நான் கல்வியிலும் வாழ்விழும் வெற்றியடைய மாட்டேன் என்று அனைவரும் கூறுகின்றனர்! நான் மரணிக்க விரும்புகின்றேன்

கேள்வி: கண்ணியமிகுந்த ஷேக்! அல்லாஹ்விற்காக உங்களை நேசிக்கிறேன்! நான் உயர்நிலைப்பள்ளியில் இறுதி ஆண்டு மாணவன். பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு தேவையான அளவு மதிப்பெண்களை  என்னால் பெற இயலவில்லை என்பதை உணர்கின்றேன்.

என் குடும்பத்தாரும், நான் அறிந்தவர்களும் நான் வாழ்வில் தோற்கத்தான் போகின்றேன் என்று கூறுகின்றனர், ‘நீ இம்மை வாழ்விலும் உன்னுடைய மார்க்கத்திலும் எந்த வெற்றியும் அடைய மாட்டாய்’ என்கிறார்கள்.

இந்த ஆண்டு முடிவிற்கு முன் நான் மரணித்து விடவேண்டும் என்று ஆசை கொள்ளும் அளவிற்கு, இது என் உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு உங்களது அறிவுரை என்ன? அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை வழங்கட்டும்.

பதில்:  அருமை சகோதரரே, அல்லாஹ் ஒரு அடியானுக்கு துன்பத்தை கொடுத்தால், பின்னர் அதற்கு பகரமாக அதைவிட சிறந்ததை கொடுக்கின்றான்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழந்து விடாதீர்கள், கவலைப்படாதீர்கள். உயர்ந்தோனும் தூயவனுமாகிய அல்லாஹ்வுடன் இருங்கள், இவ்வுலகத்தின் அனைத்து துன்பங்களும் சோதனைகளும் உங்களுக்கு நேர்ந்தாலும் சரி! நிச்சயமாக அல்லாஹ்விடம் இருப்பது உங்கள் கற்பனைக்கு எட்டுவதைவிடவும் மிகவும் பெரியது.
பல நேரங்களில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படலாம்.

 

எனது அருமை சகோதரரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது வலுவான நம்பிக்கையும் ஆதரவும் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றேன். நிச்சயமாக துன்பங்கள், சோதனைகள் ஏற்படும் போது அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பதுதான் மிக முக்கியமானது.
ஆகையால் உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அதற்ககு தேவையை விட அதிக கவனம் கொடுக்காதீர்கள்.

இவ்வுலக வாழ்வின் மகிழ்ச்சியும், இன்பமும் பள்ளி கல்வியிலும், பல்கலைக்கழக கல்வியிலும் தான் உள்ளது என்று உங்களுக்கு யார் சொன்னது.

இந்த உலகத்தின் மகிழ்ச்சியும், இன்பமும் செல்வத்தில் தான் உள்ளது என்று உங்களுக்கு யார் சொன்னது?

இந்த உலகத்தின் மகிழ்ச்சியும், இன்பமும் பதவிகளில் தான் உள்ளது என்று உங்களுக்கு யார் சொன்னது?

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மகிழ்ச்சி என்பது அல்லாஹ்வின் அச்சத்தை அடைவதில் உள்ளது போல வேறு எந்த விடயத்திலும் இல்லை. மேலும் இறையச்சம் இல்லாமல் ஒரு போதும் மகிழ்ச்சி இருந்ததும் இல்லை இருக்கப்போவதும் இல்லை.

செல்வங்களை சேகரிப்பதில் எந்த இன்பமும் கண்டதில்லை நான்
அல்லாஹ்வை அஞ்சுபவனே உண்மையில் இன்பத்தை சுவைத்தவன். [கவிதை ]

ஆகவே என் அருமை சகோதரரே முதலாவதாக அல்லாஹ்விற்கும் உங்களுக்கும் மத்தியில் உள்ள உறவை சீர் செய்துகொள்ளுங்கள், அவன் மீது முழு உறுதி (யகீன் ) கொள்ளுங்கள். அவன் தூயவன், உயர்ந்தவன்!

மேலும் ஏனைய சகோதரர்கள் இது போன்ற சோதனைகளில் உள்ள சகோதரர்களுக்கு, அது தொழில் ரீதியான சோதனையாக இருந்தாலும் சரி கல்வியில் இருந்தாலும் சரி, அது போன்ற சகோதர்களுக்கு இந்த முக்கிய உண்மையை கூறுங்கள்:

“நீங்கள் இழக்கும் ஒவ்வொரு விடயத்திற்கும் அல்லாஹ்விடம் மாற்று விடயம் உள்ளது, அல்லாஹ் உடைந்ததை சீர் செய்கின்றான், முடிவுகளை சிறந்ததாக ஆக்குகிறான்! கூலியை அதிகப்படுத்துகின்றான். அவன்தான் நமது இறைவன் (ரப்)! அனைத்தையும் ஆள்கின்றவன்!”

نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ
அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன்.
[ஸூரத்துல் அன்ஃபால் 8:40]

சிந்தித்து பாருங்கள்! அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்! உங்கள் வாழ்வை நிர்வகிப்பவன் யார்! அரசருக்கெல்லாம் அரசன்! கிருபையாளர்களிலெல்லாம் மகா கிருபையாளன்! கருணையாளர்களில் எல்லாம் மகா கருணையாளன்! அவனின் கருணைக்கு எல்லையே இல்லை! உங்களுடைய நிலை எவ்வாறு இருக்கும்!

யார் ஒருவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவனுடன் உண்மையாக இருக்கிறாரோ அல்லாஹ்வும் அவருடன் உண்மையாக இருப்பான்!

இந்த உலகத்தில் சோதனைகள் ஏற்படும் போதெல்லாம் அது நல்ல முடிவையே தரும் என்று அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டால், நிச்சயமாக அதன் முடிவு நன்மையாகவே தவிர இருக்காது!

ஹதீஸ் குதிஸியில் வந்துள்ளது:

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான் “என் அடியான் என்னைப் பற்றி என்ன நல்லெண்ணம்  வைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன்.”
7405. ஸஹீஹுல் புகாரி

 

அதாவது யார் என்னைப்பற்றி நல்ல எண்ணம் வைக்கிறாரோ அது அவருக்கு தான்.

ஆகவே ஒரு மனிதர் தனது வாழ்வில், உடலில், செல்வத்தில், குடும்பத்தில் அல்லது குழந்தைகளில் ஏதேனும் சோதிக்கப்பட்டு,  அதற்குப் பகரமாக அதைவிட சிறந்ததை அல்லாஹ் கொடுப்பான் என்று எண்ணினால், நிச்சயம் அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் அவனை கைவிட மாட்டான். அல்லாஹ்விடம் உண்மையாக இருந்தால், அல்லாஹ்வை மட்டுமே வணங்கினால், தனது உள்ளத்தில் உறுதியாக அல்லாஹ் மீண்டெழ உதவுவான் என்று நம்பினால் அல்லாஹ் உதவுவான்.

ஆகையால் நான் உங்களுக்கு இந்த மிகப்பெரிய அடிப்படையை கொண்டு அறிவுரை செய்கின்றேன், அது தான் தவ்ஹீத்.
மனிதர்களை தீண்டும் ஒவ்வொரு சோதனைக்கும் இது பொருந்தும், அதை அச்சத்தைக் கொண்டும் கவலைகளைக் கொண்டும், வருத்தத்தைக் கொண்டும் சந்திக்க வேண்டாம். இந்த உலகமும் அதில் வாழ்பவர்களும் அல்லாஹ்வின் அனுமதி இன்றி மக்களுக்கு எந்த பயனையும், தீங்கையும் கொண்டு வர முடியாது. அதற்க்கு சாத்தியமே இல்லை. நிச்சயமாக அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் கையில் தான் உள்ளது

قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ‌ؕ
“எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுடையதே!” என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.
[3:154. ]

 

நபி அவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகின்றான், ‘(நபியே!) நீங்கள் கூறுங்கள்.’
‘اِنَّ’ : நிச்சயமாக, உறுதியாக
الْاَمْرَ : எல்லா அதிகாரங்களும், ஆரம்பத்திலிருந்து இறுதி வரை அனைத்து விடயங்களின் அதிகாரங்களும்
‘كُلَّهٗ لِلّٰهِ‌ؕ’ அனைத்தும் அல்லாஹ்விடமே உள்ளது.
அவனே விடயங்களின் அளவுகளை நிர்ணயிக்கிறான், நேரங்களையும் வயதுகளையும் விதிக்கின்றான், அனைத்து விடயங்களுக்கும் அல்லாஹ்விடம் ஒரு அளவு உள்ளது.

عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ‏
மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன்.
[13:9]

ஆகையால் மதிப்பெண்களும், பட்டங்களும் தான் அனைத்தும் என்று எண்ணி பலவீனம் அடைந்துவிடாதீர்கள், வருத்தப்படாதீர்கள், ஒருபோதும் அவ்வாறு அல்ல.

சிலர் பட்டங்களை விரும்புகின்றனர், சிலர் வெற்றியை. அது கிடைக்காவிட்டால் வருத்தமும், சோகமும், வேதனையும் அவர்களை ஆட்கொள்கிறது.

சிலர் வாழ்க்கையில் வெற்றியை, விரும்புகின்றனர், சிலர் எதிலும் முதலாவதாக இருக்க விரும்புகின்றனர், எனது அருமை சகோதரரே உங்களை நீங்களே நெருக்கடியில் தள்ளாதீர்கள் அல்லாஹ் உங்கள் வாழ்க்கையை விசாலமாக்கி உள்ளான். எனது சகோதரரே அல்லாஹ்வுடன் இருங்கள், உயர்ந்தோன் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்ததை பொருந்திக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது முழுநம்பிக்கை வையுங்கள், அவன் உங்களுக்கு கொடுத்ததை ஏற்றுக்கொள்ளுங்கள் அவனிடம் வெற்றியை தேடுங்கள், அல்லாஹ் உங்களை சிறந்தவராக ஆக்கவேண்டும் என்று துஆ கேளுங்கள்,

ஆனால் இந்த உலக வாழ்வையோ, உங்கள் கல்வியையோ, உங்கள் இலக்குகளையோ, உங்களது கவலைகளில் மிக முக்கியமானதாக ஆக்கிவிடாதீர்கள்.

அல்லாஹ்வை அஞ்சாத இந்த நபர்களுக்கு யார் சொன்னது, பட்டங்கள் படிப்புகள் பெறாதவர் அவரின் மார்க்கத்திலும் துனியாவிலும் வெற்றி பெறமாட்டார் என்று. அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றோம், யார் இவ்வாறு சொன்னது!

ஒருபோதும் இல்லை! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இந்த உம்மத்தின் தலைசிறந்தவர்களும் , உயிர்தியாகிகளும் எவரும் பள்ளிகளில் படித்ததில்லை,

இன்றும் நீங்கள் பார்க்கலாம் உலக விடயத்திலும் மார்க்க விடயத்திலும் மக்களில் சிறந்த பலர் ஒரு எழுத்து கூட படிக்காதவர்கள் உள்ளனர்.

எழுதப்படிக்க தெரியாத ஒருமனிதன் எந்த பட்டமும் பெறாதவர், இருந்த போதிலும், மக்கள் அனைவரை விடவும் சிறப்பும் கண்ணியமும் வாய்ந்தவராக இருக்கின்றார். இது அனைத்தும் மக்களின் தவறான எண்ணங்கள், அது உண்மையை எந்த வகையாலும் பாதிக்காது. உண்மை என்னவென்றால் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் கையில் தான் உள்ளது.

ஒருவர் அல்லாஹ்வை பற்றிக் குறிப்பிடாமல், குர்ஆனும் சுன்னாஹ்வும் எது வெற்றி எது தோல்வி என்று தெளிவுபடுத்தியதை குறிப்பிடாமல் உங்களிடம் வாழ்வின் வெற்றியையும் தோல்வியையும் குறித்து பேசினால் அவரிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அவர் பொய்யர். எவர் அல்லாஹ்வுடன் வெற்றியை தொடர்பு படுத்தி, குர்ஆனும் சுன்னாவும் வெற்றி தோல்வியை பற்றி தெளிவு படுத்தியதைப் போல் கூறுகிறாரே, அவர் உண்மை உரைத்தவர் ஆவார்.

வெற்றிகள் அனைத்தும்,  நிம்மதிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள உறவை சீர் செய்வதில் தான் உள்ளது.

உண்மை வெற்றி அல்லாஹ்வின் நெருங்கிய அடியார்களில் ஒருவராக இருப்பதில் தான் உள்ளது, நீங்கள் துஆ கேட்டால் அவன் அங்கீகரிப்பான், நீங்கள் உண்மையில் வெற்றி அடைய விரும்பினால் அல்லாஹ்வின் தூதரின் அறிவுரையை கேளுங்கள்:

“என் அடியான் கூடுதலான (நஃபிலான) வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்.

அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன்.
[ஸஹீஹுல் புகாரி]
இது தான் உண்மையில் வெற்றி.
யார் இந்த மனிதர் அல்லாஹ்விடம் அவர் பாதுகாப்பு கேட்டால் அவன் பாதுகாக்கின்றான், அல்லாஹ்விடம் ஏதாவது கேட்டால் அல்லாஹ் கொடுக்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه و سلم ) வேறொரு ஹதீஸில் கூறினார்கள்:
“(புழுதி படிந்த) பரட்டைத் தலை கொண்ட, வீட்டுவாசல்களில் தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்கள் ஆவர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை மெய்யாக்குவான்.” [ஸஹீஹ் முஸ்லிம்]

அவர் கல்வி தேடி வந்தால் நிறுத்தப்படுவார், வேலை தேடி வந்தால் நிறுத்தப்படுவார். ஆனால் அல்லாஹ்வின் மீது சத்தியம் இட்டு கூறினால் அவர் கொடுக்கப்படுவார்

அல்லாஹ்வின் பார்வையில் சிறந்தவனாக இருப்பதை விட பெரிய ஆட்சியதிகாரம்! அல்லாஹ்வின் பார்வையில் சிறந்தவனாக இருப்பதே உண்மையில் கண்ணியம். [கவிதை ]

அல்லாஹ்வை நீங்கள் “யா ரப் !” என்று கூப்பிட்டால் அவன் உங்களுக்கு கதவுகளை திறக்கிறான் என்பதை விட வேறு என்ன கண்ணியம் இருக்க முடியும்!

தமிழாக்கம்: நயீம் இப்னு அப்துல் வதூத்

மூலம்: ஷேக் முஹம்மத் இப்னு முக்தார் அஷ் ஷன்கீதி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply