அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம்
| தொடர் 1️⃣ |
திக்ர் மூன்று வகைப்படும்:
- அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் நினைவுகூர்தல், அவனைப் போற்றிப்புகழ்தல், அவன் எந்தக் குறைகளும் அற்றவன் என அவனது தூய்மையைத் துதித்தல் போன்ற செயல்பாடுகள்:
இந்த வகை திக்ரை இரண்டாகப் பிரிக்கலாம்.
1 : துதி செய்பவர் தன்னளவில் அல்லாஹ்வைப் புகழ்வது. உதாரணமாக:
ஸுப்ஹானல்லாஹ் – سبحان الله،
அல்ஹம்துலில்லாஹ் – الحمد لله،
லா இலாஹ இல்லல்லாஹ் – لا اله الا الله،
அல்லாஹு அக்பர்- الله أكبر،
ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி – الله وبحمده..
போன்ற திக்ர்களைக் கூறுவது. இவற்றில் மிகச் சிறந்த ஒரு நபிவழி திக்ர் தான் பின்வரும் திக்ராகும்.
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
2 :அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அவற்றின் எதார்த்தங்களையும் பற்றி எடுத்துரைத்தல்:
உதாரணமாக: அல்லாஹ் அனைத்துப் படைப்புகளினதும் சப்தங்களையும் செவிமடுக்கின்றான், அல்லாஹ்வுக்கு மறையக் கூடிய எந்த ஒன்றும் இல்லை, அவன் அவர்கள் மீது அவர்களது பெற்றோர்களை விட இரக்கம் காட்டக் கூடியவன் போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடலாம்.
குறிப்பாக இவற்றில் மிகச் சிறந்தது, அல்லாஹ் தன்னைப் பற்றி அல்குர்ஆனிலும் நபி ﷺ அவர்களின் ஹதீஸின் மூலமாகவும் புகழ்ந்துரைத்திருக்கின்ற விடயங்களை மாற்று வியாக்கியானங்களைக் கூறி திரிவுபடுத்தாமல், கருத்தை மறுக்காமல், படைப்புகளுக்கு ஒப்பிடாமல், அவ்வாறே எடுத்துரைத்து அவனைப் புகழ்வதாகும்.
இந்த வகை திக்ரை இன்னும் ஒரு பார்வையில் மூன்றாகப் பிரிக்கலாம்.
1 : ஹம்த்: அல்லாஹ்வின் மீது நேசம் கொண்டு, அவனில் திருப்தி அடைந்து, அவனது பூரணமான பண்புகளைக் கொண்டு அவனைப் புகழ்வதைக் குறிக்கும்.
2 :ஸனா: மேற்படி அவனது புகழை மீண்டும் மீண்டும் கூறுவது ஸனா எனப்படும்.
3 : மஜ்த்: கண்ணியம், மகத்துவம், பெருமை, ஆட்சி அதிகாரம் போன்ற அவனது பண்புகளைக் கொண்டு அவனைப் புகழ்வதை மஜ்த் எனப்படும்.
மேற்படி மூன்று வகையான புகழ்களையும் ஸூறதுல் பாத்திஹஹ்வின் ஆரம்பத்தில் பார்க்கலாம். அடியான் ‘அல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன்’ என்று சொன்னால், حمدني عبدي என்னுடைய அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று அல்லாஹ் கூறுவான். அடியான் ‘அர்றஹ்மானிர்றஹீம்’ என்று சொன்னால், أثنى عليّ عبدي என்னுடைய அடியான் என்னைப் பாராட்டி விட்டான் என்று அல்லாஹ் கூறுவான். அடியான் ‘மாலிகி யௌமித்தீன்’ என்று கூறினால், مجدني عبدي என்னுடைய அடியான் என்னைக் கீர்த்தித்து விட்டான் என்று அல்லாஹ் கூறுவான். (பார்க்க: முஸ்லிம் 395)
- இரண்டாவது வகை திக்ர்: அல்லாஹ்வின் ஏவல்களையும், விலக்கல்களையும், சட்டங்களையும் ஞாபகப்படுத்தல்:
இந்த வகை திக்ரையும் இரண்டாகப் பிரிக்கலாம்.
1 : இன்ன விடயங்களை அல்லாஹ் ஏவியிருக்கின்றான், இன்ன விடயங்களைத் தடுத்திருக்கின்றான், இன்ன விடயங்களை விரும்புகின்றான், இன்ன விடயங்களை வெறுக்கின்றான் என்று அவனைப் பற்றிக் கூறி ஞாபகப்படுத்தல்.
(அதாவது மார்க்க விடயங்களைக் கற்றல், கற்பித்தல்)
2 : அல்லாஹ்வின் கட்டளைகள் வருகின்ற பொழுது உடனடியாக அதனை நிறைவேற்றுவதன் மூலமும் அவனது விலக்கல்கள் வருகின்ற பொழுது அவற்றில் இருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்வதன் மூலமும் அவனை ஞாபகப்படுத்தல்.
(அதாவது அல்லாஹ்வின் நினைவால் அமல் செய்தல்)
மேற்படி அனைத்து வகையான திக்ர்களும் ஒரு அடியானிடம் ஒரு சேர இருந்தால் அவனது திக்ரே மிகச் சிறந்த திக்ராகும். மேலும் அதிக பயன் தரக்கூடிய திக்ராகும்.
குறிப்பாக அல்லாஹ்வின் சட்டங்களை எடுத்து நடக்கின்ற திக்ர் மிக முக்கியமான திக்ராகும். அதை அடுத்து அவனது சட்டங்களை ஞாபகப்படுத்துகின்ற திக்ரும் முக்கியமானதாகும். நிய்யத் – எண்ணம் சரியாக இருந்தால், இவை இரண்டும் மிகச் சிறப்பான திக்ர்களாகும். (அதாவது மார்க்கத்தைக் கற்றல், கற்பித்தல், அமல்செய்தல்)
- அல்லாஹ்வை திக்ர் செய்வதில் மூன்றாவது வகை: அதுதான் அவன் செய்த அருட்பாக்கியங்களையும் உதவிகளையும் நினைத்துப் பார்த்தல். இதுவும் ஒரு சிறந்த திக்ராகும்:
மேற்படி ஐந்து முறையிலான திக்ர்களும் சில வேலைகளில் உள்ளத்தினாலும் நாவினாலும் ஒரு சேர நடைபெறலாம். அதுவே மிகச் சிறந்ததாகும். சில பொழுதுகளில் உள்ளத்தினால் மாத்திரம் நடைபெறலாம். அது இரண்டாம் தரமாகும். இன்னும் சில நேரங்களில் நாவினால் மாத்திரம் நடைபெறலாம். அது மூன்றாம் தரமாகும்.
வெறும் நாவினால் மாத்திரம் நடைபெறும் திக்ரை விட உள்ளத்தினால் நடைபெறும் திக்ர் சிறந்து விளங்குவதற்குக் காரணம் யாதெனில், அதுவே அல்லாஹ்வைப் பற்றிய அறிவையும் அன்பையும் வெட்கத்தையும் அச்சத்தையும் அவன் கண்காணிக்கிறான் என்கின்ற உணர்வையும் விளைவிக்கும். மேலும் அதுவே கடமைகளில் குறை செய்வதையும் பாவங்களில் பொடுபோக்காக இருப்பதையும் தடுத்துவிடும். வெறும் நாவினால் மாத்திரம் மேற்கொள்ளப்படும் திக்ர் இத்தகைய பெரிய விளைவை ஏற்படுத்தாது. ஆனால், அதற்கும் நன்மையுண்டு.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
மேற்கூறப்பட்டவைகள் பெரும்பாலானவை இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஆய்விலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய உசாத்துணை:
الوابل الصيب للإمام ابن القيم
தமிழில் : ஹுஸைன் இப்னு றபீக் மதனி
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: