உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – தொடர் – 03

 

 

உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.)

 

 

– Bro. Abu Julybeeb Saajid As-sailanee

 

 

21) அவரவரது குர்பானி பிராணியை அவரவர் தான் அறுக்க வேண்டுமா.?

அவ்வாறு எவ்வித நிபந்தனையும் இல்லை; குறித்த நபர் அறுப்பது விரும்பத்தக்கது. ஆனாலும் வேறொருவரை வைத்து அறுப்பது எவ்வித பிரச்சினையுமில்லை.

 

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ضَحَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى وَكَبَّرَ وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا.

அனஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 5565

 

22) உழ்ஹிய்யா கொடுக்கவிருக்கும் இரு நபர்களின் பிராணியை அறுக்கும்போது அவை தவறுதலாக மாறிவிட்டால் என்ன செய்வது..?

அவ்வாறான சந்தர்ப்பங்களில் எந்த பிரச்சினையும் இல்லை; தவறுதலாக மாறாட்டம் ஏற்பட்டால் அவை ஏற்றுக்கொள்ளப்படும்.

 

23) குர்பானி பிராணியை அறுக்கும்போது என்ன சொல்லி அறுக்க வேண்டும்.?

بسم الله, الله أكبر

(பிஸ்மில்லாஹி, அல்லாஹு அக்பர்) சொல்லி அறுக்க வேண்டும். அதன் பிறகு اللهم تقبل مني و من آل بيتي (அல்லாஹும்ம தகப்பல் மின்னீ வமின் ஆலி பைத்தீ) என்று கூற வேண்டும்.

 

இதில் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறுவது வாஜிப் ஆகும்; அதை ஒருவர் கூற மறந்துவிட்டால் அந்த இறைச்சியை உண்பது ஹராமாகும்; ஆனால் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூற மறந்தால் அது பிரச்சினையில்லை (இருப்பினும் கூறுவது மிகச் சிறந்தது)

 

24) குர்பானியை அறுப்பவருக்கு கூலியாக அதன் இறைச்சி/தோல் போன்றவற்றை வழங்கலாமா.?

 

கூலி என்ற அடிப்படையில் கொடுப்பது கூடாது; கூலி என்ற அடிப்படையில் அல்லாமல் பங்காக இறைச்சி/தோலை கொடுக்க முடியும். அதேபோல் பணத்தை கூட கொடுக்கலாம்.

 

25) குர்பானி இறைச்சியை நாம் மாத்திரம் உண்ண வேண்டுமா அல்லது பிறருக்கும் கொடுக்கலாமா.?

நாமும் சாப்பிடலாம்; பிறருக்கும் கொடுக்கலாம்; சேமித்தும் வைக்கலாம் (சேமித்து வைப்பதில் கால வரையறை இல்லை)

 

وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَـكُمْ مِّنْ شَعَآٮِٕرِ اللّٰهِ لَـكُمْ فِيْهَا خَيْرٌ‌ ‌ فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَيْهَا صَوَآفَّ‌ فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَـرَّ ‌ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَـكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

(அல்லாஹ்வின் பெயரால் ஹரமின்பால் கொண்டு செல்லப்படும் கொழுத்த) ஒட்டகங்களை – அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வுடைய அடையளங்களில் உள்ளவையாக நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் பெரும் நன்மை இருக்கிறது; ஆகவே (அதன் இடது முன் காலை மடக்கிக் கட்டி மீதமுள்ள மூன்று மூன்று கால்களில் அது நிற்குமாறு) நிறுத்தி வைத்து, அல்லாஹ்வின் பெயரைக் கூறி (அறுத்து) விடுங்கள்; அது விலாப்புறமாக கீழே விழுந்துவிட்டால், அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (தேவையுடையோராய் இருந்தும் பிறரிடம்) கேட்காதவர்களுக்கும், அதை யாசித்துக் கேட்டவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்.

(அல்குர்ஆன் : 22:36)

 

26) குர்பானி இறைச்சியை பிறருக்கு கொடுப்பதின் சட்டம் என்ன.?

அறுத்தவர் சாப்பிடுவது விரும்பத்தக்கது ஆகும்; கடமையானது அல்ல.

 

அவர் விரும்பினால் அதனை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுப்பது முஸ்தஹப் ஆகும்.

 

இதற்கான ஆதாரங்கள் :

ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு, “ஸவ்பான்! இந்த இறைச்சியை (பயணத்தில் கொண்டுசெல்வதற்கேற்ப) தயார் செய்” என்று கூறினார்கள். நான் (அவ்வாறே தயார் செய்து) மதீனா வரும்வரை அதிலிருந்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்துக்கொண்டேயிருந்தேன்.

– மேற்கண்ட ஹதீஸ் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் : 3993

 

முஸ்லிம் அல்லாதோருக்கு குர்பானி இறைச்சியை கொடுப்பதில் எந்த பிரச்சினையுமில்லை என இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ‘மஜ்மூவுல் ஃபதாவா’-வில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனாலும் முஸ்லிம்களோடு போர் செய்ய துணியாத மக்களுக்கு மாத்திரமே அந்த இறைச்சியை கொடுக்க முடியும்.

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் என (முதலில்) தடை விதித்தார்கள். பின்னர் (அந்தத் தடையை நீக்கி) “நீங்களும் உண்ணலாம். பயணத்திலும் எடுத்துச் செல்லலாம். சேமித்தும்வைக்கலாம்” என்று கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3987.

 

27) குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது.?

பங்கு பிரிப்பது பற்றிய எவ்வித வரையறையும் குர்ஆன் – ஸுன்னாவில் இல்லை. எனவே குறிப்பிட்ட அளவை நாம் சாப்பிட்டுவிட்டு, ஸதகா செய்யலாம்.

 

இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு ‘அன்ஹு) அவர்கள் அறிவிப்பதாவது :

குர்பானி இறைச்சியை மூன்று பங்காக பிரிப்பது சம்பந்தமாக இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு ‘அன்ஹு) அவர்கள் கூறியதாக ஓர் செய்தி ‘இப்னு அபீ ஷைபா’வில் வந்துள்ளது; இது ஸஹீஹான அஸர் அல்ல.! எனவே இதனை ஆதாரமாக கொள்ள முடியாது.

 

28) உழ்ஹிய்யாவை தன்னுடைய ஊரிலிருந்து அல்லது தன்னுடைய நாட்டிலிருந்து வேறு இடத்திருக்கு மாற்றம் செய்து அங்கு கொடுக்கலாமா? 

 

குர்பானி கொடுப்பவர் தன்னுடைய ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற்றக் கூடாது. தன் ஊரிலேயே குர்பானி கொடுப்பது தான் அடிப்படை. ஆனால் தங்கள் ஊரிலிருப்பவர் வசதிப்படைத்த மக்களாக இருந்து ஏழை எளிய மக்கள் இல்லையெனில் வேறு ஊரில் தரலாம்.

தன்னுடைய நாட்டில் கால்நடை இல்லாத காரணத்தால் வேறொரு நாட்டில் வாங்கி அங்கே உள்ள ஏழை எளியவர்களுக்கு தரலாம். தன் நாட்டில் கால்நடை அதிகம் விலையில் இருந்து வாங்க சிரமமெனில் அப்போதும் வேறு நாட்டில் தரலாம்.

 

ஜகாத் கொடுப்பதின் சட்டத்தைப் போன்றதுதான் இங்கேயும்.

 

29) உழ்ஹிய்யா கொடுக்க விரும்புபவர் என்னென்ன காரியங்களை செய்ய வேண்டும்.?

 

• தலை, தாடி, இன்னபிற முடிகளை வெட்ட/மழிக்க கூடாது; கை, கால்களில் காணப்படும் நகங்களை அகற்றக் கூடாது.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது, (துல் ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் ஆரம்பித்துவிட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம்.

இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3998

 

30) உழ்ஹிய்யா கொடுப்பவரது முடி, நகங்களை வெட்டுவது ஹராமான தடையா.? மக்ருஹான தடையா.?

இது ஹராமான தடையாகும்; ஒருவர் இதனைச் செய்தால் அவர் பாவியாவார்.

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

 

முந்தைய தொடரை வாசிக்க

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply