ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் – தொடர் – 01

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 1️⃣

ஸஃபர் صفر என்பது இஸ்லாமிய, அரேபிய மாதங்களில் இரண்டாவது மாதமாகும். இந்த மாதத்திற்கு என்று எந்த ஒரு விசேடமும் தனித்துவமும் இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாமிய மாதங்கள் சந்திர மாதங்களாகும். சந்திர மாதங்கள் மற்றும் அவற்றின் நாட்களின் அடிப்படையிலேயே முஸ்லிம்களாகிய நாம் எங்களுடைய மார்க்க வழிபாடுகளை நிறைவேற்றுகின்றோம்.

இஸ்லாத்தில் சில மாதங்களுக்கு அல்லது நாட்களுக்கு என்று சில தனித்துவங்கள் இருக்கின்றன.

உதாரணமாக: றமளான் மாதம் மாதங்களில் தனித்துவமான சிறப்பு மிக்க மாதம். அதே போன்று யுத்தம் தடைசெய்யப்பட்ட நான்கு மாதங்கள் இருக்கின்றன. ஹஜ்ஜுக்குரிய மூன்று மாதங்கள் இருக்கின்றன. இரவுகளில் லைலத்துல் கதர் இரவு சிறந்தது. பகல்களில் துல்ஹிஜ்ஜஹ் முதல் பத்துப் பகல்களும் சிறந்தவை. அவற்றிலும் 9, 10 ஆகிய அறஃபஹ் மற்றும் ஹஜ் பெருநாள் தினங்கள் மிகச் சிறந்தவை. இவ்வாறான எந்தச் சிறப்பும் ஸஃபர் மாதத்திற்கு இல்லை.

 

இஸ்லாத்தில் சிறப்பான காலங்கள் என்பதன் அர்த்தம் என்ன?

அல்லாஹ் தனது படைப்புக்களில் சிலதை விட சிலதைச் சிறப்பித்து இருக்கின்றான். அவற்றில் சில காலங்களை விட சில காலங்களைச் சிறப்பித்து இருக்கின்றான். இஸ்லாத்தில் ஒரு காலத்தை விட ஒரு காலம் சிறப்பானது என்பதன் அர்த்தம் சிறப்பிக்கப்படாத காலங்கள் மோசமானவை என்பது அல்ல. மாற்றமாக பொதுவான நல்ல அமல்களை அல்லது குறிப்பிட்ட சில நல்ல அமல்களை அந்தச் சிறப்பான காலங்களில் செய்வது ஆர்வமூட்டப்படுகிறது அல்லது கட்டாயமாக்கப்படுகிறது என்பதுதான் அதன் அர்த்தமாகும். அதாவது றமளான் மாதம் சிறந்தது என்பதன் அர்த்தம் அதில் நோன்பு, இரவு வணக்கம், ஏனைய வணக்கங்களைச் செய்ய வேண்டும் என்பதுதான். முஹர்ரம் மாதம் சிறந்த மாதங்களில் ஒன்று என்பதன் அர்த்தம் அந்த மாதத்தில் யுத்தம் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் நோன்பு நோற்பதற்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது என்பதாகும். துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் சிறப்பானவை என்பதன் அர்த்தம் அந்நாட்களில் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்வதும் ஏனைய பொதுவான அனைத்து வணக்கங்களிலும் ஈடுபடுவதும் வரவேற்கப்படுகிறது என்பதாகும். இந்த நாட்கள் அல்லது மாதங்கள் சிறப்பானவை என்பதன் அர்த்தம் இவற்றில் வியாபாரம், திருமணம், வீடு குடி போகுதல் போன்ற உலக விடயங்களை ஆரம்பிப்பதற்குரிய நல்ல காலம் என்பதல்ல. சில கலாச்சாரங்களில் இருப்பதைப் போன்று எமது உலகக் காரியங்களைச் செய்வதற்கு இந்தக் காலம் சிறந்த காலம், இந்தக் காலம் கெட்ட காலம் என்று இஸ்லாத்தில் இல்லை. உலக காரியங்களில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த விடயங்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றனவோ அவற்றை அந்தந்த நேரங்களில் செய்வதற்கு இஸ்லாம் ஆர்வமூட்டி இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு நாளில் அல்லது மாதத்தில் எந்த ஒரு உலக காரியத்தையும் ஆரம்பிக்கக் கூடாது அல்லது ஆரம்பிக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டவில்லை. குறிப்பிட்ட காலத்தை, நேரத்தை பீடையாகக் கருதுவது இஸ்லாத்திற்கு முற்பட்ட ஜாஹிலிய்யஹ் கால அரேபியர்களின் வழிமுறையாகும். அதனை இஸ்லாம் முற்றாகத் தகர்த்தெறிந்துள்ளது. அதேபோன்று பல்வேறு கலாச்சாரங்களிலும் இந்த நம்பிக்கை இருக்கிறது. அக்கலாச்சாரங்களுடன் ஒன்றிணைந்து வாழும் சில முஸ்லிம் சமூகங்களிலும் இவ்வாறான மூடநம்பிக்கைகள் பரவிக் காணப்படுகின்றன.

 

ஸஃபர் மாதம் பீடை மாதம் அல்ல:


சில முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று கருதுகின்றனர். இது இஸ்லாத்தில் இருந்து கொண்டு ஜாஹிலிய்யத்தைப் பின்பற்றும் செயலாகும். ஜாஹிலிய்யஹ் காலத்தில் ஷவ்வால் மாதத்தில் திருமணம் முடிப்பது பீடை என்ற நம்பிக்கை இருந்துள்ளது. அதனைத் தகர்த்தெறியும் வகையில் நபி ﷺ அவர்கள் ஆஇஷஹ் றளியல்லாஹு அன்ஹா அவர்களை ஷவ்வால் மாதத்தில் மணமுடித்துக் கொண்டார்கள். இதனை அவர்களே அறிவிக்கும் பின்வரும் ஹதீஸில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

عن عائشة، قالت: «تزوجني رسول الله ﷺ في شوال، وبنى بي في شوال، فأي نساء رسول الله ﷺ كان أحظى عنده مني؟» صحيح مسلم 3483

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் என்னை ஒரு ஷவ்வால் மாதத்தில் மணமுடித்துக் கொண்டார்கள். இன்னொரு ஷவ்வால் மாதத்தில் என்னோடு இல்லறத்தை ஆரம்பித்தார்கள். அவர்களது மனைவியரில் அவர்களிடம் என்னைவிட மிகவும் விருப்பமான பெண் யார்தான் இருந்தார்? (முஸ்லிம் 1423)

அதேபோன்று ஸஃபர் மாதத்தையும் அறியாமைக் கால மக்கள் பீடை மாதமாகக் கருதி இருந்தார்கள் என்பதை பல அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாக உள்ளது.

عن أبي هريرة، عن النبي ﷺ قال: «لا عَدْوى، ولا طِيَرَةَ، ولا هامَةَ، ولا صَفَرَ.» البخاري 5757

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல்) தொற்று நோய் கிடையாது. சகுனம் கிடையாது. (சகுனமும்) கிடையாது. ஸஃபர் (மாதத்தில் பீடை) கிடையாது. (புகாரி 5757, முஸ்லிம் 2220)

இந்த ஹதீஸில் ஸஃபர் கிடையாது என்பதன் அர்த்தம் ஸஃபர் மாதத்தில் பீடை கிடையாது; அதனை பீடை மாதமாகக் கருதுவது கூடாது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருப்பதாக பல அறிஞர்கள் கருதுகின்றனர். இங்கு ஸஃபர் என்பது ஒட்டகத்தின் வயிற்றில் ஏற்படும் ஒரு வகை தொற்று நோய் என்றும் சிலரால் விளக்கம் கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தை ஜாஹிலிய்யஹ் மக்கள் சில காலங்களில் முஹர்ரம் மாதத்திற்குப் பதிலாக யுத்தம் தடை செய்யப்பட்ட மாதமாக மாற்றி அல்லாஹு தஆலா ஏற்படுத்திய மாத விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதை மேற்படி ஹதீஸ் குறிக்கும் என்று வேறு சிலர் கருதுகின்றனர். இமாம் இப்னு றஜப் றஹீமஹுல்லாஹ் அவர்கள் முதல் கருத்தையே பலமானதாகக் கருதுகிறார்கள்.
எனவே, அது எவ்வாறாயினும் ஒரு மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவது ஜாஹிலிய்யஹ் கால நம்பிக்கைகளில் ஒன்றாகும். அதனை இஸ்லாம் களை எடுத்துள்ளது.

ஸஃபர் மாதத்தைப் பீடை பிடித்த மாதமாகக் கருதுவது மூடநம்பிக்கையே:

அல்லாஹ் எந்த ஒரு காலத்தையும் அனைவருக்கும் மோசமான விளைவுகள் நடக்கக் கூடியதாகப் படைக்கவில்லை. எந்த ஒரு காலமாக இருந்தாலும் அதில் சிலருக்கு நலவும் சிலருக்குக் கெடுதியும் ஏற்படலாம். யாருக்கு நலவு ஏற்பட வேண்டும் யாருக்கு கெடுதி ஏற்பட வேண்டும் என்று விதிப்பது அல்லாஹ்வே. அவனது முழுமையான ஞானத்தின் அடிப்படையில் அவற்றைத் தீர்மானிக்கின்றான். உதாரணமாக முஹர்ரம் மாதத்தில் பத்தாவது நாளில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைக் கொடுத்தான் பிர்அவ்ன் எனும் கொடுங்கோல் இறை நிராகரிப்பாளனை அழித்தான். அதே முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு நாளில் ஒரு நல்ல மனிதருக்கு நலவும் இன்னொரு நல்ல மனிதருக்குக் கெடுதியும் ஏற்படுகிறது. அது அல்லாஹ்வின் ஏற்பாடாகும். அதற்கும் அந்தக் காலத்துக்கும் சம்பந்தமில்லை.
ஸஃபர் மாதத்தில் நபி ﷺ அவர்கள் எந்த ஒரு பணியையும் இடைநிறுத்தவில்லை. வழமையாகத் தேவைக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுவார்களோ அவ்வாறே செயல்பட்டார்கள். உதாரணமாக: நபி ﷺ அவர்களின் காலத்தில் ஸஃபர் மாதத்தில் தான் கைபர் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டது. அம்மாதத்தில் முழுமையாக அல்லது அதிகமாக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று இருந்தால் அதனை அவர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்திருப்பார்கள். அதனடிப்படையில் அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். எனவே இஸ்லாத்தின் பார்வையில் ஸஃபர் மாதத்தை அல்லது அதில் வரும் கடைசிப் புதன் கிழமையை மோசமான காலமாகக் கருதுவதானது ஜாஹிலிய்யத் எனும் இஸ்லாத்திற்கு முரணான அறியாமையே; மூடநம்பிக்கையே.

தொடரும் இன்ஷாஅல்லாஹ் …

 

-ஹுஸைன் இப்னு றபீக் மதனி ( Sunnah Academy Telegram Channel )

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply