“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா?

“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா?

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

முன் வாழ்ந்த அதிகமான இமாம்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டம் பற்றிக் கூறும் போது, இத் தொழுகையானது ஒரு ஸுன்னத்தான தொழுகைதான் என்று கூறியிருப்பதை பார்க்க முடிகின்றது. இவர்கள் இப்படி சட்டம் சொல்லும் போது இஜ்மா என்றடிப்படையில் ஒன்று சேர்ந்து சட்டம் வழங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது.

 

அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

“உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(புஹாரி:1167),(முஸ்லிம்:714)

 

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்

 

“தஹிய்யதுல் மஸ்ஜித் விரும்பத்தக்க தொழுகையாகும் என்ற கருத்தில் உலமாக்கள் ஏகோபித்த கருத்தில் இருக்கிறார்கள். அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களது தடையுடன் சம்பந்தப்படுத்தி தெளிவாக வருகின்ற நபிமொழியின் மூலம் காரணமில்லாமல் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழாமல் உட்காருவதானது வெறுக்கத்தக்க செயலாகும்”

(மஜ்மூஃ : 3/544)

 

இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹூல்லாஹ் அவர்கள் கூறினார்கள்

 

“பத்வா வழங்கக்கூடிய உலமாக்கள் இந்த இடத்தில் வருகின்ற ஏவலானது சுன்னத்தை தெளிவுபடுத்துவதாகும் என்ற கருத்தில் ஏகோபித்த நிலைப்பாட்டில் இருக்கின்றனர். வெளிப்படையாக சட்டம் கூறக்கூடிய சாரராரைத் தொட்டும் இமாம் இப்னு பதால் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதனை வாஜிபான தொழுகை என கூறியிருக்கிறார்கள்…”

(பத்ஹுல் பாரி: 1/538, 539),(அல் மஹல்லா: 2/7)

 

இமாம் இப்னு பாஸ் றஹிமஹுல்லாஹு அவர்களிடம் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையினுடைய சட்டம் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது அதற்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்

 

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது,

“உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்” இன்னுமொரு அறிவிப்பில், “அவர் இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும்” என்ற வார்த்தைக்கு ஏற்ப யார் பள்ளிக்கு சுத்தமான நிலையில் நுழைகிறாரோ அவர் இரண்டு ரக்அத்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுவது சுன்னத்தாகும்.

 

இந்த சுன்னாவினை ளுஹாவுடைய நேரமாக இருந்தாலும் அல்லது ளுஹர், அஸர், மஃரிப் என்று எந்த நேரமாக இருந்தாலும் தொழுதுகொள்ளலாம். அந்த நேரம் தொழுவதற்கு தடுக்கப்பட்ட அஸருடைய நேரமாக இருந்தாலும் பிரச்சினை கிடையாது. இந்த தொழுகையை எந்த நேரமாக இருந்தாலும் அதில் தொழுவது மார்க்கம் சொல்லித் தந்த வழிகாட்டலாகும். ஆகவே இந்த தொழுகையானது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்”

(binbaz.org.sa எனும் இணையத்தில் இருந்து சுருக்கமாக.)

 

பத்வா அல் லஜ்னதுத் தாயிமா என்ற நூலில் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையின் சட்டம் பற்றி

 

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது, “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்” என்ற பொதுவான கட்டளைக்கு ஏற்ப, எந்த நேரமாக இருந்தாலும் பள்ளிக்கு நுழைகின்ற ஒவ்வொருவர் மீதும் இத்தொழுகை சுன்னத்தான ஒன்றாகும்.

(பதாவா அல்லஜ்னதுத் தாயிமா: 7/137)

 

இப்படி உலமாக்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டத்தை தெளிவாக கற்றுத் தந்திருக்கிறார்கள்.

 

இன்னும் சில சாரார் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை வாஜிபான ஒன்றாகும் என தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

 

ஒரு சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குத்பா செய்து கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் வந்து தொழாமல் உட்கார்ந்து விடுகிறார். அவரைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் போதே அவரை எழும்பி தொழுமாறு கூறி விடுகிறார்கள்.

 

இந்த செய்தியை வைத்து தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை கடமையான ஒன்றுதான் என தங்களுடைய வாதத்தை நிரூபித்து காட்டுகிறார்கள்.

 

அதே போன்று இது சுன்னத்தான தொழுகைதான் என்று சொல்லக்கூடிய சாரார், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் மரணிக்கின்ற காலம் வரைக்கும் செய்த ஒவ்வொரு குத்பா உரையின் போதும் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையை தொழாதவர்களாக மிம்பரிலெல்லாம் இருந்தார்கள் என்று ஒரு செய்தியை ஆதாரம் காட்டுகிறார்கள்.

 

அதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் முன்னால் வந்து உட்கார்ந்து விடுகிறார். இன்னுமொரு மனிதர் வெட்கத்தினால் பின்னால் உட்காருகிறார். இன்னுமொரு மனிதர் அந்த இடத்தை புறக்கணித்து செல்கிறார். இந்த செய்தி நீளமானதாக இருந்தாலும் இந்த மூன்று மனிதர்களும் உட்காரும் போது தொழுதார்கள் என்று எந்த கிடையாது. இவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர்க்கவும் இல்லை என்று கூறி தங்களுடைய வாதத்தை கூறுகின்றனர்.

 

எனவே எப்படி சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதை இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

“தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை கடமையானதுதான் என்று சொல்லப்படக்கூடிய கருத்து வலுவான ஒன்றுதான். என்றாலும் நெருக்கமான கருத்து இத்தொழுகையானது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். இது பற்றிய சரியான அறிவு அல்லாஹ்விடத்திலே இருக்கிறது.”

(மஜ்மூஃல் பதாவா: 14/354)

 

இதே போன்று இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்களிடத்தில் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையின் சட்டம் பற்றி கேட்கப்பட்ட போது அதற்கு இமாமவர்கள் சில உலமாக்கள் சொல்லக் கூடிய நியாயங்களை எல்லாம் சொல்லி விட்டு இறுதியாக

 

“நானும் ஆரம்பத்தில் வாஜிப் என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தேன். பின்னர் பரீட்சித்துப் பார்த்து விட்டு அது சுன்னத்தான தொழுகைதான் என என்னுடைய கருத்தை மாற்றி விட்டேன். என்னிடம் ஒருவர் இது வாஜிபான தொழுகைதான் என்று கூறினால் அதற்கு எதிராக நான் நிராகரிக்கவுமாட்டேன்” என்று கூறியுள்ளார்கள்.

(ar.islamway.net என்ற இணையதளத்தில் கடைசி வரியில்)

 

ஆகவே ஒட்டுமொத்தமாக வந்திருக்கின்ற இந்த செய்திகளை எல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது இதனை வேண்டுமென்றே விடுவது வெறுக்கத்தக்க செயலாகும். மேலும் எப்படி பர்ளான கடமைகளை கரிசனை காட்டி செய்வோமோ அதனைப் போன்று கரிசனை காட்டப்பட வேண்டிய வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.

 

எனவே இத்தொழுகையை கடமையை நிறைவேற்றுவது போன்று சரிவர நிறைவேற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

 

அல்லாஹு அஃலம்

 

1. ar.islamway.net

2. binbaz.org.sa

3. islamqa.info

ஆகிய இணைத்தளங்களிலிருந்து எடுத்து தொகுக்கப்பட்டது.

 

தொகுப்பு:பர்ஹான் அஹமட் ஸலபி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply