துல்ஹஜ் மற்றும் உழ்ஹிய்யா குறித்த சில மார்க்க தீர்ப்புகள்

1.கேள்வி:வெள்ளிக்கிழமையில் அரஃபா நோன்பு நோற்பது தொடர்பான மார்க்க சட்டம் என்ன?

அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் வெள்ளிக்கிழமையில் அரஃபா நோன்பு நோற்பது தொடர்பாக வினவப்பட்ட போது கீழ் காணுமாறு பதிலளித்தார்கள்:

“உன் மீது குற்றம் ஏதும் இல்லாமல் இருக்க ஆதரவு வைக்கிறேன். ஏனெனில், நீ தனியாக அத்தினத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று நாடவில்லை. மாறாக, அத்தினம் அரஃபா தினம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக மாத்திரமே நீ நோன்பு நோற்றாய். என்றாலும், அதனுடன் சேர்த்து வியாழக்கிழமையும் நோன்பு நோற்றிருந்தால் மிகவும் பேணுதலாக இருந்திருக்கும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சுன்னத்தான நோன்பு நோற்கின்றவர் விடயத்தில் வெள்ளிக்கிழமையில் மாத்திரம் தனியாக நோன்பு நோற்பதை தடுத்துள்ளார்கள்”.

– ஃபதாவா இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ்

2.கேள்வி : உழ்ஹிய்யா கொடுக்க நாடுபவர் தனது முடிகளையும் நகங்களையும் அகற்றுவதின் சட்டம் என்ன?

பதில் : அவ்வாறு அகற்றுவது ஹராமாகும். இக்கருத்தை இமாம்களான அஹ்மத், இஸ்ஹாக், தாவூத், ரபீஆ, ஸன்ஆனி, ஷவ்கானி, வாதிஇ, இப்னு உஸைமீன் ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் கூறியுள்ளனர்.

3.கேள்வி: முடிகளையும் நாகங்களையும் அகற்றாமல் இருப்பது உழ்ஹிய்யா கொடுப்பவர் மீது மாத்திரம் கடமையான ஒன்றா? அல்லது, அவருடைய குடும்பத்தினர் அனைவர் மீதும் கடமையானதா?

பதில்: உழ்ஹிய்யா கொடுப்பவர் மீது மாத்திரம் கடமையான ஒன்றாகும். ஏனெனில், இது தொடர்பான நபியவர்களின் கட்டளை உழ்ஹிய்யா கொடுக்க முற்படும் நபரை விழித்து அமைந்துள்ளது. இக்கருத்தை இமாம்களான இப்னு பாஸ், இப்னு உஸைமீன் ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் கூறியுள்ளார்.

4.கேள்வி: ஒருவர் இன்னொருவரிடத்தில் பணம் கொடுத்து தனக்காக உழ்ஹிய்யா பிராணி ஒன்றை வாங்கி அறுக்குமாறு கூறுகிறார். இப்படியான சந்தர்ப்பத்தில் முடிகள் மற்றும், நகங்களை கலையாதிருப்பது யார் மீதுள்ள கடமையாகும்?

பதில்: யாருடைய செலவில் உழ்ஹிய்யா கொடுக்கப்படுகிறதோ அவர் மாத்திரம் அவற்றைத் தவிர்த்து கொள்ள வேண்டும். இத்தீர்ப்பை அஷ்ஷெய்க் இப்னு ஹிஸாம் அல்பக்தானி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஃபத்வாத் தொகுப்பில் காணலாம்.

5.கேள்வி: வெளிநாட்டில் உள்ள ஒருவர் தனக்காக ஓர் உழ்ஹிய்யா பிராணியை வாங்கி அறுத்துப் பலியிடுமாறு வேண்டிக் கொண்டால், அவ்வுழ்ஹிய்யா பிராணியை வெளிநாட்டில் உள்ளவர் பெருநாள் தொழுகையை தொழுத பிறகா அறுக்க வேண்டும்? அல்லது, உழ்ஹிய்யா பொறுப்பளிக்கப்பட்டவர் பெருநாள் தொழுகையை தொழுத பிறகா அறுக்க வேண்டும்?

பதில்: வெளிநாட்டில் உள்ளவர் பெருநாள் தொழுகையை தொழுத பிறகே அறுக்க வேண்டும். ஏனெனில், அவ்வுழ்ஹிய்யாவானது அவருடையதே. எனவே, அவர் தொழுத பிறகே அதனை அறுக்க வேண்டும். இத்தீர்ப்பை அஷ்ஷெய்க் இப்னு ஹிஸாம் அல்பக்தானி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஃபத்வாத் தொகுப்பில் காணலாம்.

6.கேள்வி: உழ்ஹிய்யா பிராணியை அறுத்தலானது பெருநாள் குத்பாவுக்கு பிறகுதான் நிகழ வேண்டும் என்று நிபந்தனைகள் ஏதும் உள்ளதா?

பதில் : அவ்வாறு நிபந்தனைகள் ஏதும் கிடையாது. பெருநாள் தொழுகையை நிறைவு செய்தால் தாராளமாக உழ்ஹிய்யா பிராணியை அறுக்க முடியும். ஏனெனில், புகாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் தொழுகையை மாத்திரம் நபியவர்கள் வரையறுத்துக் கூறியுள்ளார்கள்.

அஷ்ஷெய்க் இப்னு ஹிஸாம் அல்பக்தானி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஃபத்வாத் தொகுப்பில் காணலாம்.

7.கேள்வி: உழ்ஹிய்யா கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்ட இறுதி நேரம் எது?

பதில் : அய்யாமுத் தஷ்ரீக்குடைய இறுதி நாள் வரை உழ்ஹிய்யா கொடுக்க முடியும். மேலும், இவ்விடயம் குறித்து பைஹகி எனும் கிரந்தத்தில் ஜுபைர் இப்னு முத்இம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. அதில் நபியவர்கள் கூறியதாவது: “அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் அனைத்தும் அறுப்புக்குரிய நாட்களாகும்”.

ஆயினும், இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டதாகவும், குளறுபடியான தன்மையைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.

என்றாலும், இப்னு உமர், அனஸ் ரலியல்லாஹு அன்ஹும் போன்ற ஸஹாபாக்கள் அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் உழ்ஹிய்யா கொடுத்ததாக சில தகவல்கள் பதிவாகியுள்ளன.

அஷ்ஷெய்க் இப்னு ஹிஸாம் அல்பக்தானி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஃபத்வாத் தொகுப்பில் காணலாம்.

8.கேள்வி: இரவு நேரத்தில் உழ்ஹிய்யா கொடுக்க முடியுமா?

பதில்: இரவு நேரத்தில் உழ்ஹிய்யா கொடுப்பது ஏற்றத்திற்கு மாற்றமான காரியமாகும். ஏனெனில், நபியவர்கள் பகல் பொழுதிலேயே உழ்ஹிய்யா கொடுத்திருக்கிறார்கள். மேலும், பகல் வேளையானது மக்களுக்கு உழ்ஹிய்யாவைப் பெறுவதற்கு இலகுவானதாக இருக்கும்.

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தொட்டும் இரவு வேளையில் உழ்ஹிய்யா கொடுக்க முடியாது என்று ஒரு செய்தி பதிவாகியுள்ளது. ஆயினும், அதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

அஷ்ஷெய்க் இப்னு ஹிஸாம் அல்பக்தானி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஃபத்வாத் தொகுப்பில் காணலாம்.

9.கேள்வி : بسم الله கூறி அறுக்காத பிராணிகளை சாப்பிட முடியுமா?

பதில்: بسم الله கூறாமல் அறுப்பதும், அதனை சாப்பிடுவதும் ஆகுமானதல்ல. ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்: “மேலும், அறுக்கும் பொழுது எதன் மீது அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படவில்லையோ, அதிலிருந்து நீங்கள் புசிக்காதீர்கள்” (அல் அன்ஆம்: 121)

அஷ்ஷெய்க் இப்னு ஹிஸாம் அல்பக்தானி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஃபத்வாத் தொகுப்பில் காணலாம்.

10.கேள்வி : الله أكبر என்ற வார்த்தையை பொதுவாகப் பிராணிகளை அறுக்கும் போது கூற வேண்டுமா? அல்லது, உழ்ஹிய்யா பிராணிகளை மாத்திரம் அறுக்கும் போது கூற வேண்டுமா?

பதில் : உழ்ஹிய்யா பிராணிகளை அறுக்கும் போது بسم الله என்ற வார்த்தையுடன் الله أكبر என்ற வார்த்தையையும் இணைத்துக் கூற வேண்டும். மாறாக, உழ்ஹிய்யா அல்லாத பிராணிகளை அறுக்கும் போது بسم الله என்ற வார்த்தையை மாத்திரம் கூறினால் போதுமானது. புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட ஹதீஸின் பிரகாரமும், முஸ்லிம் எனும் கிரந்தத்தில் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட ஹதீஸின் பிரகாரமும் நபியவர்கள் உழ்ஹிய்யா பிராணியை அறுக்கும் போதே بسم الله والله أكبر என்ற வார்த்தையை கூறியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அஷ்ஷெய்க் இப்னு ஹிஸாம் அல்பக்தானி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஃபத்வாத் தொகுப்பில் காணலாம்.

11.கேள்வி : அறுப்புப் பிராணியை கிப்லாவை முன்னோக்க வைத்து அறுப்பது கட்டாயமானதா?

பதில் : இப்படியான நிபந்தனையை உலமாக்களில் எவரும் இட்டதில்லை. எனவே, கிப்லாவை முன்னோக்க வைப்பது அதன் நிபந்தனைகளில் ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

என்றாலும், கிப்லாவை முன்னோக்க வைத்து அறுப்பதே மிகச் சிறந்த காரியமாகும். இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் சரியான அறிவிப்பாளர் வரிசையில், அவர்கள் அறுப்புப் பிராணியை கிப்லாவை முன்னோக்க வைத்ததாக இடம் பெற்றுள்ளது. எனவே, அவர்கள் செய்ததைப் போன்று எங்களுக்கும் செய்து கொள்ளலாம். ஆனாலும், அவ்வாறு முன்னோக்க வைப்பது நிபந்தனை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

அஷ்ஷெய்க் இப்னு ஹிஸாம் அல்பக்தானி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஃபத்வாத் தொகுப்பில் காணலாம்.

12.கேள்வி : உழ்ஹிய்யா கொடுக்கும் போது اللهم منك ولك تقبل مني
என்று கூற வேண்டுமா?

பதில் : நபியவர்களைத் தொட்டும் இப்படியான வாசகங்களைக் கூறியதாக சில அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளன. அந்த அடிப்படையில்:
اللهم تقبل مني ومن أمتي
اللهم تقبل مني
اللهم منك ولك تقبل مني
اللهم منك ولك
اللهم تقبل مني
بسم الله اللهم تقبل من محمد وآل محمد ومن أمة محمد
ஆகிய வார்த்தைப் பிரயோகங்களை இனங்காட்ட முடியும்.

அஷ்ஷெய்க் இப்னு ஹிஸாம் அல்பக்தானி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஃபத்வாத் தொகுப்பில் காணலாம்.

13.கேள்வி: விதை அடிக்கப்பட்ட பிராணியை உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியுமா?

பதில்: உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியும். ஏனெனில், நபியவர்கள் விதை அடிக்கப்பட்ட இரு செம்மறி ஆடுகளை உழ்ஹிய்யாவாகக் கொடுத்திருக்கிறார்கள். மேலும், அவ்வாறு செய்வது அதனுடைய மாமிசத்திற்கு மிகச் சிறந்த தன்மையைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், இப்படியான பிராணியை உழ்ஹிய்யா கொடுப்பது ஆகுமானது என்ற கருத்து அறிஞர்களுக்கு மத்தியில் நிலவிவருகிறது.

அஷ்ஷெய்க் இப்னு ஹிஸாம் அல்பக்தானி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஃபத்வாத் தொகுப்பில் காணலாம்.

14.கேள்வி: உழ்ஹிய்யா பிராணியை வாங்கிய பிறகு அதில் ஏதாவது குறை ஏற்பட்டால் என்ன செய்வது?

பதில்: உழ்ஹிய்யா பிராணியை வாங்கிய பிறகு அதில் ஏதாவது குறை ஏற்பட்டால், அக்குறை உழ்ஹிய்யாவில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே, அதனை அறுக்க முடியும். அது நல்ல நிலையில் வாங்கப்பட்டதாலேயே இப்படியான தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை கருத்தில் கொள்க!

அஷ்ஷெய்க் இப்னு ஹிஸாம் அல்பக்தானி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஃபத்வாத் தொகுப்பில் காணலாம்.

15.துல்ஹஜ் மாதத்தில் எப்போதிலிருந்து எதுவரை தக்பீர் கூறப்பட வேண்டும்?

அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

“துல்ஹஜ் பத்தில் கூறப்படும் பொதுவான தக்பீரானது, துல்ஹஜ் மாதம் ஆரம்பித்த நாள் முதல் அய்யாமுத் தஷ்ரீக்குடைய இறுதி நாள் வரை கூறப்படக் கூடியதாக இருக்கும்”.

الله أكبر الله أكبر الله أكبر
لا إله إلا الله والله أكبر
الله أكبر ولله الحمد

– ஃபதாவா இப்னு பாஸ்: 13/17

மொழிபெயர்ப்பு:ஷேய்க் அபூ ஹுனைஃப் ஹிஷாம்(ஸலபி,மதனி)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply