பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 01 |
-அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து…
மாதவிடாய் என்பதன் கருத்தும் அதன் நுட்பமும்:
அறபு மொழியில் மாதவிடாயை ஹைழ் என்றழைப்பர். அதன் மொழிக் கருத்து வடிந்தோடுதல், கொட்டுதல் என்பதாகும்.
இஸ்லாமிய ஷரீஆ பரிபாஷையில் ‘ஹைழ்’ என்பது ஒரு பூப்படைந்த பெண்களிடமிருந்து மாதந்தோரும் சுழற்சி முறையில் இயற்கையாக வெளிப்படும் இரத்தத்தை குறிக்கின்றது. எனவே. இயற்கையாக வெளிப்படும் இந்த இரத்தப் போக்கானது ஏதாவதொரு நோய் அல்லது காயம், கருச்சிதைவு, பிரசவம், போன்ற இரத்தப் போக்குடன் இணைத்து நோக்குதல் கூடாது. பெண்களுக்கு ஏற்படும் இந்த மாதவிடாய் அவர்களுடைய உடல் நிலை, வாழும் சூழல், தட்ப வெப்பநிலை ஆகியவற்றைப் பொறுத்து வேறு படும். ஆகவே பெண்கள் இந்த விடயத்தில் தங்களுக் கிடையில் தெளிவாக வேறுபட்டு நிற்கின்றனர்.
இந்த இயற்கை செயன்முறையானது அல்லாஹ்வின் ஆழமான ஞானத்தின் வெளிப்பாடாகும். இதில் மிகப்பெரும் மர்மம் உள்ளடங்கியுள்ளது அதாவது ஒரு தாய் கர்ப்பமடைந்ததும் அவளின் கருப்பையில் உள்ள கருக்கட்டிய சினைமுட்டைக்கு (சின்னஞ்சிறு உயிருக்கு) தாயின் வயிற்றுக்கு வெளியில் உள்ளவரைப் போன்று ஊட்டச் சத்துள்ள உணவைப் பெற்றுக்கொள்ள முடியாது. அது மாத்திரமின்றி அந்த உயிருடன் மிகக் கருணை கொண்டோருக்குக் கூட ஒருவேளை சத்துள்ள உணவை ஊட்டிட முடியாது. இந்த நிலையில், வல்லவனான அல்லாஹ் மிகவும் சிறப்பான இரத்த ஓட்ட முறையொன்றை (பெண்ணுள்) அமைத்துள்ளான். அந்த முறைக்கமைய உருவாகும் சத்துள்ள உணவை தொப்புல் கொடி மூலம் கருவறையிலுள்ள உயிருக்குக் கிடைக்கச் செய்கின்றான். படைப்பாளர்களில் சிறந்தோனான அல்லாஹ் மிகவும் உயர்ந்தவனாவான்.
இதுவே ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுவதன் இரகசியமாகும். ஒரு பெண் கருத்தரித்துவிடும் போது அவளுக்கு மாதவிடாய் நின்று விடுகிறது. இதன் போது அவள் மிக அரிதாகவே இரத்தப் போக்குக்கு ஆளாகிறாள். இவ்வாறுதான் பாலூட்டும் தாய்க்கும் பாலூட்டும் ஆரம்பக் கட்டத்தில் குறைவாகவே மாதவிடாய் ஏற்படுகிறது.
மாதவிடாய்க் காலமும் தவணையும்:
இத்தலைப்பானது இரு பகுதிகளைக் கொண்டுள்ளது.
முதலாவது பகுதி : பூப்பெய்தல் வயது தொடர்பானது.
இரண்டாம் பகுதி : மாதவிடாய் காலம் தொடர்பானது.
முதலாம் பகுதி: ஒரு பெண்ணுக்கு பன்னிரண்டு வயதிற்கும் ஐம்பது வயதிற்கும் இடைப்பட்ட காலத்தில் மாதவிடாய் உண்டாகும். ஆயினும், அவளது உடல் நிலை, வாழும் சூழலுக்கேற்ப வெப்பநிலையை பொறுத்து குறிப்பிடப்பட்ட வயதான பன்னிரண்டுக்கு முன் அல்லது பின் மாதவிடாய் ஏற்படலாம்.
மாதவிடாய் ஏற்படுவதற்கு வயதெல்லை உண்டா என்பதிலும், குறித்த மாதவிடாய் கால எல்லைக்கு முன்னோ பின்னோ வெளியாகும் இரத்தம் தொடர்பாகவும், அது அவளது மாதவிடாய் இரத்தமா அல்லது வேறேதும் இரத்தமா? என்பதிலும் மார்க்க அறிஞர்கள்; கருத்து முரண்பாடு கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக முரண்பட்ட கருத்துக்களை அறிஞர்கள் கொண்டுள்ளனர். இச்சட்டப்பிரச்சினை தொடர்பான கருத்துமுரண்பாடுகளை குறிப்பிட்டதன் பின் இமாம் தாரிமி அவர்கள் : ‘என்னைப் பொறுத்த வரையில் இவை அனைத்தும் பிழையானவை!’ ஆகவே இந்த விவகாரத்திற்கு அடிப்படை ஒன்று உண்டு. ஒருவரின் வயதை கருத்தில் கொள்ளாது அவருக்கு இரத்தம் வெளியாகியுள்ளதா? இல்லையா? என்பதைத்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு வெளியான இரத்தத்தை மாதவிடாய் இரத்தமாகக் கருதுவது அவசியமானதாகும் என கூறுகிறார்கள்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவனாவான்!’
இமாம் அத் தாரிமீ அவர்கள் கூறியதே மிகவும் சரியானது. இதுவே செய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்துமாகும். எனவே, ஒரு பெண் தன்னிடம் இரத்தம் வெளிவரக் கண்டால் அதை மாதவிடாய் என்றே கருத வேண்டும். அப்பொழுது அவள் ஒன்பது வயதை விடக் குறைவானவளாகவோ அல்லது ஐம்பது வயதை விடக் கூடுதலானவளாகவோ இருக்கின்றாள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், ஒரு பெண்; தனது மாதவிலக்கை காண்பதைப் பொருத்தே அல்லாஹ்வும் அவனின் தூதரும் அதற்கான சட்டதிட்டங்களை தொடர் படுத்தியுள்ளார்கள். அன்றி, மாதவிலக்கு ஆரம்பமாவதற்கும் முடிவதற்கும் அல்குர்ஆனிலும் நபியவர்களின் வழி காட்டலிலும் குறித்த வயதெல்லை குறிப்பிடப்படவில்லை. உண்மையில் இது தொடர்பான வயதெல்லையை வகுக்க அல்குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும் ஆதாரம் அவசியமாகின்றது. ஆனால், அத்தகைய ஆதாரங்கள் எதுவுமே அதில் காண முடியவில்லை.
இரண்டாம் பகுதி : மாதவிடாய்க்கான கால எல்லை (மாத விடாய்க்கான நாட்களை கணக்கிடுதல்)
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் உண்டாகிவிட்டால் அது எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதில் மார்க்க அறிஞர் களுக்கு மத்தியில் ஆறு அல்லது ஏழுக்கும் மேற்பட்ட கருத்து நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. சில அறிஞர்கள்; ‘மாதவிடாய் நீடிக்கும் குறைந்த பட்ச நாட்கள் அதி கூடிய நாட்கள் என்ற வரையறை எதுவும் கிடையாது!’ என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என இமாம் இப்னுல் முன்ஸிர் ரஹிமஹுல்லாஹ் குறிப்பிடுகிறார்கள்.
நூலாசிரியர் அவர்கள் குறிப்பிடுகையில், ‘இது ஏற்கனவே குறிப்பிட்ட அத்தாரிமி அவர்களின் கூற்றை ஒத்ததாகும், இதுவே ஷைகுல் இஸ்லாம்; இப்னு தைமிய்யா அவர்களின் தெரிவு என்பதுடன், இதுவே சரியான கருத்துமாகும். ஏனெனில், இது அல்குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும், ஒப்பீட்டு ரீதியான ஆதாரங்களைக் கொண்டும் உறுதி படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பின்வருமாறு :
ஆதாரம் – 1 அல்லாஹு தஆலா கூறுகின்றான்: ‘
இன்னும் மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்: ‘அது ஒரு தூய்மையற்ற (அசௌகரியமான) நிலையாகும். ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்வதை விட்டும் விலகி இருங்கள்; மேலும், அவர்கள் தூய்மையடையும் வரை (உடலுறவுக்காக) அவர்களை நெருங்காதீர்கள்.’ (அல்பகரா :222)
இங்கு அல்லாஹ், ஒரு பெண் மாதவிடாய் இருக்கும் நிலையில் உடலுறவு கொள்ள முடியாது என்ற தடைக்கான கால நிர்ணயத்தை அவளது சுத்தத்தை வைத்தே தீர்மானித்துள்ளான். அவ்வாறின்றி, ஒரு நாள், மூன்று நாட்கள், பதினைந்து நாட்கள் என கால எல்லையொன்றை குறிப்பிட வில்லையென்பதை இங்கு அறிய முடிகிறது. எனவே மாத விடாய் (சுத்தமற்ற நிலை) எப்போது ஏற்படுகிறதோ அப்போது அதற்குரிய சட்டங்கள் அவளின் மீது விதியாகிறது. எப்போது அவள் மாதவிடாயிலிருந்து சுத்தமான நிலையை அடைகிறாளோ அப்போது மாதவிடாய்க்குரிய சட்டங்கள் நீங்கி விடுகிறது. இதன் பிரகாரம் மாதவிடாய் நாட்கள் எத்தனை என வரையறுத்து குறிப்பிட முடியாது என்பதே இதன் சாராம்சமாகும்.
ஆதாரம் – 2 ஸஹீஹ் முஸ்லிமில் பதிவான பின்வரும் ஹதீஸும் இதற்கு ஆதாரமாக உள்ளது. உம்ராவுக்கு நிய்யத் வைத்த நிலையில் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
‘ஆஇஷாவே! ஒரு ஹாஜி செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்யுங்கள். ஆனால், மாதவிடாயிலிருந்து சுத்தமாகும் வரை கஃபாவை தவாஃப் செய்ய வேண்டாம்’ என்றார்கள். அதற்குப்பிறகு துல் ஹிஜ்ஜா மாதம் 10 ஆம் நாள் தான் சுத்தமானதாக குறிப்பிடுகிறார்கள்.
மேலும் இதற்கு ஆதாரமாக ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவான மற்றோர் ஆதாரபூர்வமான ஹதீஸும் காணப்படுகிறது.
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஇஷா (ரழி) அவர்களுக்கு கூறினார் கள் ‘நீங்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமடையும் வரை காத்திருந்து, அதன்பின் ‘அத்தன்ஈம்’ என்ற இடத்திற்குச் சென்று, அங்கு இஹ்ராம் நிய்யத் வைத்து (உம்ரா செய்து) கொள்ளுங்கள் என்றார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை ஹஜ் கிரியைகளை செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தக் காரணமாக இருந்தது அப்போதைய அவர்களது சுத்தம் தொடர்பான விடயங்களே என்பது தெளிவாகின்றது. அத்துடன் இந்த ஹதீஸிலும் மாதவிடாயின் போது வெளிவரும் இரத்தம் தொடர்பான கால எல்லையொன்றை அதாவது குறிப்பிட்ட நாட்களுக்குள் தூய்மையடைந்து கடமைகளை நிறைவேற்றுமாறு அவர்கள் வரையறுத்துக் குறிப்பிடவில்லை.
எனவே, இது தொடர்பான இஸ்லாமிய சட்டம் மாதவிடாய் இரத்தம் வெளிப்படுதல் மற்றும் வெளிப்படாது இருத்தல் என்ற நிலைகளைப் பொறுத்து அமைவதைக் காணலாம். எனவே, இதன் மூலமும் மாதவிடாய் இருப்பது, இல்லாமல் போவதை வைத்தே மார்க்க சட்டங்கள் அமையப் பெற்றிருக்கிறதே அன்றி நாட்களின் என்னிக்கையைப் பொருத்தல்ல என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
ஆதாரம் – 3 :பெண்களின் மாதவிடாய் ஆரம்பமாகும் வயது, முடியும் வயது பற்றி சில சட்ட அறிஞர்களால் குறிப்பிடப் பட்ட அளவுகோள்களும் விளக்கங்களும் அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனிலோ, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறை அஸ்ஸுன்னாவிலோ காணப்படவில்லை. இது குறித்த தெளிவு அத்தியா வசியத் தேவை என்றிருந்தும் கூட அது குறித்து அல்குர்ஆனோ அஸ்ஸுன்னாவோ எதனையும் குறிப்பிட வில்லை. இந்த அளவுகோள்களை நன்கு விளங்குவதும். அல்லாஹ்வுக்கான வணக்க வழிபாடுகளில் அத்தியாவசியமாகவும் இருப்பின், அல்லாஹ்வும் அவன் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களும் இது பற்றி ஒவ்வொருவரும் மிகவும் தெளிவான முறையில் அறிந்து கொள்ளும் விதமாக தெளிவுபடுத்தியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
அது மாத்திரமின்றி மாதவிடாயின் விளைவாக ஏற்படுகின்ற சட்டங்கள் தொழுகை, நோன்பு, விவாகம், விவாகரத்து, வாரிசுச் சொத்து போன்றவைகளில் ஆதிக்கம் செலுத்துவது அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. அவ்வாறிருந்தும் அதற்கான கால வரையறைகளை அல் குர்ஆனோ அஸ்ஸுன்னாவோ நிர்ணயிக்கவில்லை. ஆனால் இதற்கு மாற்றமாக தொழுகையைப் பொருத்தவரை அல்லாஹ்வும் அவனின் தூதரும் அதன் எண்ணிக்கைகளையும், அதன் நேரங்களையும், ருகூஉ ஸுஜூதுகளின் நிலைகளையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதே போன்று, ஸகாத் குறித்தும் ஸகாத் கொடுக்க வேண்டிய செல்வம், அதன் அளவுகள் மற்றும் கொடுக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அவ்வாரே நோன்பு பற்றியும் அதற்குரிய காலம் மற்றும் ஒரு நாளில் நோன்பு பிடிப்பதற்கான நேர அளவு குறித்தும் ஹஜ்ஜோடு தொடர்பான விடயங்கள் பற்றியும் தெளிவு படுத்தியுள்ளார்கள். அத்துடன் உண்ணல் பருகுதல் மற்றும் உறங்குதலின் ஒழுக்கங்கள் மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல், அமர்தல், வீட்டிற்குள் பிரவேசித்தல், வெளியே செல்லுதல், மலசலம் கழித்தல், இஸ்திஜ்மார் (சிறுநீர் கழித்தபின் கற்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதில் எத்தனைக் கற்கள் பயன்படுத்துதல் போன்ற வாழ்வின் எல்லா நிலைகளிலும் செய்ய வேண்டிய அற்ப விடயத்திலிருந்து ஆகப் பெரிய விடயம் வரை, எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் தன் மார்க்கத்தின் மூலம் பூரணமாகத் தெளிவுப்படுத்தி தனது விசுவாசிகளுக்கு அருள் புரிந்துள்ளான்.
இது குறித்து அல்லாஹுதஆலா பின்வருமாறு விவரிக்கிறான்.
நபியே நாம் உமக்கு யாவற்றையும் தெளிவாக விவரிக்கக் கூடிய இவ்வேதத்தை இறக்கியருளியுள்ளோம். (அந்நஹ்ல் 89).
மேலும் அல்லாஹு தஆலா ‘அல்குர்ஆனில் விவரிக்கப்பட்ட இச்செய்திகள் புனைந்துரைக்கப்பட்டவை அல்ல. மாறாக, இது தனக்கு முன் அருளப்பட்ட (வேதங் களை) உண்மைப்படுத்தக் கூடியதாகவும் அனைத்தையும் விபரிக்கக்கூடியதாகவும் உள்ளது (யூஸுப் :111)
இருந்தும், மாதவிடாய் தொடர்பான விபரங்களும் அளவு கோள்களும் பற்றி அல்லாஹவின் அருள் மறையிலோ, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஸுன்னாவிலோ எதுவும் கூறப்படவில்லை. ஆகையால், ஒருவர் அவற்றைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்பது தெளிவாகின்றது. உண்மையில், மாதவிடாயைப் பொருத்தவரையில் முன்னரே குறிப்பிட்டதற்கமைவாக மாதவிடாய் இரத்தம் வெளிவந்துள்ளது அல்லது வெளிவரவில்லை என்பதைப் பொறுத்தே அதன் சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரச்சினை தொடர்பாக அல்லாஹ் வின் அருள் மறையிலோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஸுன்னாவிலோ எதுவும் கூறப் படவில்லை எனில் அதனைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்ற விதியானது மாதவிடாய் காலத்தை தீர்மானிப்பது சம்பந்தப்பட்ட சட்டப்பிரச்சினையிலும் ஏனைய சட்டப்பிரச்சினைகளிலும் ஆதாரமாக கொள்வதற்கு முடி யும்.
அதாவது, அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆன், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஸுன்னாஹ், ஆகிய அடிப்படை மூலாதாரங்கள் மற்றும் (இஜ்மாஉ) அறிஞர்களின் ஏகோபித்த தெளிவான கருத்து, அல்லது தெளிவான கியாஸ் ஆகிய துணை மூலாதாரங்களின் அடிப்படையில் தான் ஒரு சட்டத்தை உறுதிப்படுத்த முடியுமே தவிர வேறு அளவுகோள்களின் மூலம் எதனையும் தீர்மானிக்க முடியாது. செய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமது சட்டவரை வொன்றில் இவ்வாறு கூறுகின்றார்:
“மாதவிடாயைப் பொறுத்த வரை, அது தொடர்பாக அல்லாஹ் பல சட்ட திட்டங்களை தனது வேத நூலிலும் நபி வழிமுறையாகிய ஸுன்னாவினூடாகவும் விவரித்துள்ளான்;. ஆயினும், இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயம் மிக அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் இருந்தும் கூட, அது பற்றிய குறுகிய கால, நீண்ட கால வரையரை களைக் குறிப்பிடவில்லை.
மேலும், ஒரு பெண் இரண்டு மாதவிடாய்களுக்கு இடையில் எவ்வளவு காலம் சுத்தமாய் இருப்பாள் என வரையறுக்கவுமில்லை. மொழிரீதியாகக் கூட ஹைழ் (மாதவிடாய்) என்பது ஒரு அளவுகோளையோ வேரேதும் விளக்கத்தையோ குறித்துக் காட்டவுமில்லை. ஆகவே எவர் மாதவிடாய் தொடர்பாக கால வரையரையை அல்லது அளவு கோளொன்றை நிர்ணயிக்கிறாறோ அவர் அல்குர்ஆனுக்கும் நபிவழிமுறையான ஸுன்னாவுக்கும் மாறு செய்தவராவார்.
ஆதராம் 4 – கியாஸ்: (இது ஒரு துணை மூலாதாரம் : அல் குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஉ ஆகிய சட்ட மூலாதாரங்கள் மூலம் அல்லது அவற்றுள் ஒன்று மூலம் ஏற்கனவே பெறப் பட்ட ஒரு தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு புதிய பிரச்சினையை ஒப்பு நோக்கிக் கண்டறிகின்ற முடிவாகும்) அல்லாஹ் மாதவிடாயை தொல்லை மற்றும் அசௌகரிய மிக்கதும் என விவரித்துள்ளான். எனவேதான், அது ஒரு பெண்ணுக்கு அது உண்டாகி இருப்பது கண்டறியப்பட்டால் அது சுத்தமற்ற நிலையாகும். இதில் – இரண்டாம் முதலாம் நாட்களுக்கிடையில், நான்காம் மூன்றாம் நாட்களுக்கிடையில், பதினாராம் பதினைந்தாம் நாட்களுக் கிடையில், பதினெட்டாம் பதினேழாம் நாட்களுக்கிடையில் என எத்தகைய வேறுபாடும் வித்தியாசமுமில்லை.
எனவே மாதவிடாயும்; அதன் விளைவாக ஏற்படும் தொந்தரவும் இரண்டு நாட்களிலும் ஒரே மாதிரியாக உள்ளது. இங்கு குறித்த காரணமும் சமமாகவே காணப்படுகிறது. இவ்வாறு இரண்டு நாட்களும் தூய்மையற்ற நிலையும் தொந்தரவும் சமமாக இருக்கும் போது சட்டரீதியில் வேறுபடுத்துவது எப்படி சரியாகும்? எனவே, மாதவிடாய் தொடர்பான நடைமுறை காரணிகளைக் கொண்டு இரண்டு நாட்களுக்கும் உரியதான சட்ட முடிவு இருக்கும் பொழுது ஒரு நாளுக்கு ஒன்று என்ற வகையில் அமையப்பெறும் வெவ்வேறான சட்ட முடிவுகள் தெளிவான கியாஸுக்கு எதிரான தாகுமல்லவா? அல்லது காரணங்கள் இரண்டு நாட்களுக்கும் சமமாக இருப்பது ஒரே மாதிரியான சட்ட முடிவுகளை பெற்றுத் தருவது என்ற அடிப்படையில் சரியான கியாஸாக ஆகமாட்டாதா?
ஆதாரம் 5 : மாதவிடாய்க்கான குறிப்பிட்ட கால எல்லையை வகுத்துக் கூறுவோரின் உடன்பாடின்மையும் தடு மாற்றாலும் அவற்றிற்குத் தெளிவான ஆதாரமில்லை என்பதை எடுத்துக் கொட்டுகிறது. இவை இஜ்திஹாத் மூலம் கூறப்பட்ட தீர்ப்புகளாகும். இவைகள் பிழையாகவோ சரியாகவோ இருக்க முடியும். இவற்றுள் ஒரு கருத்தை விட மற்றொரு கருத்துக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டியது மில்லை. ஆகவே இத்தகைய பிரச்சினைக்குரிய விடயங்களில் அல்குர்ஆனையும் ஸுன்னாஹ்வையும் நோக்கி மீள்வதே எமது கடமையாகும்.
எனவே, மாதவிடாய்க்கு குறுகிய அல்லது நீண்ட கால வரையறை எதுவும் இல்லை என்பதும் அதுவே மிகச் சரியான கூற்று என்பதும் தெளிவாகுமானால் காயம் அல்லது அது போன்ற எவ்விதக் காரணமுமின்றி பெண்கள் இயற்கையாக இரத்தம் வெளிவரக் கண்டால் அதை மாத விடாய் என்றே கருத வேண்டும். இது தொடர்பாகக் கால வரையறைகள் சார்ந்த அளவுகோள்களையோ வயதெல்லை யையோ கருத்திற் கொள்ளக் கூடாது. ஆனால், ஒரு பெண்ணுக்கு இரத்தம் வெளிவருவது நிற்கவில்லையாயின்; அப் பெண் ‘இஸ்திஹாழா’ நிலையில் இருப்பதாகக் கருதப் படுவாள். (இஸ்திஹாழா என்பது தொடர் உதிரப்போக்கு என்பதாகும்.) இஸ்திஹாழா குறித்த விவரமும் சட்டங்களும் விரிவாக இன்ஷாஅல்லாஹ் பின்னர் குறிப்பிடப்படும்.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : இஸ்திஹாழா (தொடர் உதிரப் போக்கு) என்பதை காட்டக் கூடிய அறிகுறிகள் தென்படும் வரையில், கருப்பையிலிருந்து வெளிவரும் அனைத்தும் அடிப்படையில் மாதவிடாயாகவே கருதப்படும்.’
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
(ஒரு பெண்ணிடமிருந்து) வெளி வரும் இரத்தம் ஒரு காயத்திலிருந்தோ அல்லது ஓர் இரத்த நாலத்திலிருந்தோ வெளிவரவில்லையென்றால் அதனை மாதவிடாய் இரத்தம் என்றே கருத வேண்டும். இக்கூற்றே ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு உறுதியான கருத்தாகவும், மாதவிடாய்க்கு குறிப்பிட்ட கால எல்லையை வரையரை செய்தோரின் கருத்தை விட விளங்கி, கருத்தில் கொண்டு, இலகுவாக செயல்படுத்த கூடியதாகவுமுள்ளது.
மேலும், இக்கருத்தே இஸ்லாத்தின் உயிரோட்டத்திற்கும் அடிப்படைக்கும் இலகு தன்மைக்கும் இணக்கமாக அமை வதால் ஏற்றுக் கொள்வதற்கு பொருத்தமாக உள்ளது. அல்லாஹுதஆலா கூறுகிறான் “இம்மார்க்கத்தில் அவன் எந்த ஒரு சங்கடத்தையும் உங்கள் மீது ஏற்படுத்தவில்லை“. (அல் ஹஜ் :78) ‘
நிச்சயமாக, இந்த மார்க்கம் (பின்பற்று வதற்கு) மிக இலகுவானது. இம்மார்க்கத்தை யாரேனும் சிரமமானதாக ஆக்கிக் கொண்டால் அது அவரை மிகைத்து விடும். எனவே நடு நிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றை செய்யுங்கள். நன்மாறாயம் கூறுங்கள்’ (ஆதாரம் : புஹாரி)
ஏதாவது இரண்டு விடயங்களுள் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை நபியவர்களுக்கு ஏற்பட்டால், அதுவொரு பாவமான காரியம் இல்லாதவிடத்து, மிக இலகுவானதையே தெரிவு செய்வது அவர்களின் நற்குணங்களில் ஒன்றாக இருந்தது.
கருத்தரித்த பெண்ணின் மாதவிடாய் :
பெரும்பாலான பெண்கள் கருத்தரித்துவிட்டால் அவர்களது மாதவிடாய் நின்றுவிடுகின்றது. இது குறித்து இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்;
‘பெண்கள் தாங்கள் கருத்தரித்துள்ளனர் என்பதை மாதவிடாய் நின்று விடுவதன் மூலமே அறிந்து கொள்கின்றனர்’ என்று கூறுகிறார்கள்.
ஒரு கருவுற்ற பெண் பிரசவத்திற்கு குறுகிய காலத்திற்கு முன்னர் அதாவது இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்; பிரசவ வேதனையுடன் இரத்தம் வெளிவரக் கண்டால் அது ‘நிஃபாஸ்’ ஆகும்.
சில போது, அவள் தனது பிரசவத்திற்கு அதிக நாட்களுக்கு முன்போ அல்லது சில நாட்களுக்கு முன்போ எத்தகைய பிரசவ வேதனையுமின்றி இரத்தம் வெளிவரக் கண்டால், அது ‘நிஃபாஸ்’ ஆக கருதப்படமாட்டாது. எனினும்; பிரசவ வேதனையின்றி இரத்தம் வெளிவந்தால் இதனை மாத விடாய் எனக் கருதி மாதவிடாய்க்கான எல்லாச் சட்டங் களையும் பிரயோகிப்பதா? அல்லது ‘தமுன் பாஸித்’ (மாத விடாய் மற்றும் பிரசவத்தின் பின் வரும் இரத்தம் அல்லாது) எனக்கொண்டு மாதவிடாய்க்குரிய சட்டங்களை பிரயோகிக்காது இருப்பதா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து முரண்பாடு காணப்படுகிறது. வழக்கமான மாதவிடாய் அமைப்பில் அது இருந்தால் அது மாதவிடாய் என்பதே சரியான கருத்தாகும். காரணம் ஒரு பெண்ணிடமிருந்து வெளிப்படும் இரத்தமானது மாதவிடாய் சார்ந்தது என்பதை வேறுபடுத்தக் கூடிய ஏதாவது காரணம் காணப்படவில்லை யாயின் அடிப்படையில் அது மாதவிடாய் இரத்தமாகவே கொள்ளப்படும். கர்ப்பிணியான பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படாது எனச் சுட்டிக் காட்டும் எந்த ஆதாரமும் அல்குர் ஆனிலோ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர் களுடைய ஸுன்னாவிலோ இல்லை.
இதுவே இமாம் மாலிக் மற்றும் இமாம் ஷாபிஈ ஆகியோர் களது நிலைப்பாடாகும். இதுவே ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களதும் தெரிவாகும். அல்இக்தியா ராத் அல் பிக்ஹிய்யா லிஷைஹில் இஸ்லாம் இப்னு தைமியா லதா தலாமீதிஹி என்ற நூலில் அதன் ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்:
இதே கருத்தை இமாம் அஹ்மத் அவர்களும் கொண்டிருந்தார் என்றும் இமாம் பைஹகி அவர்கள் குறிப்பிடுகிறார்.
இதன்படி, பின்வரும் இரண்டு முக்கிய விடயங்களில் தவிர, கருவுற்ற ஒரு பெண்ணின் மாதவிடாய்க்கு, சாதாரண மாத விடாய் ஏற்பட்ட பெண்ணின் எல்லாச் சட்டங்களும் பொருத்தமானதாக அமையும்.
முதலாவது விடயம்: விவாகரத்து, கருவுறாத ஒரு பெண்ணை மாதவிடாயின் போது ‘தலாக் விவாகரத்து செய்வது ஹராமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவள் கருவுற்றவளாக இருந்தால் தலாக் சொல்வதில் எவ்விதத் தடை யும் கிடையாது. ஏனெனில் கருவுறாத ஒரு பெண்ணை மாதவிடாயின் போது ‘தலாக் விவாகரத்து செய்வது பின் வரும் அல்லாஹுதஆலாவின் கூற்றுக்கு முரணாணதாகும்.
‘நீங்கள் பெண்களை விவாகரத்து செய்தால் அவர்களின் இத்தாவைக் கணக்கிடக்கூடிய (மாதவிடாய் அல்லாத) காலத்தில் விவாகரத்துச் செய்யுங்கள்‘ (அத்தலாக் :1)
கருவுற்ற ஒரு பெண்ணை மாதவிடாயின் போது தலாக் விவாகரத்து செய்வது அல்லாஹ்வின் மேற்படி கூற்றுக்கு முரணாணது அல்ல. ஏனெனில் யார் கருவுற்ற ஒரு பெண்ணை விவாகரத்து செய்கிறானோ அவளுக்கு மாதவிடாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவளின் விவாகரத்து காலத்தில்தான் விவாகரத்து செய்துள்ளான். ஏனெனில் அவளது இத்தா கருவுற்றுள்ள காலத்தின் மூலமே கணிப்பிடப்படுகிறது. இதனடிப்படையில் ஒரு பெண்ணை உடலுறவின் பின் விவாகரத்து செய்வதில் எவ்விதத் தடையும் கிடையாது.
இரண்டாவது விடயம் : கருவுற்ற ஒரு பெண்ணின் மாத விடாய் காலமானது ஏனையோரின் மாதவிடாய் சுழற்சி போன்று முடிவடையமாட்டாது. அதாவது கருவுற்ற பெண்ணின் இத்தா அவளுடைய பிரசவத்துடன் முடிவடைகின்றது. அக்கால எல்லையில் அவளுக்கு மாதவிடாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுவே சட்டமாகும். இது குறித்து அல்லாஹு தஆலா பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
‘இன்னும் கர்ப்பிணிகளுக்குரிய இத்தாக் கால எல்லை அவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரையிலாகும்.”
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
தமிழில்:இஸ்லாம்ஹவுஸ் இணையதளம்
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: