அல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன?

கேள்வி : சிலர் அல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன?

பதில் : அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்தும் ஸலாமும் நபியவர்கள் மீது உண்டாகுவதாக. அவர்களுடைய தோழர்கள், குடும்பத்தார் அனைவரின் மீதும் உண்டாகுவதாக.
அல்வலா வல்பரா என்பது தவ்ஹீதின் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்த வார்த்தைகள் குர்ஆன் சுன்னாவில் வந்திருப்பவையாகும்.

அல்லாஹ் தஆலா குர்ஆனில் கூறுகிறான்:

நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாது காவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப் பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

உள்ளங்களில் நோய் இருப்போர், அவர்களை நோக்கி விரைவதைக் காண்கிறீர். “எங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் (உங்களுக்கு) வெற்றியளிக்கலாம்; அல்லது ஏதேனும் ஒரு காரியத்தை அவன் நிகழ்த்தலாம். அவர்கள் தமக்குள் இரகசியமாக வைத்திருந்ததற்காக அப்போது கவலைப்பட்டோராக ஆவார்கள்.
இவர்களின் நல்லறங்கள் அழிந்து, இழப்பை அடைந்தவர்களாகி விட்டனர். “நாங்களும் உங்களைச் சேர்ந்தோரே’ என அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தோர் இவர்கள் தாமா?” என்று நம்பிக்கை கொண்டோர் (மறுமையில் வியப்புடன்) கூறுவார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்லாஹ்வும், அவனது தூதரும், தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிற நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள். அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

அல்குர்ஆன் 5 : 51 முதல் 56 வரை.

என்னைப் படைத்தவனைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நான் விலகியவன். அவன் எனக்கு நேர் வழி காட்டுவான் என்று இப்ராஹீம் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கூறியதை நினைவூட்டுவீராக! 43: 26

“உங்களை விட்டும், அல்லாஹ்வை யன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60 : 1,2

முஃமின்களை மாத்திரம்தான் நேசிக்கவேண்டும். காபிர்களை வெறுக்கவேண்டும் என்று வலியுறுத்தக்கூடிய வசனங்கள் அதிகமாகவே இருக்கிறது.

முஆத் ரலி அவர்கள் அறிவித்துள்ளார்கள்: ஈமானில் மிகச் சிறந்தது நீ ஒருவரை அல்லாஹ்விற்காக நேசிப்பதும் நீ ஒருவரை அல்லாஹ்விற்காக வெறுப்பதும் உன்னுடைய நாவை இறைநினைவில் வைப்பதுமாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நூல் : அஹ்மத் 22132.

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஈமானின் கயிறுகளில் மிக உறுதியானது அல்லாஹ்விற்காக நேசிப்பதுதம் அல்லாஹ்விற்காக வெறுப்பதுமாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நூல் : தப்ரானி 2539.

அல்வலா வல்பரா என்பதின் விளக்கம்:
ஷைக் பின்பாஸ் ரஹ் அவர்களிடம் அல்வலா வல்பரா என்பதை விளக்குமாறும் காபிர்களை நேசிக்கலாமா என்பது பற்றியும் கேட்கப்பட்டது.
அல்வலா வல்பரா என்பது முஃமின்களை நேசிப்பதும் காபிர்களை வெறுப்பதும் அவர்களை விட்டும் விலகுவதும் அவர்களின் மார்க்கங்களை விட்டு விலகுவதும் ஆகும். இதைப்பற்றி அல்லாஹ் தஆலா குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

“உங்களை விட்டும், அல்லாஹ்வை யன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60 : 1,2

காபிர்களை வெறுக்கவேண்டும் என்பதின் கருத்து அவர்கள் மீது வரம்புமீறுவது அவர்களுக்கு அநியாயம் செய்வது என்று பொருளல்ல. மாறாக உன்னுடைய உள்ளத்தில் அவர்களை வெறுப்பதும் அவர்கள் உன்னுடைய (உற்ற) நன்பர்களாக இருக்கக்கூடாது என்பதாகும். மேலும் அவர்களை நீங்கள் நோவினை செய்யக்கூடாது, அவர்களை தொல்லைதரக்கூடாது, அவர்களுக்கு அநியாயம் செய்யக்கூடாது.அவர்கள் ஸலாம் சொன்னால் மறுப்பு சொல்லவேண்டும். அவர்களுக்கு அறிவுரை செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்வழியைக் காட்ட வேண்டும்.

அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! “எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று கூறுங்கள்

அல்குர்ஆன் 29 : 46

வேதக்காரர்கள் என்பவர்கள் யூதர்களும் கிரித்வர்களும் ஆவார்கள். மேலும் முஸ்லிம்களிடத்தில் ஒப்பந்தம் செய்தவர்கள் நம்முடைய ஆட்சியின் கீழ் இருப்பவர்கள் நம்மிடத்தில் பாதுகாப்பு பெற்றவர்களும் இதில் அடங்குவர்.

சுருக்கம் நூல் : மஜ்மவுல் ஃபதாவா 5 பக்கம் 246.

ஷைக் ஸாலிஹ் அல் உஸைமீன் ரஹ் அவர்களிடம் அல்வலா வல்பரா என்பது பற்றி கேட்கப்பட்ட போது
அல்வலா வல்பரா என்பது அல்லாஹ் தஆலா எதை விட்டும் விலகிக் கொண்டானோ அவைகளை விட்டும் ஒரு மனிதன் விலகிக் கொள்வதாகும்.

அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

“உங்களை விட்டும், அல்லாஹ்வை யன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. 60 : 1,2

மேலும் அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

இணை கற்பிப்போரிடமிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக் கொண்டனர். இது, இம்மாபெரும் ஹஜ் நாளில் மக்களுக்கு அல்லாஹ்வுடைய, அவனது தூதருடைய பிரகடனம். நீங்கள் திருந்திக் கொண்டால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் புறக்கணித்தால் நீங்கள் அல்லாஹ்வை வெல்ல முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! துன்புறுத்தும் வேதனை பற்றி (ஏக இறைவனை) மறுப்போரை எச்சரிப்பீராக! தவ்பா வசனம் 3

எனவே ஒரு முஃமின் இணைவைப்பாளர் காபிர் ஆகியவர்களை விட்டும் விலகிக் கொள்ளவேண்டும்.
இது போன்று அல்லாஹ்வும் ரசூலும் பொருந்திக் கொள்ளாத பாவமான தீய காரியங்களைவிட்டும் விலகிக் கொள்வது அவசியமாகும்.

உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அதிகமான காரியங்களில் அவர் உங்களுக்குக் கட்டுப்பட்டிருந்தால் சிரமப்பட்டிருப்பீர்கள். மாறாக அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்கு விருப்பமானதாக ஆக்கினான். அதை உங்கள் உள்ளங்களில் அழகாக்கினான். (இறை) மறுப்பையும், குற்றத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாக் கினான். அவர்களே நேர் வழி பெற்றோர்.

அல்குர்ஆன் 49 : 7

நூல் : ஃபதாவா அர்கானுல் இஸ்லாம். பக் 183.
ஷைக் ஸாலிஹ் அல் ஃபவ்ஷான் அவர்கள் நவாகிலுல் இஸ்லாம் இஸ்லாத்தை முறிக்கும் செயல்கள் என்ற புத்தகத்தின் விரிவுரை பக் 158 ல் கூறுகிறார்கள்:

இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ரஹ் அவர்கள் காபிர்களை வெறுப்பதில் ஒரு வகையை மட்டும் சொல்லியிக்கிறார்கள். அது முஸ்லிம்களுக்கு எதிராக காபிர்களுக்குக உதவி செய்தல் ஆகும். அவர்கள் முவாலாத் நேசித்தல் என்ற வார்த்தையை தேர்வு செய்திருந்தால் உள்ளத்தால் நேசிப்பதையும் குறிக்கும். ஆனால் முழாஹராத் என்பது முஸ்லிம்களுக்கு எதிராக காபிர்களுக்கு உதவி செய்வதை மாத்திரம் குறிக்கும். மேலும் காபிர்களை புகழ்வது கூடாது. ஏனென்றால் காபிர்களை நேசிக்கக்கூடாது என்றும் அவர்களை விட்டும் முற்றிலும் விலகிக் கொள்ள வேண்டும் வேண்டும் என்றும் அல்லாஹ்தஆலா கட்டளையிட்டுயிருக்கிறான். இதை இஸ்லாத்தில் அல்வலா வல்பரா என்று சொல்லப்படும்.
மேலும் கவாரிஜ்கள் இதைப்பற்றி பேசுவதாக நாம் அறியவில்லை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஆதாரம்:islamqa.info

மொழிபெயர்ப்பு:ஷெய்க் யூசுப் ஃபைஜி (இஸ்லாமிய அழைப்பாளர்,கடையநல்லூர்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply