ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்

بسم الله الرحمن الرحيم

 

ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்

 

அல்லாஹுத்ஆலா படைத்த காலங்களில் சிறப்பான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதுவே ரமழானுக்கு முந்திய ஷஃபான் மாதம் ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள். இது ஷஃபான் மாதத்திற்குரிய ஒரு சிறப்பாகும். எனவே, இம்மாதத்தில் நாமும் அதிகமாக நோன்பு நோற்பது நபிவழியாகும்.

 

ஒவ்வொரு வணக்க வழிபாட்டிலும் பித்அத்கள் உருவாக்கப்பட்டது போன்று இம்மாதத்தின் சிறப்பம்சங்களாகப் பலர் பல பித்அத்களில் ஈடுபடுகின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் ஆதாரமாகக் கொண்ட பலவீனமான அல்லது, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களேயாகும். எனவே, இம்மாதத்தில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட காரியங்கள் எவை, செய்யக்கூடாத காரியங்கள் எவை என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

 

இம்மாதத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இடம்பெறக்கூடிய சில பலவீனமான அல்லது, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்.

 

1. “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பார்கள். சிலவேளை அவற்றை நோற்காமல் அவ்வருடத்தில் (விடுபட்ட) முழு நோன்பும் ஒன்று சேரும் வரை பிற்படுத்துவார்கள். பின்பு (விடுபட்ட) அந்த நோன்புகளை அவர்கள் ஷஃபானில் நோற்பார்கள்”.

 

இச்செய்தி தபராணியில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இப்னு அபீலைலா என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

2. “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாதம் நுழைந்தால்: ‘இரட்சகனே! எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் பரகத் செய்வாயாக மேலும், ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக’ என்று பிரார்த்திப்பார்கள்”.

 

இச்செய்தி பஸ்ஸார், தபராணீ ஆகிய நூற்களில் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸாஇதா இப்னு அபிர்ருகாத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் குறித்து இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “இவரது ஹதீஸ் மறுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்கள். இமாம் நஸாஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “இவர் யார் என்று எனக்குத் தெரியாது” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு ஹிப்பான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “இவரது செய்தியைக் கொண்டு ஆதாரம் எடுக்க முடியாது” என்று கூறியுள்ளார்கள். மேலும், இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை “தப்யீனுல் அஜப்” என்ற நூலில் பலவீனம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

 

3. “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுக்குப் பிறகு ரஜப், ஷஃபான் ஆகிய மாதங்களைத் தவிர வேறு மாதங்களில் நோன்பு நோற்கவில்லை”.

 

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட இச்செய்தியை இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “தப்யீனுல் அஜப்” என்ற நூலில் பலவீனம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஏனெனில், இதன் அறிவிப்பாளர் வரிசையில் யூஸுப் இப்னு அதிய்யா என்பவர் இடம்பெறுகிறார். இவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.

 

4. “ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் இந்த உம்மத்தின் மாதம்”.

 

இச்செய்தி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஒரு செய்தியாகும். இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய அபூபக்ர் என்பவர் பலவீனமானவரும், இவரது ஹதீஸ் விடப்பட்டதுமாகும் என்று இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்மீஸான்” என்ற நூலில் கூறியுள்ளார்கள். மேலும், இச்செய்தி மற்றோர் அறிவிப்பாளர் வரிசையினூடாக “முஸ்னதுல் பிர்தவ்ஸ்” என்ற நூலில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஹஸன் இப்னு யஹ்யா என்பவர் இடம்பெறுகின்றார். இவரது அறிவிப்பை இமாம் தாரகுத்னி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஏற்காமல் விட்டுள்ளார்கள் என்று இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், இச்செய்தியை இமாம் ஸுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

 

5. “ஷஃபான் என்னுடைய மாதமாகும். எனவே, எவர் ஷஃபானை கண்ணியப்படுத்துகின்றாரோ அவர் எனது கட்டளையை கண்ணியப்படுத்திவிட்டார்”.

 

இச்செய்தியும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு ஹதீஸ் என்று இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “தப்யீனுல் அஜப்” என்ற நூலில் கூறியுள்ளார்கள். நூஹ் அல்ஜாமிஃ என்பவரால் இட்டுக்கட்டப்பட்டதே இச்செய்தியாகும். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்று அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் பலவீனமானவர் என்பதில் அனைத்து ஹதீஸ் கலை அறிஞர்களும் உடன்பட்டுள்ளதாக அல்ஹலீலீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

6. “ஏனைய மாதங்களை விட ஷஃபானுக்கு உள்ள சிறப்பு, ஏனைய நபிமார்களை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உள்ள சிறப்பைப் போன்றதாகும்”.

 

இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியையும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறக்கூடிய அஸ்ஸிக்தி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுவதில் பிரசித்தி பெற்றவராவார்.

 

7. “ஏன் ஷஃபான் மாத்திற்கு ஷஃபான் என்று பெயர் வைக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஏனெனில், அம்மாத்தில் ரமழானுக்காக வேண்டி அதிக நலவுகள் பெருகிவிடுகின்றன”.

 

இமாம் சுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தி குறித்து இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் சியாத் இப்னு மய்மூன் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பொய்யைக் கொண்டு அறியப்பட்டவராவார்.

 

8. “ரமழானுக்குப் பின் மிகச் சிறந்த நோன்பு ஷஃபானுடைய நோன்பாகும்”.

 

இமாம் திர்மிதி, பைஹகி ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் இந்த ஹதீஸை அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவித்துள்ளார்கள். இமாம் சுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இச்செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸதகா இப்னு மூஸா என்பவர் இடம்பெறுகின்றார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இச்செய்தி பின்வரும் ஹதீஸுக்கும் முரணாக அமைந்துள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ரமழானுக்குப் பின்பு மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்”. (முஸ்லிம்)

 

9. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பை விடமாட்டாரோ என்று நாம் கருதும் அளவுக்கு அவர்கள் நோன்பு நோற்பார்கள். அவர்கள் நோன்பு நோற்க மாட்டார்களோ என்று நாம் கருதும் அளவுக்கு அவர்கள் நோன்பை விடுவார்கள். அவருடைய அதிகமான நோன்பு ஷஃபான் மாதத்தில் அமைந்திருந்தது. ‘அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானில் நீங்கள் அதிகமாக நோன்பு நோற்பதை நான் காணக்கூடியதாக இருக்கின்றதே?” என்று நான் அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள்: ‘ஆயிஷாவே! இம்மாதத்தில் உயிரைக் கைப்பற்றும் வானவருக்கு எவர்களது உயிர்கள் கைப்பற்றப்பட இருந்ததோ அவர்களது உயிர்கள் கைப்பற்றப்படாமல் மாற்றப்பட்டுக் கொடுக்கப்படும். எனவே, நான் நோன்பாளியாக இருக்கும் போதே அன்றி எனது பெயர் மாற்றப்படக்கூடாது என்று நான் விரும்புகின்றேன்’ என்றார்கள்”.

 

அபூஹாதிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தி குறித்து மறுக்கப்பட்ட செய்தி எனக் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸின் ஆரம்பப் பகுதி புஹாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்பதற்குரிய காரணத்தைத் தெளிவுபடுத்தும் பகுதி மறுக்கப்பட்ட செய்தியாகும்.

 

10. “ஷஃபானுடைய பதினைந்தாம் இரவு வந்தால் அதன் இரவில் நீங்கள் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்”.

 

அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அஸ்ஸில்ஸிலா அள்ளஈபா” என்ற நூலில் இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாளர் வரிசை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்று இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், இவர் பலவீனமானவர் என்று யஹ்யா இப்னு மஈன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் புஹாரி, இப்னுல் மதீனி ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று கூறியுள்ளார்கள்.

 

11. “ஐந்து இரவுகளில் கேட்கப்படும் துஆ மறுக்கப்பட மாட்டாது. அவை ரஜப் மாதத்தின் முதல் இரவு, ஷஃபானுடைய பதினைந்தாம் இரவு, ஜும்ஆ இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு”.

 

அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அஸ்ஸில்ஸிலா அள்ளஈபா” என்ற நூலில் இச்செய்தி குறித்து இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளார்கள்.

 

12. “எவர் ஷஃபானுடைய பதினைந்தாம் இரவு குல்ஹுவல்லாஹு அஹத் சூராவை ஆயிரம் தடவைகள் ஓதுகின்றாரோ, அவருக்கு நன்மாராயம் கூறக்கூடிய ஒரு இலட்சம் வானவர்களை அல்லாஹ் அவரிடம் அனுப்பி வைப்பான்”.

 

இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்மனாருல் முனீப்” என்ற நூலிலும் இப்னுல் ஜவ்ஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்மவ்ழூஆத்” என்ற நூலிலும் இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளனர்கள்.

 

அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

தொகுப்பு

– அஸ்கி அல்கமி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply