இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மாவை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன ?

கேள்வி:

இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மா(ஒருமித்த கருத்து)வை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன ?

பதில்:

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…

இஜ்மா என்பது இஸ்லாமிய மூலதாரங்களில் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

இஜ்மாவிற்கு பல வரைவிலக்கணங்கள் அறியப்படுகிறது. அதில் தேர்வு செய்யப்பட்ட வரைவிலக்கணம் இமாம் சுப்கீ (ரஹ்) அவர்களின் கருத்தாகும்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பிறகு இந்த சமுதாயத்தின் (முஜ்தஹித்) ஆய்வாளர்கள் ஏதாவது ஒரு (மார்க்க) விவகாரங்களில் ஏகோபித்து எடுக்கப்பட்ட முடிவாகும்.
நூல் : ஜம்வுல் ஜாமிஃ பக்கம் 485.

இஜ்மா (இஸ்லாமிய சட்டங்களுக்கு) ஆதாரமாக அமையும் என்பதற்கு குர்ஆன் சுன்னாவில் பல ஆதாரங்கள் உள்ளன. அவைகள் பத்வா எண் : 197937 ல் கூறப்பட்டுள்ளது.(பார்க்க Islamqa.info)

அதில் ஒன்று இங்கு கூறப்படுகின்றது.
நேர் வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது.
அல் குர்ஆன் 4 : 115.

இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

யார் இஜ்மாவிற்கு அதை அறிந்த பிறகு அல்லது ஒருவரிடத்தில் இஜ்மா நிறுவப்பட்ட பிறகு மாற்றம் செய்கிறாரோ மேற்கூறப்பட்ட ஆயத்தில் கூறப்பட்ட எச்சரிக்கை (தண்டனை) க்கு ஆளாகுவார்.
மராதிபுல் இஜ்மா பக்கம் 7 (இமாம் இப்னு ஹஸ்ம்)

இமாம் காழி அபூயஃலா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இஜ்மா என்பது ஆதாரமாகும். உறுதிமிக்கதுமாகும். அதை நோக்கி செல்வது (அதை பின்பற்றுவது) கட்டாயமாகும். அதற்கு மாற்றம் செய்வது ஹராமாகும். இந்த சமுதாயம் தவறின் மீது ஒன்று சேராது.
அல் உத்தா ஃபீ உசூலில் ஃபிக்ஹ் பாகம் 4 பக்கம் 1058.

இஸ்லாத்தில் ஏற்பட்ட முதல் இஜ்மா இதுதான் என்று சொன்னவர்களை அல்லது அதை மற்ற கிதாபுகளிலிருந்து மற்ற இமாம்களிடமிருந்து எடுத்துச் சொன்னவரை நாங்கள் அறியவில்லை.

இஜ்மா என்பது நபியவர்களின் மரணத்திற்குப்பிறகு இந்த சமுமதாயத்தின் ஆய்வாளர்களால் ஒன்று சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும் என்பதை ஏற்கனவே நாம் சொல்லியிருக்கிறோம். நபியவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் இஜ்மா ஆதாரமாக அமையாது.

இமாம் ஆமிதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

வஹீ இறங்கும் காலத்தில் இஜ்மா (ஏற்படாது.) ஆதாரமாக அமையாது. இதில் ஏகோபித்த கருத்து உள்ளது. இஜ்மா நபியவர்களின் மரணத்திற்குப்பிறகுதான் ஆதாரமாக அமையும்.
அல்இஹ்காம் பாகம் 1 பக்கம் 109.

இதன்படி நபியவர்களுக்குப்பிறகு நபித்தோழர்களால் எடுக்கப்பட்ட முதல் இஜ்மா கலீஃபாவை நியமிப்பதிலாகும். இதற்காகத்தான் முஹாஜிர்களும் அன்சாரிகளும் ஸகீஃபா பனீ ஸாயிதா என்ற இடத்தில் நபியவர்களை அடக்கம் செய்யும் முன் ஒன்று கூடினார்கள். பிறகு அவர்கள் அனைவரும் ஒன்று கூடி கலீஃபாவாக அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களை தேர்வு செய்தார்கள்.
இதே போன்றுதான் மதம் மாறி போனவர்கள் விஷயத்தில் அதன் ஆரம்பத்தில் உமர் (ரலி) அவர்கள் முரண்பட்டாலும் பிறகு அபூபக்கர் (ரலி) அவர்களின் முடிவில் உமர் (ரலி) அவர்கள் ஒன்றுபட்டார்கள். மற்ற நபித்தோழர்களும் முரண்படாமல் ஒன்றுபட்டார்கள்.

இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ் தஆலா முஹாஜிர்களையும் அன்சார்களையும் இஸ்லாத்தில் முந்தி இணைந்தவர்களையும் புகழ்ந்திருக்கிறான். மேலும் குர்ஆன் முஹாஜிர்களையும் அன்சார்களையும் பல இடங்களில் புகழ்ந்து சொல்லியிருக்கிறது. மேலும் மரத்தடியின் கீழ் பைஅத் செய்தவர்களையும் புகழ்ந்திருக்கிறது.

அல்லாஹ் கூறுகிறான். மரத்தடியின் கீழ் உம்மிடத்தில் பைஅத் செய்த முஃமீன்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டுவிட்டான். சூரா ஃபத்ஹ் 18.

அல்லாஹ் தஆலா புகழ்துரைத்த நபித்தோழர்கள் அனைவரும் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் ஆட்சி தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு ரசூலுல்லாஹ்வின் கலீஃபா என்றும்,அவருக்கு பைஅத் செய்தார்கள். அவருக்கு கட்டுப்பட்டார்கள். அவருக்குரிய சிறப்புகளை அங்கரித்துள்ளார்கள்.

தலைமைக்குள்ள அனைத்து குணங்களையும் கல்வி, உலகப்பற்றற்றத்தன்மை, பலமான சரியான சிந்தனை, சமுதாயத்தை வழிநடத்துதல் ஆகிய குணங்களை பெற்றிருந்தார்கள்.
அல்இபானா அன் உசூலித்தியானா பக்கம் 66.

மேலும் இமாமவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் தலைமையை முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று அவரை பின்பற்றினார்கள். அவருடைய தலைமைக்கு கட்டுப்பட்டார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்து அவருடைய தலைமையை ஏற்றிருக்கிறார்கள். எனவே நபியவர்களுக்கு பிறகு அபூபக்கர் (ரலி) முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்தின் (இஜ்மா) படி இமாமமாக ஆனார்கள்.
அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் வெளிப்படையாகத்தான் அபூபக்கர் (ரலி) அவர்களை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுடைய மனதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று யாரும் சொல்லமுடியாது. காரணம் முஸ்லிம்களின் எல்லா (இஜ்மா) ஏகோபித்த கருத்திலும் இப்படி சொல்ல முடியும். இது இஜ்மாவை வீழ்த்த கூடியதாகிவிடும். ஏனென்றால் அல்லாஹ் தஆலா முஸ்லிம்களின் அந்தரங்கத்தை பார்த்து முடிவெடுக்க நமக்கு கட்டளையிடவில்லை. வெளிப்படையை வைத்துதான் முடிவெடுக்க கட்டளையிட்டுள்ளான். இந்த அடிப்படையில் முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்தின் பிரகாரம் அபூபக்கர் (ரலி) அவர்கள்தான் நபியவர்களுக்குப்பிறகு ஆட்சித்தலைமைக்கு தகுதியானவர்கள் என்பதில் இஜ்மா ஏற்பட்டுவிட்டது.

இமாம் அபூஉஸ்மான் அஸ்ஸாபூனி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அஹ்லுல் ஹதீஸ் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பிறகு நபித்தோழர்களின் சுய விருப்பத்தின் பேரில்தான் அபூபக்கர் (ரலி) அவர்களை ஆட்சித்தலைமைக்கு தேர்வு செய்தார்கள் என்பதை உறுதிபடுத்துகிறார்கள். நபித்தோழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சொன்னார்கள்;நபியவர்கள் நம்முடைய மார்க்கத்திற்காக அபூபக்கர் (ரலி) அவர்களை பொருந்திக் கொண்டார்கள். நாம் நம்முடைய உலகத்திற்காக அவரைப் பொருந்திக் கொள்வோம் என்று சொன்னார்கள். அதாவது நபி (ஸல்) அவர்கள் தான் நோய்வாய்பட்டிருக்கும் போது அபூபக்கர் (ரலி) அவர்களை முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்தச் சொன்னார்கள். அதுதான் மார்க்க விவாகரங்களில் அபூபக்கர் (ரலி) அவர்களை நபியவர்கள் பொருந்திக் கொண்டார்கள். நாம் நம்முடைய உலக காரியங்களுக்காக அபூபக்கர் (ரலி) அவர்களை ரசூலுல்லாஹ்வின் கலீஃபாவாக பொருந்திக் கொள்வோம் என்று சொன்னார்கள்.

மேலும் நபித்தோழர்கள் சொன்னார்கள்:

நபியவர்கள் உம்மை முற்படுத்தியிருக்கும் போது உம்மை பிற்படுத்துபவர் யார் என்றார்கள். அதாவது நபியவர்கள் தான் நோயிலிருக்கும் போது உம்மை முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்த கட்டளையிட்டார்கள். உங்கள் பின்னால் நாங்கள் தொழுதோம். நபியவர்களே உம்மை முற்படுத்தியிருக்க உம்மை யார் பிற்படுத்தமுடியும்? மேலும் நபியவர்கள் தான் வாழும் காலத்திலேயே நபித்தோழர்களுக்கு அபூபக்கர் (ரலி) அவர்கள்தான் ஆட்சித்தலைமைக்கு தகுதியானவர்கள் என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள். இதனால்தான் நபித்தோழர்கள் அவரிடத்தில் ஒன்றினைந்தார்கள்.

நூல் : அகீததுஸ் ஸலஃப் வ அஸ்ஹாபுல் ஹதீஸ் பக்கம் 290.

நபியவர்கள் மரணித்ததும் மக்கள் அனைவரும் ஸஃது இப்னு உப்பாதா (ரலி) அவர்களின் வீட்டில் ஒன்று கூடினார்கள். அவர்களில் அபூபக்கர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அன்சார்களில் ஒருவர் எழுந்து உரையாற்றினார். நபியவர்கள் எங்களிடத்தில் ஹிஜ்ரத் செய்துதான் வந்தார்கள்.அவருடைய கலீஃபாவும் எங்களிடத்தில் ஹிஜ்ரத் செய்துதான் வந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நபியவர்களுக்கு உதவி செய்ததுபோல் அவருடைய கலீஃபாவிற்கும் உதவி செய்வோம் என்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள் எழுந்து அவர் உண்மையே சொன்னார். இதுவல்லாத வேறொன்றைச் சொல்லியிருந்தால் உங்களை நாங்கள் பின்பற்றியிருக்கமாட்டோம். உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களின் கையை பிடித்து இவர்தான் உங்களின் தோழர் இவருக்கு பைஅத் செய்யுங்கள் என்று சொல்லி உமர் (ரலி) அவர்கள் முதலில் பைஅத் செய்தார்கள். அவரைத் தொடர்ந்து முஹாஜிரின்களும் அன்சாரிகளும் பைஅத் செய்தார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் மின்பரில் ஏறினார்கள். மக்களை பார்த்தார்கள். ஆனால் சுபைர் (ரலி) அவர்களை பார்க்கவில்லை. அபூபக்கர் (ரலி) அவர்கள் சுபைர் (ரலி) அவர்களை அழைத்தார்கள். சுபைர் (ரலி) அவர்கள் வந்தார்கள். நபியவர்களின் சிறிய தந்தையின் மகனாகவும் அவருடைய பாதுகாவலாகராகவும் இருக்கிறீர்கள். நீங்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை உடைக்கிறீரா என்று கேட்டார்கள்.
அதற்கவர் ரசூலுல்லாஹ்வின் கலீஃபா அவர்களே (உங்களிடத்தில்)எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று சொல்லி எழுந்து பைஅத் செய்தார்கள்.

பிறகு அலி (ரலி) அவர்களை காணவில்லை. அலி (ரலி) அவர்களை அழைத்தார்கள். அலி (ரலி) அவர்கள் வந்தார்கள். நீங்கள் நபியவர்களின் சிறிய தந்தையின் மகனாக இருக்கிறீர்கள். நபியவர்களின் மகளை திருமணம் முடித்தவர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைக்கிறீர்களா எனக் கேட்டார்கள். அதற்கு அலி (ரலி) அவர்கள் அதற்கவர் ரசூலுல்லாஹ்வின் கலீஃபா அவர்களே (உங்களிடத்தில்)எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று சொல்லி எழுந்து பைஅத் செய்தார்கள்.

நூல் : பிதாயா வந்நிஹாயா பாகம் 5 பக்கம் 269

பிறகு இமாம் இப்னுகஸீர் (ரஹ்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களின் மரணத்திற்குப்பிறகு நடந்த இரண்டாவது பைஅத்தை தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள். இந்த பைஅத் அதாவது பாத்திமா மரணத்திற்குப்பிறகு நடந்த இரண்டாவது பைஅத் இரண்டு நபர்களுக்கும் மத்தியில் நடந்த விஷயங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும். இது இப்னு குஸைமா (ரஹ்), முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவித்ததுபோல ஆரம்பமாக ஸகீஃபாவில் நடந்த பைஅத்திற்குப்பிறகு நடந்த இரண்டாவது பைஅத்தாகும். அலி (ரலி) அவர்கள் இந்த ஆறுமாத காலத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களை புறக்கணிக்கவில்லை. மாறாக அபூபக்கர் (ரலி) அவர்களுக்குப்பின்னால் நின்று தொழுதிருக்கிறார்கள். ஆலோசனை கூட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். அவர்களுடன் தில்கிஸ்ஸா வரை பயணித்திருக்கிறார்கள்.

முஸ்னத் அஹ்மதில் இடம்பெறும் செய்தி அபூபக்கர் (ரலி) அவர்கள் நபியவர்களின் மரணத்திற்குப்பிறகு சில நாட்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு ஒரு நாள் பள்ளிவாசலை விட்டு வெளியில் வரும்போது அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹஸன் (ரலி) அவர்கள் சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களை தன்னுடைய தோழில் சுமந்து கொண்டார்கள்.பிறகு  இவர்(ஹஸன்)  (தோற்றத்தில்) நபிக்கு ஒப்பாக இருக்கிறார். அலீக்கு ஒப்பாக இல்லையே என்று சொன்னார்கள். இதைக்கேட்டு அலீ (ரலி) அவர்கள் சிரித்தார்கள்.

சில அறிவிப்பாளர்கள் அலீ (ரலி) அவர்கள் முதல் பைஅத் செய்யவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். சிலர் இரண்டு பைஅத்களையும் செய்திருக்கிறார்கள் என்று அறிவித்திருக்கிறார்கள் என்று அறிவித்திருக்கிறார்கள். ஹதீஸ் உசூல்களின் படி (பைஅத்) இல்லை என்று மறுக்கக்கூடிய அறிவிப்பை விட (பைஅத்) நடந்தது என்ற அறிவிப்பு தான் முற்படுத்தப்படும்.
(பத்வாவின் கருத்தாக்கம்)

அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

தமிழாக்கம்:ஷெய்க் யூசுப் ஃபைஜி (இஸ்லாமிய அழைப்பாளர்,கடையநல்லூர்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply