பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது?

கேள்வி : பயணம் செய்பவர் அவருக்கு தொழுகையின் நேரம் வந்துவிட்டால் வாகனத்திற்குள் தயம்மும் செய்து தொழுகையை நிறைவேற்றலாமா?

பதில் : அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன்.

ஒரு பயணி அவர் முயற்சி செய்தும் அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம்.

அல்லாஹ் தஆலா குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4 : 43

ஹனபிய்யாக்கள் தண்ணீர் தேடுவதில் வரையரை வைத்திருக்கிறார்கள்.
ஒருவர் தண்ணீர் கிடைக்காத போது தண்ணீர் அருகாமையில் இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால் அவர் நானூறு அடி எடுத்து வைத்து தேடிச் செல்லவேண்டும். அப்போது அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம்.

ஷாபியாக்கள் கூறுகிறார்கள்: ஒருவர் தனக்கு தன்னைச்சுற்றி தண்ணீர் கிடைக்காது என்று உறுதி கொள்ளும் போது அவர் தண்ணீரை தேடாமல் தயம்மும் செய்யலாம். தண்ணீர் கிடைக்கும் என்ற எண்ணம் உறுதியாக இருக்கும் போது பயமில்லாத போது அல்லது தன்னுடைய பொருள் மீது பயமில்லாத போது அல்லது தன்னோடு வந்தவர் தன்னைவிட்டு பிரிந்து விடுவார் என்ற பயமில்லாத போது அவர் அரை ஃபர்ஸக் நடக்கவேண்டும். அல்லது ஆறாயிரம் அடி எடுத்து வைத்து தேடிச் செல்லவேண்டும்.

இதன் அடிப்படையில் ஒருவர் அவர் வாகனத்தில் இருக்கும் போது தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் ஓட்டினரிடம் வண்டியை தொழுகைக்காக நிறுத்தச் சொல்லவேண்டும். நிறுத்தினால் தொழுது கொள்ள வேண்டும்.

நிறுத்தவில்லையெனில்..
அப்போது தொழுகையின் நேரம் முடிவதற்குள் தனது சொந்த இடத்திற்கு சென்றுவிடலாம் என்று நம்பினால் அவர் தொழுகையை தாமதப்படுத்தில் தனது இடத்திற்கு சென்ற பின்பு தொழுகையை நிறைவேற்றலாம்.அல்லது தனது இடத்திற்கு சென்றடைவதற்கு முன்பு தொழுகையின் நேரம் முடிந்துவிடும் என்று கருதினால் வாகனத்திற்குள்ளே சக்திக்கு உட்பட்டு நிற்குதல் ருகூவு செய்தல் ஸஜ்தா செய்தல் ஆகியவற்றை செய்து தொழுது கொள்ளவேண்டும்.

அல்லாஹ்தஆலா சொல்கிறான்:

அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சகத்திக்கு மீறி சிறமப்படுத்தமாட்டான். பகரா 286.

அல்லாஹ்வை உங்கள் சக்திக்கு உட்பட்டு பயந்து கொள்ளுங்கள். தப்ôபூன் 16.

உங்கள் தந்தையரான இப்ராஹீமின் மார்க்கத்தில் உங்களுக்கு எந்த சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை. ஹஜ் 78.

நான் ஒன்றை உங்களுக்கு கட்டளையிட்டால் உங்களால் முடிந்தளவிற்கு அதை செய்யுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நூல் : புகாரி முஸ்லிம்.

சிரமம் எளிதைக் கொண்டு வரும் என உசூல் ஃபிக்ஹ் சட்டங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு பயணி தன்னுடைய வாகனத்தில் தண்ணீர் இருந்தால் அந்த தண்ணீரைக் கொண்டு ஒளு செய்து கொள்வார். அல்லது தன்னோடு இருக்கும் சக பயணிகளிடம் கேட்பார். அல்லது முடிந்தால் வாகனத்திலிருந்து இறங்கி தண்ணீரை தேடுவார். கிடைக்கவில்லையெனில் தயம்மும் செய்து தொழுது கொள்வார்.

அல்லாஹ் மிக அறிந்தவன். (உலமாக்களின் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான செய்திகள்.)

 

மொழிபெயர்ப்பு:ஷெய்க் யூசுப் ஃபைஜி (இஸ்லாமிய அழைப்பாளர்,கடையநல்லூர்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply