بسم الله الرحمن الرحيم
நகங்களை நீளமாக வளர்த்தல் நபிவழிக்கு முரண்
சிலர் தமது நகங்களை நீளமாக வளர்த்திருக்கின்றனர். குறிப்பாக சில முஸ்லிம் பெண்கள் அழகுக்காக தமது நகங்களை நீளமாக வளர்க்கின்றனர். இது முற்றிலும் நபிவழிகாட்டலுக்கு முரணான செயலாகும்.
அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : மீசையைக் கத்தரிப்பது நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாதென எங்களுக்கு கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. (ஸஹீஹ் முஸ்லிம் : 622)
நாற்பது நாட்களுக்கு மேற்படாமல் நகங்கள் வெட்டப்பட வேண்டும் என்பதை மேற்குறித்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
மேலும் நகங்களை நீளமாக வளர்த்தல் இஸ்லாம் வலியுறுத்திய இயற்கை மரபுகளுக்கும் மாற்றமானதாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, மீசையைக் கத்திரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றிக்கொள்வது ஆகியவை தாம் அவை. (ஸஹீஹ் முஸ்லிம் : 621)
அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார் : நகங்களை நீளமாக வளர்ப்பதை ஷைத்தான் சில பெண்களுக்கு அலங்கரித்து காண்பித்து விட்டான். அப்படியான பெண்களை நான் எச்சரிக்கின்றேன். இன்னும் அவர்களில் சிலர் சுட்டு விரலுடைய நகத்தை மட்டும் நீளமாக வளர்க்கின்றனர். இது இஸ்லாத்தின் இயற்கை மரபிற்கும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது சமூகத்திற்கு நகங்களை வெட்டிக்கொள்ள விதித்திருந்த கால எல்லைக்கும் முரணாக இருக்கின்றது. (பதாவா நூருன் அலத்தர்ப் : 2/22)
அஷ்ஷெய்ஹ் இப்னுபாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார் : நகங்களை நீளமாக வளர்ப்பது நபிவழிக்கு முரணானதாகும். மேலும் இக்காரியம் சில கால்நடைகளுக்கும் சில இறை நிராகரிப்பாளர்களுக்கும் ஒப்பாகக்கூடிய செயலாகும். (மஜ்மூஉல் பதாவா : 10/49)
மேலும், நகங்களை நீளமாக வளர்த்தல் வுழூச் செய்கின்ற போது விரலில் நீர் முழுமையாகப் படுவதையும் தடுத்துவிடக் கூடியதாக இருக்கும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் வுழூவைப் பூரணமாகச் செய்யுங்கள். (திர்மிதீ : 788)
நகங்களை நீளமாக வளர்ப்பதன் மூலம் வுழூவுடைய நீர் விரல்களில் முழுமையாகப் படாமல் இருப்பது வுழுவின் பூரணத்துவத்தை இழக்கச் செய்துவிடுவதோடு அந்த வுழூவின் மூலம் தொழப்படக்கூடிய தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்படாத தொழுகையாக அமைந்து விடும்.
அல்லாஹ் எம்மனைவருக்கும் நபிவழிகாட்டலை சரியான முறையில் பின்பற்றுவதற்கும் அதனைப் பிறருக்கு எத்திவைப்பதற்கும் தவ்பீக் செய்யவானாக!
அல்லாஹ் மிக அறிந்தவன்.
✍️அஸ்கி அல்கமி
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: