சோதனைக் காலங்களில் கேட்கும் துஆ

சோதனை ஏற்பட்டால் ஒரு மனிதர், என்ன கூறுவது மிகச் சிறந்தது?

பதில்:

அல்லாஹ் தெளிவுபடுத்தியது போன்று:

 الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.

أُولَـٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ

இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.

மேலும் ஹதீஸில் வருகிறது:

உம்மு சலமா (رضي الله عنها) அவர்கள் கூறியதாவது: “ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது

إنَّا للـهِ وإنَّا إلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أجُرْنِي فِي مُصِيْبَتي، وأخْلِفْ لِي خَيْراً مِنْهَا

“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபதீ வ அஃக்லிஃப் லீ ஃகைரம் மின்ஹா”

நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம். யா அல்லாஹ்! எனக்கு ஏற்பட்ட சோதனைக்கு கூலியைத் தருவாயாக! எனக்கு இதை விட சிறந்ததை பகரமாகத் தருவாயாக.

என்று கூறினால், அவர் துன்பம் அடைந்ததற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை வழங்கி, அதைவிடச் சிறந்த ஒன்றை அதற்கு ஈடாக வழங்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். (என் முதல் கணவர்) அபூசலமா (رضي الله عنه) அவர்கள் இறந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கட்டளையிட்டதைப் போன்றே (இந்த துஆவை) நான் கூறினேன். அல்லாஹ் அபூசலமாவைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதரையே எனக்கு மாற்றாக (கணவராக) வழங்கினான். ஸஹீஹ் முஸ்லிம் : 1675.

ஆகையால் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.” என்று கூறுவதுடன் சேர்த்து “அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபதீ” என்றோ “அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபதீ வ அஃக்லிஃப் லீ ஃகைரம் மின்ஹா” என்றோ ஓதுவது சிறப்பானது.

இதனுடன் சேர்த்து “யா அல்லாஹ்! என்னுடைய காரியங்களை இலேசாக்கிவைப்பாயாக “, “யா அல்லாஹ்! இதற்கு மாற்றாக இன்னதை தருவாயாக”, “யா அல்லாஹ்! எங்களில் மரணித்தவர்களை மன்னிப்பாயாக” இது போன்ற நல்ல துஆக்கள் செய்யலாம், அதில் தவறில்லை. ஆனால் நபி صلى الله عليه وسلم கொடுத்த இந்த துஆ எல்லா வகையிலும் போதுமானதாக உள்ளது, அவர், பரிபூரண வாக்கியத்தை கொடுத்துள்ளார்.

அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபதீ வ அஃக்லிஃப் லீ ஃகைரம் மின்ஹா

அல்லாஹ் இந்த சோதனைக்கு பதிலாக, அதை விட சிறந்ததை கொடுத்துவிட்டால், அவாின் தேவை பூர்த்தி அடைகிறது. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.

தமிழாக்கம்: அபூ அதிஃப் நயீம் இப்னு அப்துல் வதூத் (அல்லாஹ் அவனை மண்ணிப்பானாக)

ஆசிரியர்: ஷெய்கு பின் பாஸ் رحمه الله

மூலம்: https://binbaz.org.sa/fatwas/17867/المشروع-من-الدعاء-للعبد-عند-المصيبة

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: