அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்  – இறுதி தொடர் – 04

பிரயாணத் தொழுகை | இறுதி தொடர் : 04 |

 

பயணத் தொழுகையுடன் தொடர்பான சில அவசியமான குறிப்புகள்

—————————————————–

1) பிரயாணத்தின் போது தொழுகைகளை சுருக்கி தொழுவதன் சட்டத்தை பொறுத்தவரை இரு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன: சில அறிஞர்கள் சுருக்கித் தொழுவது கட்டாயமானது என்று குறிப்பிடுகின்றனர். ஹனபி, ழாஹிரி மத்ஹபினர் இக்கருத்தை கொண்டிருக்கின்றனர். 

இவர்கள் இதற்கு பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கிறார்கள் :

 

1. நபியவர்கள் தமது பிரயாணங்களின் போதெல்லாம் தொழுகைகளை சுருக்கியே தொழுதிருக்கிறார்கள். சுருக்காமல் முழுமையாக தொழுதமைக்கு ஆதாரங்கள் இல்லை.

 

2. இப்னு அப்பாஸ் (றழி) கூறுகிறார்கள்: ‘ அல்லாஹ் உங்களது நபியின் நாவின் மூலமாக ஊரிலிருப்போருக்கு நான்கு றக்அத்துகளாகவும் பயணிகளுக்கு இரண்டு றக்அத்துகளாகவும் தொழுகையை கடமையாக்கியுள்ளான்..'(முஸ்லிம்)

 

அதே வேளை, பெரும்பாலான அறிஞர்கள் பயணங்களில் சுருக்கித் தொழுவது கடமையல்ல, விரும்பத்தக்கது. முழுமையாக தொழுதாலும் நிறைவேறும் என்று குறிப்பிடுகின்றனர். மாலிகி, ஷாபிஈ, ஹம்பலி மத்ஹபினர் இக்கருத்தை கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான அறிஞர்களின் இக் கருத்தே வலுவானதாகும். இதற்கான ஆதாரங்களாக,

 

1. அல்லாஹ் கூறுகிறான்: ‘…தொழுகையை சுருக்கித் தொழுவது உங்கள் மீது குற்றமில்லை’ (4:101).

 

மேற்படி வசனத்தில் ‘சுருக்கித் தொழுவது குற்றமில்லை’ என்று கூறப்பட்டிருப்பது அது விரும்பத்தக்கது என்ற அர்த்தத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளது. கடமை என்றிருந்தால் அல்லாஹ் அதை அதற்குரிய வார்த்தைப் பிரயோகத்துடன் பயன்படுத்தியிருப்பான்.

 

2. உஸ்மான் (றழி), இப்னு மஸ்ஊத் (றழி), ஆஇஷா (றழி) போன்ற ஸஹாபாக்கள் பயணங்களின் போது சுருக்காமல் முழுமையாக தொழுதிருக்கிறார்கள். ஏனைய ஸஹாபாக்கள் முழுமையாக தொழுவதை நிராகரிக்கவுமில்லை. சுருக்கித் தொழுவது கடமை என்றிருந்தால் அவர்கள் நிச்சயமாக சுருக்கியே தொழுதிருப்பார்கள்.

 

3. நபியவர்கள் சுருக்கித் தொழுவதை பற்றி குறிப்பிடும் போது ‘அது அல்லாஹ் வழங்கிய ஸதகா’ என்று கூறினார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்). இவ்வார்த்தை அது விரும்பத்தக்கது என்பதையே காட்டுகிறது.

 

எனவே, பயணிகள் நான்கு றக்அத் தொழுகைகளை முழுமையாக தொழுவது ஏற்றுக்கொள்ளப்படும் என்ற போதிலும் இரண்டாக சுருக்கித் தொழுவது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது என்பதால் பயணங்களின் போது சுருக்கித் தொழுது அல்லாஹ்வின் விருப்பத்தை பெற முயற்சிக்க வேண்டும்.

 

2)சுருக்கித் தொழுவதாயின் ஒருவர் தனது சொந்த வதிவிடத்தை தாண்ட வேண்டும். சொந்த ஊரில் சுருக்கித் தொழ முடியாது. 

 

நபியவர்கள் ஹஜ்ஜுக்காக மதீனாவில் இருந்து புறப்பட்டுச் செல்ல ஆயத்தமான போது மதீனாவில் ளுஹ்ர் தொழுகையை சுருக்காமல் நான்கு றக்அத்துகள் தொழுதுவிட்டு, பின்னர் மதீனாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்து துல்ஹுலைபா என்ற இடத்தை அடைந்த போது அஸ்ர் தொழுகையை இரண்டாக சுருக்கித் தொழுதார்கள் (புஹாரி).

 

சுருக்கிதொழுவதாயின் ஊரைத் தாண்ட வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாகும்.

 

3)இரு தொழுகைகளை பயணத்தில் சேர்த்து சுருக்கித் தொழுத பின் இரண்டாவது தொழுகை நேரத்தில் ஊரை வந்தடைந்து விட்டால் பயணத்தில் சேர்த்து தொழுத தொழுகையை மீண்டும் தொழ வேண்டியதில்லை. ஏனெனில் அவர் தன் கடமையை நிறைவேற்றிவிட்டார். 

 

உதரணமாக ளுஹ்ரையும் அஸ்ரையும் அல்லது மஃரிபையும் இஷாவையும் பயணத்தில் சேர்த்து சுருக்கித் தொழுதுவிட்டு, பின்னர் அஸ்ர் வேளையில் அல்லது இஷா நேரத்தில் ஊரை வந்தடைந்துவிட்டால் மீண்டும் அஸ்ரை அல்லது இஷாவை ஊரில் தொழ வேண்டிய அவசியமில்லை. ஆயினும் ஊர் வந்த பின் அத் தொழுகையை ஜமாஅத்துடன் இணைந்து தொழுதால் அவருக்கு அது ஸுன்னத்தான தொழுகையாக நிறைவேறும்.

 

4)பயணத்தின் போது முன் பின் ஸுன்னத்தான தொழுகைகளில் ஸுப்ஹுடைய முந்திய ஸுன்னத் தொழுகையை தவிர ஏனைய முன் பின் ஸுன்னத்தான தொழுகைகளை நபியவர்கள் தொழுபவர்களாக இருக்கவில்லை. ஸுப்ஹுடைய முந்திய ஸுன்னத்தை ஊரிலிருக்கும் போது மட்டுமன்றி, பயணத்திலும் தொழுதிருக்கிறார்கள். அவ்வாறே வித்ர், ளுஹா போன்ற ஏனைய ஸுன்னத்தான தொழுகைகளை பயணத்திலும் விடாது தொழுதிருக்கிறார்கள். 

 

5)இரு தொழுகைகளை சேர்த்து தொழும் போது முதலாவது தொழுகைக்கு முன்னர் அதானும் இகாமத்தும் கூறுவதும் முதலாவது தொழுகையை முடித்த பின் தஸ்பீஹ், திக்ர், துஆ எதுவும் ஓதாமலே எழுந்து இகாமத் மாத்திரம் கூறி இரண்டாவது தொழுகையை தொழுவதும் நபியவர்களின் நடைமுறையாகும்.

 

நபியவர்கள் அறபாவில் தங்கியிருந்த போது ஒரு அதான், இரு இகாமத்துகள் கூறி இரண்டிரண்டு தொழுகைகளாக சேர்த்து தொழுதார்கள். பின்னர் முஸ்தலிபா சென்று அங்கே ஒரு அதான், இரண்டு இகாமத்துகள் கூறி மஃரிபையும் இஷாவையும் சேர்த்து தொழுதார்கள். இரு தொழுகைகளுக்கிடையில் தஸ்பீஹ், திக்ர் எதுவும் ஓதவில்லை (புஹாரி, நஸாஈ).

 

6)ஒருவர் தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தை விட்டு திருமணத்தின் காரணமாவோ, தொழில் நிமித்தமோ வேறு ஒரு பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேறிவிட்டால் குடியேறிய பிரதேசமே அவரது சொந்த ஊராகக் கருதப்படும். தனது தேவைகளுக்காக தான் பிறந்த ஊருக்கு வருகின்ற போது அவர் அங்கு பிரயாணியாக கருதப்படுவார். எனவே அங்கு தொழுகைகளை சேர்த்து சுருக்கித் தொழ முடியும்.

 

நபியவர்கள் பிறந்து வளர்ந்த பிரதேசம் மக்காவாக இருந்த போதிலும் பின்னர் மதீனாவை வாழ்விடமாக மாற்றிய பின் மக்கா வெற்றிக்காகவும் ஹஜ்ஜுக்காகவும் மக்காவுக்கு வந்த போது நபியவர்கள் மக்காவில் தொழுகைகளை சேர்த்து சுருக்கியே தொழுதார்கள் (புஹாரி, முஸ்லிம்).

 

7)சுருக்கித் தொழுகின்ற ஒரு பிரயாணியை ஊர்வாசி ஒருவர் பின்பற்றித் தொழுதால், பிரயாணி ஸலாம் கொடுத்தவுடன் ஊர்வாசி எழுந்து மீதமுள்ளதை தொழவேண்டும்.

 

இதற்கான ஆதாரம்:

 

ஹஜ்ஜுக்காக மக்கா வந்த நபியவர்கள் அங்கே சுருக்கித் தொழுத வேளை அவர்களை பின்பற்றி மக்காவாசிகளும் தொழுதார்கள். ஸலாம் கொடுத்தவுடன் எழுந்து மீதமுள்ள தொழுகையை முழுமையாக தொழுமாறு நபியவர்கள் மக்காவாசிகளை பணித்தார்கள்.

 

அதே நேரம் ஒரு பிரயாணி ஊர்வாசியான இமாமை பின்பற்றினால், – ஆரம்பத்திலிருந்து பின்பற்றினாலும் இடை நடுவிலே பின்பற்றினாலும் – ஊர்வாசி போன்று முழுமையாக நான்கு றக்அத்துகள் தொழுவார். ஏனெனில் இமாமை பின்தொடர்வது மஃமூமின் மீதுள்ள பொறுப்பாகும். இதுவே மிகப் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

 

ஒரு தடவை இப்னு அப்பாஸ் (றழி) அவர்களிடம் ஒருவர் ‘சுருக்கித் தொழுகின்ற நிலையில் இருக்கும் ஒரு பயணி ஊர்வாசியான இமாமை பின்பற்றி முழுமையாக தொழுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்? ‘ என்று வினவிய போது ‘அவ்வாறு செய்வதுதான் – அதாவது பிரயாணி ஊர்வாசியான இமாமை பின்பற்றித் தொழும் போது சுருக்காமல் முழுமையாக தொழுவது – நபியவர்களின் நடைமுறை’ என்று கூறினார்கள் (முஸ்னத் அஹ்மத்).

 

இப்னு உமர் (றழி) அவர்கள் பயணத்தில் இருக்கும் போது தனியே தொழ நேர்ந்தால் சுருக்கி இரண்டு றக்அத்துகள் தொழுவார்கள், இமாமை பின்தொடர்ந்தால் அவரைப் பின்பற்றி நான்கு றக்அத்துகள் தொழுவார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்).

 

8)ஒரு தற்காலிக பிரயாணி அல்லது வேறு பிரதேசத்தில் நீண்ட காலமாக வசிப்போர் அப்பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுக்கு சென்று ஜமாஅத்துடன் இணைந்து முழுமையாக தொழுவதற்கான வசதியையும் அவகாசத்தையும் பெற்றிருந்தால், அவ்வாறு ஜமாஅத்துடன் இணைந்து தொழுவதால் அவர்களுக்கு பயண தடங்கல்கள் அல்லது வேறு நெருக்கடிகள் ஏற்படாது என்றிருந்தால் சுருக்கித் தொழாமல் ஜமாஅத்துடன் இணைந்து முழுமையாக தொழுவது சிறந்ததாகும்.

 

அல்லாஹு அஃலம்.

 

இத்துடன் இத் தொடர் நிறைவுபெறுகிறது. வல்ல அல்லாஹ் இப்பணியை அவனது தனிப் பெரும் கருணையினால் ஏற்று அங்கீகரிப்பானாக. இத்தொடரை எழுதி முடிப்பதற்கும் முகநூல் நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் நான் பயன்படுத்திய அத்தனை நூல்களின் ஆசிரியர்கள், அறிஞர்களுக்கும் அல்லாஹ் தன் எல்லையற்ற அருளை சொரிவானாக.

 

துணை நின்ற நூல்கள் :

—————————————–

1. அல்மஜ்மூஃ ஷர்ஹுல் முஹத்தப், இமாம் நவவி (றஹ்)

 

2. மஜ்மூஉ பதாவா, இமாம் இப்னு தைமியா (றஹ்)

 

3. ஸாதுல் மஆத் பீ ஹத்யி கைரில் இபாத், இமாம் இப்னுல் கய்யிம் (றஹ்)

 

4. மஜ்மூஉ பதாவா, அல்லாமா இப்னு பாஸ் (றஹ்)

 

5. மஜ்மூஉ பதாவா, அல்லாமா இப்னு உதைமீன் (றஹ்)

 

6. தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வ ஸஹீஹிஸ் ஸுன்னா, அஷ்ஷெய்க் ஆதில் பின் யூஸுப்

 

7. ஸஹீஹு பிக்ஹிஸ் ஸுன்னா வ அதில்லதுஹூ, அஷ்ஷெய்க் அபூமாலிக் கமால்

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி)

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply