ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் | தொடர் 03 |
இஹ்றாமில் நடைபெறும் தவறுகள்: 02
1️⃣9️⃣ வாகனத்தில் ஏறி உட்கார்ந்து இருந்துதான் இஹ்றாமை ஆரம்பிக்க வேண்டும் என்று சிலர் கருதுவது தவறானதாகும். வாகனத்தில் ஏறுவதற்கு முன்னரும் இஹ்றாமிற்குள் நுழைந்து விட்டேன் என்று ஒருவர் நிய்யத்தை வைத்துக்கொள்ள முடியும். அந்த நிய்யத்தை நபி ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததைப் போன்று வாகனத்தில் ஏறி அமர்ந்து ஆரம்பித்து, தல்பியஹ் கூறுவது சிறந்தது. எனினும் மீகாத்தைத் தாண்டுவதற்கு முன்னர் இஹ்றாமை ஆரம்பித்து விட்டேன் என்ற நிய்யத் – எண்ணம் வந்துவிட வேண்டும்.
2️⃣0️⃣ இஹ்றாமை ஆரம்பிக்கும் போது ஹதீஸில் வராத வார்த்தைகளைக் கொண்டு நிய்யத்தை வாயால் மொழிதல் கூடாது. எந்த ஒரு வணக்கத்தின் போதும் நிய்யத்தை வாயினால் மொழிதல் நபி ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தராத பித்அத்தான செயலாகும். தல்பியஹ் என்பது நிய்யத் அல்ல. இஹ்றாமை ஆரம்பிக்கும் போது அதன் வகைக்கேட்ப லெப்பைக உம்றதன், லெப்பைக ஹஜ்ஜதன் போன்ற வார்த்தைகளைச் சொல்வது சுன்னத்தாகும். அவை அல்லாமல் நிய்யத் என்ற பெயரில் வேறு வார்த்தைகளை மொழிவது கூடாது.
2️⃣1️⃣ சிலர் இஹ்றாமை ஆரம்பிக்க முன்னர் தாடியை மழிக்கின்றனர். எந்த நேரத்திலும் தாடியை மழிப்பது ஹறாமாகும்.
2️⃣2️⃣ அதேபோன்று இஹ்றாமை ஆரம்பிப்பதற்கு முன்னர் தலை முடிகளை வெட்டிக் கொள்வது சுன்னத்தல்ல.
2️⃣3️⃣ விமானத்தில் இருக்கும் பொழுது மீகாத்திற்கு நேராக வரும் போது இஹ்றாமை ஆரம்பிப்பதற்குரிய நிய்யத் தவறிவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டால் மீகாத்திற்குச் சற்றுத் தொலைவில் இருக்கும் போதே இஹ்றாமை ஆரம்பித்துக் கொள்ள முடியும்.
2️⃣4️⃣ உம்றஹ் அல்லது ஹஜ் செய்யும் நோக்கம் இல்லாத ஒருவர் ஏதேனும் தேவைக்காக மக்கஹ்விற்குள் இஹ்றாம் இல்லாமல் வந்து விட்டுச் செல்ல முடியும். இதுவே பலமான கருத்தாகும். ஆனாலும் மக்கஹ்வுக்குச் செல்பவர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உம்றஹ் செய்து கொள்வது ஏற்றமானது.
2️⃣5️⃣ ஜித்தஹ் ஒரு மீகாத் என்ற சிலருடைய நம்பிக்கை தவறானதாகும். ஜித்தஹ் மீகாத் எல்லைக்கு உள்ளே இருப்பதால் ஜித்தஹ்வில் வாழக்கூடியவர்கள் அவர்களின் இடங்களில் இருந்து இஹ்றாமை ஆரம்பிக்க முடியும். ஆனால் மீகாத் எல்லைக்கு வெளியே இருந்து வரக்கூடியவர்கள் அவரவர்களுடைய மீகாத்தைத் தாண்டுவதற்கு முன்னர் இஹ்றாமை ஆரம்பித்து விட வேண்டும்.
2️⃣6️⃣ இஹ்றாமில் நுழைந்தவர் வெண்ணிற ஆடைகளைத் தவிர வேறு நிற ஆடைகளை அணியக்கூடாது என்ற நம்பிக்கை தவறானதாகும். வெண்மை நிறமல்லாத பொதுவாகத் தடைவராத வேறு எந்த நிறத்திலுள்ள துணிகளையும் இஹ்றாமிலிருப்பவர் அணிந்து கொள்வது குற்றமில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஹ்றாமுடைய நிலையில் பச்சை நிறப் போர்வையை அணிந்திருக்கிறார்கள்.
2️⃣7️⃣ இஹ்றாமில் பெண்களுடைய ஆடைகளுக்கென்று குறிப்பிட்ட எந்த ஒரு நிறமும் கிடையாது. அவர்கள் வெள்ளை அல்லது பச்சை அல்லது கருப்பு துணியில் இஹ்றாம் ஆடை அணிய வேண்டும் என்ற நம்பிக்கை தவறானது. அலங்காரமற்ற, அங்கங்களை வெளிப்படுத்தும் இறுக்கமற்ற, ஆடைக்கு வெளியில் உடல் தெரியாத, மார்க்கம் அனுமதித்த சாதாரணமான எந்த ஆடையையும் பெண்கள் அணிந்து கொள்ள முடியும்.
2️⃣8️⃣ மாதவிடாயிலுள்ள பெண்கள் இஹ்றாமில் நுழையக்கூடாது என்று கருதுவது தவறாகும். அவர்களும் மீகாத்தைத் தாண்டுவதற்கு முன்னால் இஹ்றாமுக்குரிய நிய்யத் செய்து கொள்ள வேண்டும். தவாஃபைத் தவிர ஹஜ்ஜுக்குரிய ஏனைய கிரிகைகளில் மாதவிடாய்ப் பெண் ஈடுபட முடியும். சுத்தமானதற்குப் பிறகு தவாஃப் செய்து கொள்ள வேண்டும்.
2️⃣9️⃣ மீகாத்தில் அணிந்த இஹ்றாம் ஆடை அழுக்கடைந்தாலும் அதனை மாற்றிக்கொள்ளக் கூடாது என்று சிலர் நினைப்பது தவறாகும். இஹ்றாமின் நிலையில் தடை செய்யப்படாத எந்த ஆடைகளைக் கொண்டும் இஹ்றாம் ஆடையை மாற்றிக் கொள்ளலாம்.
3️⃣0️⃣ தைக்கப்பட்ட எந்த ஆடையையும் அணியக்கூடாது என்று நம்பிக்கை தவறாகும். தைக்கப்பட்ட ஆடை அணியக்கூடாது என்று சில ஃபுகஹாக்கள் சொல்லி இருப்பதன் அர்த்தம் யாதெனில் உடல் உறுப்புக்களின் அளவுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது என்பதாகும். அவை தைக்கப்படாமல் வேறு ஒரு பொருட்களால் அல்லது வேறு முறையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் சரியே. அதேபோன்று வேஷ்டி கிழிந்திருந்தால் அதனைத் தைத்து மூட்டிக் கொள்வது பிரச்சினையில்லை. வேஷ்டி கிடைக்கவில்லை என்றால் உடல் அளவுக்குத் தைக்கப்பட்ட ஒரு ஆடையைக் கூட வேஷ்டி போன்று அணிந்து கொண்டால் தவறில்லை.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
ஆக்கம்: ஹுஸைன் இப்னு றபீக் மதனி
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: