ஜனாஸாவைக் கொண்டு செல்பவர்கள் நடையை விரைவுபடுத்துவது வாஜிபாகும்.
அபூஹுரைரா (رضي الله عنه) அறிவிக்கிறார்கள்:
“ஜனாஸாவை வேகமாகக் கொண்டு செல்லுங்கள். ஜனாஸாவுக்குரியவர் நல்லவராக இருந்தால் அவரைச் சீக்கிரமாக நல்லடக்கத்திற்குக் கொண்டு சென்றவராவீர்கள்” என நபி (صلى الله عليه وسلم ) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)
இந்த நபிமொழி ஓடாமல் வேகமாக நடப்பதும் கட்டாயம் என்றே வலியுறுத்துகிறது. இதனையே “இப்னு ஹஸீம்” (5ம் பாகம், 154, 155ம் பக்கங்களில்) உறுதிப் படுத்துகின்றார். அவ்வாறு வேகமாகச் செல்வது சுன்னத்துத்தான் என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றும் கூறுகின்றனர்.
“ஸாதுல் மஆத்” என்ற ஏட்டில் இப்னுல்கையிம் (رحمه الله) அவர்கள் இன்று மனிதர்கள் (முஸ்லிம்கள்) ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது மெதுவாக அடிமேல் அடி எடுத்து வைப்பது நபிவழிக்கு மாற்றமானது மட்டுமல்ல யூதர்களுக்கு ஒப்பான கெட்ட பித்அத்துமாகும் எனக் கூறியுள்ளார்கள்.
ஜனாஸாவுடன் செல்பவர்கள் ஜனாஸாவுக்கு முன்னாலும், பின்னாலும் வலது பக்கமும், இடது பக்கமும் போவது ஆகும். வாகனத்தில் செல்பவர்கள் ஜனாஸாவுக்குப் பின்னால்தான் செல்ல வேண்டும்.
முகிரா இப்னு ஹும்ரா (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
வாகனத்தில் ஜனாஸாவுடன் செல்பவன் பின்னால் செல்ல வேண்டும். நடந்து செல்பவர் ஜனாஸாவுக்குச் சமீபமாக எப்பக்கமும் செல்லலாம். இறந்த குழந்தையும் தொழுவிக் கப்படல் வேண்டும். அதன் பெற்றோருக்குப் பிழை பொறுக்கும்படியும் அருள் செய்யும்படியும் பிரார்த்திக்க வேண்டும் என நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்,தஹாபி, பைஹகி, தயாலிஸ், அஹ்மத்)
ஜனாஸாவுக்கு முன்னாலும், பின்னாலும் செல்வது நபியவர்களின் செயல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள து.
அனஸ் (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (صلى الله عليه وسلم ) அவர்களும், அபூபக்கர் (رضي الله عنه) அவர்களும், உமர் (رضي الله عنه) அவர்களும் ஜனாஸாவுக்கு முன்னாலும், பின்னாலும் நடந்து செல்பவர்களாக இருந்தனர் என அறிவிக்கிறார்கள்.
(தஹாபி)
எனினும் ஜனாஸாவுக்குப் பின்னால் செல்வது தான் சிறந்ததாகும். ஜனாஸாவைப் பின்பற்றுங்கள் என்ற நபிவாக்கியத்தை வைத்து இதனை சிறந்தது எனக் கூறலாம். மேலும்,
“ஜனாஸாவுக்குப் பின்னால் செல்வது முன்னால் செல்வதைவிடச் சிறந்ததாகும். ஐமா அத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதைவிடச் சிறந்ததாகும்” என அலி (رضي الله عنه) அவர்கள் கூறியிருப்பதும் இதனைப் பலப்படுத்துகின்றது.
(அஹ்மத், பைஹகி, இப்னு அபீசைபா)
-
ஜனாஸாவுடன் செல்பவர் வாகனத்திலும் செல்லலாம். ஆனால் (51ம் இலக்கத்திலுள்ள நபிமொழிப் படி) பின்னால் செல்வது நிபந்தனையாகும். எனினும் நடந்து செல்வதே சிறப்புடையதாகும். இதுதான் நபி (صلى الله عليه وسلم ) அவர்களின் விருப்பமாக இருந்தது என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி ஆதாரமாக இருக்கின்றது.
தெளபான் (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு ஜனாஸாவில் கலந்துகொள்ள நபியவர்கள் வந்த போது அவர்கள் ஏறிச் செல்ல ஒரு வாகனம் கொண்டு வரப்பட்டது. நபியவர்கள் அதில் ஏறிச் சல்ல மறுத்து விட்டார்கள். ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டு திரும்பும்போது ஒரு வாகனம் நபியவர்களிடம் கொண்டு வரப்பட்டது. நபியவர்கள் அதில் ஏறிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஜனாஸாவுடன் வரும்போது வாகனத்தில் ஏற மறுத்து விட்டீர்கள், திரும்பும்போது ஏறிக் கொண்டீர்களே ஏன்? எனக் கேட்கப்பட்டது
“(இந்த ஜனாஸாவுடன்) வானவர்களும் நடந்து வருவதைக் கண்டேன். அவர்கள் நடந்து வரும்போது நான் வாகனத்தில் வர விரும்பவில்லை. அடக்கம் செய்தவுடன் அவர்கள் போய் விட்டார்கள். நான் வாகனக்தில் ஏறிக் கொண்டேன்” என நபி (صلى الله عليه وسلم ) அவர்கள் விளக்கம் கொடுத்தார்கள்.
(அபூதாவூத், பைஹகி, ஹாகிம்)
-
ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது வாகனத்தில் ஏறிக் கொள்வது அகுமானதேயாகும். இதற்கு முன் கூறப்பட்ட தெளபான் (رضي الله عنه) அவர்களிலன் அறிவிப்பு இதனை விளக்குகிறது. மேலும் இதனைப் பின்வரும் நபிமொழியும் உறுதிப்படுத்துகிறது.
ஜாபிர் இப்னு ஸம்ரா (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நாங்கள் சென்றிருந்த வேளையில் (மரணமடைந்த) இப்னு தஹ்தாஹ் அவர்களுக்கு நபியவர்கள் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கம் செய்யும் இடம் வரை எங்களோடு நடந்து வந்தார்கள். திரும்பும் போது (கடிவாளமில்லாத) சேணமில்லாத ஒரு குதிரை கொண்டு வரப்பட்டு நபியவர்களிடம் நிறுத்தப்பட்டது. (வேகமாக ஓட மூடியாதவாறு) அதன் காலை ஒருவர் கட்டிவிட்டார். நபியவர்கள் அதன் மீது ஏறித் திரும்பினார்கள். அது குதித்துக் குதித்து நடந்து சென்றது. நாங்கள் அதன் பின்னால் ஓடிக் கொண்டு வந்தோம். அவ்வேளை “எத்தனையோ (பழக்) குலைகள் இப்னுதஹ்தாவுக்காக சுவர்க்கத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன” என நபியவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத், பைஹகி)
வண்டியிலோ அல்லது பிரேத ஊர்வலத்திற்காக சிறப்பாக அமைக்கப்பட்ட மோட்டார் வண்டியிலோ ஜனாஸாவைக் கொண்டு செல்வதும், அந்தப் பிரேத வண்டியில் சிலர் அதற்கென்றே கூலி பெற்றுக் கொண்டு அலங்காரம் செய்வதும் சில காரணங்களால் அறவே மார்க்கத்தில் அனுமதிக்கப்படாதவையாகும். (இவை மார்க்கத்தில் கூடாத செயல்களாகும்) அதற்குரிய காரணங்களாவன:
௮) இவை நிராகரிப்போரின் செயல்களாகும். இவர்களின் செயல்களைப் பின்பற்றக் கூடாதெனப் பல நபி மொழிகள் உள்ளன. அவற்றை நான் எனது “ஹிஜாபுல் மர்அத்தில் முஸ்லிமத்திஃபில் கிதாபி வஸ்ஸுன்னா” என்ற நூலில் விரிவாகச் சொல்லி உள்ளேன். அதில் நிராகரிப்பாளர்களின வணக்க வழிபாடு, மற்றும் ஆடை அணிகள், வழக்கச் செயல்கள் ஆகியவற்றுக்கு ஒப்ப முஸ்லிம்கள் நடந்துகொள்ளக் கூடாது என்கிற கட்டளைகளையும், நபியவர்களின் செயல்களுக்கு விரோதமாக இருப்பவற்றையும் எழுதியுள்ளேன். தேவையானவர்கள் அதனைப் பார்வையிட்டுக் கொள்ளவும்.
ஆ) ஜனாஸாவைக் கொண்டு செல்வது ஒரு இபாதத் ஆகும். (வணக்கமாகும்). இது (எண் 56-இல் சொல்லியுள்ளபடி ஜனாஸாவை கொண்டு செல்வது) நபியவர்கள் காட்டித் தந்த நடைமுறைக்கு விரோதமான ”பித்அத்” ஆகும். நபியவர்கள் காட்டித்தந்த முறைக்கு விரோதமான வணக்கங்கள் யாவும் பித்அத்களாகும். இது இமாம்களின் ஒருமித்த கருத்துப்படி, வழிகேடாகும்.
இ) இவ்வாறு வாகனத்தில் ஜனாஸாவைக் கொண்டு செல்வது மறுமையின் நினைவையூட்டுவதற்குப் பதிலாக (ஆடம்பர) வேறு ஊர்வலத்தையே நினைவுக்கு கொண்டு வரும். அன்றியும், தோளில் சுமந்து செல்வதின் உயிரோட்டமும் வணக்கத்திலீடுபட்டுள்ளோம் என்ற நினைவையும் அகற்றி விடும். ஜனாஸாவைப் பின்பற்றிச் செல்லுங்கள். அது உங்களுக்கு மறுமையின் நினைவைத் தரும்….. எனும் நபிமொழியையும் அலட்சியப்படுத்துகிறது.
ஐரோப்பியர் இவ்வாறுதானே கொண்டு செல்கிறார்கள்? எனக் கேட்பீர்களாயின் அவர்கள் மரணத்திற்குப் பயந்தவர்கள். மறுமையை நம்பாதவர்கள். இறந்தவனை அப்புறப்படுத்தி விட்டால் போதும் என்ற எண்ணமுடையவர்கள் என்பதைப் பதிலாக எடுத்துக் கொள்ளுங்கள்.
ஈ) இவ்வாறு பிரேத வண்டியை வாடகைக்கு அமர்த்து வதற்கும், பிரேத அலங்காரங்களைச் செய்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும் எல்லோரும் வசதி படைத்தவர்கள் அல்லர். மரணம் எல்லோருக்கும் பொதுவானது, சமமானது, எல்லோரும் மரணக் கடமைகளை இலகுவாகவும் நன்மை கிடைக்கக்கூடியதாகவும் செய்ய வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நோக்கமாகும்.
-
ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டு விட்டது. (யாரும் எழுந்து நிற்கக் கூடாது). இது இரண்டு வகைப்படும்.
௮) தனக்குப் பக்கத்தில் ஜனாஸா ஊர்வலம் சென்றால் எழுந்து நிற்பது, மையித்தைக் குளிப்பாட்டிக் கபனிட்டு அதனைக் கப்ருஸ்தானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உதவியவர்கள் மையித்தைக் கப்ரில் வைக்கும் வரை (உட்காராது) நின்று கொண்டேயிருப்பது இந்த இரண்டு நிலைகளும் மாற்றப்பட்டுள்ளது.
அலீ (رضي الله عنه) அவர்கள் மூலம் வந்துள்ள நபிமொழி இதற்கு ஆதாரமாக இருக்கிறது:
“ஒரு ஜனாஸா கொண்டு செல்வதைக் கண்ட நபி (صلى الله عليه وسلم) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். அதன்பின் அவர்கள் ஜனாஸாவுக்கு (எழுந்து நிற்காது) உட்கார்ந்திருந்தார்கள். நாங்களும் உட்கார்ந்து விட்டோம்.”
இன்னொரு அறிவிப்பில்-
ஜனாஸாவைக் கண்டால் “எழுந்து நில்லுங்கள்’” என எங்களுக்கு நபி (صلى الله عليه وسلم ) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் உட்கார்ந்து விட்டு எங்களையும் உட்காரும்படி. கட்டளையிட்டார்கள்.
(முஸ்லிம், இப்னுமாஜா, அஹ்மத், தயாலிஸீ, துஹாலி)
ஜனாஸாவைச் சுமந்து சென்றவர்கள் ஒளுச் செய்வது விரும்பத்தக்கதாகும். (சுன்னத்தாகும்) ஏனெனில், இதற்குரிய ஆதாரம் நபிமொழி 31ம் இலக்கம் பிரிவில் குறிக்கப்பட்டுள்ளது (பார்வையிடுக)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: