ஒரு மனிதர் ரமழானின் தலைப்பிறையை பார்த்தால் – அவர்மீது நோன்பு நோற்பது கடமையா?

கேள்வி :

ஒரு மனிதர் ரமழானின் தலைப்பிறையை பார்த்தால் – அவர்மீது நோன்பு நோற்பது கடமையா? ஆம் என்றால், இதற்கு ஆதாரம் உள்ளதா?

பதில் :

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

ஒருவர் ரமழானின் தலைப்பிறையை பார்த்தாலோ, அல்லது ஷவ்வால் மாத பிறையை தான் பார்த்து, அத்தகவலை காழியிடமோ அல்லது ஊர் மக்களிடமோ சொல்லும்போது அவர்கள் அவருடைய சாட்சியை ஏற்கவில்லை என்றால், அவர் தனியாக நோன்பு நோற்க வேண்டுமா? அல்லது மக்களுடன் சேர்ந்து நோன்பு இருக்க வேண்டுமா? எனும் விடயத்தில் மூன்று கருத்துக்கள் அறிஞர்களிடம் காணப்படுகின்றன.

1 – மேற்கண்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் தான் பார்த்த பிறை அடிப்படையில் செயல்பட வேண்டும், எனவே அவர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து நோன்பு நோற்க வேண்டும் மற்றும் இறுதியில் நோன்பை முடிக்க வேண்டும்.
இது இமாம் ஷாஃபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் நிலைப்பாடாகும்.

ஆனால், அவர் மக்களை விட்டும் தனித்துச் செயல்படுகிறார் என்பதை வெளிக்காட்டாதபடி, அவர் அதை ரகசியமாக செய்ய வேண்டும். (இல்லையேல் குழப்பங்கள் தலைதூக்க நேரிடும்).

2 – மாதத்தின் தொடக்கத்தை அவர் தான் கண்ட பிறையின் அடிப்படையில் ஆரம்பித்து தனித்து நோன்பு நோற்க வேண்டும், ஆனால் ரமழானின் இறுதியில் அவர் தனித்து செயல்படக்கூடாது, மாறாக மக்கள் நோன்பை விடும்போது அவரும் நோன்பை விட வேண்டும்.

இந்நிலைப்பாட்டில் இமாம் அபூ ஹனீபா, இமாம் மாலிக், இமாம் அஹ்மத் (ரஹிமஹுமுல்லாஹ்) உட்பட பெரும்பான்மையான அறிஞர்கள் உள்ளார்கள்.

இந்த கருத்தை அஷ்-ஷெய்ஹ் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும் சரிகண்டுள்ளார்கள். (பார்க்க : ஷர்ஹுல் மும்தி’, 6/330)

3 – இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் தான் கண்டுள்ள பிறை அடிப்படையில் செயல்படக்கூடாது; மாறாக அவர் மக்களுடன் சேர்ந்துதான் நோன்பை தொடங்கி முடிக்க வேண்டும்.

இது ஒரு அறிவிப்பில் இமாம் அஹ்மத் அவர்களின் கருத்தாகவும் உள்ளது. இது அஷ்-ஷெய்ஹ் இப்னு தைமிய்யா அவர்களின் நிலைபாடும் ஆகும். இமாம் அவர்கள் இதனை ஆதரிக்க ஏராளமான ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்கள்,

நபி (ஸல்லல்லாஹு ‘அலைஹிவ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களது நோன்பு நீங்கள் (மக்கள்) நோன்பு நோற்கும் நாளாகும், உங்களது நோன்பு விடும் விடயம் (மாத இறுதி) நீங்கள் நோன்பை விடும் நாளாகும், உங்களது ஈதுல் அழ்ஹா நீங்கள் ஈதுல் அழ்ஹாவாக எடுத்துக்கொள்ளும் நாளாகும்”.

நூல் : திர்மிதீ (ஹஸன் கரீப்), அபூதாவூத், இப்னுமாஜா | இமாம் அல்பானி அவர்கள் இந்த ஹதீஸை ‘ஸஹீஹ்’ என திர்மிதீ 561-ல் கூறியுள்ளார்கள்.)

இதற்கு சில மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்கள் :
“நோன்பு நோற்பதும் விடுவதும் ஜமாத்துடனும், பெரும்பான்மை மக்களுடனும் சேர்ந்து அமைதல் வேண்டும்”. (பார்க்க : மஜ்மூஉல் ஃபதாவா 25/114)

மேலும் இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுவதாவது :

துல்ஹிஜ்ஜாவின் பிறையை ஒருவர் பார்த்தாலும், அவர் தாம் கண்ட பிறை அடிப்படையில் தாம் மாத்திரம் அரஃபாவில் நிற்க முடியாது; இதனை எந்த அறிஞர்களும் பரிந்துரைக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பான அடிப்படை என்னவெனில், இதன் சட்டமாவது மாதத்தின் புதிய பிறையோடு தொடர்புடையது.

உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான் :

(நபியே! மாதந்தோறும் பிறந்து, வளர்ந்து, தேயும்) பிறைகளைப் பற்றி உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: “அவை மனிதர்களுக்கு (ஒவ்வொரு மாதத்தையும்) ஹஜ்ஜுடைய காலங்களை(யும்) அறிவிக்கக் கூடியவை”.
(அல்குர்ஆன் 2:189)

அரபு மொழியில் ஹிலால் (பிறை) என்பது அறிவிக்கப்படும் ஏதாவது ஒன்றை அல்லது அனைவரும் அறியும்படியான ஒன்றை குறிப்பிடக்கூடியது. ஹிலால் (பிறை) வானில் தோன்றினாலும் மக்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்றால் அது பிறையாக கருதப்படமாட்டாது.

அதேபோல் ஷஹ்ர் (மாதமானது) மக்கள் மத்தியில் நன்கு அறியப்படவில்லை என்றால், மாதம் இன்னும் தொடங்கவில்லை என்றே அர்த்தம். இந்த விடயத்தில் பலர் தவறு செய்கிறார்கள், மேலும் அவர்கள் கருதுவதாவது, பிறை வானத்தில் தோன்றும் போது, ​​​​அந்த இரவை மாதத்தின் முதல் நாள் என்று நினைக்கிறார்கள், அது மக்களுக்குத் தென்பட்டாலும், அம்மக்கள் அதனை அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் சரியே… ஆனால் அது அப்படியல்ல, மாறாக அப்பிறை மக்களுக்குத் தென்பட வேண்டும், அம்மக்கள் அதைப் பார்த்தவுடன் மாதத்தின் தொடக்கத்தை அறிவிப்புச் செய்ய வேண்டும். (அப்போதுதான் மாதம் தொடங்கும்).

இதையே தான் நபி (ஸல்லல்லாஹு ‘அலைஹிவ ஸல்லம்) அவர்களின் ஹதீஸான “உங்களது நோன்பு நீங்கள் (மக்கள்) நோன்பு நோற்கும் நாளாகும்…….” என்ற செய்தி எடுத்துரைக்கிறது.

(பார்க்க : மஜ்மூஉல்-ஃபதாவா, 25/202)

அஷ்-ஷெய்ஹ் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களால் வெளியிடப்பட்ட ஃபத்வாவிலும் இதே கருத்து காணப்படுகிறது.

(பார்க்க : மஜ்மூ ஃபதாவா அஷ்-ஷெய்ஹ் 15/72)

Soouce:IslamQA

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply