. கபனிட்டவனுக்கு அல்லாஹ்‌ மறுமையில்‌ சுவர்க்கத்தில்‌ மெல்லியதும்‌ அழுத்தமான துமான உடைகளை அணிவிக்கின்றான்‌” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(பைஹகி, ஹாகிம்‌)

 

இரண்டாவது: குளிப்பாட்டுவதற்கும்‌, கபனிடுவதற்கும்‌, கப்ரு தோண்டுவதற்கும்‌ எவ்வித கூலியையும்‌ நன்றிகளையும்‌ மையித்தின்‌ குடும்பத்தாரிடமிருந்து எதிர்‌ பார்க்கக்‌ கூடாது. அல்லாஹ்வின்‌ திருப்பொருத்தத்திற்‌காகவேயன்றி செயல்படும்‌ எந்த வணக்கத்தையும்‌ அல்லாஹ்‌ ஏற்றுக்கொள்ள மாட்டான்‌.

 

இதற்குப்‌ பல ஆதாரங்கள்‌ உள்ளன:

 

(நபியே!) நீர்‌ சொல்வீராக: “நிச்சயமாக நான்‌ உங்களைப்‌ போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய இறைவன்‌ ஒரே இறைவன்‌ தான்‌ என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன்‌ தன்னுடைய இறைவனைச்‌ சந்திக்கவாமென ஆதரவு வைக்கின்றானோ, அவன்‌ (ஸாலிஹான) நல்ல செயல்களைச்‌ செய்து, தன்‌ இறைவனை வணங்குவதில்‌ வேறெவரையும்‌ இணையாக்காதும்‌ இருப்பானாக”.

(அல்‌ குர்‌ஆன்‌: 18:10)

இந்த வசனத்தில்‌:

 “தன்‌ இறைவனுக்கு ஒருவரையும்‌ இணையாக்காது, அவனையே வணங்கி வருவானாக!” என்ற சொல்லின்‌ கருத்து அல்லாஹ்வின்‌ திருப்பொருத்தத்திற்காகவேயன்‌றி வணங்கக்‌ கூடாது என்பதாகும்‌. செயல்கள்‌ அனைத்தும்‌ எண்ணங்களைக்‌ கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன… என்பது நபி மொழியாகும்‌. 

(புகாரி, முஸ்லிம்‌)

 

இந்த நபிமொழியின்படி அல்லாஹ்வுக்காக கப்ரு தோண்டுவது, குளிப்பாட்டுவது போன்ற வேலைகளைச்‌ செய்தால்‌ அல்லாஹ்வின்‌ நல்லருள்‌ கிடைக்கும்‌. சம்பளத்‌திற்காக இந்த வேலைகளைச்‌ செய்தால்‌ சம்பளம்‌ கிடைக்கும்‌. ஆனால்‌ அல்லாஹ்விடம்‌ எந்தக்‌ கூலியும்‌. கிடைக்காது. மனிதர்களின்‌ கூலியை விட அல்லாஹ்வின்‌ கூலியையே மிக முக்கியமாகக்‌ கருத வேண்டும்‌. மறுமையிலும்‌ பயனளிக்கக்‌ கூடியது அல்லாஹ்வின்‌ கூலியேயாகும்‌.

 

  1. மையித்தைக்‌ குளிப்பாட்டியவன்‌ பின்பு குளிப்பது சுன்னத்தாகும்‌.

“எவன்‌ மையித்தைக்‌ குளிப்பாட்டினானோ அவன்‌ குளிப்பானாக! எவன்‌ மையித்தைச்‌ சுமந்து சென்றானோ அவன்‌ ஒளுச்‌ செய்து கொள்வானாக?” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(அபூதாவூத்‌, திர்மிதி)

இந்த நபிமொழியின்‌ கருத்தை மேலோட்டமாகக்‌ கவனித்தால்‌ குளிப்பதும்‌ ஒளூச்‌ செய்து கொள்வதும்‌ கட்டாயக்‌ கடமையாகத்‌ தென்படுகிறது. எனினும்‌ வேறு இரண்டு நபிமொழிகளைக்‌ கொண்டு இது கடமையல்ல என்பது புலனாகிறது.

 

முதலாவது: உங்களிலொருவனின்‌ மையித்தைக்‌ குளிப்பாட்டுவதனால்‌ நீங்கள்‌ குளிக்க வேண்டியதில்லை. ஏனெனில்‌, உங்கள்‌ மையித்து நஜீஸ்‌ அல்ல.

“நீங்கள்‌ கைகளை மட்டும்‌ கழுவிக்‌ கொண்டால்‌ போதும்‌” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(ஹாகிம்‌, பைஹகி)

 

இரண்டாவது: 

நாங்கள்‌ மையித்தைக்‌ குளிப்பாட்டுவோம்‌. அதற்குப்‌ பிறகு சிலர்‌ குளிப்பார்கள்‌. சிலர்‌ குளிக்கமாட்டார்கள்‌ என இப்னு உமர்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கின்றார்கள்‌.

(தாரகுத்னி, கதீப்‌)

 

  1. அல்லாஹ்வின்‌ பாதையில்‌ போரிட்டு போர்க் களத்தில்‌ கொல்லப்பட்டவரைக்‌ குளிப்பாட்டக்‌ கூடாது. அவர்‌ பெருந்‌ தொடக்குடையவராய்‌ இருப்பினும்‌ சரியே! இதற்கு ஆதாரமாக பல நபிமொழிகள்‌ உள்ளன.

 

முதலாவது: ஜாபிர்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்‌கிறார்கள்‌:

(போரில்‌ ஷஹீதானவர்களை) அவர்களின்‌ இரத்தத்‌துடனேயே அடக்கம்‌ செய்யுங்கள்‌. அல்லாஹ்விற்காக போரிட்டு மரணித்தவர்கள்‌ அவர்களின்‌ காயத்திலிருந்து இரத்தம்‌ ஓடக்கூடிய நிலையிவ்‌ மறுமையில்‌ வருவார்கள்‌. இரத்தம்‌ இரத்த நிறத்திலேயே இருக்கும்‌. ஆனால்‌ அதன்‌ வாடை கஸ்‌தூரி மணமாக இருக்கும்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌. 

(புகாரி, அபூதாவூத்‌, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா!)

 

இரண்டாவது: அபூ பார்ஸத்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்‌கிறார்கள்‌:

 

     நாங்கள்‌ நபி (ஸல்‌) அவர்களுடன்‌ ஒரு போரில்‌ ஈடுபட்டிருந்தோம்‌. போர்‌ முடிந்த பின்‌ உங்களில்‌ யாரையாவது இழந்து விட்டீர்களா?  என்று நபியவர்கள்‌ கேட்டார்கள்‌. ஆம்‌. இன்னாரை, இன்னாரை, இன்னாரை (அவர்களின்‌ பெயர்களைக்‌ கூறி) இழந்து விட்டோம்‌ என்று கூறினோம்‌. 

 

மீண்டும்‌ நபியவர்கள்‌ உங்களில்‌ யாரையாவது இழந்து விட்டீர்களா? எனக்‌ கேட்டார்கள்‌, நாங்கள்‌ “இல்லை” என்றோம்‌. ‘ஆனால்‌ நான்‌ ஜூலைபீபை இழந்து விட்டேன்‌. அவரைத்‌ தேடுங்கள்‌!” என்றார்கள்‌. நாங்கள்‌ இறந்தவர்களுக்கு மத்தியில்‌ அவரைக்‌ தேடினோம்‌. ஓரிடத்தில்‌ ஏழு விரோதிகளுக்கு பக்கத்தில்‌ ஷஹீதாகி இருப்பதைக்‌ கண்டு நபியவர்களிடம்‌ சென்று கூறினோம்‌. நபியவர்கள்‌ அங்கு வந்து அவர்‌ பக்கத்தில்‌ நின்று கொண்டு “தனித்து ஏழு பேருடன்‌ சண்டையிட்டு அவர்களைக்‌ கொன்று விட்டு அவர்களால்‌ இவரும்‌ கொல்லப்பட்டுள்ளார்‌. நான்‌ அவருக்குரியவர்‌. அவர்‌ எனக்குரியவர்‌” என்று இரண்டு மூன்று முறை கூறி விட்டு இரு கைகளையும்‌ நீட்டி “(அவரைசத் தூக்கி என்‌ கையில்‌) வையுங்கள்‌” என்றார்கள்‌.

 

நாங்கள்‌ அவரைக்‌ தூக்கி நபியவர்களின்‌ முன்னங்கையில்‌ வைத்தோம்‌. நபியவர்களின்‌ கைகளே அவருக்கு ‘சந்தூக்‌’காக இருந்தது. நபியவர்கள்‌ தங்கள்‌ கையினாலேயே கப்ரில்‌ வைத்தார்கள்‌. குளிப்பாட்டுவதைப்‌ பற்றிய பேச்சே (கட்டளை எதுவும்‌)  இருக்கவில்லை. 

(முஸ்லிம்‌, தயாலிஸி, பைஹகி) 

 

மூன்றாவது: அப்துல்லாஹ்‌ இப்னு சுபைர்‌ (ரழி) அவார்கள்‌ ஷஹீதான ஹன்லலாவின்‌ சம்பவத்தைக்‌ கூறும்‌ போது

 “உங்கள்‌ தோழரை (ஹன்லலாவை) வானவர்கள்‌ குளிப்பாட்டுகிறார்கள்‌. அவர்‌ மனைவியிடம்‌ என்ன நடந்தது? என்று விசாரியுங்கள்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. அவர்கள்‌ சென்று கேட்ட போது ‘அவர்‌ ஜுனூபாளியாக (குளிப்பு கடமையானவராக) இருந்தார்‌. போரின்‌ பேரிரைச்சல்‌ கேட்டவுடன்‌ பாய்ந்து சென்றார்‌, எனக்‌ கூறியதாக நபியவர்களிடம்‌ வந்து கூறினார்கள்‌.  “அதனால்தான்‌ வானவர்கள்‌ குளிப்பாட்டுகிறார்கள்‌” என நபியவர்கள்‌ கூறினார்கள்‌.

(பைஹகி, ஹாகிம்‌, இப்னுஹிப்பான்‌)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

1 thought on “மையித்தைக்‌ குளிப்பாட்டுதல்‌ – பாகம் 2”

Leave a Reply