கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது)  ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..?

கேள்வி:

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது) ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..?

📝 பதில் :

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…

இந்த விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கடும் கருத்து வேறுபாடு காணப்படுகிறது; எனவே அவர்களுக்கு மத்தியில் பல நிலைப்பாடுகள் உள்ளது.

முதல் நிலைப்பாடு :

• கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை கழா செய்து வைக்க வேண்டும்.

இந்நிலைப்பாட்டில் தான் அலீ பின் அபீதாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இருந்தார்கள்; இமாம் அபூஹனிஃபா அவர்களது நிலைபாடும் இதுவே..!

இவர்கள் முன்வைக்கும் ஆதாரம் :

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) கூறியதாவது :

“பிரயாணிகளுக்கு தொழுகையில் பாதியையும் (அதாவது 4 ரக்அத்தை 2 ஆக சுருக்கித் தொழுதல்), நோன்பிலும் அல்லாஹ் விதிவிலக்கு அளித்துள்ளான். அதேபோல கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நோன்பில் விதிவிலக்கு அளித்துள்ளான்”.

_📚 நூல் : ஸுனன் நஸாயீ 2274; ஸுனன் இப்னுமாஜா (1/279) | இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இச்செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று கூறியுள்ளார்கள்._

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களின் மீதான மார்க்கச் சட்டமானது பயணியின் மீதான மார்க்கச் சட்டத்தை போன்றது என்பதை நபியவர்களின் ஹதீஸிலிருந்து நாம் அறிய முடிகிறது. பயணி நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளது; ஆனால் பின்னர் அந்நோன்பை கழா செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் நோன்பிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டாலும், பின்னர் அவைகளை கழா செய்ய வேண்டும்.

இந்த நிலைபாட்டில் இருக்கும் அறிஞர்கள்:

⏺️ இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் رحمه الله – ஸவூதி அரேபியா
_[முன்னாள் தலைமை முஃப்தி, ஸவூதி அரேபியா]_

⏺️ இமாம் முஹம்மது பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் رحمه الله – ஸவூதி அரேபியா

⏺️ இமாம் அப்துல்லாஹ் அல்-ஹுதையான் رحمه الله – ஸவூதி அரேபியா

⏺️ இமாம் அப்துர் ரஸ்ஸாக் அல்-அஃபீஃபி رحمه الله – எகிப்து

⏺️ அஷ்ஷெய்க். அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா அல்-ஹஜூரி حفظه الله – யமன்
_[ஹதீஸ்கலை அறிஞர் முக்பில் அவர்களது மாணவர்]_

இரண்டாவது நிலைப்பாடு :

A) நோன்பு நோற்பதால் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் பயந்தால், அச்சமயத்தில் நோன்பை விட்டுவிட்டு பின்னர் அந்த நோன்புகளை மாத்திரம் ‘கழா’ செய்தால் போதுமானது.

B) நோன்பு நோற்பதால், தனக்கும் தன் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுமோ என அவர்கள் பயந்தால், அச்சமயத்தில் நோன்பை விட்டுவிட்டு பின்னர் அந்த நோன்புகளை ‘கழா’ செய்து, ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழை வீதம் உணவளிக்க வேண்டும்.

இந்நிலைப்பாட்டில் இமாம்களான ஷாஃபியீ, அஹ்மது பின் ஹம்பல் ஆகியோரும் உள்ளனர்.

இவர்கள் முன்வைக்கும் ஆதாரம் :

நோயாளிகளுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளது; நோயிலிருந்து குணமான பின்னர் அந்நோன்புகளை அவர்கள் கழா செய்ய வேண்டும். இதே சட்டம்தான் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும். ஏனெனில் அவர்களும் நோயாளிகள் என்ற பட்டியலில் உள்ளடங்குகிறார்கள்.

_📝 பார்க்க : அல்-முஃனீ 3/37; அல்-மஜ்மூஃ 6/273_

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் அறிஞர்கள் :

⏺️ இமாம் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் حفظه الله – ஸவூதி அரேபியா
_[ஃபத்வா குழு உறுப்பினர் @ ஸவூதி நாட்டு மார்க்க அறிஞர்கள் குழு]_

⏺️ இமாம் ஸுலைமான் அர்-ருஹைலீ حفظه الله – ஸவூதி அரேபியா
_[பேராசிரியர் @ மதீனா பல்கலைக்கழகம்]_

மூன்றாவது நிலைப்பாடு :

அவர்கள் விடுபட்ட நோன்புகளை கழா செய்ய தேவையில்லை; மாறாக ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழை என்ற வீதத்தில் உணவளித்தால் போதுமானது.

இந்த கருத்தில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், இப்னு உமர் رضي الله عنهما போன்றோர் உள்ளனர்.

இப்னு அப்பாஸ் (رضي الله عنه) அவர்கள் கூறுவதாவது :
“நோன்பு நோற்பதன் மூலம் தனக்கோ அல்லது தன் குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படலாம் என கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண் அஞ்சினால், அவர்கள் தங்களது நோன்பை விட்டுவிடலாம்; அதற்கு பகரமாக ஒரு நாளைக்கு ஒரு ஏழை எனும் அடிப்படையில் உணவளிக்க வேண்டும். விடுபட்ட நோன்புகளை திரும்ப வைக்க தேவையில்லை.”
(பார்க்க : தஃப்ஸீர் அத்-தபரீ 2/136)

ஒரு கர்ப்பிணிப் பெண் இப்னு உமர் (رضي الله عنه) அவர்களிடம் தனது நோன்பைப் பற்றிக் கேட்டார், அதற்கு அவர் கூறியதாவது: “உங்களது நோன்பை விட்டுவிட்டு ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளியுங்கள்.”
(பார்க்க : இமாம் தாரகுத்னி அவர்களது ஸுனன் 2/207)

மேலே நாம் குறிப்பிட்டுள்ள இப்னு அப்பாஸ் மற்றும் இப்னு உமர் رضي الله عنهما ஆகியோரின் நிலைப்பாடானது அன்றைய தினத்தில் ஸஹாபாக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒன்றாகவே இருந்தது; பிற ஸஹாபாக்களில் யாரும் இந்நிலைப்பாட்டை எதிர்க்கவில்லை. ஆகவே, இது நம்பகமான ஆதாரமாகவும், “உஸுலுல் ஃபிக்ஹ்” அடிப்படையில் இது ஓர் ஒருமித்த கருத்தாகவும் உள்ளது.

 

📝 பார்க்க : இமாம் இப்னுல் கைய்யிம் رحمه الله அவர்களின்إعلام الموقعين 4/120

 

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு விடுபட்டுப்போன ரமழான் நோன்புகளை திரும்ப நோற்க வேண்டுமா.? அல்லது ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமானதா.?

மேற்கண்ட கேள்வியானது இமாம் அல்பானி رحمه الله அவர்களிடம் கேட்கப்பட்டது…

இமாம் அவர்களது பதில் :

விடுபட்ட நோன்புகளை திரும்ப நோற்பது அவர்கள் மீது கட்டாயமில்லை. மாறாக ஒரு நாளைக்கு ஒரு ஏழை என்ற வீதத்தில் உணவு கொடுப்பது அவர்கள் மீது கட்டாயமாகும்.

இதுவே சரியான பதிலாகும்.

 

அல்லாஹு தஆலா கூறுவதாவது :

 

ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். தவிர, (நோன்பு நோற்கக் கஷ்டப்படுபவர்கள் அதற்குப்) பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்….”

(அல்குர்ஆன் 2:184)

 

மேற்கண்ட வசனத்திற்கு விளக்கமாக இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள் கூறுவதாவது :

 

“கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்களுக்கு விடுபட்ட நோன்பிற்காக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமானது”.

 

📝 பார்க்க : (ஸில்ஸிலத்துல் ஃபதாவா ஜித்தாஹ், Cassette no.25)

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் அறிஞர்கள்:

⏺️ இமாம் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி رحمه الله – அல்பேனியா
_[முன்னாள் பேராசிரியர் @ மதீனா பல்கலைக்கழகம், இவ்வுலகின் தலைசிறந்த ஹதீஸ்கலை அறிஞர்]_

⏺️ இமாம் முஹம்மது அலீ அல்-பெர்கூஸ் رحمه الله – அல்ஜீரியா
_[இமாம் பின் பாஸ் அவர்களது மாணவர், சிறந்த அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்]_

குறிப்பு :

நோன்பிற்கு பகரமாக உணவுப் பொருளை வழங்குவதாயின், 1/2 (அரை) ஸாஃவு அளவு உணவுப் பொருளை வழங்க வேண்டும்.

1/2 ஸாஃவு . என்றால் அதன் அளவு என்ன..?

Kilogram அளவீட்டின்படி, 1/2 (அரை) ஸாஃவு என்பது 1.5 Kg ஆகும்.

📝பார்க்க : ஃபதாவா ரமழான் 545; ஃபதாவா பின் பாஸ், பாகம் 15, பக்கம் 341

இந்த முத் அளவீடான உணவுப் பொருட்களுக்கான பணத்தை ஏழைகளுக்கு அளிக்க முடியுமா..?

பெரும்பாலான ஃபுகஹாக்கள் (மார்க்க சட்டக்கலை அறிஞர்கள்) கருத்துப்படி, இதனை பணமாக அளிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை; பொருளாகத்தான் வழங்க வேண்டும்.

மேற்கண்ட நிலைப்பாடுகளில் மூன்றாவது நிலைபாடுதான் எங்களிடத்தில் ஏற்றமான மற்றும் வலுவான நிலைப்பாடு ஆகும்.

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

தொகுப்பு:அபு அஹ்மத் ரய்யான்

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply