அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று கூறுவோருக்கு இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் சட்டம் என்ன?

கேள்வி:

ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் கூறப்பட்டது. அதில், ஒரு சிறுவன் தன்னுடைய தந்தையிடம் அல்லாஹ்வைப் பற்றி கேட்கின்றான், அதற்கு அந்தத் தந்தை அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று பதில் கூறினார். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் இதுபோன்ற கூற்றுக்களின் சட்டம் என்ன?

பதில்:

இந்த பதில் தவறானது. இது ஜஹமிய்யா மற்றும் முஃதஸிலா மற்றும் அவர்களின் வழியில் பயணிக்கும் பித்அத்வாதிகளின் கருத்தாகும்.. அல்லாஹ் வானத்திலே அர்ஷின் மீது இருக்கிறான் என்பதுதான் சரியானது. இதில்தான் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பினர் இருக்கின்றார்கள்.

தன்னுடைய அனைத்து படைப்பினங்களை விட மேலே இருக்கிறான். அவனுடைய அறிவு எல்லா இடத்திலும் இருக்கிறது. (அதாவது அவன் எல்லா இடங்களைப் பற்றிய அறிவையும் வைத்திருக்கிறான்). இதற்கு ஆதாரமாக ஏராளமான குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் இருக்கின்றன. முன்சென்ற ஸலஃப்களும் இக்கருத்தில் ஒருமித்து உள்ளனர்.

அல்லாஹ் கூறுகிறான்

உங்களுடைய இறைவன் அல்லாஹ் அவன் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது உயர்ந்து இருக்கின்றான் – 7:54).

இதையே அல்லாஹ் தன்னுடைய மகத்தான வேதத்திலே வேறு 6 இடங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றான்.

அஹ்லுஸ் ஸுன்னா கொள்கையுடையவர்களிடத்திலே, இஸ்தவா என்பதன் பொருள்.

அல்லாஹ் தன்னுடைய கண்ணியத்துக்கு ஏற்ப அர்ஷின் மீது உயர்ந்து, உயரமான இடத்தில் இருப்பது

எப்படி (உயர்ந்து) இருக்கிறான் என்பதை அவனைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்.

இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடத்திலே இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டபோது அவர்கள் குறிப்பிட்டது போல. இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்

(அர்ஷின் மீது) உயர்ந்திருக்கிறான் என்பது அறியப்பட்டது, எப்படி உயர்ந்து இருக்கிறான் என்பது அறியப்படாதது, அதை ஈமான் கொள்வது கடமையாகும் அதைப் பற்றிக் கேள்வி எழுப்புவது பித்அத் ஆகும்.

இங்கு பித்அத் என்று இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுவது, அல்லாஹ் எப்படி அர்ஷின் மீது உயர்ந்திருக்கிறான் என்று கேள்வி எழுப்புவதை குறிக்கின்றது

உம்மு ஸலமா (ரலி) அவர்களிடமிருந்து, ரபீஆ இப்னு அபூ அப்துர் ரஹ்மான்(ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடமிருந்து இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இதை குறிப்பிடுகிறார்கள்.

அதுவே அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் (ஸஹாபாக்கள், அவர்களைப் பின்பற்றி வந்த அனைத்து உலமாக்களின் கருத்தாகும்).

அல்லாஹ், தான் வானத்திலே இருப்பதாக வேறு சில வசனங்களில் குறிப்பிடுகின்றான். அல்லாஹ் கூறுகிறான்,

அதிகாரம் என்பது உயர்ந்தவனும் மிகப்பெரியவனும் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியது.(40:12).

நல்ல வார்த்தைகள் அவன் பக்கம் உயருகிறது. நல்ல அமல்களை அவனே உயர்த்துகிறான். (35:12)

அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமாக இல்லை. அவன் மிக்க உயர்ந்தவனாகவும் மகத்தானவனாகவும் இருக்கின்றான். (2:255).

வானத்தில் இருப்பவன் உங்களை பூமியில் புதையுண்ட செய்து விட மாட்டான் என்று அச்சமற்று இருக்கின்றீர்களா? அந்நேரத்தில் அது (பூமி) நடுங்கி குமுறும். அல்லது வானத்தில் இருப்பவன் உங்கள் மீது கல் மழையை பொழிய மாட்டான் என்று பயமற்று இருக்கிறீர்களா? அவ்வாறாயின், எச்சரிக்கையை (தண்டனையை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள் (67:16-17).

அல்லாஹ்வுடைய சங்கைக்குரிய வேதத்திலே, அல்லாஹ், தான் வானத்திலே இருப்பதை தெளிவுபடுத்தியிருக்கிறான். அதாவது அவன் உயரத்திலே இருக்கிறான் ( என்று தெளிவுபடுத்தி இருக்கிறான்). அது அல்லாஹ் உயர்ந்து (இஸ்தவா) இருக்கிறான் என்று குறிப்பிடும் வசனங்களுக்கு ஏதுவாக அமைகிறது. இதைக் கொண்டு பித்அத் வாதிகளின் கருத்தான அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்கின்ற கருத்து (தவறு என்று) புரிந்து கொள்ளப்படும். இக்கருத்து அசத்தியத்திலும் மிக அசத்தியமானது.இது வழிகெட்ட பித்அத்வாதிகளான ஹுலூலிய்யா பிரிவினரின் கொள்கை ஆகும். அதுமட்டுமின்றி அது இறை நிராகரிப்பும். வழிகேடும், அல்லாஹ்வை பொய்ப்பித்தலும் ஆகும். மேலும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அல்லாஹ் வானத்திலே இருக்கின்றான் என்று கூறுவதில் அவர்களை பொய்ப்பித்தலும் ஆகும். உதாரணமாக நபி ஸல் அவர்கள் கூறியிருப்பதைப் போன்று,

நீங்கள் என் மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா நான் வானத்தில் இருப்பவனின் நம்பிக்கைக்குரியவன் ஆவேன்.(புகாரி- 4351).

அது மட்டுமின்றி, மிஃராஜ் சம்பவத்தில் வருகின்ற ஹதீஸ்களும் (அல்லாஹ் வானத்திலே இருக்கின்றான் என்பதற்கு ஆதாரமாக உள்ளன).

மஜல்லத் தஃவா. எண்: 1288.கண்ணியத்திற்குரிய அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறிய ஃபத்வா

ஃபதாவா இ உலமா இ பலதில் ஹராம் | தலைப்பு: அகீதா |[ ஃபத்வா எண் : 08 ]

தமிழாக்கம் : ஷெய்க் யூனுஸ் ஃபிர்தவ்ஸி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply