இசை, நடனம், மற்றும் பாடல் தொடர்பான இஸ்லாத்தின் தீர்ப்பு – பாகும் 1

கேள்வி:

இசை, நடனம் மற்றும் பாடல் என்பன இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று நான் பொதுவாகவே கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனது கேள்வி:ஆண், பெண் கலப்பில்லாமலும் மது பரிமாறப்படாமலும் இருக்கும் நிலையில், இசை, பாடல் மற்றும் நடனம் என்பன இடம்பெறுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று நிறைய கட்டுரைகள் இருப்பதை நான் ஒரு இணையதளத்திற்குச் சென்ற போது பார்த்தேன்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைத்து நபியவர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்ததாக நிரூபிக்க முயல்கின்றனர்.

எனக்கு இப்போது சந்தேகமாக இருக்கிறது.

எனவே, இசை, நடனம் மற்றும் பாடல் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பை எனக்கு விளக்க முடியுமா?

ஜஸாகுமுல்லாஹு ஹைரா.

பதில்:

“அல் மஆஸிப் ” என்பது “அல்மஃஸிபஹ்” என்பதன் பன்மை சொல்லாகும்.

இப்பதமானது “இசைக் கருவிகள்” எனும் கருத்தைக் கொடுக்கின்றது (பத்ஹுல் பாரி 10/55)

இசைக்கப்படும் கருவிகள் என்பதையே இச்சொல் குறிப்பதாக அல்மஜ்மூஃ எனும் நூலின் 11/577 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அல்மஆஸிப்”என்பது பாடல், கேளிக்கைக் கருவிகள், கேளிக்கை இடங்களில் எழுப்பப்படும் ஓசைகள் என்பன போன்ற கருத்துக்களை கொடுக்கிறது என்ற ஜௌஹரி (றஹ்) அவர்களின் செய்தியை அல் குர்திபி (றஹ்) அவர்கள் பதிவுசெய்கிறார்கள்.

“அல்மஆஸிப்”என்பது அடித்து ஒலி எழுப்பப்படும் “ரபான்கள்” போன்ற கருவிகளைக் குறிக்கும். ( பத்ஹுல் பாரி 10/55)

இசை மற்றும் நடனம் என்பன ஹராம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸ் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள்*:

وَمِنَ النَّاسِ مَنْ يَّشْتَرِىْ لَهْوَ الْحَدِيْثِ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ‌

 

மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுப்பதற்கு (முயல்கிறார்கள்)

(அல்குர்ஆன் : 31:6)

“வீணான பேச்சுக்கள்”

என்பது இசையைக் குறிக்கும் என்று இந்த சமூகத்தின் மாமேதை இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இது “பறை” என்ற மேளம் முழங்கும் கருவியையே குறிக்குமென முஜாஹித் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (தப்ஸீருத் தபரீ 21/40 )

புல்லாங்குழல் மற்றும் இசை தொடர்பாகவே இந்த வசனம் இறங்கியதாக ஹஸனுல் பஸரி (றஹ் ) அவர்கள் கூறுகிறார்கள்

( தப்ஸீர் இப்னு கதீர் 3/451)

ஹராமான வீணான பேச்சுக்கள், குப்ர் மற்றும் பாவங்களை தூண்டும் கருத்துக்கள், சத்தியத்தை மறுத்துரைக்கும் வகையில் அமைந்த பேச்சுக்கள், புறம், கோள், பொய், ஏசுதல், வசைபாடுதல்,உலகம் மற்றும் மறுமை ஆகிய இரண்டிற்கும் எந்தவகையிலும் பயணைக்கொடுக்காத கவனத்தை சிதறடிக்கும் நிகழ்வுகள்,பாடல்,புல்லாங்குழல் போன்ற அனைத்தையும் “لهو الحديث ”

என்ற சொற்பிரயோகம் குறிக்கிறது என்று ஸஃதி (றஹ்)அவர்கள் கூறுகிறார்கள்.

(தப்ஸீருஃ ஸஃதி 6/150)

 

இமாம் இப்னு அல் கட்டிப் (றஹ்) கூறினார்கள்:

‘இதற்கு இசை என்று சஹாபாக்களும் தாபியீன்களும் விளமளித்திருப்பது போதுமானதாகும்.

இந்த விளக்கத்தினையே இப்னு அப்பாஸ் மற்றும் இப்னு மஸ்ஊத்( றழி) ஆகிய இருவரும் கூறியுள்ளார்கள் என்ற செய்தி ஆதாரபூர்வமானதாக அமைந்துள்ளது.

: ” ومن الناس من يشتري لهو الحديث ”

என்ற இந்த வசனத்தை பற்றி இப்னு மஸ்ஊத் (றழி) அவர்களிடம் நான் விளக்கம் கேட்ட போது அல்லாஹ் மீது சத்தியமாக இது இசையை பற்றி தான் பேசுகிறது என்று மூன்று தடவைகள் திரும்ப திரும்ப பதிலளித்தார்கள் என அபுஸ் ஸஹ்பாஃ குறிப்பிடுகிறார்கள்.

இந்த கருத்தினையே இப்னு உமர் (றழி) அவர்களும் கூறியுள்ளார்கள் என்ற செய்தி ஆதாரபூர்வமான செய்தியாக பதிவாகியுள்ளது.

“لهو الحديث”

என்பதற்கு “இசை ” என்றோ அல்லது மக்கா வாசிகள் அல் குர்ஆனை செவிமடுப்பதிலிருந்து அவர்களின் கவனத்தை திருப்புவதற்கு நழ்ர் இப்னுல் ஹாரிஸ் அவர்கள் கூறிய அறபியரல்லாத அரசர்கள் மற்றும் உரோமன மன்னர்களின் “கதைகள்” என்றோ விளக்கப்பட்டிருப்பதில் எதுவித முரண்பாடுகளும் கிடையாது.

இவை இரண்டுமே لهو الحديث

என்பதையே குறிக்கின்றன.

எனவே தான் இப்னு அப்பாஸ் (றழி)அவர்கள் “لهو الحديث”

என்பது இசை மற்றும் போலியான விடயங்களை குறிக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஸஹாபாக்களில் சிலர் “لهو الحديث”

என்பதற்கு இதை விளக்கமாக கூறுகின்றனர் வேறு சிலர் மற்றதை விளக்கமாக கூறுகின்றனர் இன்னுமொரு சாரார் இவ்விரண்டையும் இணைத்து விளக்குகின்றனர்.

அரசர்களின் செய்திகள் மற்றும் கதைகளை விட இசையானது மிக கேளிக்கைக்குரியதும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

இசைதான் விபச்சாரத்தின் மந்திர வாசகம், நயவஞ்சகத்தின் பிறப்பிடம், ஷைத்தானின் ஷிர்க் எனும் வலை, புத்தியை மழுங்கடிக்கச் செய்யும் மது.

அல் குர்ஆனை செவிமடுப்பதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் வேறெதற்குமில்லாத அபார ஆற்றல் இசைக்குண்டு.

ஏனெனில்,மனித மனங்கள் இதனையை அதிகம் நேசிக்கின்றன மோகம் கொள்கின்றன.

அறிவு இல்லாமல் அல்லாஹ்வின் பாதையில் இருந்து வழிதவறச் செய்வதற்கும் அதை கேலிக்கூத்தாக எடுத்துக் கொள்வதற்காகவும் அல்குர்ஆனை செவியேற்க விடாமல் வீணான பேச்சுக்களை கூறுவதை இந்த இறைவசனங்கள் எடித்துரைக்கின்றன.

அல் குர்ஆன் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவன் அவற்றைக் கேட்காதவனைப் போல் – அவன் இரு காதுகளிலும் செவிட்டுத் தனம் இருப்பது போல், பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான்.

மேலும், அதிலிருந்து ஏதாவது தெரிந்தால், அதை அவன் கேலி செய்கிறான்.

ஆக மொத்தத்தில் நம்பிக்கையற்ற இறை நிராகரிப்பவர்களிடமிருந்து தான் இது நடக்கும்.

மேலும் இதில் சில பாடகர்கள் மீதும் இசையை கேட்பவர்கள் மீதும் நடந்தாலும் அவர்களுக்கும் இந்த எடித்துரைப்பில் ஒரு பங்குண்டு.’

(இகாததுல் லஹ்பான் 259-1/258)

அல்லாஹ் கூறுகிறான்

وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ

“இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்.

உங்களால் முடியுமானவர்களை நீங்கள் வழிகெடுங்கள்.

அவரது “கூப்பாடு” என்பது இசை மற்றும் பொய் என்பவற்றைக் குறிக்குமென்று முஜாஹித் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

اَفَمِنْ هٰذَا الْحَدِيْثِ تَعْجَبُوْنَۙ‏

இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகிரீர்களா?

وَتَضْحَكُوْنَ وَلَا تَبْكُوْنَۙ‏

(இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்களா?

وَاَنْتُمْ سٰمِدُوْنَ‏

அலட்சியமாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.

ஹிம்யரிகளின் மொழி வழக்கில் ” அஸ்ஸமூத்”என்பது இசையைக் குறிக்கும் என்ற செய்தியை இக்ரிமா (றஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறியதாக பதிவுசெய்கிறார்கள்.

“اسمدي لنا”

என்பதன் பொருள் “எங்களுக்கு இசைத்துக்காட்டினான்” என்றொரு கருத்தும் கூறப்படுகிறது.

” அவர்கள் குர்ஆனை செவிமடுக்க ஆரம்பித்தால் இவர்கள் (முஷ்ரிகுகள் ) இசைக்க ஆரம்பித்து விடுவர் ”

அந்த வேளையில் தான் இந்த வசனம் இறங்கியதாக இக்ரிமா (றஹ்) அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.

மேற்படி சந்தர்ப்பத்தில் தான் وانتم سامدون என்ற வசனம் இறங்கியது என்று இப்னு கதீர் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இசை எனும் கருத்தில் பயன்படுத்தப்படும் الغناء என்ற சொல் எமனியச் சொல்லாகும் என்று இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறியதை தனது தந்தையூடாக ஸுப்யானுஸ் தௌரி (றஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அந்த வகையில் اسمد لنا என்றால் எங்களுக்கு பாடிக் காட்டு என்று பொருளாகும்.

இவ்வாறே இக்ரிமா (றஹ்) அவர்கள் கூறியதாகவும் தப்ஸீர் இப்னு கதீரில் காணப்படுகின்றது.

 

அபூ உமாமதல் பாஹிலி அறிவிக்கிறார், அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்:

பாடகிகளை விற்கவும் வேண்டாம் வாங்கவும் வேண்டாம். அவர்களுக்கு இசையை கற்றுக் கொடுக்கவும் வேண்டாம். அவர்களை வைத்து வியாபாரம் செய்வதில் எதுவித நன்மையுமில்லை.அதனால் பெறப்படும் வருமானம் ஹராமாகும்.

 

இது போன்றதொரு விடயத்தினை காரணமாக வைத்து தான் பின்வரும் வசனம் இறங்கியது :

وَمِنَ النَّاسِ مَنْ يَّشْتَرِىْ لَهْوَ الْحَدِيْثِ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰه.

(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்க (முயல்கிறார்கள்)

( ஹஸன் )

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்

விபச்சாரம், பட்டு, மது மற்றும் இசைக்கருவிகளை ஹலாலெனக்கருதும் ஒரு கூட்டம் எனது சமூகத்தில் தோன்றும்

( புகாரி 5590. இமாம் அல்பானி றஹ் அவர்களின் ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா 91படிக்கவும் )

இமாம் புகாரி (றஹ்) அவர்கள் தனது ஸஹீஹுல் புகாரியில் பதிவுசெய்துள்ள இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதாகும் என்று இமாம் இப்னு அல்கய்யிம் கூறுகிறார்.

” மதுவை ஹலாலெனக்கருதி வேறு பெயர்களால் அதனை அழைப்பவர்கள் ” தொடர்பிலான ஹதீஸ்கள் எனும் தலைப்பின் கீழ் இதனை இமாமவர்கள் ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள் என்று இப்னுல் கய்யிம் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இசைக் கருவிகள் பின்வரும் இரண்டு காரணங்களின் அடிப்படையில் ஹராமாகும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைகின்றது.

முதலாவது:

ஹதீஸில் இடம்பெறும் ” يستحلون ” என்ற வாசகம் “இசை” ஹராம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

ஏனெனில் நபியவர்களின் உம்மத்தில் பின்னைய காலங்களில் தோன்றும் ஒரு கூட்டத்தினர் இசையை ஹலாலானதாகப் பார்ப்பார்கள் என்று தான் ஹதீஸின் மேற்படி வாசகம் கூறுகிறது.

இரண்டாவது :

இஸ்லாத்தில் திட்டவட்டமாக ஹராமெனக் கூறப்பட்ட விபச்சாரம் மற்றும் மது என்பவற்றோடு இணைத்துதான் இங்கு இசை குறிப்பிடப்பட்டுள்ளது.

இசை ஹராமானதாக இல்லையென்றிருந்தால், இவைகளோடு இணைத்து இசை கூறப்பட்டிருக்காது (இமாம் அல்பானி றஹ் அவர்களின் ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா 141-1/140)

இசை ஹராம் என்பதையே இந்த ஹதீஸ் குறிக்கும்.

அரபு மொழியியல் அறிஞர்களால் இசைக்கருவிகள் எனும் கருத்திலேயே المعازف எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது என்ற விளக்கங்களை ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (அல்மஜ்மூஃ 11/535)

இது தொடர்பாக இது போன்ற கருத்துகள் தான் ஸஹ்ல இப்னு ஸஅது அஸ் ஸஈதி, இம்ரான் இப்னு ஹுசைன், அப்துல்லாஹ் இப்னு அம்ரு, இப்னு அப்பாஸ், அபூ ஹுறைரா, அபூ உமாமா, ஆயிஷா, அலீ இப்னு அபீ தாலிப்,  அனஸ் இப்னு மாலிக், அப்துர் ரஹ்மான் இப்னு சாபித், அல் காஸி இப்னு அர்ரபீஆ ஆகியோரிடம் இருந்து அறிவிக்கப்படுகிறது

இசை ஹராம் என்பதையே இந்த ஹதீஸ் குறிக்கிறது என்று இகாததுல் லஹ்பானில் இப்னுல் கய்யிம் (றஹ்)அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு நாள் இப்னு உமர் (றழி) அவர்கள் புல்லாங்குழல் இசைப்பதைக் கேட்டார்கள். அப்போது அவர்கள் தங்களது இரண்டு பெருவிரல்களாலும் காதுகளை மூடிக்கொண்டு பாதையை விட்டு விலகி நின்று என்னை பார்த்து நீ ஏதாவது சப்தத்தை கேட்கிறாயா ? என்று கேட்டார்கள் அதற்கு நான் இல்லையென பதில் கூறினேன். அப்போது அவர்கள் தனது காதை திறந்து ஒரு நாள் நான் நபியவர்களுடன் இருந்த போது இது போன்றதொரு சப்தத்தை கேட்டார்கள் அதன்போது இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று கூறினார்கள். இந்த செய்தியை நாபிஃ (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (ஸஹீஹ் அபீ தாவுத்)

இந்த ஹதீஸ் இசை ஹராம் என்பதற்கு ஆதாரமாக அமையாது என்று கஸ்ம் என்பவர் உறுதியாக நம்புகிறார்.

 

ஏனெனில், மேற்படி ஹதீஸில் அவ்வாறு ஹராமாக கருதப்பட்டிருந்தால், நபியவர்கள் இப்னு உமர்( றழி) அவர்களை பார்த்து காதை மூடுமாறு பணித்திருப்பார்கள்.அப்படியே இப்னு உமர் அவர்களும் நாபிஃ (றஹ்) அவர்களை பார்த்து காதை மூடுமாறு கூறியிருப்பார்கள் !

இதற்கு பின்வருமாறு மறுப்பு வழங்கப்படுகிறது.

இப்னு உமர் (றழி)அவர்களுக்கு நபியவர்கள் காதை மூடுமாறு ஏவாமைக்கான காரணம் புல்லாங்குழல் ஓசையானது அவரது காதில் எதேச்சையாக விழுந்ததே அல்லாமல் அவர் அதனை காது கொடுத்து தேவையோடு செவியேற்கவில்லை. இதே நிலையில் தான் நாபிஃ (றஹ்) அவர்களும் இருந்தார்கள். السامع ،المستمع என்ற இந்த இரு சொற்களுக்குமிடையில் மிக நுணுக்கமான வேறுபாடு உண்டு.

 

“தேவையோடு காது கொடுத்து இசையை செவியேற்கும் போதுதான் அது ஹராமானதாக மாறி தடைசெய்யப்படுதோடு பாவச் செயலாகவும் கருதப்படுமென இமாம்கள் ஏகமனதாக தெரிவித்துள்ளனர். இல்லாமல் இசை தானாகவே காதில் விழுவது குற்றமாகாது. நல்லமல்களுக்கு எண்ணங்களின் அடிப்படையிலேயே கூலிகள் வழங்கப்படுகின்றன என்பதற்கிணங்க அல் குர்ஆனையும் தேவையோடு காதுகொடுத்து கேட்கும் போது மாத்திரமே அதற்கு நன்மை வழங்கப்படுமே அல்லாமல் எதேச்சையாக காதில் விழுவதற்கெல்லாம் நன்மை கிடைக்காது.

இவ்வாறே இசை போன்ற தடைசெய்யப்பட்ட விடயங்கள் எதிர்பாராத விதமாக தானாக காதில் விழுவது பாவமாகாது” என்று ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் (றஹ்) அவர்கள் விளக்குகின்றார்கள் (அல்மஜ்மூஃ 78/10)

 

“இப்னு உமர் (றழி) அவர்கள் புல்லாங்குழல் ஓசையை காது கொடுத்து கேட்கவில்லை. நபியவர்கள் பாதையை விட்டு விலகி காதை பொத்தி இருந்தமையினால், சப்தம் நின்று விட்டதா என்பதை தெரிந்து கொள்ளவே உங்கள் காதில் ஏதாவது சப்தம் கேட்கிறதா என்று இப்னு உமர் (றழி) அவர்களிடம் கேட்டார்கள். புல்லாங்குழல் ஓசையானது நிற்கும் வரை நபியவர்கள் தனது காதை திறக்கவுமில்லை பாதைக்கு திரும்பி வரவுமில்லை.

எனவே தேவையின் நிமித்தம் இதனை செவியேற்க அனுமதி உண்டு ” என்று இப்னு குதாமா அல் மக்தஸீ (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (அல் முங்னீ 173/10)

 

மேற்படி இரண்டு இமாம்களினதும் கருத்துக்களாக இருக்கின்ற “எதிர்பாராத விதமாக தானாக இசை காதில் விழுவது தேவையின் நிமித்தம் ஆகுமானது” என்ற கருத்து வெறுக்கத்தக்கதாகத்தான் இருக்க வேண்டும் என்ற இமாம் மாலிக் (றஹ்) அவர்களின் செய்தி பின்னர் இடம் பெறவுள்ளது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

தமிழாக்கம: ஷேக் ரிஸ்வான் மீஸானீ.

 

மூலம்: https://islamqa.info/ar/answers/5000/حكم-الموسيقى-والغناء-والرقص

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Telegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: