பிரயாணத் தொழுகை | தொடர் : 02 |
சுருக்கித் தொழுவதற்கான தூரம் :
—————————————————-
பிரயாணத்தின் போது நான்கு றக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதாயின் அப் பிரயாணம் குறிப்பிட்ட தூரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது.
இப்னு உமர் (றழி) மற்றும் இப்னு அப்பாஸ் (றழி) ஆகிய இரு ஸஹாபாக்களும் 48 மைல் தூரம் கொண்ட பயணமாயின் தொழுகைகளை சுருக்கி தொழுவதோடு, நோன்பு நோற்காமலும் இருந்துவிடுவார்கள் (ஸஹீஹுல் புஹாரி).
மேற்படி இரு ஸஹாபாக்களின் நடைமுறையை அடிப்படையாக கொண்டு இமாம்களான மாலிக், ஷாபிஈ, லைத், இஸ்ஹாக் இப்னு றாஹவைஹி (றஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர், ஒருவர் 48 மைல் அல்லது அதனை விட அதிக தூரம் கொண்ட பயணத்திலேயே சுருக்கித் தொழ முடியும் என்ற கருத்தை கொண்டிருக்கின்றனர்.
அதே வேளை மற்றொரு முக்கியமான ஸஹாபியான அனஸ் (றழி) அவர்கள் 15 மைல் தூரம் கொண்ட பயணத்திலும் சுருக்கித் தொழுதிருக்கிறார்கள் என்பதாக பல அறிவிப்புகள் வந்துள்ளன.
ஒரு நாள் தூரம் கொண்ட பயணத்திலேயே சுருக்கித் தொழ முடியும் என சில அறிஞர்களும், அரை நாள் பயண தூரத்தில் சுருக்கி தொழலாம் என மற்றும் சிலரும் குறிப்பிடுவதாக இமாம் இப்னு குதாமா (றஹ்) அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகிறார்கள் (பார்க்க : ‘அல்முக்னீ’).
வெவ்வேறுபட்ட இந்த கருத்துக்களை வைத்து நோக்கும் போது நபியவர்கள் சுருக்கித் தொழுவதற்கான தூரத்தை வரையறை செய்யவில்லை என்பது புலனாகிறது. அவ்வாறு வரையறுத்திருந்தால் அறிஞர்களிடையே வெவ்வேறு கருத்துகள் தோன்ற நியாயமில்லை. ஆயினும் நபிகளாரின் பயணங்கள், அவற்றின் தூரங்கள், அப்பயணங்களின் போது அவர்கள் சுருக்கி தொழுதமை பற்றிய விடயங்களை அடிப்படையாக வைத்து அறிஞர்கள் தமது கருத்துகளை முன்வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அல்லாஹ் அவர்களது ஆய்வுகளுக்கு நற்கூலி வழங்கப் போதுமானவன்.
ஆயினும் ஒரு மார்க்க விடயத்தை அறுதியிட்டு கூறுவதாயின் நபியவர்கள் தெளிவாக அது பற்றி கூறியிருக்க வேண்டும். ஆனாலும் நபியவர்கள் ஒரு போதும் சுருக்கித் தொழுவதற்கான தூரத்தை வரையறுக்கவில்லை.
இவ்வகையில் குறுந் தூரப் பயணமாயினும் நெடுந்தூரப் பயணமாயினும், உலக வழக்கில் பயணம் என்று கருதப்படும் அனைத்துப் பயணங்களிலும் சுருக்கித் தொழமுடியும் என்றும், நடைமுறையில் பயணம் என்று கருதப்படாத மிக குறுகிய தூரத்தின் போது சுருக்கித் தொழ முடியாது என்றும் பல அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இக்கருத்தே ஆதார வலுக்கூடிய கருத்தாக தோன்றுகிறது.
இதற்கு பின்வரும் ஆதாரங்களை குறிப்பிட முடியும் :
1. யஃலா பின் உமய்யா (றழி) அவர்கள் அல்குர்ஆனில் இடம்பெறுகின்ற ‘நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு தீங்கு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது’ (4:101) என்ற வசனத்தை உமர் (றழி) அவர்களிடம் எடுத்துக்கூறி, ‘காபிர்களின் தீங்கு இருக்கும் போது சுருக்கி தொழலாம் என்றே அல்லாஹ் கூறுகிறான், இப்போது எதிரிகளின் தீங்கு இல்லையே, சுருக்கித் தொழ வேண்டிய தேவை இல்லை அல்லவா?’ என்று கேட்ட போது உமர் (றழி) அவர்கள் ‘இது பற்றி நபியவர்களிடம் நானும் வினவியிருக்கிறேன். அப்போது நபியவர்கள் ‘சுருக்கித் தொழுதல் என்பது அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய ஸதகாவாகும். அந்த ஸதகாவை ஏற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கூறினார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்).
மேற்படி குர்ஆனிய வசனத்திலும் ஹதீஸிலும் பயணம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, தூரம் குறிப்பிடப்படவில்லை.
2. அனஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : ‘ நபியவர்கள் மூன்று மைல்கள் அல்லது மூன்று பர்ஸகுகள் (1 பர்ஸக் = 3 மைல்கள்) பயணம் மேற்கொண்டால் சுருக்கித் தொழுவார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்).
இது தொடர்பில் இமாம் இப்னு தைமியா (றஹ்) அவர்களின் கருத்து நோக்கத்தக்கதாகும் :
“தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கான தூரம் என்ன என்பது தொடர்பில் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடுகள் காணப்படும் நிலையில், நபியவர்கள் தூரத்தை வரையறுக்கவில்லை என்பது தெளிவானதாகும். எனவே நீண்ட பயணத்தில் சுருக்கித் தொழமுடியும் என்பது போலவே குறுகிய பயணத்திலும் சுருக்கித்தொழ முடியும். ஏனெனில், நபியவர்கள் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்த வேளை அறபாவிலும் மினாவிலும் தொழுகைகளை சுருக்கித் தொழுதார்கள், அவர்களுக்குப் பின்னால் மக்காவாசிகளும் சுருக்கியே தொழுதார்கள். நபியவர்கள் அதை அங்கீகரித்தார்கள். மக்காவுக்கும் அறபாவுக்குமிடையிலான தூரம் 12 மைல்கள் மட்டுமே.
எனவே நபியவர்கள் சுருக்கித் தொழுவதற்கான தூரத்தை காலத்தை அடிப்படையாக வைத்தோ, இடத்தை அடிப்படையாக வைத்தோ வரையறுக்கவில்லை என்பது தெளிவாகிறது. அவ்வாறு தூரத்தை வரையறுக்கும் அறிஞர்களின் கூற்றுகள் ஆதாரங்களை கொண்டிருக்கவில்லை” (பார்க்க : ‘மஜ்மூஉல் பதாவா’, 24/15).
சுருங்கக் கூறின், ஒருவர் எதில் பயணம் செய்கிறார் என்பதோ, எவ்வளவு தூரம் பயணம் செய்கிறார் என்பதோ முக்கியமல்ல, அவர் மேற்கொள்வது பயணம் என உலக வழக்கில் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அப் பயணத்தின் போது தொழுகைகளை சுருக்கி சேர்த்துத் தொழலாம் என்பதே அல்குர்ஆன், ஸுன்னாவிலிருந்து பெறப்படும் முடிவாகும். அல்லாஹு அஃலம்.
(இன் ஷா அல்லாஹ் தொடரும்…)
ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: