வெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதுவது ஸுன்னத்தா?

கேள்வி:

வெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதுவது ஸுன்னத்தா?

பதில்:

அல்ஹம்துலில்லாஹ்…,

சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதன் சிறப்பு பற்றி அதிகமான ஹதீஸ்கள் வந்துள்ளன

அதேபோன்று அதை வெள்ளிக்கிழமையில் ஓதுவதன் சிறப்பு பற்றியும் அதிகம் ஹதீஸ்களில் வந்துள்ளன அவைகளில் சிலது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாகவும் இன்னும் சிலது பலவீனமான ஹதீஸ்களாகவும் உள்ளன.

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி தன்னுடைய நூலில் ‘சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதன் சிறப்பு’ என்று தலைப்பு இட்டு பின்வரும் ஹதீஸை கொண்டு வந்துள்ளார்

பராஉ(رضي الله عنه) அறிவித்தார்:

ஒருவர் ‘அல் கஹ்ஃப்’ எனும் (18 வது) அத்தியாயத்தை (தம் இல்லத்தில் அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் இரண்டு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதனை ஒரு மேகம் சூழ்ந்துகொண்டு, அது குதிரையை மெல்ல மெல்ல நெருங்கலாயிற்று. மேலும், அவரின் குதிரை மிரளத் தொடங்கியது. விடிந்தவுடன் அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி(ﷺ) அவர்கள் ‘குர்ஆன் ஓதியக் காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது’ என்று கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 5011.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “எவர் ஜும்மா தினத்தில் சூரத்துல் கஃபை ஓதுகிறாரோ அது அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியில் ஒரு ஒளியாக இருக்கும்” முஸ்தத்ரகுல் ஹாகிம்

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளார். ஸஹீஹுல் ஜாமிஃ :6470

இதனடிப்படையில் வெள்ளிக்கிழமை இரவில் அல்லது பகலில் சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது அனுமதிக்கப்பட்ட ஒரு செயலாகும்.

இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் “ஒவ்வொரு ஜும்ஆ தினத்திலும் சூரத்துல் கஹ்ஃப் ஓதிவருவதன் சட்டம் என்ன? அதை தொடர்ச்சியாக ஓதுவது பித்அத்தாகக் கருதப்படுமா? என்று கேட்கப்பட்டபோது பின்வருமாறு பதிலலித்தார்;

“அதை தொடர்ச்சியாக ஓதுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஏனெனில் ஒவ்வொரு ஜும்ஆ தினத்திலும் அதை ஓதுவதில் சிறப்புக்கள் வந்துள்ளன. இது தொடர்பாக நபி (ﷺ)அவர்களைத் தொட்டும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.
(பதாவா நூருன் அலத்தர்ப் : 282)

 

தமிழாக்கம்:மௌலவி அஹ்ஸன் அல்கமி(ஆசிரியர்:மர்கஸு அல்கமா,இலங்கை)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply