” அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து




கேள்வி :

“அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து என்ன?

பதில் :

அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் திருநாமமான “அல் ஹகீம்” எனும் பதமானது, “ஃபயீல்” எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

சொல்லிலக்கண அடிப்படையில் “ஃபயீல்”எனும் பதம் ஒரு செயலை மிகைப்படுத்திக் கூறுவதற்காகப் பயன்படுத்தப்படும்.

இது “ஃபாயில்” வஸ்னிலுள்ள “ஹாகிம்”எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

1) இந்த வகையில் அல்லாஹ் “ஹாகிமாக” இருக்கிறான்.

அதாவது, படைப்பினங்களுக்கான விதிகளை நிர்ணயம் செய்பவனாக அல்லாஹ் இருக்கிறான் என்பதாகும்.

இவ்வாறு, அல்லாஹ் நிர்ணயம் செய்த விதிகள் மற்றும் ஏற்பாடுகளில் எவருமே தலையீடு செய்ய முடியாது.

மேலும், அல்லாஹ் அடியார்கள் மத்தியில் ஆட்சி செய்யும் “ஹாகிமாக” இருக்கிறான்.

அதாவது,எவராலும் மாற்றவோ தலையீடு செய்யவோ முடியாத ஷரீஅத் சட்டங்களை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான் என்பதாகும்.

அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :

اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ‌ يَقُصُّ الْحَـقَّ‌ وَهُوَ خَيْرُ الْفٰصِلِيْنَ‏

சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை;

சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.

(அல் அன்ஆம் :57)

எனவே, அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மாற்ற எவராலும் முடியாது.

அல்லாஹ் கூறுகிறான் :

وَاللّٰهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهٖ‌ وَهُوَ سَرِيْعُ الْحِسَابِ‏

அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

(அர் ரஃத் :41)

அவனது தீர்ப்பை விட சிறந்த தீர்ப்பு எதுவுமில்லை.

அல்லாஹ் கூறுகிறான் :

وَاتَّبِعْ مَا يُوْحٰۤى اِلَيْكَ وَاصْبِرْ حَتّٰى يَحْكُمَ اللّٰهُ‌‌ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ‏

(நபியே!) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்து கொள்வீராக; அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் பொறுமையாகவும், உறுதியாகவும் இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்.
(யூனுஸ் :109)

2) “ஹகீம்” எனும் பதமானது “முஹ்கிம்” எனும் கருத்திலும் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அல்லாஹ் தனது சிருஷ்டிகளை மிகவும் நுணுக்கமாக, அழகாக, திறம்பட,கனகச்சிதமாக படைக்கக்கூடியவன் ஆவான்.

அல்லாஹ் கூறுகிறான் :

صُنْعَ اللّٰهِ الَّذِىْۤ اَتْقَنَ كُلَّ شَىْءٍ‌ اِنَّهٗ خَبِيْرٌ بِمَا تَفْعَلُوْنَ‏

ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயல்திறனாலேயே (அவ்வாறு நிகழும்.) நிச்சயமாக, அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன்.
(அந் நம்ல்:88)

ஹத்தாபி (றஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் :

“அல் ஹகீம்” என்பது நுணுக்கமான படைப்பாற்றல் கொண்டவன் எனும் கருத்தைக் கொடுக்கும் சொல்லாகும்.

அலீம், சமீஃ எனும் வார்த்தைகள் முறையே முஃலிம், முஸ்மிஃ எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது போல “ஃபயீல்” எனும் சொல் “முஃப்யில்” என்பதாக மாற்றப்பட்டுள்ளது.

நேர்த்தியாக நுணுக்கமாக படைத்தல் என்பது, வானம்,பூமி,மலை போன்ற மிகப் பிரம்மாண்டமான படைப்புகளை உருவாக்குவதை மட்டும் தான் குறிப்பிடுவதாக கருத்துக்கொள்ள முடியாது.

மேலும், அனைத்துப் படைப்புக்களும் பலமான உடலமைப்பு மற்றும் பாரிய சக்தி கொண்டதாகத்தான் இருக்க வேண்டுமென்ற கருத்தை மாத்திரம் கொடுக்காது.

மாறாக, மூட்டைப்பூச்சி, எறும்பு போன்ற மிகப் பலவீனமான உயிரினங்களையும் மிக நுணுக்கமாக திட்டமிட்டு அழகிய ஒழுங்கில் படைப்பதையும் சேர்த்தே குறிப்பிடுகின்றது.

படைப்புக்கள் எந்த அமைப்பில் இருந்தாலும், அவை அனைத்தையும் நேர்த்தியாக திட்டமிட்ட ஒழுங்கில் படைக்கிறவன் என்பது தான் மேற்படி பதத்தின் பொருளாகும்.

சிருஷ்டிகள் அனைத்தையும் அல்லாஹ் அழகாகவே படைத்துள்ளானென்று இறைவசனமொன்று கூறுகிறது.

அவன் படைத்த அனைத்து உயிரினங்களும் அழகான சௌந்தர்யம் நிறைந்த தோற்றத்தை கொண்டிருக்கின்றன என்பது இதன் பொருளல்ல.

உண்மையில் குரங்கு, பன்றி, கரடி போன்ற உருவமைப்பைக் கொண்ட எந்த மிருகங்களிடமும் இந்த அழகைக் காணமுடியாது.

அவன் படைக்கின்ற ஒவ்வொரு படைப்பினங்களையும் சிறந்த முறையில் திட்டமிட்டு அவன் விரும்பும் வடிவத்தில் சிருஷ்டிக்கிறான் என்பதே இதன் உண்மையான அர்த்தமாகும்.

அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :

وَخَلَقَ كُلَّ شَىْءٍ فَقَدَّرَهٗ تَقْدِيْرًا‏

அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.

(அல்புர்கான் : 2)


3) மூன்றாவது கருத்து :

“அல் ஹகீம்” என்பது துல் ஹிக்மா (ஞானமிக்கவன்) என்பதாகும்.

இப்னுல் அதீர் ( றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

“அல் ஹகீம்” என்பது ஞானம் மிக்கவன் என்பதாகும்.

“மிகச் சிறந்த அறிவுகளுக்கூடாக மிகச் சிறந்த விடயங்களை அறிந்து கொள்ளல் ” என்பதே ஹிக்மத் ஆகும்.

( அந்நிஹாயா பீ கரீபில் ஹதீஸ்) 419/1

ஏவலோ விலக்கலோ அல்லாஹ் இப்பிரஞ்சத்தில் எதைச் செய்தாலும் அதன் பின்னணியில் மிகவும் உன்னதமான ஞானமிக்க இலக்குகள் இருக்கும்.

இவ்வாறான எந்த நோக்கமுமின்றி அவன் எதனையும் செய்வதில்லை.

அவ்வாறு,செயற்படுவது வீணான அர்த்தமற்ற வேலையாகும்.

இந்நிலையிலிருந்து அல்லாஹ் மிகவும் தூய்மையானவனாக இருக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான் :


وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ‌ ذٰلِكَ ظَنُّ الَّذِيْنَ كَفَرُوْا‌ فَوَيْلٌ لِّلَّذِيْنَ كَفَرُوْا مِنَ النَّارِ‏

மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு. ( ஸாத் : 27 )

மேலும், அல்லாஹ் கூறுகிறான் :

اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ‏

“நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.)

(அல் முஃமினூன் :115)


சுருக்கம் :

அல்லாஹ்வின் திருநாமாகிய “அல் ஹகீம்” என்ற சொல்லானது முரண்பாடற்ற ஒத்ததான பல கருத்துக்களைக் கொண்டதொரு பதமாகும்.

எனவே, முன்னர் குறிப்பிட்ட அனைத்து அர்த்தங்களையும் இதற்கு விளக்கமாக கூற முடியும்.

ஏனெனில், பல அர்த்தங்கள் கொண்ட ஒரு சொல்லுக்கு அது உள்ளடக்கியுள்ள எல்லா கருத்துக்களையும் தடைகள் இல்லாத போது அதற்கு வழங்க முடியும்.

பார்க்க பக்கம் (19/2) ஷின்கீதி (றஹ்) அவர்களின் ” அழ்வாஉல் பயான்”

அஷ்ஷெய்க் ஸஃதி (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

( அல் ஹகீம்) தனது படைப்புகள் மற்றும் கட்டளைகளில் உயர்ந்த ஞானத்தைக் கொண்டவன்.

தனது படைப்புக்கள் அனைத்தையும் மிக அழகாக படைத்தவன்.

( وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّـقَوْمٍ يُّوْقِنُوْنَ‏

உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்? )

எனவே, அவன் எதனையும் வீணுக்காக படைப்பதில்லை. வீணுக்காக எந்தவொரு சட்டத்தையும் உருவாக்குவதுமில்லை.

உலகம் மறுமை இரண்டிலும் ஆட்சி அதிகாரம் அவனுக்கே உரியது.


மூன்று வகையான தீர்ப்புக்களும் அவனுக்கே சொந்தமானது. அவைகளில் எவரும் அவனுடன் கூட்டுச்சேர முடியாது.

அந்த வகையில், ஷரீஅத் சட்டங்களை உருவாக்குவதில், விதிகளை நிர்ணயம் செய்வதில் மறுமையில் கூலி கொடுப்பதில் அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குபவன் அவனே.

“ஒவ்வொன்றையும் அவற்றிற்குரிய சரியான இடத்தில் வைப்பதும் மற்றும் அவற்றிற்குரிய அந்தஸ்துக்களை வழங்குவதும் அல் ஹிக்மத் எனும் சொல்லுக்கு வழங்கப்படும் மற்றுமொரு அர்த்தமாகும்”


நிறைவுற்றது.

தப்ஸீருஃ ஸஃதி (பக்கம் 945)


அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

தமிழாக்கம்: ரிஸ்வான் மீஸானி

மூலம்: https://islamqa.info/ar/answers/260383/%D9%85%D8%B9%D9%86%D9%89-%D8%A7%D8%B3%D9%85-%D8%A7%D9%84%D9%84%D9%87-%D8%AA%D8%B9%D8%A7%D9%84%D9%89-%D8%A7%D9%84%D8%AD%D9%83%D9%8A%D9%85

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply