ஸுன்னாவின் ஒளியில் வுழூ
தொடர் : 04
6) வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துதல் :
நபிகளார் வுழூ செய்த முறையை நாம் ஹதீஸ்களில் நோக்கும் போது வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துகையில் பின்வரும் நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடித்திருப்பதை அவதானிக்கலாம் :
1.வலது கையினால் நீரை எடுத்து வாய் மற்றும் மூக்கினுள் செலுத்தி, இடது கையினால் மூக்கை சிந்துதல். இதனை பின்வரும் மூன்று ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன :
அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி) அவர்கள் நபியவர்கள் வுழூ செய்த முறையை செய்துகாட்டிய போது, தமது ஒரு கையினால் தண்ணீரை எடுத்து வாயினுள்ளும் மூக்கினுள்ளும் நீர் செலுத்தினார்கள் (புஹாரி, முஸ்லிம்).
நபிகளார் கூறினார்கள் : ‘உங்களில் ஒருவர் வுழூ செய்யும் போது தனது மூக்கினுள் நீரை செலுத்தி மூக்கை சிந்திவிடவும்’ (புஹாரி, முஸ்லிம்).
அலி (றழி) அவர்கள் நபியவர்கள் வுழூ செய்த முறையை கற்பித்த போது தனது வலது கையினால் நீரை அள்ளி வாயிலும் மூக்கிலும் செலுத்தி இடது கையினால் மூக்கை சிந்தினார்கள்… இறுதியில் ‘ நபியவர்கள் வுழூ செய்த முறையை அறிய ஆசைப்படுபவர் இதுதான் நபி செய்த வுழூ என்பதை தெரிந்துகொள்ளட்டும்’ என்று கூறினார்கள் (ஸுனனுத் தாரமீ )
– இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2. இரண்டையும் ஒரே தடவையில் செய்தல் :
அதாவது வாய்க்கு நீர் செலுத்துவதையும் மூக்கினுள் நீர் செலுத்துவதையும் தனித்தனியாக செய்யாமல் வலது கையினால் நீரை எடுத்து இரண்டையும் ஒன்றாகவே நிறைவேற்றுதல்.
சில அறிஞர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வாய்க்கும் மூக்கிற்கும் தனித்தனியாக தண்ணீரை எடுத்து இரண்டையும் தனித்தனியாக செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள். அந்த ஹதீஸாவது,
நபியவர்கள் வாய்க்கு நீர் செலுத்துவதையும் மூக்கினுள் நீர் செலுத்துவதையும் தனித்தனியாக பிரித்து செய்தார்கள் (அபூதாவூத்).
ஆயினும் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் முஸர்ரிப் மற்றும் அவரது தந்தை ஆகியோர் அறியப்படாதவர்கள் என்பதனால் இது பலவீனமான ஹதீஸாகும் என இமாம் இப்னுல் கத்தான் (ரஹ்), ஹாபிழ் இப்னு ஹஜர் (றஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர் (பார்க்க : ‘ மின்ஹதுல் அல்லாம்’ , 1/226 ).
பலவீனமான ஹதீஸை நடைமுறைப்படுத்த முடியாது என்ற வகையில் வாய்க்கும் மூக்குக்கும் நீர் செலுத்துவதை ஒன்றாகவே செய்யவேண்டும் என்பது உறுதியாகிறது.
3. நோன்புடன் இருக்கும் போது மூக்கினுள் சிறிதளவாக நீரை செலுத்துதல்:
நபியவர்கள் லகீத் இப்னு ஸப்ரா (றழி) அவர்களுக்கு வுழூ செய்யும் முறையை கற்பித்த போது ‘ நோன்பாளியாக இருந்தாலே தவிர ஏனைய வேளைகளில் மூக்கினுள் நன்றாக நீர் செலுத்திக்கொள்…’ என்று கூறினார்கள் (அபூதாவூத், திர்மிதி).
மேற்படி ஹதீஸ் நோன்புடன் இருக்கும் போது மூக்கினுள் அதிகமாக நீர் செலுத்தக்கூடாது என்பதை குறிப்பிடுவதோடு, நோன்பு இல்லாத நிலையில் மூக்கினுள் நன்றாக நீர் செலுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது
07) முகம் மற்றும் இரு கைகளை முழங்கை உட்பட கழுவுதல் :
முகம் முழுவதையும் கழுவுதல் வுழூவின் கட்டாயக் கடமைகளுள் ஒன்றாகும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூ பற்றி கூறும் போது முகம் கழுவுதல் பற்றியே முதலாவதாக குறிப்பிடுகிறான் :
‘விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்கு ஆயத்தமானால் உங்கள் முகங்களையும் முழங்கை வரை உங்கள் கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்…’ (5:6)
நபிகளாரின் வுழூ பற்றி அறிவிக்கும் அனைத்து ஸஹாபாக்களும் நபியவர்கள் முகம் கழுவியதை குறிப்பிடுகிறார்கள் (புஹாரி, முஸ்லிம்)
முகத்தின் எல்லை என்பது அகலவாக்கில் ஒரு காதுச் சோணையிலிருந்து மறு காதுச் சோணை வரைக்கும்; நீளவாக்கில் நெற்றியின் முடி முளைக்கும் பகுதியிலிருந்து நாடி வரைக்குமான பகுதியாகும்.
இப்பகுதிக்குட்பட்ட முகம் முழுவதையும் – கன்னக்குழி போன்ற பள்ளமான பகுதி மற்றும் மூக்கின் கீழான மறைவான பகுதி உட்பட அனைத்தையும் நல்ல முறையில் கழுவுவது கட்டாயமாகும். பலர் முகத்தை கழுவும் போது இவ்வாறான மறைவான, பள்ளமான பகுதிகளை சரிவர பேணி கழுவுவதில் தவறிவிடுகின்றனர்.
முகம் கழுவும் போது தாடியையும் கோதி கழுவுவது முக்கியமான ஸுன்னத்தாகும்:
‘நபியவர்கள் வுழூ செய்யும் போது தமது தாடியை கோதி கழுவுவார்கள்’ என உஸ்மான் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் (திர்மிதி, இப்னு மாஜஹ்)
அனஸ் (றழி) கூறுகிறார்கள் : நபியவர்கள் வுழூ செய்தால் ஒரு கையில் தண்ணீரை எடுத்து அதை தமது தாடை பகுதியில் இட்டு தாடியை கோதி கழுவுவார்கள். இவ்வாறு செய்து விட்டு ‘எனது இறைவன் இவ்வாறு செய்யுமாறு ஏவினான்’ எனக் கூறுவார்கள் (அபூதாவூத், பைஹகீ).
முகத்தை நன்றாக ஒரு தடவை அல்லது இரு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் கழுவிய பின் இரு கைகளையும் அவ்வாறே ஒரு அல்லது இரு அல்லது மூன்று தடவைகள் முழங்கை வரை கழுவுவது கட்டாயமாகும்.
முன்னதாக குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனத்தில் முகத்துக்கு அடுத்து இரு கைகளையும் முழங்கை வரை கழுவுமாறு அல்லாஹ் ஏவுகிறான் (5:6).
இவ்வாறே ஸுன்னாவில் நோக்கும் போது நபியவர்கள் முகத்தை கழுவிய பின் இரு கைகளையும் முழங்கை வரை கழுவியிருக்கிறார்கள் என்பதை பல ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன (புஹாரி, முஸ்லிம்).
‘முழங்கை வரை கைகளை கழுவுதல்’ எனும் போது அறிஞர்களிடையே இரு வகையான கருத்துகள் நிலவுகின்றன.
சில அறிஞர்கள் முழங்கை வரைக்குமே கைகளை கழுவுவது கட்டாயமானது, முழங்கையை கழுவுவது கட்டாயமல்ல என்று கூற, ஏனைய அறிஞர்கள் கைகளை கழுவுதல் எனும் போது அதில் முழங்கையும் உள்ளடங்கும், எனவே முழங்கையும் கட்டாயம் கழுவப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.
இவற்றுள் முழங்கையும் சேர்த்தே கழுவப்பட வேண்டும் என்பதே மிக ஆதாரபூர்வமான கருத்தாகும். பின்வரும் இரு ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாக அமைகின்றன :
அபூஹுரைரா (றழி) அவர்கள் நபிகளார் வுழூ செய்த முறையை கற்பித்த வேளை கைகளை கழுவும் போது முழங்கைகளையும் சேர்த்தே கழுவினார்கள் (முஸ்லிம்).
ஜாபிர் (றழி) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் வுழூ செய்யும் போது தமது இரு முழங்கைகளையும் சுற்றி தண்ணீரினால் கழுவுவார்கள் (தாரகுத்னீ, பைஹகீ) – இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என இமாம் இப்னு ஹஜர், இமாம் அல்பானி (ரஹிமஹுமல்லாஹ்) ஆகியோர் குறிப்பிடுகிறார்கள் (பார்க்க : ‘ஸிபது வுழூஇந் நபி’ , பக்:25).
கைகளின் மடிப்பு, புறப்பகுதி என்பவற்றையும் வுழூ செய்யும் போது கவனத்திற்கொண்டு கழுவ வேண்டியது அவசியமாகும். அதிகம் பேர் இப்பகுதிகளை கழுவுவதில் பொடுபோக்கு செய்கின்றனர். இவற்றை கவனமெடுத்து கழுவாமல் விடுவதன் மூலம் வுழூ நிறைவேறாமல் போய்விடும்.
(இன் ஷா அல்லாஹ் தொடரும்…)
ஆக்கம்: ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: