பெருநாள் தர்மம் (ஸகாத்துல் ஃபித்ர் – زكاة الفطر) தொடர்பான 30 கேள்விகளும் – அதற்கான பதில்களும்

بســـم اللــه الرحــمــن الـرحـــيــم

பெருநாள் தர்மம் (ஸகாத்துல் ஃபித்ர் – زكاة الفطر) தொடர்பான 30 கேள்விகளும் – அதற்கான பதில்களும்

_- அஷ்ஷெய்க் அபூ பிலால் ஹதரமீ அல்-யமானி (حفظه الله) அவர்களது பாடத்திலிருந்து தொகுக்கப்பட்டது._

1. ஸதகத்துல் ஃபித்ர் என்றால் என்ன.?

பதில் : ‘ஸதகா’ என்பது அல்லாஹ்வின் கூலியை நாடி கொடுக்கப்படக்கூடியதாகும்.

ஃபித்ர் என்பதன் மொழியியல் அர்த்தம் : நோன்பின் முடிவு பகுதி.

மார்க்க ரீதியில், ‘ஸகத்துல் ஃபித்ர்’ என்பது நோன்பின் இறுதிப்பகுதியில் கொடுக்கப்படும் தர்மப் பொருளாகும்.

2.ஸதக்கத்துல் ஃபித்ர் கொடுக்கப்படுவதன் நோக்கம் என்ன.?

பதில் :

நபி ﷺ அவர்கள் கூறியதாவது :
“நோன்பாளியிடம் ஏற்பட்ட வீணான காரியங்கள் மற்றும் பேச்சுகளுக்கு பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நோன்புப் பெருநாள் தர்மத்தை (ஸகாதுல் ஃபித்ர்) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கடமையாக்கினார்கள்.”
(நூல் : அபூதாவூத் 1609)

3.ஸகாத்துல் ஃபித்ர் கொடுப்பதன் மார்க்க சட்டம் என்ன?

பதில் : கட்டாயக் கடமையாகும் (ஃபர்ழ்).

இப்னு உமர் (ரலியல்லாஹு ‘அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
“… ரமளான் நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மக்களுக்கு கடமையாக்கினார்கள்.
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1791)

4.ஸகாத்துல் ஃபித்ர் எப்போது கடமையாக்கப்பட்டது?

பதில் : ஹிஜ்ரத்திற்கு பிறகு இரண்டாம் ஆண்டு ரமழானின் போது (பெருநாளுக்கு இரு தினங்களுக்கு முன்பு கடமையாக்கப்பட்டது.

5. யார் மீது ஸகாத்துல் ஃபித்ர் கடமை?

பதில் :
“முஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள், பெண்கள் , வயதானவர்கள், சிறுவர்கள் ஆகிய அனைவர் மீதும் இது கடமையாகும்.”
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1791, 1792)

6. எவ்வளவு செல்வம் இருந்தால் என்மீது ஸகாத்துல் ஃபித்ர் கடமையாகும்?

பதில் : உங்கள் மீதும், உங்களை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கும் தேவையான பெருநாளுடைய உணவுப்பொருள் போக, அதற்கு மேல் மிச்சமான உணவுப்பொருளை நீங்கள் கொண்டிருந்தால் ஸகாத்துல் ஃபித்ர் கடமையாகிவிடும்.

7. நான் எனக்காக மாத்திரம் ஸகாத்துல் ஃபித்ர் கொடுத்தால் போதுமா.?

பதில் : உங்களுக்கும், உங்களின் பொறுப்பிலுள்ள மனைவிமார்கள், பிள்ளைகள், அடிமைகள் ஆகிய அனைவருக்கும் சேர்த்து நீங்கள் கொடுக்க வேண்டும்.

8. என்னை விட்டு பிரிந்த மனைவிக்காக நான் ஸகாத்துல் ஃபித்ர் கொடுக்க வேண்டுமா?

பதில் :
உங்களுக்கு இடையேயான பிரிவு முழுமையாகிவிட்டால், கொடுக்க தேவையில்லை.

பிரிவு முழுமையாகாமல் இருந்தால், அப்போது நீங்கள் கொடுக்க வேண்டும்.

9. என்னுடைய கிருஸ்துவ/ யூத மனைவிமார்களுக்கும் ஸகாத்துல் ஃபித்ர் கொடுக்க வேண்டுமா?

பதில் : தேவையில்லை. மாறாக முஸ்லிம்களின் சார்பாக மட்டுமே கொடுக்க வேண்டும்.

10. பிறக்காத எனது குழந்தை சார்பாக ஸகாத்துல் ஃபித்ர் கொடுக்க முடியுமா?

பதில் : தேலையில்லை. ஆனாலும் (தாயின் கருவிலுள்ள) அந்த சிசு 120 நாட்களை கடந்திருந்தால் அதற்காக கொடுப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ”முன்சென்ற நல்லோர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்.”

11. ஸகாத்துல் ஃபித்ருடைய அளவு என்ன?

பதில் : நபி ﷺ அவர்களுடைய ஹதீஸின்படி, 1 ஸாஃஉ அளவு கொடுக்க வேண்டும்.
1 ஸாஃஉ = 3 கிலோகிராம் (தோராயமாக..)

நம் நாட்டின் பிரதான உணவுப்பொருளை 1ஸாஃஉ கொடுக்கலாம்.

12. 1 ஸாஃஉ அளவு உணவுப் பொருளை பிரித்து கொடுக்க முடியுமா?

பதில் : அந்த உணவுப்பொருளை 2 அல்லது 3 ஆக பிரித்து கொடுக்கும்போது, அது அவர்களுக்கு போதுமானதாக அமைந்தால், அவ்வாறு கொடுப்பது செல்லுபடியாகும்.

அந்த உணவுப்பொருளை 10 ஆக பிரித்து கொடுத்து, அது அவர்களுக்கு போதுமானதாக அமையாவிட்டால், அவ்வாறு கொடுப்பது செல்லுபடியற்றதாகும்.

13. கேள்வி : ஒரு நபர் பல ஸாஃஉ அளவிலான( ஃபித்ரா உணவு பொருட்களை) பெற்றுக் கொள்ள முடியுமா?

பதில்: ஆம், குறிப்பாக அதிக தேவையுடைய ஏழைகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தால் அவ்வாறு வழங்க முடியும், எனினும் ஏழைகள் அதிக அளவில் இருந்தால், இயன்றவரை அனைவருக்கும் கிடைக்கும் படியாக அவற்றை விநியோகிப்பது தான் சிறந்தது. ஏனென்றால் ஸகாதுல் ஃபித்ர் உடைய நோக்கம் பெருநாளன்று ஏழை மக்களின் தேவைகளை தீர்ப்பதுதான், அதுவல்லாமல் உணவு பொருட்களை திரட்டி நீண்ட நாட்களுக்கு சேகரித்து வைப்பது அல்ல.

14. பேரீச்சை, பாலாடைக்கட்டி, உலர் திராட்சை, கோதுமை ஆகியவற்றை 1 ஸாஃஉ அளவில் சேர்த்து வழங்கலாமா?

பதில் : கூடாது.
அபூ ஸயீத் அல்-குத்ரீ(ரலியல்லாஹு ‘அன்ஹு) அறிவித்தார்:
“நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு அளவு ஏதேனும் உணவையோ, ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு பாலாடைக் கட்டியையோ அல்லது ஒரு ஸாவு அளவு உலர்ந்த திரட்சையையோ கொடுப்போம்.”
(நூல் : ஸஹீஹ் புகாரி 1506)

குறிப்பு : மேற்கண்ட உணவுப்பொருட்கள் நபி ﷺ அவர்களது காலத்தில் மதீனாவின் பிரதான உணவுப்பொருளாக காணப்பட்டது.

15. கோதுமையை ஸகாத்துல் ஃபித்ராவாக கொடுக்கும்போது, 1/2 ஸாஃஉ கொடுத்தால் போதுமானதா?

பதில் : பெரும்பான்மையான ஸஹாபாக்களும், தாபியீன்களும் இவ்வாறாக கொடுப்பதை அனுமதித்துள்ளார்கள். எனவே இதை அனுமதியில்லை எனக் கூறமுடியாது. எனினும் 1 ஸாஃஉ அளவு கொடுப்பது மிகவும் பாதுகாப்பானது.

16. 1 ஸாஃஉ அளவை விட கூடுதலாக ஸகாத்துல் ஃபித்ரை கொடுக்க முடியுமா?

பதில் : உபரியான தர்மமாக அவ்வாறு கொடுக்கலாம்; ஆனால் ஸகாத்துல் ஃபித்ரின் அளவு 1 ஸாஃஉ மட்டுமே.

17. என்னால் 1/2 ஸாஃஉ (1.5 Kg) மட்டுமே கொடுக்க சக்தியுள்ளது. அதனை மட்டும் கொடுக்க முடியுமா?

பதில் : ஆம்.
நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :
“நான் எதை(செய்யுமாறு) உங்களுக்கு கட்டளையிட்டுள்ளேனோ அதை உங்களால் இயன்ற வரை செய்யுங்கள்.”
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 4702)

18. ஸகாத்துல் ஃபித்ருடைய மதிப்பை பணமாக கொடுக்கலாமா?

பதில் : இவ்வாறு கொடுப்பதை இமாம் ஹஸனுல் பஸரீ, இமாம் உமர் பின் அப்துல் அஸீஸ், இமாம் அபூஹனீஃபா போன்றோர் அனுமதித்துள்ளார்கள்.

இருப்பினும் வணக்கவழிபாடுகளை மார்க்கம் காட்டித்தந்த வழிமுறையில் மாத்திரமே செய்ய முடியும். ஸகாத்துல் ஃபித்ரை பொருளாகவே ஸஹாபாக்கள் கொடுத்துள்ளார்கள். எனவே அவ்வாறு கொடுப்பதே ஏற்றமானது.

19. ஸகாத்துல் ஃபித்ரை பணமாக கொடுக்குமாறு முஸ்லிம் ஆட்சியாளர் மக்களுக்கு கட்டளையிட்டால் என்ன செய்வது?

பதில் : அவ்வாறு கொடுக்க முடியும். அவர்களுக்கு கீழ்ப்படிவதன் மூலம் அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்க்கலாம். அதிகாரம் உடையோரிடம் கருத்து வேறுபாடு படக்கூடாது.

20. யாருக்கு ஸகாத்துல் ஃபித்ரை கொடுப்பது?

பதில் : நீங்கள் நோன்பிருந்த பகுதியிலுள்ள (முஸ்லிம்களான) ஏழைகளுக்கு…

21. வெளிநாடுகளுக்கு ஸகாத்துல் ஃபித்ரை வழங்கலாமா?

பதில் : நாம் நோன்பு நோற்ற பிரதேசத்தில் காணப்படும் ஏழைகளுக்குத் தான் அதனை வழங்க வேண்டும். இருப்பினும் வெளிநாடுகளுக்கு அவற்றை கொடுப்பதில் ஏதேனும் நலவுகள் காணப்பட்டாலோ, அங்கு அதிகமான தேவையுடையோர் இருந்தாலோ, அல்லது அங்குள்ள உறவுகளை பேணி வாழும் முகமாகவோ வெளிநாடுகளுக்கு ஸகாத்துல் ஃபித்ரை வழங்கலாம்; அதில் எவ்வித பிரச்சினையுமில்லை.

22. முஸ்லிம் அல்லாதோருக்கு ஸகாத்துல் ஃபித்ரை வழங்கலாமா?

பதில் : வழங்க முடியாது. ஸகாத்துல் ஃபித்ரை முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்க முடியும்; அதே சமயம் முஸ்லிமல்லாத மக்களின் உள்ளங்களை இஸ்லாத்தின் பக்கம் இணைக்கும் பொருட்டு அவர்களுக்கு ஸகாத்துல் ஃபித்ரை கொடுக்க முடியும்.

23. என் சார்பாக ஸகாத்துல் ஃபித்ரை கொடுக்குமாறு ஒருவரிடம் நான் பொறுப்பு ஒப்படைக்கலாமா?

பதில் : ஆம்.

24. பிறர் சார்பாக நான் ஸகாத்துல் ஃபித்ரை கொடுத்துவிட்டு, பின்னர் அதனை அவருக்கு தெரிவிக்கலாமா?

பதில் : அவ்வாறு செய்ய முடியாது.
ஏனென்றால் நபியவர்கள் கூறியதாவது : “செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன”
(நூல் : ஸஹீஹுல் புகாரி 1)

25. ஸகாத்துல் ஃபித்ரை எப்போதிலிருந்து நிறைவேற்றுவது கடமையாகும்.?

பதில் : ரமழானுடைய கடைசி நாளில் சூரியன் மறைந்ததிலிருந்து…

சூரியன் மறைவிற்கு முன்னர் ஏதேனும் குழந்தை பிறந்தாலோ, அல்லது யாரேனும் இஸ்லாமை ஏற்றாலோ அவருக்கும் ஸகாத்துல் ஃபித்ர் கடமையாகிவிடும்; அதனை அவரோ/ அவரது பொறுப்பாளரோ நிறைவேற்ற வேண்டும்.

26. ஸகாத்துல் ஃபித்ரை முன்கூட்டியே கொடுக்க முடியுமா?

பதில் : முடியும். பெருநாளுக்கு 3 தினங்களுக்கு முன்பிருந்தே நாம் கொடுக்கலாம்.
இப்னு உமர் (ரலியல்லாஹு ‘அன்ஹு) அவர்கள் பெருநாளுக்கு 2 அல்லது 3 தினங்களுக்கு முன்னர் ஸகாத்துல் ஃபித்ரை கொடுத்துள்ளார்கள்.

27. ஸகாத்துல் ஃபித்ரை கொடுப்பதற்கான சிறந்த நேரம் எது?

பதில் : பெருநாளுடைய தினத்தில் தொழுகைக்கு முன்பு.

28. ஸகாத்துல் ஃபித்ர் கொடுப்பதற்கான இறுதி நேரம் எது?

பதில் : பெருநாள் தொழுகைக்கு முன்பு.
நபி ﷺ கூறியதாவது :
“பெருநாளுடைய தொழுகைக்கு முன்னர் யார் அதை நிறைவேற்றுவாரோ, அப்போது அது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸகாத் ஆகிவிடும்.”
(நூல் : அபூதாவூத் 1609)

29. ஸகாத்துல் ஃபித்ர் கொடுப்பதற்கு நான் மறந்தாலோ, அல்லது அதன் இறுதி நேரத்தை தவறவிட்டாலோ, அதன் பின்னர் அதனை கொடுக்க வேண்டுமா?

பதில் : ஆம். நியாயமான காரணங்களுக்காக அவற்றை நீங்கள் கொடுக்க மறந்தால், அதனை பின்னர் கொடுத்தாக வேண்டும். அப்போது அது ஸகாத்துல் ஃபித்ராக ஏற்றுக்கொள்ளப்படும்.

30. எந்ததொரு நியாயமான காரணமுமின்றி ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்ற தவறினால், அதனை திரும்ப நிறைவேற்றலாமா?

பதில் : ஆம்.
நபி ﷺ கூறியதாவது :
“பெருநாளுடைய தொழுகைக்கு பின்பு யாரேனும் ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றினால், அப்போது அது சாதாரண தர்மமாகவே அமையும்.”
(நூல் : அபூதாவூத் 6502)

📝 தொகுப்பு (ஆங்கிலத்தில்) : அபூ ஸுஃப்யான் ஸமீ பின் டேனியல் அல்-ஙானீ

தமிழில் : அபூ அஹ்மத் ரய்யான்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply