அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 01 |

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 01 |

 

அல்லாஹ் இந்த சமூகத்திற்கென பிரத்தியேகமாக வழங்கிய அம்சங்களுள் தயம்மும் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

 

வுழூ செய்வதற்கு அல்லது கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு நீரைப் பெற்றுக்கொள்ளாத போது, அல்லது நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளின் போது மாற்றீடாக அல்லாஹ் வழங்கிய ஏற்பாடே தயம்மும் ஆகும்.

 

தயம்மும் செய்கின்ற சூழ்நிலைகள் ஏற்பட்ட போதிலும் அதை நடைமுறைப்படுத்தாத பலர் சமூகத்தில் காணப்படுகிறார்கள். இதற்கு இரு காரணங்கள் உள்ளன :

 

1. தயம்மும் பற்றிய தெளிவின்மை

 

2. தயம்மும் செய்வதற்கு விருப்பமின்மை

 

தயம்மும் பற்றிய போதிய தெளிவு ஒருவருக்கு இல்லையெனில் அவர் அது தொடர்பில் தெளிவு பெற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

 

ஆனால் தயம்மும் செய்வதற்கு விருப்பமற்ற மனோநிலை இருப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அதாவது தயம்மும் செய்வதனால் வுழூ செய்வது போன்ற திருப்தி ஏற்படுவதில்லை என்ற காரணத்தை கூறி தயம்மும் செய்யாமலே பலர் இருந்து விடுகின்றனர். இத்தகையோர் பின்வருவனவற்றை கவனத்திற்கொள்ள வேண்டும் :

 

  • வுழூவையும் ஏனைய கடமைகளையும் விதியாக்கிய அல்லாஹ்தான் தயம்மும் என்ற கடமையையும் விதியாக்கியுள்ளான். வுழூ செய்யும் முறையை கற்றுத்தருகின்ற அதே வசனத் தொடரிலேயே தயம்மும் செய்வது பற்றியும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் :

 

‘முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை மஸ்ஹு செய்து கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்); ….. உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் சுத்தமான பூமியின் மேற்பரப்பிலுள்ள (மண், மணல், பாறை போன்ற)வற்றின் உதவியுடன் தயம்மும் செய்து கொள்ளுங்கள்; (அதாவது) அதன் மூலமாக உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை – ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான் (5:6).

 

  • அனைத்து வணக்க வழிபாடுகளையும் கற்றுத் தந்த அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தயம்மும் செய்ய வேண்டிய சூழ்நிலைகளில் தானும் தயம்மும் செய்ததோடு, தயம்மும் செய்யும் முறையையும் தமது தோழர்களுக்கு கற்பித்திருக்கிறார்கள்.

 

  • தயம்மும் என்பது முன்னைய நபிமார்களின் சமூகங்களுக்கு வழங்கப்படாத, இந்த சமூகத்திற்கு மாத்திரம் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஒரு கடமையாகும்.

நமக்கென்றே விசேடமாக வழங்கப்பட்ட இக்கடமையை நாம் மிகவும் மன விருப்பத்தோடு, ‘அல்லாஹ் எனக்கென்று மட்டும் தந்த அருட்கொடை’ என்ற உணர்வோடு நிறைவேற்றிட வேண்டும்.

நபிகளார் கூறினார்கள் : ‘எனக்கு முன்னர் (நபிமார்கள்) யாருக்கும் வழங்கப்படாத ஐந்து விடயங்கள் எனக்குக் வழங்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிலிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (தான் இருக்கும் இடத்தில்) தொழுது கொள்ளட்டும். போரில் கிடைக்கிற பொருட்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டார்கள். ஆனால், நான் மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன். (மறுமையில் என்னுடைய சமூகத்துக்காக) சிபாரிசு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளேன் (புஹாரி, முஸ்லிம்).

 

மேற்படி ஹதீஸில் நபியவர்கள் முன்னைய நபிமாருக்கு வழங்கப்படாத, தமக்கு மாத்திரம் வழங்கப்பட்ட ஐந்து சிறப்பம்சங்களுள் ஒன்றாக பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாக (அதாவது தயம்மும் செய்தல்) ஆக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.

 

  • தயம்மும் என்பது அல்லாஹ் நமக்களித்த மார்க்க ரீதியான சலுகையாகும்.

 

நபிகளார் ஒரு தடவை கூறினார்கள் : ‘அல்லாஹ் வழங்கிய சலுகைகளை நடைமுறைப்படுத்துவதை அல்லாஹ் விரும்புகிறான்’ (முஸ்னத் அஹ்மத்).

 

தயம்மும் என்பது அல்லாஹ் தந்த சலுகை என்ற வகையில் தயம்மும் செய்யும் போது நாம் அல்லாஹ்வின் விருப்பத்துக்குரியவர்களாக மாறுகிறோம் என்பதை மேற்படி ஹதீஸ் உணர்த்துகிறது.

 

தயம்மும் கடமையாக்கப்பட்டதன் பின்னணி :

 

ஆஇஷா – றழியல்லாஹு அன்ஹா – அவர்களோடு தொடர்பான ஒரு நிகழ்வை காரணியாக்கி தயம்மும் என்ற கடமையை அல்லாஹ் இந்த சமூகத்துக்கு விதியாக்கினான்.

 

ஹி.06ம் ஆண்டு நடைபெற்ற பனுல் முஸ்தலக் போருக்காக நபியவர்களும் ஸஹாபாக்களும் புறப்பட்டுச்சென்ற வேளை இந் நிகழ்வு இடம்பெற்றது.

 

அன்னை அவர்களே இது குறித்து பின்வருமாறு அறிவிக்கிறார்கள் :

 

‘நாங்கள் ஒரு பயணத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றோம். “பைதாஉ“ அல்லது “தாத்துல் ஜைஷ்“ என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய மாலை அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூ பக்ர் – றழியல்லாஹு அன்ஹு – அவர்களிடம் சிலர் வந்து, “(உங்கள் மகளான) ஆஇஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை“ என்று முறையிட்டனர். அபூ பக்ர்(றழி) அவர்கள் (என்னருகே) வந்தபோது நபி அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். “நபிகளார் அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை“ என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள். நபி அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயம்மும் பற்றிய வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள். இது பற்றிப் பின்னர் உஸைத் இப்னு ஹுளைர் – றழியல்லாஹு அன்ஹு – அவர்கள், “அபூ பக்ரின் குடும்பத்தாரே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பறக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பறக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)” எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் மாலை கிடந்ததைக் கண்டோம்”. 

(ஸஹீஹுல் புஹாரி).

 

வல்ல அல்லாஹ்தான் நிம்மதியான நிலையையும் தருகிறான்; நெருக்கடியான சூழலையும் உருவாக்குகிறான். நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் இறுதியில் உள்ளங்கள் பூரிப்படையும் அளவுக்கு விடிவையும் தீர்வையும் தருவதும் அல்லாஹ்வின் நடைமுறைகளில் ஒன்றாகும்.

 

அவ்வகையில்தான் தயம்மும் கடமையாக்கப்பட்ட பின்னணியும் அமைந்திருந்தது. ஸஹாபாக்களெல்லாம் வெறுப்படையுமளவுக்கு சிறியதொரு நெருக்கடி நிலை உருவானது. ஆனாலும் அல்லாஹ் அதன் இறுதியில் மறுமை வரை தோன்றவிருக்கின்ற முழு சமூகத்துக்குமே ஆறுதல் தருகின்ற எளிமையான தீர்வொன்றை தயம்முமின் மூலம் ஏற்படுத்தினான். இதற்கு நபிகளாரின் பேரன்புக்குரிய மனைவி ஆஇஷா (றழி) அவர்களை பயன்படுத்தினான் என்பது அன்னை அவர்களுக்கு அல்லாஹ் அளித்த மாபெரும் கௌரவமாகும்.

 

(இன் ஷா அல்லாஹ் தொடரும்…)

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply