குறிப்பிட்ட ஒரு நபருடன் திருமணம் ஆக வேண்டும் என்று துஆ கேட்பது

கேள்வி : நான் அறிந்த பெண் ஒருவள் இருக்கிறாள், பல நேரம் அவள் எனது மனைவியாக வேண்டும் என்று இறைவனிடம் துஆ கேட்கிறேன், அவ்வாறு துஆ கேட்கும் பொது சில நேரம் என் இதயத்தில் படபடப்பு ஏற்படுகிறது, சில நேரம் இவ்வாறு குறிப்பிட்டு துஆ கேட்காமல் பொதுவாக கேட்க வேண்டும் என்று எண்ணுகிறேன், இருந்த போதும் பல நேரம் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டே கேட்க என் உள்ளம் நாடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும், பொதுவாக துஆ கேட்க வேண்டுமா அல்லது குறிப்பிட்டு கேட்க வேண்டுமா?

பதில்:

புகழ் யாவும் இறைவனுக்கே

ஒரு மனிதர் குறிப்பிட்ட ஒரு பெண் தன் மனைவியாக இறைவன் உதவவேண்டும் என்று கேட்பதில் யாதொரு தவறும் இல்லை, அதே போன்று ஒரு பெண் குறிப்பிட்ட ஒரு ஆண் தனது கணவனாக வேண்டும் என்று கேட்பதிலும் தவறில்லை.

ஆனால் எந்த விடயத்தையும் குறிப்பிட்டு கேட்காமல் பொதுவான வார்த்தைகளை கொண்டு துஆ கேட்டு, நன்மையை தேர்வு செய்வதை இறைவனின் கையில் ஒப்படைப்பது சிறந்தது. உதாரணமாக ‘யா அல்லாஹ், எனக்கு ஸாலிஹான மனைவியை கொடுப்பாயாக’ என்று கேட்பது, அல்லது ஒரு பெண் ‘யா அல்லாஹ், எனக்கு ஸாலிஹான கணவனை கொடுப்பாயாக’ என்று கேட்பது.

ஏனென்றால் இது தான் அல்லாஹ்வின் மீது முழுமையாக தவக்குல் (ஆதரவு) வைப்பதும் அவனிடம் பொறுப்பை ஒப்படைப்பதும் ஆகும். மேலும் பொதுவான வார்த்தைகளை கொண்டு துஆ கேட்பது விரும்பத்தக்கது என்று ஹதீஸ்களில் வந்துள்ளது.

இமாம் அபூ தாவூத் رحمه الله ஆயிஷா رضي الله عنها கூறியதாக அறிவிக்கின்றார்:
كان رسول الله صلى الله عليه وسلم يستحب الجوامع من الدعاء ، ويدع ما سوى ذلك

‘அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم குறைந்த வார்த்தைகள்  கொண்டிருந்தாலும் ஆழமான அர்த்தங்களை கொண்ட துஆக்களை கேட்பார்கள், அதை தவிர மற்றதை தவிர்ப்பார்கள்’ அஷ் ஷேய்க் அல் அல்பானி رحمه الله இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று கூறினார்கள்.

அஷ் ஷேய்க் இப்னு உஸைமீன் رحمه الله ரியாளுஸ் ஸாலிஹீன் எனும் நூலின் விளக்கத்தில் கூறுகின்றார்கள் ‘அதாவது துஆ கேட்கும்போது பொதுவான துஆக்களை கேட்பார், குறிப்பான விடயங்களை தவிர்ப்பார். ஏனென்றால் பொதுவான துஆ குறிப்பான துஆவைவிட அனைத்தையும் உள்ளடக்கும் ‘

மேலும் குறிப்பாக ஒரு விடயத்தை துஆ கேட்பதினாலும், அதை வற்புறுத்தி கேட்பதனாலும் ஒரு மனிதர் அந்த விடயத்தின் மீது அதிகமான பிடிப்பும் ஏக்கமும் கொண்டவர் ஆகிறார், அது அவருக்கு உண்மையில் கிடைக்குமா இல்லையா என்பதையும் அவர் அறிய மாட்டார். மேலும் அது கிடைக்கா விட்டால் அதனால் ஏற்படும் உளரீதியான பாதிப்பு அதிகமாகும் வாய்ப்புள்ளது. ஆதலால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்துவிடுவதும், அவன் நமக்காக தேர்ந்தெடுப்பதை பொருந்திக்கொள்வதும் சரியான செயலாகும்.

ஆனால் ஒரு மனிதர் குறிப்பாகத்தான் கேட்க வேண்டும் என்றால், அவர் அந்த துஆவுடன் நன்மையை சேர்த்தே கேட்கட்டும். உதாரணமாக, ‘யா அல்லாஹ், இந்த மனிதரை திருமணம் செய்வதில் எனக்கு நன்மை இருந்தால் அவரை எனக்கு திருமணம் செய்து தருவாயாக’ என்பது போன்ற துஆவை கேட்கட்டும்

இமாம் இப்னுல் ஜவ்ஸீ رحمه الله கூறுகின்றார்கள்: “அல்லாஹ்விடம் ஒரு விடயத்தை கேட்கும் போது அதனுடன் சேர்த்து அதில் உள்ள நன்மைகளையும் கேட்காமல் விட வேண்டாம், பல நேரங்களில் நாம் கேட்கும் உலக விடயம் நிறைவேறுவது நமது அழிவுக்கு காரணமாக விளையக்கூடும்” [ஸைதுல் காதிர்]

நாம், மேல் குறிப்பிட்டது எல்லாம் துஆ கேட்பதில் சிறந்த முறை தான், ஆனால் ஒரு மனிதர் தான் கேட்பதில் தெளிவாக உள்ளார் என்றால் அவர் தான் விரும்பியதை எந்த நிபந்தனைகளையும் சேர்க்காமல் குறிப்பிட்டு கேட்பதில் தவறு ஏதும் இல்லை. அல்லாஹ் தான் விதித்ததை செய்வான்.

அல்லாஹ், உங்களுக்கு உங்கள் உள்ளத்தை மகிழ்விக்கும் ஸாலிஹான ஒரு மனைவியை கொடுக்க வேண்டும் என்று
நாம் கேட்கிறோம் அவனே மிக கருணையாளன் கொடைவழங்குபவன்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

தமிழாக்கம்: நயீம் இப்னு அப்தில் வதூத்

மூலம: https://islamqa.info/ar/answers/219260/

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply