மது அருந்துவது, வட்டி வாங்குவது, விபச்சாரம் செய்வது போன்ற பாவங்கள் செய்வோருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது.

கேள்வி 1): மது அருந்தும் வழக்கம் உடையவர், மரணித்தால் அவருக்கு ஜனாஸா தொழலாமா? உங்களிடம் நல் உபதேசத்தை எதிர்பார்க்கிறேன், அல்லாஹ் நற்கூலியை உங்களுக்கு வழங்கட்டும்.

பதில்: ஆம், பாவம் செய்பவர்களாக இறந்தவர்களுக்கு, அவர்கள் முஸ்லிமாக இருந்திருந்தால் ஜனாஸா தொழவேண்டும்.

அவர் மது அருந்துபவராக இருந்தாலும், அல்லது பெற்றோருக்கு மாறுசெய்பவராக இருந்தாலும், அல்லது உறவுகளை துண்டிப்பவராக இருந்தாலும், அல்லது வட்டி வாங்குபவராக இருந்தாலும், அல்லது இது போன்ற ஏனைய பாவங்கள் செய்பவர்களாக இருந்தாலும் சரி, அவருக்கு ஜனாஸா தொழவேண்டும்.

அவர் காஃபிராக இருந்தால், உதாரணமாக தொழுகையை விடுவது, அல்லது இஸ்லாமிய மார்கத்தை ஏசுவது, அல்லது இஸ்லாத்தை விட்டு நீக்கக்கூடிய காரியங்களை அவர் செய்வது அறியப்பட்டிருந்தால் அவருக்கு தொழுகை நடத்தக் கூடாது.

பாவிகளை பொறுத்தவரை, அவர்களுக்கு தொழவைக்க யாதொரு தடையும் இல்லை, அவரை குளிப்பாட்டி, கஃபன் செய்து, ஜனாஸா தொழ வேண்டும். அவரின் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு அவருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்ய துஆ கேட்க வேண்டும், அவர் மது அருந்துபாவராக இருந்தாலும் சரி, அல்லது வேறு பாவங்கள் செய்பவராக இருந்தாலும் சரி, ஆனால் அவர் காஃபிராக இல்லாதவரை.

– ஷேக் பின் பாஸ்.

https://binbaz.org.sa/fatwas/9286/حكم-الصلاة-على-من-مات-مدمنا-للخمر#:~:text=الجواب%3A,نواقض%20الإسلام،%20فلا%20يصلى%20عليه.

கேள்வி 2) தொழாத ஒரு நபர் அவர் போதையில் இறந்து விட்டார், அவருக்கு ஜனாஸா தொழலாமா. அல்லது அவர் மது அருந்தி அதன் விளைவாக 5 நாட்கள் கழித்து இறந்து விட்டார், இந்த மனிதருக்கு ஜனாஸா தொழுகை தொழலாமா.

பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே, அல்லாஹ்வின் தூதர் மீதும், அவரின் குடும்பத்தார் தோழர்களின் மீதும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாகட்டுமாக

மது அருந்துவது பெரும்பாவங்களில் ஒன்று, ஆனால் அது குஃப்ர அல்ல. ஒரு மனிதர் குடிப்பழக்கத்தை கொண்டவராக இருந்தாலும், அல்லது போதை நிலையிலேயே மரணித்து இருந்தாலும், அவரை குளிப்பாட்டி, கஃபன் இட்டு, ஜனாஸா தொழ வேண்டும்.

ஏனெறால் அவர் பாவியாகத்தான் மரணித்தாரே தவிர காஃபிராக அல்ல.

ஹாஃபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி رحمه الله ஃபத்ஹுல் பாரி எனும் தனது நூலில் கூறுகிறார், காழி இயாழ் கூறினார்:

“பாவிகள், மரண தண்டனையில் கொல்லப்பட்டவர்கள், போன்றவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தும் விடயத்தில் உலமாக்கள் மத்தியில் யாதொரு கருத்து வேறுபாடும் இல்லை. சில அறிஞர்கள் மட்டும் (மார்கத்தில்) சிறப்பு மிக்கவர்கள் மட்டும் அத்தகையோரின் ஜனாஸா தொழுகையில்  பங்குகொள்வதை வெறுத்துள்ளனர். (பாவிகளுக்கு ஜனாஸா தொழலாம் என்ற) இந்தக் கருத்துக்கு மாற்றாக  இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் கிளர்ச்சியாளர்களுக்கு(முஹாரிபீன்கள்) ஜனாஸா தொழ வைக்கக் கூடாது என்றும், இமாம் ஹஸன் அல் பஸ்ரி  அவர்கள்  விபச்சாரம் செய்தவள் குழந்தைப் பெரும் பொழுது இறந்தால் அவளுக்கும் இல்லை என்று கூறுகிறார்கள், மேலும் அஸ்ஸுஹ்ரி، மற்றும் கதாதா இருவரும் கூறும் சில கருத்துகளும்.

ஆனால் காமிதீ குலத்தை சேர்ந்த பெண்ணின் ஹதீஸ் பெரும்பாலான அறிஞர்களின் கருத்துக்கு ஆதாரமாக உள்ளது”

தொழாதவருக்கு ஜனாஸா தொழுவதை பொறுத்தவரை, அது இன்னுமோர் கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. சிலர் தொழாதவர் பாவியாக இருந்த போதிலும் அவர் முஸ்லிம் தான் என்று கூறுகின்றனர், சிலர் அவர் காஃபிர் என்று கூறுகின்றனர்.

தொழாதவர் காஃபிர் என்று தீர்ப்பு வழங்கிய அறிஞர்கள் – ஹதீஸ்களின் வெளிப்படையான அர்த்தங்கள் அவ்வாறே குறிப்பிடுகிறது – அவருக்கு ஜனாஸா தொழுவதை ஹராம் என்று கூறுகிறார்கள்.

அவர் பாவியான ஒரு முஸ்லிம் என்ற கருத்தில் உள்ள அறிஞர்கள், அவருக்கு தொழுகை நடத்துவதை அனுமதித்துள்ளனர்.

அவருக்கு தொழுகை நடத்துவது தான் அவருக்கு தொழாமல் இருப்பதை விட சிறந்தது என்பதில் சந்தேகம் இல்லை, ஏனன்றால் அதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. ஆகவே கேள்வியில் கேட்கப்பட்ட நபருக்கு தொழுகை நடத்துங்கள். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

https://www.islamweb.net/ar/fatwa/44304/

கேள்வி 3)

மரண தண்டனை வழங்கப்பட்ட ஒருவர், அல்லது விபச்சாரம் செய்து அதற்காக தண்டனை வழங்கப்பட்டவர் ஆகியோருக்கு ஜனாஸா தொழுவது குறித்த சட்டம் என்ன, இந்த தண்டனை அவர்களுக்கான பாவமன்னிப்பாக கருதப்படுமா?

பதில்: முதலாவதாக, வெளிப்படையில் முஸ்லிமாக மரணித்த அனைவரின் மீதும் ஜனாஸா தொழுவது முஸ்லிம்களில் சிலராவது செய்ய வேண்டிய கடமை ( பர்ளு கிஃபாயா) , அவர் ஷிர்க்கை தவிர வேறு எந்த பெரும்பாவம் செய்பவராக இருந்தாலும் சரி. ஆகவே ரஜம் ( கல்லெரிதல்) எனும் தண்டனை கொடுக்கப்பட்டவாராக இருந்தாலும், அல்லது வேறு மரண தண்டனை வழங்கப்பட்டவராக இருப்பினும் அவர்களுக்கு ஜனாஸா தொழுங்கள்.

இரண்டாவது: உலமாக்களின் இரு கருத்துக்களில் சரியானது: ஷரியத்தின் தண்டனைகள், அவை எதற்காக கொடுக்கப்பட்டனவோ அந்த குற்றங்களுக்கு அவை பாவ மண்ணிப்பாகும்.  இதற்கு ஆதாரம் உபாதா இப்னு ஸாமித் رضي الله عنه அறிவிக்கும் பின்வரும் ஹதீஸாகும்:

நாங்கள் (ஒருநாள்) நபி (صلى الله عليه وسلم) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அவர்கள், “அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிப்பதில்லை; திருடுவ தில்லை; விபசாரம் செய்வதில்லை என்று என்னிடம் உறுதிமொழி கூறுங்கள்” என்று கூறி, இது தொடர்பான (60:12ஆவது) வசனத்தை முழுவதும் ஓதினார்கள்.

மேலும், “இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து அதற்காக அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டு விட்டால் அது அவருக்குப் பரிகாரமாகி விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையேனும் ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்து விட்டால் (அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்.) அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்” என்று சொன்னார்கள்.

(புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் புறமிருந்தே வெற்றி. நமது நபி, அவரின் குடும்பத்தார், தோழர்களின் மீதும் அல்லாஹ் ஸலாத்தையும், ஸலாமையும் இறக்குவானாக.

https://fatawapedia.com/حكم-الصلاة-على-من-أقيم-عليه-القصاص-أو-حد-الزنى-11328#:~:text=السؤال%3A,قصاصا%20صلي%20عليهما%20صلاة%20الجنازة.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply