குர்பானி கொடுக்க நினைப்பவர் தலைமுடி தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள முடிகளை நீக்க முடியுமா?

குர்பானி கொடுப்பவர் தலை முடியையும், நகங்களையும் மட்டுமா வெட்டக்கூடாது?

 

குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டது முதல் உழ்ஹிய்யா கொடுக்கும் வரை முடியையும் நகங்களையும் வெட்டக்கூடாது என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறன.

 

நபியவர்கள் கூறினார்கள்:

நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் : 3999)

 

நபியவர்கள் கூறினார்கள்:

யாரிடம் அவர் அறுப்பதற்கான குர்பானிப் பிராணி இருந்து, துல்ஹஜ் பிறை காணப்பட்டு விட்டால், அவர் குர்பானி கொடுக்கும் வரை தமது முடியையோ நகங்களையோ சிறிதும் வெட்ட வேண்டாம். (ஸஹீஹ் முஸ்லிம் : 4000)

 

இதனடிப்படையில் நகங்களையும் தலை முடியையும் மட்டுமே வெட்டக்கூடாது என பலர் புரிந்து வைத்துள்ளனர்.

 

ஆனால் மேனியில் வளரக்கூடிய எந்தவொரு முடியையும் வெட்டக்கூடாது என்பது மற்றொரு ஹதீஸில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நபியவர்கள் கூறினார்கள்:

(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது முடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம். (ஸஹீஹ் முஸ்லிம் : 3997)

 

எனவே, குர்பானி கொடுப்பவர் தனது மேனியிலிருந்து எந்தவொரு முடியையும் வெட்டக்கூடாது.

 

அஷ்ஷெய்ஹ் இப்னுபாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார் : குர்பானி கொடுப்பவர் தனது மீசை, அக்குள் முடி, மர்மஸ்தானத்தைச் சுற்றியுள்ள முடி, நகங்கள் போன்ற எதையும் வெட்ட முடியாது. (மஜ்மூஉல் பதாவா : 25/240)

 

ஆக்கம் : அஸ்கி அல்கமி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply